Monday, June 22, 2015

கல்வி தனியார்மயமாவதை தடுக்க மக்கள் அதிகாரமே தீர்வு!

தனியார் பள்ளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக இன்று அரசுப்பள்ளிகள் இழுத்துமூடப்படுகின்றன. அன்று பார்ப்பான் ”பஞ்சமர்களும், சூத்திரர்களும் படிக்கக்கூடாது” என்றான். இன்றைய அரசும் அதையே செய்கிறது. 90-களுக்குப் பிறகு, உழைக்கும் மக்களின் பிள்ளைகள் கல்வி கற்கக்கூடாது என்றுதான் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடிவருகிறது. 
.
தனியார் பள்ளிகளில் படித்தால் ஆங்கில அறிவு வளரும்; அதனால் வேலை கிடைக்கும் என்று கருதித்தான் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்க்கிறார்கள். ஆனால் என்ன நடந்தது? கும்பகோணத்தில் 90 பிள்ளைகள் தீயில் கருகி மாண்டனர். சென்னையில் சுருதி என்ற மாணவி பள்ளி வேனில் இருந்து விழுந்து இறந்தார். விருத்தாசலத்தில் தட்சிணாமூர்த்தி, கோவையில் சங்கீதா என்று தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தனியார் முதலாளிகளால் படுகொலை செய்யப்படுவது தொடர்கிறது.
.
ஜேப்பியார் போன்ற முன்னாள் கள்ளச்சாராய ரவுடிகளும், ஜெகத்ரட்சகன், தளி ராமச்சந்திரன் போன்ற ஆளுங்கட்சிக்காரன்களும்தான் இன்று கல்வி வியாபாரம் செய்கின்றனர். எல்லாக் கட்சிகளிலும் கல்வி வியாபாரிகள் உள்ளனர். அதனால் தான் தனியார் பள்ளிகளை இழுத்து மூடு என்று அவர்கள் வாய் திறப்பதில்லை.
.
தனியார் பள்ளிகளில் என்ன நடக்கிறது. பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், 12-ம் வகுப்புப் பாடத்தைப் 11-ம் வகுப்பிலும் என ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகளுக்குப் படிக்க வைக்கின்றனர். பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கும் ரோபோட்டுகளாக, கறிக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளைப் போல மாணவர்களை மாற்றுகின்றனர். இதன் மூலமாக தேர்ச்சி விகிதத்தை கூட்டிக்காட்ட முயல்கின்றனர்.
.
ஆனால், நமது நாட்டின் அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம் போன்ற எதையும் அவர்கள் கற்றுக் கொடுப்பதில்லை. சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டபோது அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான் அதை எதிர்த்துப் போராடினார்கள். இவர்கள்தான் எந்தவொரு சமூகப் பிரச்சனைக்கும் முன்னால் வந்து போராடுகிறார்கள். ஆனால் அவர்களைத்தான் ரவுடி, பொறுக்கி என்று அழைக்கிறார்கள்.
.
மேலும், அரசுப் பள்ளிகளில் படித்தால் அறிவு வளராது, ஆங்கிலம் தெரியாது, வேலை கிடைக்காது என்றும் கூறுகின்றனர். இது தவறு. கணிதமேதை இராமானுஜம், விஞ்ஞானி அப்துல் கலாம் போன்ற பல்துறை அறிவியல் மேதைகளும், இன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் அரசுப் பள்ளிகளில், தாய்மொழியில் படித்து வந்தவர்கள்தான். இன்று அரசுப் பள்ளிகளில் ஒருசில குறைபாடுகள் இருப்பது உண்மைதான். நமது வீட்டின் கூரை ஒழுகினால் அதை மாற்றியமைக்கிறோமே தவிர யாரும் வாடகை வீட்டிற்குச் சென்றுவிடுவதில்லை.
.
அதைப்போல, அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளைக் களைய நாம் போராட முன்வரவேண்டும். மாறாக, தனியார் பள்ளிகளில் கொண்டுபோய் நம் பிள்ளைகளைச் சேர்க்கக்கூடாது. தனியார் பள்ளிகளில் இன்றுள்ள பெரிய பிரச்சனை ஊழல். நகராட்சி ஊழல். நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த வார்டு மெம்பர், கவுன்சிலர், பஞ்சாயத்துப் பிரசிடெண்ட், எம்.எல்.ஏக்கள், மந்திரிகள், பிரதமர் வரை யாருக்காவது இந்த ஊழலைத் தட்டிக்கேட்கும் அதிகாரம் உண்டா?
.
நம்மை ஆள்வது யார்? உண்மையான அதிகாரம் யாரிடம் உள்ளது? தலையாரி, வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ., தாசில்தார், கலேக்டர் போன்றவர்களிடம்தான் அதிகாரம் குவிந்துள்ளது. சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட எந்தவொரு சான்றிதழ் தேவைப்பட்டாலும் நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளிடம் நாம் செல்லமுடியாது. மாறாக, அதிகாரிகளிடம்தான் செல்லவேண்டியிருக்கிறது.
.
மக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட போலீசு இன்று மக்களுக்கு எதிராக நிற்கிறது. சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற சம்பவம் போலீசின் யோக்கிதைக்கு ஒரு சான்று. நீதித்துறையின் நிலையென்ன? மக்களால் கட்டப்பட்ட தில்லைக்கோயில் பார்ப்பனர்களுக்குத்தான் சொந்தம் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. 5+3=8 என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், குமாரசாமி 7 என்று சொல்லி ஜெயாவை விடுவிக்கிறார். இதுதான் இன்றைய நீதித்துறையின் நிலைமை.
.
அதிகாரவர்க்கத்தின் நிலை என்ன? நம்மால் அனைத்து வேலைகளையும் செய்யமுடியாது என்பதால்தான் அந்த வேலைகளுக்கு அதிகாரிகளை நியமிக்கிறோம். ஆனால், இன்று எந்தவொரு வேலை நடைபெறவேண்டுமென்றாலும் லஞ்சம் கொடுத்தால்தான் முடியும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் நகராட்சி ஊழலை மட்டும் தனியாக ஒழித்துவிட முடியாது.
.
ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்புமே இன்று நாறிக்கிடக்கிறது. இன்று இயற்கை வளங்கள் அனைத்தும் சூறையாடப்படுகின்றன. நெல்லை கங்கைகொண்டானில் தாமிரவருணி ஆற்றுநீரை உறுஞ்சுகின்றனர்; தஞ்சை, திருவாரூர் டெல்டா மாவட்டங்களிலே மீத்தேன் எரிவாயுத் திட்டம்; திருவண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலைகளை ஜிண்டாலுக்குத் தாரை வார்த்துள்ளனர்; ஓசூர், சேலம், தருமபுரி பகுதிகளில் கெயில் நிறுவனத்திற்கு நிலப்பறிப்பு என்று இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது தொடர்கிறது.
.
இன்று ஒட்டுமொத்த அரசமைப்பே ஊழல் மயமாகியுள்ளது. இந்நிலையில் நகராட்சி ஊழலை மட்டம் தனியாக சரிசெய்ய முடியாது. இதற்கு என்ன செய்யவேண்டும். மக்கள் அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக்கொள்வதுதான் தீர்வு ஆகும். மக்கள் அதிகாரம் என்றால் என்ன? விருத்தாசலத்திற்கருகிலே மணற்கொள்ளை தொடர்ந்து நடந்து வந்தது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியும் மக்களுடன் இணைந்து போராடி மணற்கொள்ளையைத் தடுத்து அந்த மணல் குவாரியை மூடவைத்தன. ஆர்.டி.ஓ. மணல் அள்ளலாம் என்றார்; அப்பகுதி மக்கள் மணலை அள்ள விடமாட்டோம் என்று எதிர்த்தனர். ஆர்.டி.ஓ. பின்வாங்கிவிட்டார்.
.
அப்படியானால் அதிகாரம் யார் கையில் உள்ளது? போலீசு, அதிரடிப்படை என்று வைத்துள்ள அரசிடமா? அல்லது, உறுதியாகப் போராடி மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்திய மக்களிடமா? சந்தேகமென்ன! உண்மையான அதிகாரம் மக்களிடம், நம்மிடம் தான் உள்ளது. இதேபோல இந்தியா முழுவதும் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது அரசுப் பள்ளிகளை, நகராட்சிப் பள்ளிகளைக் காப்பாற்ற முடியும்.
.
தோழர் முருகானந்தம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருத்தாச்சலம்
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டில்...(13/06/2015)

No comments:

Post a Comment