Tuesday, June 16, 2015

அயம் நாட் ய டமிலியன் பிரதர்

Leo Joseph D:

தமிழர்கள் யார் என்பதற்கு யார் யாரோ வகை வகையாய் வியாக்கியனம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். நாழ் தமிழர் கட்சியின் சீமான் தனது சமீபத்தியப் பேட்டியில் 'பெயரோடு தமிழ் என்பதை இணைத்துக் கொண்டால் யாரும் தமிழராகி விடலாம்' என்ற அதிரடிச் சலுகையை அறிவித்தார். இந்த தமிழின துரோகி பட்டத்திலிருந்து தப்பிக்க ' தமிழ் லியோ' என்று மாற்றிக்கொள்ளலாமா எனக் கூட யோசனையாக இருந்தது.

கடைசி வரை நான் தமிழனாகவே முடியாதோ என்ற ஏக்கத்தையும் பயத்தையும் இன்று காலை ஜுனியர் விகடனில் படித்த பேட்டி ஒன்று உண்டாக்கிவிட்டது. இந்து முன்னனியைச் சேர்ந்த மூகாம்பிகை மணி என்பவர் தனது பேட்டியில் தமிழர்கள் யார் என்பதற்கு புதிய வரையறையைக் கொடுத்து எனக்கு தலைக் கிறுக்கு ஏற்பட வைத்துவிட்டார் என்பதை உங்கள் முன் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன்.

' பசுவை தெய்வமாக வழிபடுபவர்கள், கழுத்தில் தாலி அணிபவர்கள், ஒருவருக்கு ஒருத்தி என வாழக் கூடியவர்கள், தினமும் குளிப்பவர்கள் என இவர்கள் மட்டும் தான் தமிழர்களாக இருக்க முடியும். அப்படி பார்த்தால் இந்துக்கள் மட்டுமே தமிழர்களாக இருக்க முடியும் ' என்று இது மாதிரி அது மாதிரி இல்லாமல் புதுமாதிரியான விளக்கத்தை தந்திருக்கிறது இந்து முன்னனி.

சரி, அவர்கள் சொல்வதற்கு நான் எந்த வகையிலெல்லாம் ஒத்துப் போகிறேன் அல்லது ஒத்துப் போக முடியுமென கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். முதலாவதாக வருவது , பசுவை தெய்வமாக வழிபடுவது. நான் அதிகம் படித்தவனல்ல. ஆனாலும் கூட சென்ற வருடம் ஆறாம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடமெடுக்கிற பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. திராவிட, ஆரிய நாகரிகங்களை வேறுபடுத்தும் அட்டவணையொன்றில் திராவிடர்கள் காளையை வழிபட்டவர்கள், ஆரியர்கள் பசுவை வழிபட்டவர்கள் என வரலாற்றாராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

திராவிடர்களின் முக்கியத் தொழில் வேளாண்மையென்பதையும் ஆரியர்களின் முக்கியத் தொழில் கால்நடை மேய்த்தல் என்பதும் தெரியவருகிறது. அப்படியிருக்க அவரவர்கள் தங்கள் தொழிலுக்கு உதவக் கூடிய காளை மற்றும் பசுவை வழிபட்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

ஆனால் இன்று தமிழ், தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம் என்றெல்லாம் வாய்கிழிய கூவுபவர்கள் ஆரிய பழக்கவழக்கத்தினை, அவர்கள் பண்பாட்டை , கலாச்சாரத்தை தமிழர்களின் பொது கலாச்சாரமாக திணிக்க முனைவதையும் இதன் வழி ஆரியர்கள் மட்டுமே தமிழர்கள் என்பதையும் அவர்கள் நிறுவ முனைகிறார்கள்.

ஆரியம், திராவிடம் என்பதெல்லாம் சும்மா கப்சா என்பதாகக் கூட சிலர் வாதாடலாம். அதை விட முக்கியம் நான் ஒரு மாட்டுக்கறி பிரியன். கடையிலிருந்து வாங்கி வரும் கறியில் அது காளை மாடா, பசு மாடா என்பதெல்லாம் ஆராய எனக்கு நேரமில்லை. ஒரு காலத்தில் நாட்டுக்கோழி என்றால் எனக்கு மிகவும் பிரியம். கறிக்கோழி மயமாகிவிட்ட பின் கோழிக்கறியை தியாகம் செய்தாயிற்று. எங்கள் வீட்டிலேயே இரண்டு முறை பன்றி வளர்த்திருக்கிறார்கள். ஒரு செல்லப் பிராணி போல அதுவும் எங்களோடு வாழ்ந்தாலும் அக்கம்பக்கத்து வீட்டு தோட்டங்களில் பள்ளம் தோண்டி செய்த அட்டகாசங்களால் வந்த சண்டைகளை சமாளிக்க முடியாமல் அதன்பின் பன்றி வளர்ப்பதுமில்லை. எங்கே பன்றியிறைச்சி கிடைக்குமென தேடி அலையவும் முடிவதில்லை.

ஆட்டுக் கறி... அதன் விலையெல்லாம் ஒரு நாளும் என் பட்ஜெட்டுக்குள் இருந்ததேயில்லை. எங்காவது நிகழ்ச்சியில் புண்ணியவான்கள் பார்த்து பரிமாறினால் தான் உண்டு. எனக்கிருக்கிற ஒரே வாய்ப்பு மாட்டுக் கறி என்பதாலோ என்னவோ அதன் மீது அலாதிப்பிரியம் எனக்கு.

செந்தமிழன், பச்சைத் தமிழன், புரட்சி தமிழன் என்றெல்லாம் பட்டம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்த தமிழின துரோகி பட்டத்திலிருந்தாவது தப்பிக்கலாமே என என்னை தமிழனாக 'மாற்றிவிட' எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் மாட்டுக்கறியா, தமிழனா என்று பார்த்தால் , இந்த பாழாப்போன வயிறு மாட்டுக்கறி பக்கம்தான் மனதை சாய்க்கிறது. என்ன செய்ய?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அயம் நாட் ய டமிலியன் பிரதர் - 2

தமிழர்கள் என்பதற்கு இந்து முன்னனி கொடுக்கிற இரண்டாவது வரையறை 'கழுத்தில் தாலி அணிபவர்கள் '. இந்த வாக்கியத்தை படிக்கும்போதே இது குறிப்பாக கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை குறிவைத்து சொல்லப்பட்டதென்பது நமக்கு புரியும். சரி, தமிழர்கள் எல்லோரும் தாலி அணிந்து கொண்டிருந்தார்களா? எப்போது யாரால் இந்த பழக்கம் ஏற்பட்டதென்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதற்குள்ளும் ஆரிய நரி ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.

நான் ஏற்கனவே சொன்னது போல் அதிகம் படித்தவனோ அல்லது சங் இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்தவனோ இல்லையென்றாலும் கூட எந்த பழந்தமிழ் நூலிலும் தமிழர்கள் தாலி அணிந்து திருமணம் செய்தார்கள் என்பதான குறிப்பெதையும் பார்க்கவே முடியவில்லை. நோகாமல் வயிறு வளர்க்க ஆரியர்கள் கண்டுபிடித்த ஆயிரத்தெட்டு சடங்கு சம்பிராதயங்களில் ஒன்று தான் இந்த தாலி அணியும் பழக்கமும். வாயு பகவானுக்கு, அக்கினி பகவானுக்கு, சூரிய பகவானுக்கெல்லாம் மனைவியாய் இருந்தவளே, இன்று முதல் நீ இன்னாருடைய மனைவி என ஏலம் விடுவதை வேத மந்திரம் என கப்சா விட்டு காசு பார்க்க திட்டமிட்டதன் விளைவு தான் இந்த தாலி பழக்கம்.

பொதி மாட்டுக்கு நுகத்தடி புனிதமென்பது போல் பெண்களுக்கு தாலியை புனிதமாக கற்பிதம் செய்து விட்டார்கள். பெண்மை, தாய்மை புனிதமென்பதும் கூட பெண்ணை பெருமைப்படுத்தவா ஏற்படுத்தப்பட்டது? தாலி அணிபவர்கள் தான் தமிழர்கள் என்பது இனத்தை மதத்தோடு பிணைக்கிற இந்துத்துவ குறுக்குபுத்தி அல்லாமல் வேறு என்ன?
மூன்றாவது பாயிண்ட்டை படித்ததும் தான், அட ச்சே, இதை போய் சீரியஸ் பேட்டி னு நெனச்சுட்டமே.. டைம் பாஸ் ல வரவேண்டிய காமெடி பேட்டி ஆச்சே என்பது என் மர மண்டைக்கு உறைக்க ஆரம்பித்தது. அது, ஒருவனுக்கு ஒருத்தி என்பது..
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அயம் நாட் ய டமிலியன், பிரதர்! - 3

கழுத்தில் தாலி அணிபவர்கள் தமிழர்கள் என்று பெண்களுக்கு மட்டும் இலக்கணம் சொன்னவர்கள் ஆண்கள் எதை அணிய வேண்டும் என்பதை சொல்லாமலே விட்டுவிட்டார்களே.. ஒருவேளை அவர்களை பொறுத்தவரை ஆண்களெல்லாம் தமிழர்கள் அல்ல என்பதா அல்லது திருமணம் என்பது பெண்ணை மட்டும் சார்ந்தது என்பதாலா? எனக்கு புரியவில்லை.

ஆரிய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரம் என தம் கட்டி கூவுபவர்கள், தமிழ் இலக்கியங்களில் களவியல், கற்பியல், உடன்போக்கு என்பதை பற்றியெல்லாம் கூட சொல்லியிருக்கிறார்களே என்று கேட்டால் மட்டும் ராமதாஸின் பேரன்களாக அவதாரமெடுத்து, காதலிக்கலாம்.. தப்பே இல்ல.. ஆனா சொந்த சாதியில காதலிக்கனும்.. என சாதி சூலாயுதத்தை தூக்கிக் கொண்டு வெறிப்பிடித்து விரட்டுகிறார்கள்.

பில்டிங் அப்ரூவல் போல பேரண்ட்ஸ் அப்ரூவல் என்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் வேறு. எந்த தலைவனும் எந்த தலைவியும் பெற்றோர்களிடத்தில் சொல்லி காதல் செய்ததாக தெரியவில்லை. எங்கே சாதிப் பேயின் பல்லுடைக்கப்பட்டு ஒழிக்கப்பட்டுவிடுமோ என்ற பதட்டத்தில் காதல் என்றாலே அபச்சாரம் அபச்சாரம் என காதை பொத்திக் கொள்கிறார்கள்.

தாலி கட்டிவிட்டோம் என்பதாலேயே ஒரு பெண் ஆணின் வாழ்நாள் உடைமையாகிவிடுகிறாள். அவளுக்கென தனிப்பட்ட ஆசைகளோ விருப்புவெறுப்புகளோ இலட்சியங்களோ இருக்க கூடாது. இன்னும் சொல்லப் போனால் அவள் மனுஷி என்பதை கூட மறந்து , ஒரு ஆணை எல்லாவிதத்திலும் சந்தோஷப் படுத்தக் கூடிய பொருள் என்பதை தொடர் நினைவூட்டவே தாலி பயன்படுகிறது. இப்படியான பெண்ணடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டால் தான் தமிழனாக முடியும் என்கிறது இந்து முன்னனி.

ஒருவனுக்கு ஒருத்தி என்று பேச நினைத்து தாலி பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். சரியான ஞாபகமறதி கேஸ். சரி விடுங்கள், இப்போதாவது ஞாபகத்துக்கு வந்ததே.. ஒருவனுக்கு ஒருத்தி.. இதுவே இந்து கலாச்சாரம்.. இதுவே தமிழ் கலாச்சாரம் என்பவர்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

எல்லா மத கதைகளுமே கடைந்தெடுத்த, ஒன்றுக்கும் உதவாத , மக்களை மடையர்களாக்குகிற குப்பைகள் தான் என்ற போதிலும் இந்து மத புராணக் கதைகள் எல்லாவற்றையும்விட ஸ்பெஷல். சாமியாக இந்து மதம் குறிப்பிடப்படும் எவருடைய வரலாறாகட்டும், எல்லாமே அடல்ட்ஸ் ஒன்லி டைப் தான். சரோஜாதேவி , ரம்பை, ஊர்வசி புத்தகங்களையெல்லாம் மறைத்து மறைத்து படிக்க வேண்டிய நிலையில், கிருஷ்ணன் பல பெண்களோடு கூத்தடித்த கதையை, ராமனின் அந்தப்புர லீலைகளை, ஐவருக்கும் மனைவி என மனைவியை பங்கு போட்ட கதையை பொதுவெளியில் படித்து நம்மை பக்திமான்களாக, ஒழுக்கசீலர்களாக காட்டிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

இந்துக்கள் தான் தமிழர்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்பவர்கள் தான் தமிழர்கள் என்று கூறும் இந்து முன்னனியினரின் வியாக்கியனமெல்லாம் இருக்கட்டும். இந்து சாமிகளாக கூறப்படுபவர்களில் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த ஒருவரையாவது காட்டச் சொல்லுங்கள், பார்க்கலாம்..

No comments:

Post a Comment