Tuesday, June 16, 2015

அண்ணா எஸ்.எஸ்.ஆர் உறவு

எஸ்.எஸ்.ஆர், அண்ணா மீது வைத்திருக்கும் மரியாதையும் அன்பும் மிகப் பெரியது.

அண்ணா தன் படைப்புகள் கடிதங்களில் பலவற்றை எஸ்.எஸ்.ஆர் வீட்டில்தான் எழுதியிருக்கிறார். அண்ணா எழுதி முடிக்க, அவர் எழுத்தை சூட்டோடு சூடாக வாசிப்பது தனி இன்பம் என்று சிலாகிக்கிறார் எஸ்.எஸ்.ஆர். அண்ணாவின் வசனங்களை தன் திரைப்படங்களில் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அண்ணாவின் பிறந்தநாள் அன்று 50 பரிசுப்பொருட்கள் பரிசாகக் கொடுத்து, 51 வது பரிசாக “என் உயிர்” என்று சீட்டில் எழுதி அதை கூட்டத்தில் உணர்ச்சி பொங்க வாசித்திருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். இதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட அண்ணா கூட்டம் முடிந்து காரில் திரும்பும் போது “ நீ இப்படியெல்லாம் உன் உயிர் என்று என்னை உணர்ச்சிவசப்படவைத்தால் என்னால் எப்படி கூட்டத்தில் பேச முடியும்” என்று அன்பாக கடிந்து கொண்டாராம்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை எஸ்.எஸ்.ஆர் மிக உற்சாகமாக செய்திருக்கிறார். இந்திய சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிப் போராட்டத்தை இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அறிவிக்க அப்போதைய முதல்வர் “உங்கள் வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றினால் எங்களுக்கென்ன” என்ற ரீதியில் சொல்ல எஸ்.எஸ்.ஆர் தன் வீட்டு மாடியில் மிகப்பெரிய கம்பத்தில் கறுப்புக் கொடி பறக்க விட்டிருக்கிறார். அதைக் கண்ட காங்கிரஸ் தொண்டர்கள் கூடி அடி புடி என்று கத்தி கூச்சல் போட, பின் போலீஸ் வந்து கறுப்புக் கொடியை இறக்கியிருக்கிறது. 

அறிஞர் அண்ணா இறந்த போது இறுதி ஊர்வலம் முடியும் போது, “அவர் முகத்தை இன்னுமொருமுறை பார்க்க வேண்டும்” என்று அழுதபடியே கேட்டிருக்கிறார்.ஆனால் அது முறையல்ல என்று மற்றவர்கள் மறுத்திருக்கிறார்கள். அதன் பின் அண்ணாவின் பிரிவை தாங்க முடியாமல் பல நாட்கள் குடித்து விட்டு அவர் சமாதிக்கு சென்று அழுதபடியே தூங்கிவிடுவாராம். இப்படியே குடியின் தீமையால் அதிகம் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் மருத்தவமனையில் இருந்திருக்கிறார்.

அச்சமயத்தில் பெரியார் எஸ்.எஸ்.ஆரை பார்க்க வந்திருக்கிறார். பின் “உங்க வயசென்ன என் வயசென்ன. இவ்வளவு வயசான நான்தான் உங்கள மாதிரி இருக்கனும்.ஆனா நீங்க இந்த வயசுலேயே இவ்வளவு சோர்ந்துட்டீங்களே” என்று எஸ்.எஸ்.ஆரைத் திட்டியிருக்கிறார். அதன் பிறகுதான் எஸ்.எஸ்.ஆர் மறுபடியும் தன் உடல்நிலை மீது அக்கறை கொண்டு, அண்ணாவின் பிரிவில் இருந்து மீண்டிருக்கிறார்.

இதில் பாருங்கள் அண்ணா எஸ்.எஸ்.ஆருக்கு காசு பணம் எதாவது கொடுத்தாரா? அல்லது வேறு எதாவது காரணமா? முழுக்க முழுக்க கொள்கை சார்ந்த உறவுதான். இந்தியா மாதிரியான இந்தி மொழி ஆதிக்கம் நிறைந்த நாட்டில் தமிழன், தமிழ் உணர்வு என்ற அடையாளத்தை உருவாக்குவதற்கு மட்டுமே அண்ணா எஸ்.எஸ்.ஆர் உறவு ஏற்பட்டிருக்கிறது.

அது எவ்வளவு அர்த்தமும் அழகும் நிறைந்ததாக இருக்கிறது.

No comments:

Post a Comment