*தமிழ்நாட்டின் மின்சாரம் - ”ஷாக்’அடிக்கும் உண்மைகள்*
: திரு . அருள் பிரகாசம் : December 13, 2015
வேளச்சேரி வாசியாகிய நான் கடந்த 01-12-2015 லிருந்து தொடர்ந்து ஐந்து நாட்கள் மின்சாரம் இல்லாமல் அகல் விளக்கு வெளிச்சத்தில் இருந்தது பல சிந்தனைகளை என்னுள் கிளரிவிட்டது.
சிறு வயதில் நான்காம் வகுப்பு படிக்கும் வரை நாங்கள் வசித்த வீடுகளில் மின்சாரம் இல்லை. பள்ளியிலிருந்து வந்ததும் சிம்னி விளக்கு ஏற்றி பாடங்கள் படித்த நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கிறது. கண்ணாடி சிம்னியை சாம்பல் போட்டு துடைக்கும் போது கைதவறி போட்டு உடைத்து விட்டு அம்மாவிடம் திட்டு வாங்கிய சம்பவங்கள் உண்டு.
அப்போதெல்லாம் கிராமங்களில் முட்டை பல்பு மாட்டிய தெருவிளக்குகள் மட்டும் இருக்கும். வீடுகளில் யாரோ ஒருவர் வீட்டில்தான் மின்னிணைப்பு இருக்கும்.
நான் ஒரு மின்னியல் பட்டயம் படித்தவன் என்ற முறையிலும் நாற்பது ஆண்டுகள் கட்டுமானத் துறையில் பல்வேறு மாநிலங்களில் இந்தியாவின் பணி செய்தவன் என்ற அனுபவத்திலும் அரசின் திட்டங்கள் செயல் முறைகள் இவைகளைப் பற்றிய புரிதலும் அறிவும் எனக்கு ஓரளவு உண்டு.
அந்த அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இதை எழுத என்னை கேட்டுக் கொண்ட இணைய நண்பர் தம்பி M.சாந்தி நாராயணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்ய தற்போது செயல்படும் திட்டங்களின் உற்பத்தி திறன்:
மரபுசார் சக்தியில் இயங்கும் மின்திட்டங்கள் 11884.44 மெகாவாட்
மரபு சாரா சக்தியில் இயங்கும் மின்திட்டங்கள் 8219.67 மெகாவாட்
ஆக இன்றைக்கு தமிழ்நாட்டில் மின்சாரத்திட்டங்களின் மொத்த உற்பத்தி திறன் சுமார் 20000 மெகாவாட் ஆகும்
இவைகளின் பிரிந்துபட்ட விவரங்கள்:
நீர்மின் நிலையங்கள்: 2284.4 மெகாவாட்
அனல் மின் நிலையங்கள்; 4060 மெகாவாட்
எரிவாயு மின் நிலையங்கள் 516.88 மெகாவாட்
மத்திய அரசு மூலம் கல்பாக்கம்.
நெய்வேலி, கூடங்குளம்
மின்நிலையங்கள் 3870 மெகாவாட்
தனியார் மின் நிலையங்கள் 1154.16 மெகாவாட்
காற்றாலை மின்திட்டங்கள் 7252.61 மெகாவாட்
சூரிய ஒளி திட்டங்கள் 96.66 மெகாவாட்
தாவர எரிபொருள் 211 மெகாவாட்
சர்க்கரை ஆலைகழிவு 659.4 மெகாவாட்
இதுவே 1967க்கு முன்பு என்ன என்பது தெரியுமா? 1966 ல் 1070 மெகாவாட். இதை சட்டமன்றத்தில் தெரிவித்தபோது அன்றைய காங்கிரசு அரசாங்கம் சொன்னது என்ன தெரியுமா? மூன்றாவது திட்ட முடிவுக்குள் திட்டமிட்டது 1040 மெகாவாட் ஆனால் நாங்கள் 1070 ஐ எட்டிவிட்டோம் என்பதாகும்.
அப்போதைய கணக்குபடி தமிழ்நாட்டில் இருந்த விவசாயப் பாசனக் கிணறுகள் 914251. அதில் 247417 கிணறுகளுக்குதான் மின்னிணைப்பு வழங்கப்பட்டு மோட்டர் பம்புகள் மூலம் பாசன வசதி பெற்றது.
அன்றைய தமிழகத்தில் மின்சாரத்திற்கான தேவைகள் குறைவாக இருந்தது. பெரிய தொழிற்சாலைகள் அதிகம் இல்லை. வீட்டு மின் இணைப்புகள் கிராம மின் வசதிகள் எல்லாம் மிகவும் குறைவு.
இது தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியா முழுவதுமே இப்படிதான் இருந்தது. இதில் தமிழ்நாடு எவ்வளவோ மேல் என்றும் சொல்லலாம்.
அப்போதும் மின் பற்றாக்குறை ஏற்படும். அதற்குக் காரணம் மழை இல்லை என்று அரசு சொல்லும். நீர்மின் நிலையங்கள் நீர் இல்லாமல் செயலற்று மின் உற்பத்தி பாதிக்கும்.
அப்போது தமிழகத்தில் இருந்த ஒரே பெரிய மின்திட்டம் மத்திய அரசின் நெய்வேலி முதல் அனல் மின்திட்டம் மட்டுமே.
அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த திமுகழகம் பலமுறை சட்டமன்றத்தில் மின்திட்டங்களுக்கு மாநில அரசு போதிய கவனம் செலுத்தி மேலும் பல திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று நடைமுறை படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த சம்பவங்கள் பல உண்டு.
நெய்வேலி இரண்டாவது அனல் மின்திட்டம், எண்ணூர் அனல் மின்திட்டம் கல்பாக்கம் அணுமின்திட்டம் இவை மூன்றும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது ஏன் காங்கிரசு அரசு மத்திய அரசிடம் தையிரியமாக போராடி அனுமதி வாங்கவில்லை என்று திமுகழகம் போராட்டங்களும் கோரிக்கைகளும் வைத்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் 1967 ல் திமுகழகம் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஆட்சிபீடம் ஏறியது.
நெய்வேலி இரண்டாவது அனல் மின்திட்டம்:
நெய்வேலி இரண்டாவது அனல் மின்சார திட்டம் துரிதமாக செயல்படுத்த திமுக கொடுத்த அழுத்தத்தினால் எடுத்த நடவடிக்கைகளால் 1970 ல் முடிக்கப்பட்டது. நெய்வேலி இரண்டாவது மின்திட்டத்தின் விரிவாக்கம் 2004 ல் திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போது அனுமதி பெற்று 2008-09 ல் யூனிட் I - 250 மெவா மற்றும் யூனிட் II - 250 மெவா விரிவாக்க திட்டம் முடிக்கப்பட்டது
கல்பாக்கம் அணுமின் திட்டம்;
கல்பாக்கம் அணு மின்திட்டம் மத்திய அரசினுடையது. பல ஆண்டுகளாக அனுமதி இல்லாமல் கிடப்பில் கிடந்தது. 1968 ல் அறிஞர் அண்ணா அவர்களுடைய ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த இரா நெடுஞ்செழியன் அவர்கள் முயற்சியால் ஒப்பந்தம் நிறைவேறியது.
2500 ஏக்கர் நிலம் தமிழகம் தருவதென்றும் மத்திய அரசு திட்டத்தை நிறைவேற்றி முதல் கட்ட 200 மெகாவாட் உற்பத்தி முழுதும் தமிழகத்திற்கும் இரண்டாவது கட்ட 200 மெகாவாட் உற்பத்தியில் 50% தமிழகத்திற்கு தரவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் இந்த திட்டம் 1970 ல் கலைஞர் ஆட்சியின் போது துவக்கப்பட்டது. எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் 1983 ல் முதல் கட்டமும் 1985 ல் இரண்டாவது கட்டமும் முடிக்கப்பட்டது.
எண்ணூர் அனல் மின்திட்டம்:
அதே போன்று கலைஞர் தலைமையிலான திமுகழக ஆட்சியில் தான் எண்ணூர் அனல் மின்திட்டம் 1970 லிருந்து 1975 வரையான காலகட்டங்களில் முடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் முதல் பெரிய அனல் மின்சார நிலையம். இதன் உற்பத்தி திறன் 450 மெகாவாட்
அப்போது 1971 வரை திரு. இரா நெடுஞ்செழியன் அவர்களும் பிறகு திரு. ஓ.பி.ராமன் அவர்களும் மின்சார அமைச்சர்களாக இருந்து அந்த திட்டங்கள் முடிப்பதற்கு முனைப்பாக செயல்பட்டவர்கள்.
கிராம மின்மயம் ஆக்கல்:
திமுகழக ஆட்சி அமைந்த பிறகு கிராமங்களுக்கு மின்வசதி தருவதற்கு முதலிடம் தரப்பட்டது. 1968 முதல் தமிழகம் இந்த அம்சத்தில் எப்போதும் முதலிடம் வகித்து வருகிறது.
1968 முதல் முதல் கிராம மின்வசதியில் முதலிடம் வகித்தததாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட போது மொத்தமுள்ள 14126 கிராமங்களில் 54% மின்வசதி பெற்றதாக அறிவிப்பு செய்யப்பட்டது..
அதே நேரத்தில் அன்றைக்கு கேரளா. 40.25% ஆந்திரா 10.75% மைசூர் 19.50% மகாராஷ்ட்டிரா 17.5% குஜராத் 12.9% மேற்குவங்கம் 3.73% ஒரிசா 1.44 % என்கிற நிலையுடன் இருந்ததை எண்ணிப்பார்க்க வேண்டும்.
1969 ல் மத்திய அரசால் Rural Electrification Corporation Ltd உருவாக்கப்பட்டது. அது கிராமங்களுக்கு மின்வசதி தருவதற்கு மாநில அரசுக்கு கடன் தரும் நிறுவனமாக இருக்கிறது இப்போதும். இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி கொடுக்க கலைஞர் ஆட்சி எடுத்த முயற்சிதான் தமிழ்நாட்டில் 1987 ல் 100% 15822 கிராமங்கள் மின்வசதி பெற்றது.
கிராம புறங்களில் மின் வசதி செய்ய இந்த நிறுவனம் இதுவரை மூன்று முறை specification மாற்றம் செய்து இருக்கிறது. தமிழ் நாட்டில் மூன்று specifications ம் நடைமுறை படுத்தியாகிவிட்டது. 1987 க்குப் பிறகு தமிழ்நாட்டில் REC Funded Projects எதுவும் இல்லை. அகில இந்திய அளவில் வடமாநிலங்களில் இன்னும் REC Projects நடந்து கொண்டு இருக்கிறது. மொத்தம் 36 மாநிலங்களில் 15 மாநிலங்களில் கிராம மின்வசதி முழுதடைந்து விட்டது.
2005 ல் திமுகழகம் பங்கு பெற்ற தேசிய முன்னனி கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது திட்டத்தின் சரத்துபடி கிராமங்களுக்கு மின்சாரம் வசதி தருவதன் முன்னுரிமைக்கு வழிகோலும் வகையில் புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. இராஜிவ் காந்தி கிராம மின்மய திட்டம் என்பது அதன் பெயர். அதன் பிரகாரம் 90% மானியம் 10% கடன் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும்.
தமிழ்நாட்டில் 31.3.14 அன்று நிலவரப்படி மின் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 252.32 இலட்சம் ஆகும். மின்வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் குடிசை பகுதிகளில் மின் பகிர்மான கட்டமைப்பை ஏற்படுத்தி அனைத்து வீட்டு உபயோகிப்பாளர்களுக்கும் மின்சார வசதியை ஏற்படுத்துவதே இராஜீவ் காந்தி ஊரக மின்மயமாக்கல் திட்டத்தின் குறிக்கோளாகும்.
இத்திட்டம் 26 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, திருநெல்வேலி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் ஏற்கனவே கிராமங்கள் மின்வசதி முழுமையாக்கப் பட்டுவிட்டதால் இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி உதவிகள் தமிழகம் பெறுவதற்கு 2006 – 2011 திமுகழக ஆட்சியில் மின் உபயோகிப்பாளர்களுக்கு தரமான மற்றும் தடங்கலற்ற மின்சாரத்தை வழங்கவும் ஒட்டு மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை 15 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வரவும் திருத்தியமைக்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட மேம்பாடு மற்றும் சீரமைப்புத் திட்டப் பணிகள் மேற்கொள்ள முடிவெடுத்து இப்போதும் பல வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்போது இந்த திட்டம் இராஜிவ் பெயரில் இருப்பதால் மத்திய அரசால் செயல் படுத்தப்படுவதில்லை என்று தகவல்.
எப்போதுமே திமுகழக ஆட்சியின் போது மத்திய அரசுடன் ”உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்னும் கொள்கையுடன் செயல்படும்.
நாடாளுமன்றத்தில் திமுகழக உறுப்பினர் ஒருவர் இருந்தாலும் அவர் எந்த ஆட்சியிலும் மாநில அக்கறை கொண்டு செயல்படுபவராக திகழ்வார்.
மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டுக்குப் பயன் அளிக்கும் விதத்தில் மிகச் சிறப்பாக திமுகழக உறுப்பினர்கள் செயல்படுவார்கள். டெல்லியில் lobbying செய்தால்தான் எதுவும் நடக்கும். அதில் மிக்க சமர்த்தர்களாக திமுக உறுப்பினர்கள் இருந்தனர். Lobbying என்றால் தவறாக பொருள் கொள்ளும் புத்திசாலிகள் இருக்கிறார்கள். Awareness / consciousness raising என்பதுதான் சரியான அர்த்தம்.
மேட்டூர் அனல் மின்திட்டம்:
மேட்டூர் அனல் மின்நிலையம் திட்டம் முன்வரைவு மதிப்பீடுகள் எல்லாம் திமுகழக ஆட்சியில் செய்யப்பட்டது . ஆனால் 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் மின்சார துறை அமைச்சராக இருந்த போது துவக்கப்பட்டு 420 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அந்த திட்டம் 1987 ல் முடிக்கப்பட்டது
அதற்குப் பிறகு 1989-1991 ஆண்டுகளில் கலைஞர் ஆட்சிகாலத்தில் கூடுதலாக 420 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிட்டு மிகவிரைவாக முடிக்கப்பட்டது. அப்போது மின்துறை அமைச்சராக இருந்தவர் காலஞ்சென்ற திரு சாதிக்பாட்சா அவர்கள்.
வடசென்னை அனல் மின்திட்டம்:
1989-1991 திமுகழக ஆட்சிகாலத்தில்தான் வடசென்னை அனல்மின் திட்டம் வடிவமைத்து மத்திய அரசின் அனுமதி பெற்று துவக்கப்பட்டது
இது இயங்கும் இந்த இடத்தில் 1000 ஏக்கர் நிலபரப்பில் விஜிபி அதிசயஉலகம்.இருந்தது. பழைய சினிமா படங்களில் பாடல் காட்சிகளில் பார்த்து இருக்கலாம். அங்கு போவதற்கு படகில் போகவேண்டும்.
அந்த இடம் மின்திட்டத்திற்கு ஏற்ற இடமாக இருந்ததால் அதனால் திட்ட மதிப்பீடு குறைவாக இருந்ததால் விஜிபியிடம் இருந்து அந்த 1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது கலைஞர் ஆட்சியில்தான். அதற்குப் பிறகுதான் விஜிபி தற்போது உள்ள கோல்டன்பீச் பகுதிக்கு வந்தது.
இந்த திட்டத்தின் மூன்று பிரிவுகளும் ஒவ்வொன்றும் 210 மெகாவாட் திறனுடன் மொத்தம் 630 மெகாவாட் உற்பத்தி செய்கிறது. இந்த நிலையம் 1990 ல் துவக்கப்பட்டு முதல் பிரிவு 1994 லும் 2வது பிரிவு 1995 லும் 3வது பிரிவு 1996லும் உற்பத்தியை தொடங்கியது. இந்த திட்டம் கலைஞர் ஆட்சியில் துவக்கப்பட்டும் தடை செய்யாமல் ஜெயா அரசால் முடிக்கப்பட்டதாகும். மேலும் இரண்டாவது கட்டமாக 2x600 MW விரிவாக்கமும் 2013 ல் ஜெயா ஆட்சியில் முடிக்கப்பட்டது. இதைத் தவிர வேறு எதுவும் ஜெயாவின் ஆட்சிகாலத்தில் செய்த சரித்திரம் இல்லை. இதனை பமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் கூட ஒரு அறிக்கையில் தெரிவித்து இருப்பார்.
தூத்துக்குடி அனல் மின்நிலையம் திட்டம்:
இத்திட்டத்தில் 5 பிரிவுகள் ஒவ்வொன்றும் 210 மெகாவாட் திறன் கொண்டவையாகும் .மொத்த திறன் 1050 மெகாவாட். மூன்று கட்டமாக செயல் படுத்தப்பட்டது, முதல் கட்டத்தில் இரண்டு பிரிவுகள் திமுக ஆட்சிகாலத்தில் துவக்கப்பட்டு எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் 1979-80 ஆண்டில் முடிக்கப்பட்டது.
இரண்டாவது கட்டத்தில் ஒரு பிரிவு 1982 ஆண்டிலும் மூன்றாவது கட்டத்தில் இரண்டு பிரிவு 1991-92 ஆண்டுகளிலும் முடிக்கப்பட்டது.
இந்த திட்டம் உண்மையில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் திட்டமிடப்பட்டது. மத்திய அரசின் அனுமதி இல்லாமல் பல ஆண்டுகள் கிடந்தது. இதுபற்றி 1966 ல் திமுகழக சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு என்.வி.நடராஜன் அவர்கள் மின்மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் அரசைப் பார்த்து கேட்டார் ”தூத்துகுடி மின்திட்டத்தையும் கல்பாக்கம் திட்டத்தையும் ஏன் தையிரியமாக கேட்டு இன்னும் அனுமதி பெறாமல் இருக்கிறீர்கள்” என்று. அப்போது காங்கிரஸ் அரசு காலத்தில் மின் பற்றக்குறை இருந்தது. ஏன் என்று கேட்டால் மழை இல்லை என்று சொல்வார்கள். அந்த சமயத்தில் நெய்வேலி முதல் அனல்மின் நிலையம் மட்டுமே NTPS-I செயல் பட்ட காலம்.
நீர்மின் திட்டங்கள்;
நீர் மின் உற்பத்தி குந்தா, காடம்பாறை, ஈரோடு, திருநெல்வேலி என்ற நான்கு வட்டங்களில் செயல்படுகிறது. இதில் குந்தா பைக்காரா மேட்டூர் (ஈரோடு) மின்திட்டங்கள் காங்கிரசு ஆட்சிகாலத்தில் உருவானவை.
காடம்பாறை நீர்மின் திட்டத்தில் சோலையனூர் மின்நிலையம்-I 70 மெகாவாட் சோலையனூர் மின்நிலையம்-iI 25 மெகாவாட் ஆலியார் மின்நிலையம் 60 மெகாவாட் திறன் 1970 - 71 ல் கலைஞர் ஆட்சியில் திட்டமிட்டு முடிக்கப்பட்டது.
திருநெல்வேலி வட்டத்தில் பாபனாசம் , பெரியார் மின்திட்டங்கள் தவிர்த்த மற்ற திட்டங்கள் முக்கியமாக கோடையார், சேர்வலார் திட்டங்கள் 1970-1975 காலகட்டத்தில் கலைஞர் ஆட்சியில் திட்டமிட்டு முடிக்கப் பட்டவைகளாகும்
பேசின் பிரிட்ஜ் மின் நிலையம்:
பேசின் பிரிட்ஜ் அனல் மின் நிலையம் ஒன்று இருந்தது. மிகப் பழைய மின் திட்டம். சுமார் 90 மெகாவாட் அளவு உற்பத்தி திறன் கொண்ட இந்த நிலையம் 1984-85 களில் 20 மெகாவாட் அளவுதான் உற்பத்தி செய்தது. அதை முழுதுமாக இடித்துவிட்டுதான் இப்போது அங்கு தமிழக அரசின் 120 மெகாவாட் மின்நிலையம் 1996 முதல் செயல்படுகிரது.
தனியார் மின் நிறுவனங்கள்:
தனியார் மின் நிறுவனங்கள் இந்தியாவில் எப்போது முதல் அனுமதிக்கப்பட்டன என்பது பலருக்கு இப்போது நினைவிருக்காது. 1990 ல் திரு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது அவரது மந்திரி சபையில் திரு ஆரிப் முகமது கான் மின்சார அமைச்சராக இருந்தார். அப்போது 7 வது ஐந்தாண்டு திட்ட இறுதியில் இந்திய அளவில் 7.3% மின்சார பற்றாக்குறை இருக்கும் என் கனக்கிடப்பட்டது. மேலும் இது ஆண்டுக்கு ஆண்டு கூடும் என்கிற நோக்கில் 8வது ஐந்தாண்டு திட்டத்தில் மின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி வழங்க முடிவானது. அதன் படி மின் இலாக்காவில் தனிபிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
தமிழ் நாட்டில் முதல் பெரிய தனியார் மின் நிலையம் ஜிஎம்ஆர் வாசவி மின்நிலையம். 1996 ல் திமுக ஆட்சியில் தமிழக அரசுடன் ஒப்பந்தம் கைஎழுத்தாகியது. 200 MW திறன் கொண்ட இந்த நிலையம் 1999 முதல் உற்பத்தி துவங்கி செயல்படுகிறது. இப்போது பல தனியார் மின் நிலையங்கள் பிளை பெருமால் நல்லூர், சமயநல்லூர், நெய்வேலி மற்றும் டிட்கோ திட்டங்கள் ஐந்து என்று மொத்தம் 9 இடங்களில் செயல் படுகின்றன.
தனியார் மின் உற்பத்திக்கான அனுமதி கொடுக்க 1990 ஆண்டு திமுக ஆட்சிகாலத்தில் மின்துறையில் தனிபிரிவு உருவாக்கபட்டது. அப்போது மிந்துரை அமைச்சராக இருந்தவ்ர் திரு துரைமுருகன் அவர்கள்.
எரிவாயு மின் திட்டங்கள்:
மத்திய அரசில் அங்கம் வகித்தபோது 1997 ல் டி ஆர் பாலு அவர்கள் பெட்ரோலியத்துறை இணை அமைச்சராக இருந்த போது ராமநாதபுரம் , தெற்காட்டூர், வழுதூர் பகுதிகளில் கிடைக்கும் எரிவாயு பைப்லைன் மூலம் வழுதூருக்கு கொண்டு சென்று அங்கு மின்சார உற்பத்தி நிலையம் துவக்க காரணமாக இருந்தவர்.
அதே போல காவேரிப் படுகையில் நாகப்பட்டினம் குத்தாலம் பகுதிகளில் கிடைக்கும் எரிவாயுவை திருவாரூரில் தொடங்க ஏற்பாடு செய்தவரும் அவர்தான். நேரில் அடிக்கடி ஆய்வு செய்வார்.
திருமாக்கோட்டை (கோவில்கலப்பல்) 107 மெகாவாட் திறன் கொண்டது
அப்போது மத்திய அரசில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் காலஞ்சென்ற திரு ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்கள்.. இந்த திட்டங்களுக்காக தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் குத்தாலம் எம். கல்யாணம் அவர்கள். அப்போது மின்சார அமைச்சராக இருந்தவர் திரு ஆற்காடு வீராசாமி அவர்கள்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் எரிவாயு மின்திட்டங்கள் மூலம் சுமார் 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்க பெரிதும் காரணமாக இருந்தது மாநிலத்தில் திமுகழக ஆட்சியும் மத்தியில் கூட்டணி ஆட்சியில் திமுகழகம் பங்கெடுத்ததும்தான் என்றால் அது மிகை அல்ல.
காற்றாலை மின்சாரம்:
கயத்தாறு, முல்லைக்காடு, சுல்தான்பேட்டை, முப்பந்தல் ஆகிய இடங்களில் முதல் முதல் 1989-90 களில் திமுக ஆட்சியின் போதுதான் காற்றாலை திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் அவர்களை அழைத்து வந்து 15 மெவா திறன் கொண்ட காற்றாலை தொகுப்பை கயத்தாறு பெருங்குடி பகுதியில் திரந்து வைக்கப்பட்டது
மின் உற்பத்தியில் தனியார் அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு பிறகு தமிழ்நாட்டிலும் அப்போது காற்றாலை மின் உற்பத்தி துவங்க தனியார் ஊக்குவிக்கப் பட்டனர். அவர்களுக்கு அது பற்றி ஆலோசனைக் கூற தனி ஆலோசனை பிரிவும் மின்துறையில் அப்போது துவக்கப்பட்டது. தனியார்களை அழைத்து கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
1996 ல் திமுகழக ஆட்ச்சி காலத்தில் 500 மெகாவாட் அளவு காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்ற மாநிலம் தமிழகம்.
இன்று தமிழ்நாடுதான் 7200 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகள் அமையப்பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
இணைமின் உற்பத்தி நிலையங்கள்:
CoGen என்று சொல்லப்படும் இணைமின் உற்பத்தி நிலையங்கள் 1996-2001 ஆண்டு காலத்தில்தான் திரு ஆற்காடு வீராசாமி அவர்கள் மின்துறை அமைச்சராக இருந்த போது முதன்முதல் தமிழ் நாட்டில் கொண்டு வரப்பட்டது. கரும்பு சக்கைப் பயன் படுத்தி சர்க்கரை ஆலைகளில் இப்போதும் தனியார் மற்றும் அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இந்த திட்டம் செயல்படுகிறது.
தாவர எரிபொருள் மின்நிலையங்கள்:
தாவர எரிபொருள் என்னும் மரவிறகு சக்கை சுள்ளிகள் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள் Bio-mass plant என்று சொல்வார்கள். இந்த வகையில் மின்சாரம் உற்பத்தியும் 1996-2001 ஆட்சிகாலத்தில் தான் முதல்முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது.
சூரியஒளி மின்சாரம்:
1996-2001 திமுக ஆட்சி காலத்தில்தான் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 1997 ல் முதல் சூரியஒளி மின்சார நிறுவனம் NEPC Micon Ltd. பல்லடம் அருகில் துவக்கப்பட்டது. சூரியஒளி மின்சாரம் தயாரிக்க மிகவும் அதிக செலவு ஆகும். இதன் நிர்மான செலவு தொழில்நுட்ப வளர்ச்சியால் இப்போது குறைந்து கொண்டு வருகிறது. 2010 ல் 5 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் சிவகங்கை போட்டோ வோல்டிக் என்ற நிறுவனம் முதல் முதல் செயல்பாட்டுக்கு வந்தது. 2011 ல் 10 மெகாவாட் 2012 ல் 17 மெகாவாட் என்று ஆண்டுதோறும் இந்த வகை மின்னுற்பத்தி உயர்ந்து இப்போது 96 MW உற்பத்தி செய்யப்படுகிறது.
மின்திட்ட வளர்ச்சியும் வீழ்ச்சியும்
1957 ல் 172 MW மின்தேவை இப்போது சுமார் 13000 MW அளவுக்கு தேவைப் படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் மின் தேவையை பொறுத்தும் அளவிடலாம். அந்த வகையில் தமிழகம் முன்னனியில் இருப்பதாகவே கருதமுடியும். 1957 ல் 4.3 லட்சம் மின் இணைப்புகள் இருந்தது இப்போது 252.32 லட்சமாக இருக்கிறது
மேலும் தொழில் வளர்ச்சி எப்போதும் இல்லா அளவு திமுக ஆட்சி காலத்தில் உயர்ந்தது.
தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திறன் 20000 மெகாவாட் அளவு இருந்தாலும் தற்போதைய 13000 லிருந்து 14000 மெகாவாட் தேவையை பூர்த்தி செய்வது இயலாமல் போகிறது.
இதற்கு காரணம் அணைகளின் நீரளவு போதாமையால் நீர்மின் உற்பத்தியும் காற்றின் வேகம் போதாமல் காற்றாலை மின்சார உற்பத்தியும் பாதிக்கிறது.
இதை கருத்தில் கொண்டு திமுகழக ஆட்சியில் மின்திட்டங்களுக்கு முன்னுரிமைத் தந்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
கடந்த திமுக ஆட்சியில் துவக்கப்பட்ட கீழ்காணும் மூன்று திட்டங்களும் முடியும் தருவாயில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதை உடனடியாக விரைந்து முடிப்பதில் ஜெயா அரசு முனைப்பு காட்டி இருந்தால் மின்வெட்டு பாதிப்பிலிருந்து தப்பி இருக்கலாம்.
1. வடசென்னை அனல்மின் நிலையத்தில் (NCTPS) விரிவாக்கம் - 1200 மெ.வா
2. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் (MTPS) விரிவாக்கம் – 600 மெ.வா
3. வல்லூர் அனல்மின் நிலையம் – 1000 மெ.வா
தூத்துக்குடியில் TNEB-NLC 1000 மெ.வா மின்திட்டம் திமுக ஆட்சியில் துவங்கப்பட்டது. இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது
அடுத்ததாக TNEB-NTPC-BHEL கூட்டு முயற்சியில் உடன்குடி அனல் மின் நிலையம் – 1600 மெ.வா திட்டம் அதிமுக அரசால் 1320 மெ.வா ஆக குறைத்து தமிழ்நாடு அரசே திட்டதை செயல்படுத்தும் என்று Joint Venture ஒப்பந்தத்தை ரத்து செய்து 2013ல் டெண்டர் கோரியது. 18 மாதம் கழித்து அக்டோபர் 2114 ல் டெண்டர் திறக்கப்பட்டது. அதன் பிறகு 6 மாதம் கழித்து அதையும் ரத்து செய்தது. இதற்கான காரணங்கள் ஜெயா அரசால் சரியாக சொல்லப்படாமல் இருக்கிறது
.
அதே போல் ஜெயங்கொண்டம் NLC- TNEB – 1600 மெ.வா மின்திட்டம் திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்ட திட்டம். அப்போதே இந்த திட்டத்திற்கு நிலம் கூட கையகப்படுத்தப்படுத்த துவங்கியது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியின் ஊக்கமின்மையால் 2013 ல் NLC இன்னும் நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசால் தாமதம் ஆகிறது திட்டம் மதிப்பு கூடிவருகிறது என்று சொல்லி இந்த திட்டத்திலிருந்து விலகப்போவதாக அறிவித்தது. இப்போது 2015 ஜூன் மாதம் மீண்டும் அந்த திட்டதை நிறைவேற்ற போதுமான நிதி இருப்பதாகவும் தமிழக அரசு நிலத்தை சீக்கிரம் தந்தால் திட்டதை மறுபரிசீலனை செய்து தொடங்கமுடியும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறது
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் மின் நிலையம் – 4000 மெ.வா
கடலூரில் BGR நிறுவனத்துடன் மின் திட்டம் – 1300 மெ.வா
போன்ற பல திட்டங்கள் திமுக அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்டவை கடந்த நாலரை ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.
திரு . அருள் பிரகாசம்
https://arul-vaaku.blogspot.in/2015/12/blog-post.html?m=1