Monday, September 18, 2017

நீங்கள் சொல்லுவதற்கு - நீங்கள் பின்பற்றுவதற்கு ஆதாரமென்ன?

நண்பர்களே! என்னைப் போல் ஒரு சாதாரண மனிதன் பேசுவதனாலோ, தனக்குத் தோன்றியதை எழுதுவதனாலோ, கடவுள் போய்விடும் - மார்க்கம் போய்விடும் - சமயம் போய்விடும் என்று நீங்கள் பீதி அடைவீர்களானால் உங்கள் கடவுளுக்கும், மார்க்கத்திற்கும் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதை யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் உங்கள் கடவுள் உறுதியானவரல்ல, உண்மையானவரல்ல என்றும், உங்கள் சமயம் உறுதியானது அல்ல, உண்மையானது அல்ல என்றும் நீங்களே கருதியிருக்கின்றவர்களாகிறீர்கள்.

நாங்கள் உங்கள் கடவுளையோ, சமயத்தையோ இல்லையென்று சொல்லுவதற்காக இங்கு வரவில்லையென்பதை உறுதியாய் நம்புங்கள்.

அவற்றைப் பற்றி உண்டு - இல்லை என்று சொல்லிக் கொண்டு திரிவதல்ல எனது வேலை.

நீங்கள் சொல்லுவதற்கு - நீங்கள் பின்பற்றுவதற்கு ஆதாரமென்ன? அது உங்கள் பகுத்தறிவுக்குப் பொருத்தமாயிருக்கின்றதா? அனுபவத்திற்கு ஒத்துவருகின்றதா? என்று யோசித்துப் பாருங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்ளுவது தான் எனது வேலையாகும்.

அவற்றிற்கு இடம் கொடுப்பதாலேயே உங்கள் கடவுளோ, மதமோ, ஆதாரமோ போய்விடுமென்று நினைத்தீர்களானால் அவற்றைப் பற்றி மறுபடியும் வெளியில் பேசுவது வெட்கக்கேடான காரியமல்லவாவென்று கேட்கின்றேன்.

- தோழர் ஈ.வெ.ரா
('குடிஅரசு', 01.02.1931)

No comments:

Post a Comment