டி. வி. எஸ். சோமு
Via Facebook
2017-09-28
அம்மாக்கள் கவனிக்கவும்...!
புற்று நோய் நோய் சம்பந்தமான எந்த செய்தி படித்தாலும், கேட்டாலும், என் அம்மாவின் நினைவு மனதில் நிழலாடும்.
இந்த நோயால்தான் என் அன்பு அம்மா, துடிதுடித்து, தவிதவித்து செத்துப்போனது.
செய்யாத வைத்தியம் இல்லை, பண்ணாத செலவு இல்லை. அவ்வளவு அக்கறையாய் பார்த்துக்கொண்டார் அப்பா.
உடல் நல விசயங்களில் மிகவும் அக்கறையுடன், எச்சரிக்கையுடன் இருப்பார் அப்பா. .
வீட்டில் "மருந்து அலமாரி" என்றே தனியாக உண்டு.அதில், குடும்பத்தினர் ஒவ்வொருவர் பெயரிலும் தனித் தனி அட்டைப் பெட்டி இருக்கும். கடந்த காலங்களில் அவரவர் உடல் நிலை,மருத்துவர் சீட்டு, பில்... எல்லாமே இருக்கும்.
"டாக்டருங்க எத்தனையோ பேசண்ட்டுகளைப் பார்க்கிறாங்க.. . நம்ம பழைய பிரிஸ்கிரிப்சனை எடுத்துட்டுப்போனாதான் அவருக்கு பேசண்ட் ஹிஸ்டரி புரியும்" என்பார் அப்பா.
அப்பா மாதிரியேதான் அம்மாவும்... எங்களுக்கு சின்னதாய் காய்ச்சல் என்றாலே டாக்டர் வீட்டுக்குத் தூக்கிகொண்டு ஓடும்: கசாயம் வைத்துத் தரும்: காசு வைத்து மஞ்சள் துணி முடிந்துவிடும்: தூரதேச தெய்வங்களுக்கூட வேண்டிக்கொள்ளும்: குடும்ப நோயாளிக்கான உணவைத்தான் தானும் சாப்பிடும். .
ஆனால் இந்த அக்கறை எல்லாம் குடும்பத்தினர் மீதுதான்: தன்னளவில் அம்மாவுக்குக் கிடையவே கிடையாது.
ஆரம்பத்தில் அம்மாவுக்கு, வயிற்றில் வலி இருந்திருக்கிறது. யாரிடமும் சொல்லவில்லை... அப்பாவிடம் கூட.
வலி அதிகமானவுடன், தனக்குத் தெரிந்த கை வைத்தியம் செய்து சாப்பிட்டு வந்திருக்கிறது.
பல மாதங்கள், பல வருடங்கள் இதே கை வைத்தியம்தான். சில சமயங்களில் வயிற்று வலி தாங்காமல் முனகும். “அப்பாகிட்ட சொல்லாத” என்று கட்டளை இடும்.
ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியவில்லை... அப்பாவிடம் சொன்னது அம்மா. உடனே டாக்டர் வீட்டுக்குப் போனோம்.
"கர்ப்பப்பையில் கேன்சர்... முன்னமே வந்திருக்கலாமே" என்று டாக்டர் சொல்ல... பதறிப்போய்விட்டார் அப்பா.
ஆஸ்பத்திரியில் வைத்து, அப்பா குரல் தழுதழுக்க சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது:
"என்கிட்ட முதல்லேயே என் சொல்லல, லட்சுமி?”
அதன் பிறகு எங்கள் வீட்டிலிருந்து செல்லும் எல்லா வழிகளும், மருத்துவமனைகளிலேயே முடிந்தன: “டாக்டர், டெஸ்ட், மருந்து,ஸ்கேன்….” என்று “மருத்துவ மொழியே” எங்களின் வீட்டு மொழி ஆனது.
களமாடும் வீரன் போல செயல்பட்டார் அப்பா. தனது அஞ்சலக சேமிப்பு, வங்கி இருப்பு எல்லாவற்றையும் எடுத்து வீசினார். இருந்த பிளாட்டை வந்த விலைக்கு விற்றார். நகைகளில் சில விலை போயின, சில அடகுக் கடைக்கு….
அம்மாவை துன்புறுத்தும் அந்த பொல்லா நோயை முழு முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் வாளைச் சுழற்றிக்கொண்டிருந்தார் அப்பா.
ஆனால் ஒவ்வொரு பரிசோதனையின் போதும், தனது வெற்றியை நிரூபித்துக்கொண்டே வந்தத ஆழப்பதிந்திருந்த அந்தப் பொல்லா நோய்..
ஆனாலும் சிகிச்சை தொடர்ந்தது.
பல மருத்துவர்கள், பல மருத்துவமனைகள்… கடைசியாக தஞ்சை தெற்குவீதி தனியார் மருத்துவமனை.
கிட்டதட்ட ஒரு மாதம்… அம்மாவின் உடல் நிலை வழக்கத்தை விட மோசமானது. “உடம்பெல்லாம் எரியுதுடா” என்று முனகும். ஐந்துநிமிடங்களுக்கு ஒரு முறை இரண்டு டீஸ்பூண் தண்ணீர் தர வேண்டும். இல்லாவிட்டால் நாக்கு உலர்ந்துவிடும். ஒரு சேரவும் தண்ணீர்குடிக்க முடியாது.
படாதபாடுபட்டது அம்மா.…
ஒரு குழந்தை மாதிரி அம்மாவைப் பார்த்துக்கொண்டேன். எனது வரமும், சாபமுமான காலம் அது.
ஒரு மதிய வேளையில் எல்லோரையும் தவிக்கவிட்டு அம்மா அடங்கியது… முழுதாய்… முற்றிலுமாய்..
மருத்துவமனையைவிட்டு வெளியேறியவன், அம்மாவின் இறுதிக் காரியங்கள் எதிலும் பங்கெடுக்கவில்லை.
அம்மாவின் மீதான பேரன்பை விட, பெருங்கோபமே எஞ்சியிருந்தது.
"உரிய காலத்தில் சிகிச்சையைத் துவங்கியிருந்தால் காப்பாற்றியிருக்கலாம்" என்பதே அனைத்து மருத்துவர்களின் கடைசி பிரிஸ்கிருப்பசனாக இருந்தது நினைவுக்கு வந்தது.
“எனக்கு செய்யும் செலவு எதுவும் வீண்” என்கிற எண்ணம்தான் அம்மா தனக்குத்தானே வைத்துக்கொண்ட கொள்ளி..
நானறிந்த வரை அம்மாக்கள் ஆகப்பெரும்பாலோர் இப்படித்தான் இருக்கிறார்கள். . குடும்பத்தினர் மீது செலுத்தும் அக்கறையில் தங்கள் மீது நூறில் ஒரு பங்கு கூட வைப்பதில்லை.
அம்மாக்களே... இது தியாகம் அல்ல: பெருமை அல்ல... துரோகம்!
இப்படி இருப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல… குடும்பத்தினருக்கும் துரோகம் இழைக்கிறீர்கள்.
ஒரு முக்கியமான விசயத்தைப் புரிந்துகொள்ளுங்கள் அம்மாக்களே...
நாங்கள் உங்களுக்கு எப்படி முக்கியமோ, அதே போல நீங்கள் எங்களுக்கு முக்கியம்! நீங்கள் எங்களுக்கு முக்கியம்!
( என் அம்மா சந்தானலட்சுமி நினைவுதினத்தை ஒட்டி மீள்பதிவு.)
No comments:
Post a Comment