Wednesday, September 6, 2017

நான் ஏன் திமுக சொம்பு?

Sivasankaran Saravanan
Via Facebook
2017-09-05

இணையத்தில் ஒரு அரசியல் கட்சியை ஆதரித்து எழுதுபவர்களுக்கு பல நோக்கங்கள் இருக்கலாம்.  கட்சியில் உறுப்பினராகவோ பொறுப்பிலோ இருக்கலாம்,  அவர்களது குடும்பத்தினர் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம்,  தனிப்பட்ட முறையில் நேரடியாக அந்த கட்சியால் ஆதாயம் பெற்றவராக இருக்கலாம்,  அந்த கட்சியை ஆதரிப்பது பொது சமுதாயத்திற்கு நல்லது என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம்.  இப்படி பல காரணங்கள் இருக்கலாம். 

நான் இணையத்தில் திமுகவை ஆதரித்து எழுதுபவன் என்பதை ஒருபோதும் மூடி மறைத்தோ முக்காடு போட்டதோ இல்லை. 

நான் அரசுப்பள்ளியில் படித்து எங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவன் . எங்கள் குடும்பத்தில் நான் தான் முதன்முறையாக ஷூ போட்டுக்கொண்டு வேலைக்கு போகிற வேலையில் சேர்ந்தவன்.  பொருளாதார பின்புலம் இல்லாத காரணத்தால் மன நிறைவான கை நிறைய சம்பளம் வாங்கினால் கூட எங்களுக்கென சில நெருக்கடிகள் உள்ளன.  மாதம் பிறந்தால் வீட்டு வாடகை கட்டவேண்டும்,  ஈஎம்ஐ தவணை கட்டவேண்டும் என சில கமிட்மென்டுகள் உள்ளன .

பெரியார் அம்பேத்கார் புகைப்படங்களை வைத்துக்கொண்டு,  நான் திமுக ஆதரவாளன் என பிரகடனப்படுத்திக்கொண்டே ஒரு வணிக நிறுவனத்தில் அதிலும் மேல்தட்டு மக்களை வாடிக்கையாளர்களாக கொண்ட கம்பெனிகளில் பணியாற்றுகிற சிரமங்களை நண்பர்கள் உணர்ந்திருப்பார்கள். 

ஜெய்ஹிந்த்,  ஐ லவ் இந்தியா,  எத்தனை பூக்கள் பூத்து உதிர்ந்தாலும் என்றும் உதிராத பூ நம் நட்பூ,  ஹாப்பி ஆவணி அவிட்டம் ப்ரன்ட்ஸ்,  Watching விவேகம் in sathyam cinemas,  selfie with our office friends,  விராட் கோலி fantastic innings,  today my மச்சினிச்சி Birthday வாழ்த்துங்க ப்ரன்ட்ஸ் இப்படி மட்டுமே ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டு இருப்பது தான் எங்களுக்கு மிக பாதுகாப்பான நிலை . யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை . வீடு அலுவலகம் மற்றும் நண்பர்களிடமும் நல்ல பேர். எந்த பிரச்சினைக்கும் போகாம தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கிற நல்ல பையன்ங்க என்ற பாராட்டுப்பத்திரம்.  இத்தனை ப்ளஸ்கள் எங்களுக்கு கிடைக்கும் .

மாறாக சாதிய மதவாதங்களை எதிர்த்து எழுதுதல்,  பார்ப்பனியத்தை பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது,  திமுக விற்கு ஆதரவு,  ஹிந்துத்வ அரசியலை எதிர்ப்பது,  பெரியார் அம்பேத்கார் தான் எங்கள் ஆசான்கள் என்பது,  நீட் எதிர்ப்பு இதனால் எல்லாம் எங்களுக்கு நேரடி பலன் ஏதாவது இருக்கிறதா என்றால் ஒன்றும் கிடையாது.  எப்பவும் நமது சொந்தக்காரங்க,  அலுவலக உயரதிகாரிகள் நம்மள ஏதாச்சும் சொல்லிடுவாங்களோ என்ற மெல்லிய சந்தேகம் மனதிற்குள்   ஓடிக்கொண்டே இருக்கும்.  எந்நேரம் பார்த்தாலும்  வாட்சப்,  யூ டியூப் ல வீடியோ பார்த்திட்டுருப்பானுங்க ஆனா நம்மள பார்த்து கேட்பாங்க : ஏன் ப்ரோ எப்ப FB ஓப்பன் பண்ணாலும் உங்க போஸ்ட் தான் வருது,  எப்பவும் இதே வேலை தானா எனக் கேட்டு நம்ம வேலைக்கே உலை வைக்க பார்ப்பாங்க.  சரி இணையத்திலாவது நல்ல பேரா என்றால் அதுவும் கிடையாது . திமுக சொம்பு,  DMK boot licker,  திமுக பொறுக்கி,  திக பொறுக்கி,  பெரியாரிய மூடர்கள்,  பஹூத்தறிவாளர்கள் என எங்களை வண்ட வண்டயாக திட்டுபவர்கள் அதிகம் .  இவ்வளவையும் சமாளிச்சுட்டுத்தான் இணையத்தில் எழுதுகிறோம். 

இவ்ளோ ரிஸ்க் எடுத்து எழுதுவதால் ஏதாவது நேரடி ஆதாயம் இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது .  எனக்கு ஒரு வார்டு கவுன்சிலர் சீட்டு கூட கிடைக்காது என்று நன்கு தெரிந்தே தான் திமுகவிற்கு சொம்பு தூக்குகிறோம் . நாளைக்கே திமுக தலைமையிடம் தனிப்பட்ட முறையில் காரியம் சாதிக்க வேண்டி போய் நிற்க முடியுமா என்றால் அதுவும் முடியாது . நாங்க  எப்பவாச்சும் ஸ்டாலின் மீதோ கனிமொழி மீதோ ஆதங்கத்தை வெளிப்படுத்தி ஒரு போஸ்ட் போட்டிருப்போம்.  அதை ஒருத்தன் ஸ்கிரீன் ஷாட் எடுத்துவச்சு எங்கள பத்தி போட்டு கொடுப்பான் : தலைவரே இவன் உங்கள பத்தியே கிண்டல் பண்ணி எழுதறவன் தான் என பத்த வைப்பான் . So அந்த வாய்ப்பும் கிடைக்காது என்பது தெரியும் .

இவ்வளவு நெகட்டிவ் விஷயங் களை சுமந்துகொண்டு திமுகவிற்கு சொம்பு தூக்குகிறோம் என்றால் நாங்கள் என்ன தியாகிகளா?  எங்களுக்கு அப்படி என்ன அக்கறை? 

ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் நன்றி யை மறக்காமல் இந்த தமிழ்நாட்டை சுயமரியாதை பூமியாக்கிய,  சமூகநீதியை வளர்த்தெடுத்த திராவிட கொள்கைகளின் மீதுள்ள விடாப்பிடியான பற்றுதல் தான் எல்லாவற்றையும் மீறி எங்களை திமுகவை ஆதரித்து எழுத வைக்கிறது.  நடுநிலை போல சீன் போட்டுக்கொண்டே,  முற்போக்கான இளைஞர்,  சமூகநீதி ஆதரவாளர் என்ற அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டே இணையத்தில் கெத்து காட்ட முடியாதா என்ன?  நிச்சயம் முடியும்.  ஆனால் விரும்பியே தான் திமுக அடையாளத்தை ஏற்கிறோம். 

மன்மோகன்சிங் பத்தாண்டுகள் ஆட்சி செய்த காலத்தில் செய்த விளம்பர செலவை விட மோடி அரசு மூன்றாண்டுகளில் செய்த விளம்பர செலவு அதிகம்.  இது Official report.  திமுக தனது ஆட்சிக்கால சாதனைகள் எதனையும் விளம்பரம் செய்யாமல் விட்டது மிகப்பெரிய தவறு.  அதனால் தான் இந்தியாவிலேயே திமுக அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டிய அணைகள் நீர்த்தேக்கங்கள் போல வேறெந்த ஆட்சிக்காலத்தின் போதும் அமைக்கப்படவில்லை என்ற சாதாரண உண்மையை கூட பொதுமக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை.  காமராஜர் ஆட்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் எந்த அணைகளும் கட்டப்படவில்லை என்று யாராவது சொன்னால் அதை அப்படியே நம்புகிறார் கள்.   திமுகவிற்கு ஊடக பலம் எப்போதும் இல்லை.  அப்படி இருக்கும்போது சமூக ஊடகங்களை அந்த கட்சி வளைத்திருக்கவேண்டாமா?  பாடப்புத்தகங்களைத் தாண்டி வேறு எதையும் படித்திராமல் வாட்சப்பில் முதன்முறையாக படிக்கிற செய்தி தான் உண்மையான வரலாறு என நம்பி அரசியல் கற்றுக்கொள்கிற  கூட்டம் பெருகி வருகிறது. திராவிட கட்சிகள் மோசம் என்றாலே ஆமா ஆமோய் என எளிதாக நம்புகிறார்கள்.  அதனால் தான் தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து திமுக விற்கு ஆதரவாக பொதுவெளியில் எழுதவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம். 

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் திமுக தனது கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறதா என்றால் இல்லை.  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு சங்கி பக்கம் ஆ ராசா தான் பீட்டா விற்கு அனுமதி தந்தவர் என்ற அவதூறை திட்டமிட்டு பரப்புகிறது.  அதைப்பற்றி ஆ ராசா தரப்பிடம் சொல்லி தயவு செய்து அந்த பக்கத்தின் மீது சட்டப்படி ஒரு case file செய்யுங்க என்றால் No response.  தனிப்பட்ட ஒரு தியாகராஜன் பழனிவேல் ராஜன் மீது சவுக்கு சங்கர் என்பவர் புகார் சொல்கிறார் எனும்போது தியாகராஜன் நேரடியாக வந்து பதிலடி தருகிறார்.  அதன்பிறகு சவுக்கு வாய் திறக்கவில்லை.  இங்கே அனிதா மரணம் விவகாரத்தில் திமுக மீது சங்கிகளால் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது.  ஒரு மாதத்திற்கு முன்பு சந்தித்த போட்டோ வை போட்டு ஸ்டாலினை சந்தித்த மறுநாள் அனிதா மரணம் என அவதூறு பரப்புகிறார்கள் ஒரு சங்கி பக்கம்.  அதை குறிப்பிட்டு சட்டப்படி Case file செய்யுங்கள் என்றால் No response. 

ஒரு பக்கம் திமுக மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது . அதை முறியடிக்க திமுக ஏதாச்சும் முயற்சி செய்கிறதா என்றால் இல்லை.  இந்த ஆதங்கத்தை நாம் எப்போதாவது வெளிப்படுத்தினால் கழக முரட்டு பக்தர்கள்  சிலர்  நம்மை " தலைமைக்கே அறிவுரை சொல்ற அறிவாளிய பாருங்க " என எங்கள் மீதே லைட்ட திருப்புகிறார்கள்.  ஆக கழக முரட்டு பக்தர்களிடமும் நல்ல பேர் இல்லை .  இப்படியெல்லாம் புலம்புவதால் இனி என் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வேன் என அர்த்தமில்லை.  தனிப்பட்ட ஒருவர் மீதான பிரச்சினை ஒருபோதும் என் அரசியலை தீர்மானிக்காது.  தனிப்பட்ட ஈகோ தான் எனது அரசியலை தீர்மானிக்கும் என்கிற அளவுக்கு சிறுபிள்ளைத்தனமானவனும் அல்ல.  தொடர்ந்து திராவிட இயக்க அரசியலால் பலன் பெற்ற கோடிக்கணக்கானோர்களில் ஒருவனாக,  நன்றியை மறக்காமல் தொடர்ந்து திமுக சொம்பாகவே களமாடுவேன்..!

No comments:

Post a Comment