Wednesday, September 6, 2017

St Ann's p public school

இப்போதுள்ள ட்யூஷன் செண்டர்களில் பார்த்தால் 80% மேல் மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களைத்தான் சேர்த்துக் கொள்கிறார்கள். 80% வாங்கும் மாணவர்களை 98% வாங்க வைப்பதுதான் அவர்களின் லட்சியம்.

இதற்கு சற்றும் குறைந்ததல்ல பள்ளி நிர்வாகம்.  நன்றாக படிக்கும் மாணவர்களின் மேல் ஆசிரியர்கள் காட்டும் அக்கறை average மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் மீதோ averageற்கும் குறைவாக மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் மீதோ காட்டுவதில்லை. உண்மையில் இவர்களை நன்றாக படிக்க வைப்பதுதானே ஆசிரியர்களின் கடமை. ஆனால் ஆசிரியர்களின் உழைப்பு முழுதும் 80% மேல் வாங்கும் மாணவர்களை 98% வாங்க வைப்பதில்தான்  இருக்கும்.

என் தோழி, நெருங்கிய உறவில் திருமணம் முடித்தவள். அவர்களுக்கு சில வருடங்களுக்கு பிறகே குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் குழந்தை அழ வேண்டுமல்லவா ? குழந்தை அழவேயில்லை. பிரசவம் பார்த்த டாக்டர் குழந்தையின் முதுகில் அவ்வப்போது கிள்ளி அழ வைத்தார். தன் குழந்தையிடம் ஏதோ குறை உள்ளது என்பதை புரிந்து கொண்டு விட்டாள் நம் தோழி.

குழந்தை வளர வளர குழந்தையின் மன வளர்ச்சி சீராக இல்லை என்பதை அவளால் உணர முடிந்தது. ஆனால் குழந்தையை பார்ப்பதற்கு நார்மல் குழந்தை போல்தான் தெரியும். எந்தக் குழந்தையும் ஒரு வயதில் நடக்க ஆரம்பித்து விடுவார்கள் அல்லவா ?? நம் தோழியின் குழந்தை இரண்டரை வயதிற்கு மேல்தான் நடக்கவே ஆரம்பித்திருந்தது. அதேபோல் பேச்சும் சரியாக வரவில்லை.

குழந்தையின் பெயரைச் சொல்லி கூப்பிட்டால் திரும்பிப் பார்க்காது. நாம் பேசுவது எதையுமே கவனிக்காது. காது கேட்பதில் ஏதாவது கோளாரு இருக்குமோ என்று ENTயிடமும் சென்று பரிசோதித்து பார்த்தனர். அதிலும் எந்தப் பிரச்சனையுமில்லை என்று கூறி விட்டார்கள்.

அப்போதுதான் பெங்களூரில் உள்ள SPASTICS Schoolல் அவளின் குழந்தையை அழைத்துப் போகச் சொல்லி  என் கணவர் கூறினார். அங்கு கிட்டத்தட்ட ஒரு வருட கோர்ஸ். குழந்தைகளை விட பெற்றோர்களுக்குதான் அங்கு வகுப்பு எடுக்கிறார்கள். இது போன்று கொஞ்சம் மன வளர்ச்சி பாதிப்படைந்திருக்கும் குழந்தைகளை நாம் எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் ? நாம் பேசுவதை எவ்வாறு கவனிக்க வைக்க வேண்டும் ? என்று வகுப்பெடுக்கிறார்கள். வெறும் கையை காலை நீட்டி ஊமை பாஷை பேசும் குழந்தைகளை எவ்வாறு பேச வைப்பது என்றும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

குழந்தையும் ஓரளவு பேச ஆரம்பித்திருந்தது. அடுத்த கட்டமாக குழந்தையை பள்ளியில் சேர்க்க முடிவெடுத்தார்கள். குழந்தையின் நடவடிக்கைகளைப் பார்த்த பல பள்ளி நிர்வாகங்கள் இவர்களை நாசூக்காக பேசி வெளியேற்றினார்கள். அட்மிஷன் இல்லை என்று கூறி வெளியேற்றியதை விட தன் குழந்தையை அவர்கள் பார்த்த விதம்தான் நம் தோழிக்கு மிகவும் வேதனையளிப்பதாக இருந்திருக்கிறது.

அடுத்து அவர்கள் இங்கு ராஜாஜி நகரில் உள்ள St. Ann's Public Schoolற்கு சென்றிருக்கிறார்கள்.  மற்ற பள்ளிகளைப் போலவே இங்கேயும் இண்டர்வ்யூ வைத்தார்கள். குழந்தைக்கு டெஸ்ட்டும் வைத்தார்கள். எப்போதும் போல் டெஸ்ட்டை குழந்தை சரியாக எழுதவில்லை. கேள்விகளையும் புரிந்து கொள்ளவில்லை. இருந்தும் அந்தப் பள்ளியில் குழந்தைக்கு அட்மிஷன் கொடுத்தார்கள். எந்த கவலையும் வேண்டாம்,  குழந்தையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினர். அதேபோல் தோழியின் குழந்தைக்கு சற்று ஸ்பெஷல் கேர் எடுத்து சொல்லிக் கொடுத்தார்கள். அப்போது குழந்தை, ஆசிரியரை மேம் என்று சொல்லாமல் பெயர் சொல்லித்தான் அழைக்கும் !!  அந்தக் குழந்தைக்கு விளையாட்டு மற்றும் மற்ற activities எதிலும் ஆர்வமில்லாததை புரிந்து கொண்டனர். அந்த குழந்தையிடம் எதையும் வலிய திணிக்கவும் முடியாது என்று கூறி குழந்தைக்கு எதில் ஆர்வம் என்பதையும் புரிந்து கொண்டனர். படிப்பு. அதையும் குழந்தையின் போக்கிலேயே போய் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதேபோல் சொல்லிக் கொடுத்தார்கள்.  ஒவ்வொரு தேர்விலும் மற்ற குழந்தைகளைப் போலவே நல்ல மதிப்பெண்கள் வாங்க வைத்தார்கள். இன்று வரை தொடர்கிறது.

இது போன்ற குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களையும் மற்ற குழந்தைகளுக்கு நிகராக உருவாக்குகிறார்கள். அவர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள். என்னைக் கேட்டால் இவர்களைப் போன்ற ஆசிரியர்களுக்குப் பிறகுதான் மாதா பிதா தெய்வம் எல்லாம் :-)

No comments:

Post a Comment