Friday, September 22, 2017

கமல் - காவியான கருப்புச்சட்டை!

கமல் - காவியான கருப்புச்சட்டை! 
(ஆகஸ்ட் மாத உயிர்மை கட்டுரை)

-டான் அசோக் 
idonashok@gmail.com
#Don_Ashok

வலிய மிருகம் இல்லாத காட்டில் எலிக்கு ரத்தம் கொஞ்சம் சூடாகத்தான் இருக்கும்...

டில்லியில் நடந்த நிருபயா கொலை வழக்கின்போது, குற்றவாளி முகேஷ் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.  “இரவில் ஆண் நண்பனுடன் ஊர் சுற்றும் பெண்ணுக்கு பாடம் கற்பிக்கவே அப்படி செய்தோம்,” என்று.  இந்தக் கருத்தை அவர் மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ், பாஜக, வி.எச்.பி, இந்து முன்னணி என மரு வைத்த, மரு வைக்காத அனைத்து இந்துத்துவ இயக்கங்களின் தலைவர்களும் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். 

நிற்க.  இப்போது பிரபல நடிகர் ஒருவர் நடித்து வெளிவந்த திரைப்படம் ஒன்றின் பாடல் வரிகளைப் பார்ப்போம். “பொம்பளைக்கு வேணும் அச்சம் மடம் நாணம்  இல்லையென்று போனாலே வம்பிழுக்கத் தோணும்.”  எவ்வளவு அருமையான வரிகள்! இந்தப் பாடல் இடம்பெற்ற படம் சிங்காரவேலன்.  இதைப் பாடி ஆடும்போது கமலுக்கு கிட்டத்தட்ட 40 வயது! 

இது வாலி எழுதியது என்றெல்லாம் சொல்லி கமல் ரசிகர்கள் தப்பிக்க முடியாது.  திரையில் நாத்திகம் பேசினால் மட்டும் அது கமலே சொந்தமாகப் பேசும் நாத்திகம்.  பாட்டு பாடினால் மட்டும் வாலியா?  சரி. அதை விடுங்கள்.  40 வயதில் அறியாமல் செய்திருப்பார். 

அந்தப் படம் வந்த இந்த 22 ஆண்டுகளில் கமல் சினிமாவில் நாத்திகம் பேசியிருக்கிறார்,  பெரியாரை பேசியிருக்கிறார், கம்யூனிசம் பேசியிருக்கிறார், மரண தண்டனை ஒழிப்பு பேசியிருக்கிறார், காந்தியம் பேசியிருக்கிறார், காமமும் பேசியிருக்கிறார்,  என்னென்னவோ பேசியிருக்கிறார்! 

ஒரு மனிதன் என்பவன் நாளுக்கு நாள் சிந்தனையளவில் பரிணாம வளர்ச்சி அடைகின்றவன்தானே என்ற நல்லெண்ணத்தில் நாமும் சிங்காரவேலனை எல்லாம் மறந்து கமலை ஒரு பகுத்தறிவுவாதியாக கொண்டாடினோம். 

மீண்டும் நிற்க. "சிவப்பாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்" - என்பதைப் போல "சைவம் சாப்பிடுகிறவர்கள் கோபப்பட மாட்டார்கள்" - என ஒரு தத்துவம் நம்மூரில் வழக்கத்தில் இருக்கிறது. அடிக்கடி பாஜக அறிவாளிகள் இதை பொது விவாதங்களில் உதிர்ப்பார்கள். அதே போல கமல், “சைவம் தானே சாப்டீங்க? இப்படி கோபப்படுறீங்க?” என கஞ்சா கருப்பிடம் போன வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேட்டார்.  இதைக் கேட்கும்போது கமலுக்கு வயது 62.  அடுத்து நடக்கும் பிரஸ்மீட்டில், “நான் சொன்னது உண்மைதான்.  அதற்கு வரலாற்று ஆதாரம், விஞ்ஞான ஆதாரமெல்லாம் இருக்கிறது,” என கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஒரு பொய்யை மீண்டும் சொல்கிறார். அதாவது மீண்டும் சிங்காரவேலன் ஆரம்பப்புள்ளியிலேயே, இந்துத்துவவாதிகளுக்கு நெருக்கமாகவே நிற்கிறார் கமல்! 

அட கமல் ஒரு தனிமனிதர். அவர் நாளுக்கொரு கருத்து, மேடைக்கொரு சிந்தனை வைத்துக் கொள்ளட்டும். அதிலெல்லாம் நமக்கு பிரச்சினை இல்லை.  ஆனால் ஒரே கருத்தை உடைய இரண்டு பேர், அதாவது கமலும் அர்ஜூன் சம்பத்தும், கமலும் எச்.ராஜாவும் ஏன் மோதுகிறார்கள்? அண்ணன், தம்பிகளுக்குள் நடக்கும் சண்டைக்கு ஏன் இவ்வளவு மீடியா முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?  இதுதான் பெரிய குழப்பமாக இருக்கிறது! 

தமிழ்நாட்டில் கலாச்சாரக் காவலர்களின் பாடு பெரும்பாடு. வேற்று மாநிலங்களைப் போல இந்துக் கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறோம் என்றெல்லாம் இங்கே வெளிப்படையாக சொல்லிக்கொண்டு திரிய முடியாது.  இது சொந்தக்காசில் பிள்ளையார் சிலை வாங்கி அதை தெருவில் போட்டுடைத்த பூமி.  ஆட்சியில் இருக்கும் முதல்வரே மதநம்பிக்கைகளால் மக்கள் நலப்பணிக்கு பிரச்சினை வந்தபோது, “ராமர் எந்த கோவில்ல இன்ஜினியரிங் படிச்சாரு,” எனக் கேட்ட பூமி. 

இங்கெல்லாம் என்னதான் மத உணர்வைத் தூண்டினாலும், “இதுக்கு ஏன் பாஸ் இவ்ளோ கோபப்படுறீங்க?” என சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். அதனால் இங்கிருக்கும் ஆர்.எஸ்.எஸ்/பாஜக ஆட்களுக்கு, “தமிழ்க் கலாச்சாரத்தை காக்கிறோம்” எனக் கிளம்ப வேண்டிய தேவை இருக்கிறது.

“அது என்னடா தமிழ்க் கலாச்சாரம்” எனப் பார்த்தால் வள்ளுவனுக்கு பூணூலைப் போடுவது, அவ்வையாரை ஏதோ அருகில் இருந்து பார்த்ததைப் போல அவருக்கு காவிச் சேலை கட்டிவிடுவது, வள்ளலாருக்கு விபூதிப்பட்டை அடிப்பது, இப்படி ஏதேதோ செய்து தமிழ்க் கவிஞர்களை, தமிழ் ஆளுமைகளை எல்லாம் காவிகளாக கன்வர்ட் செய்துகொண்டு, “இப்ப பாத்தியா? தமிழ் கலாச்சாரம்தான் இந்து கலாச்சாரம்,” என்கின்றன தமிழக இந்துத்துவ அமைப்புகள்.

தமிழக குடும்பங்கள் தினமும் ஒருமணி நேரம் ஒதுக்கி பிக்பாஸ் எனும் புறம்பேசும் நிகழ்ச்சியை பொழுதுபோக்காக பார்த்துக் கொண்டிருக்க, இந்த இந்து இயக்கங்கள்தான் அந்நிகழ்ச்சியை தெருவில் இழுத்து முதன்முதலில் பிரதான செய்தி ஆக்கினார்கள்.  இந்த இந்துக் காவலர்கள் இப்படி பொங்குகிறார்களே, ஒருவேளை காயத்திரி, “சேரி பிஹேவியர்,” என  திட்டினாரே அதற்காக இருக்குமோ?  சேரி இந்துக்களை காயப்படுத்தியதால் இந்த இந்துக் காவலலர்களுக்கு கோபம் வந்துவிட்டதோ எனப் பார்த்தால் காரணம் அது இல்லையாம். 

ஓவியா, நமீதா சிறிய ஆடைகளை அணிகிறார்களாம். ஆண்களும், பெண்களும் ஒரே வீட்டில் தங்குகிறார்களாம். இதனால் இந்துக்கலாச்சாரம் கெடுகிறதாம்!  இதையெல்லாம் விட அர்ஜூன் சம்பத் ஒரு அருமையான காரணம் சொன்னார்.  ஜல்லிக்கட்டின் போது ஜூலி பிரதமர் மோடிக்கு எதிராகக் கத்தினாராம்!  இதெல்லாம் பிக்பாஸை தடை செய்ய அவர்கள் சொல்லும் காரணங்கள்.

பிக்பாஸ் பிறரின் அந்தரங்கங்களை எட்டிப்பார்க்கும் நிகழ்ச்சி என்றும் (Voyeurism) அதனால் அதனை தடை செய்ய வேண்டும் என்ற கருத்தும் பல அறிவுஜீவிகளாலேயே கூட பேசப்படுகிறது.  இதையெல்லாம் கேட்டால் எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.  உலக அளவில், “பிறரின் தனிமனித சுதந்திரத்தில் எந்தச் சமூகம் மிக அதிகமாக மூக்கை நுழைக்கிறது?” என ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் இந்தியா/தமிழகச் சமூகம் முதலிடத்தில் வரும். 

ஒரு குழந்தை பிறந்ததில் இருந்தே நம் ஆட்கள் அதன் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்க ஆரம்பித்துவிடுவார்கள். படிப்பு, வேலை, தொழில், காதல், திருமணம், அவனுக்கு பிறக்கும் குழந்தை, அந்தக் குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்ப்பது, அதன் படிப்பு, வேலை, காதல், திருமணம் என எல்லாவற்றிலுமே கொஞ்சம் கூட வெட்கம் மானமின்றி மூக்கை நுழைத்து கருத்து சொல்லும் ஒரு கேடுகெட்ட சமூகம் இந்திய மற்றும் தமிழகச் சமூகம். 

அட இந்திய சமூகத்தைக் கூட விடுங்கள்.  அவர்களுக்கு ரயிலில் நாகரீகமாகக் பயணிக்கக் கூடத் தெரியாது. திருக்குறளும், அகநானூறும் தந்த தமிழ்ச்சமூகம் எப்படி இருக்கிறது?  “தம்பி எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க?” “அப்புறம்… எப்ப கல்யாணம்?” “எங்க பொழைக்கப் போனாலும் நம்ம சாதிய மட்டும் விட்டுக்கொடுக்க கூடாது,” போன்ற பொக்கிஷ வார்த்தைகளையெல்லாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல அமேஜான் காடுகளுக்கே வாழப்போனாலும் நம் ஆட்கள் ஒரு அநாகரீகமாக நினைப்பதே இல்லை.  இன்றும் கூட வெளிநாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையிலே தமிழ் பெற்றோர்கள், மாமாக்கள், அத்தைகள், சித்திகள், சித்தப்பாக்கள், அண்டை வீட்டாரின் தலையீடு என்பது எவ்வளவு அதிகமாக இருக்கிறது!

ஒரு சராசரித் தமிழன் தன் வாழ்க்கையில் ஓரளவிற்காகவது சுயமாக முடிவெடுக்க முடியுமென்றால், “இன்று என்ன திங்கலாம்?” என்ற விஷயத்தில்தான். அதற்கு கூட, ”இன்று செவ்வாய் இதைத் திங்காதே, வியாழன் அதைத் திங்காதே,” என கட்டுப்பாடுகள் உண்டு.  ஆக தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையே அடுத்தவர்களின் வாழ்க்கையை எட்டிப்பார்த்து கருத்து சொல்வதற்காகவே டெடிகேட் செய்துள்ள ஒரு சமூகம் உலகில் உண்டு என்றால் அது தமிழ்ச்சமூகம்தான்.

"பிரதமரை தேர்ந்தெடுக்கக் கூட உரிமையுள்ள வயது வந்த என் மகனும், மகளும் தங்கள் வாழ்க்கைத் துணைகளை தானே தேர்ந்தெடுக்கக் கூடாது.  நான்தான் ப்ரோக்கர் வேலை பார்ப்பேன்.  அதுதான் எங்கள் குடும்பத்திற்குப் பெருமை, எங்கள் சாதிக்குப் பெருமை,” எனச் சொல்லும் பெற்றோர்கள் நிறைந்த நம் கலாச்சாரமே ஒரு கேவலமான சீர்கேடுதானே! 

நமக்கெல்லாம் பிக்பாஸை குறை சொல்ல, அதிலும் கலாச்சார சீர்கேடு என குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது?

அதனால், பிக்பாஸ் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி, சுவாரசியமாக இல்லை, திரைக்கதை மொக்கையாக இருக்கிறது, கணேஷ் வெங்கட்ராமனுக்கு பிக்பாஸில் கூட நல்ல ரோல் கொடுக்காமல் இருப்பது போன்ற குறைகளை சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.  மற்றபடி நம் கலாச்சாரத்தைக் கெடுக்கிறது என்பதை யெல்லாம் ஏற்க முடியாது.  இன்னும் சொல்லப்போனால் நம் அன்றாட வாழ்வியல் கலாச்சாரத்தைதான் அந்நிகழ்ச்சி கூறுபோட்டு நமக்கே விற்கிறது.  அதனால்தான் உலகில் வேறெந்த நாட்டிலும் கிடைக்காத டி.ஆர்.பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கிறது.    

இப்போது கமல் vs இந்துத்துவ இயக்கங்கள் பிரச்சினைக்கு வருவோம்.  அதில் நாம் தலையிடுவது கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில், “ஏன்மா ஓவியா.  நீ ஏன் ஜூலி டூத்பேஸ்ட்டை எடுத்த?” என பிக்பாஸ் திரைக்கதையின்படி செயல்படும் நடிகர்களுக்குள் நடக்கும் பஞ்சாயத்தை விசாரிக்கிறாரே கமல், அதுபோல சிறுபிள்ளைத் தனமாகத்தான் இருக்கும். நான் முதல் பத்தியில் சொல்வதைப் போல இது திட்டமிட்டோ அல்லது தவறான புரிதலிலோ இயல்பாக அமைந்துவிட்ட அண்ணன், தம்பி பிரச்சினை. 

ஸ்வச்பாரத் எனும் மகாமோசடி நிறுவப்பட்டவுடனேயே அதற்கு தூதுவர்களில் ஒருவராக பாஜகவின் ஆதர்ச நாயகன் ரஜினி நியமிக்கப் படவில்லை. கமல் நியமிக்கப் படுகிறார். 

பணமதிப்பிழப்பு எனும் அடுத்த மகாமோசடி வெளியானவுடன் உண்மையான அறிவுஜீவுகள் எல்லாம் அதை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்க, கமலோ பாராட்டுகிறார். 

ஜிஎஸ்டி கொண்டுவரப்படும் போதும் அவர் பெயரில் அவர் மத்திய அரசை விமர்சித்ததாக ஏதேதோ தகவல்கள் வருகிறது.  ஆனால் சென்ற வாரம் அவர் கொடுத்த பிரஸ்மீட்டில், “நான் சொன்னதை தவறாக பிரசுரித்து என்னை இப்படி மாட்டி விட்டீங்க. நான் அமைச்சருக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாகிவிட்டது,” என பத்திரிக்கையாளர்களை கடிந்து கொள்கிறார் கமல்.

ஒரு நடிகர் மத்திய அமைச்சரிடம் என்ன விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது?  கமல் என்ன அமைச்சரிடம் வேலை பார்க்கிறாரா?

இதெல்லாம் கூட பரவாயில்லை.  லட்சக்கணக்கான தமிழக மாணவர்களின் கனவை சிதைத்துப் போட்டிருக்கும் நீட் தேர்வை விட டெங்கு கொடியது என சம்பந்தமே இல்லாத ஒரு ஒப்பீட்டை நிகழ்த்தி, நீட்டுக்கு எதிரான மக்கள் கோபத்தை திசைதிருப்பி மத்திய அரசை காப்பாற்றுகிறார் கமல். 

ஆக எப்படி பார்த்தாலும் மோடி அரசுக்காக, கருப்புத்தோல் போர்த்திய விலையுயர்ந்த அடியாளாகத்தான் கமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

எனக்கு பெரும் ஆச்சரியத்தையும், நகைப்பையும் வரவழைக்கும் விஷயம் கமலின் திடீர் துணிச்சல். விஸ்வரூபம் படம் வெளிவருவதில் சிக்கல் இருக்கிறது. ஜெயா டிவிக்கும் கமலுக்கும் படத்தின் சாட்டிலைட் உரிமையில் பிரச்சினை இருக்கிறது.  கமல் மேல் கடுப்பில் இருக்கிறது ஜெயலலிதா தரப்பு.  அப்போது பார்த்து இஸ்லாமிய இயக்கங்கள் கமல் மேல் கோபப்பட, அதை பயன்படுத்திக்கொண்டு கமலை பழிவாங்குகிறார் ஜெயலலிதா.

அப்போது அரசுக்கு எதிராக கமல் என்ன சொன்னார்?   அமைச்சர்களுக்கு ஈமெயில் அனுப்ப சொன்னாரா?  ஊழல் என வாய்திறந்தாரா? ஏன் அப்போது ஊழலே இல்லையா? டெங்கு உச்சகட்டமாக பரவியது ஜெ உயிரோடு இருந்தபோதுதானே?  ஜெயலலிதா பெயரையாவது கமல் வெளியே சொன்னாரா? அட அப்போது வேண்டாம்.  விஸ்வரூபம் படம் வெளிவந்தவுடனாவது சொல்லியிருக்கலாமல்லவா? 

மாறாக என்ன செய்தார்?  சில நாட்களிலேயே ஜெயா டிவி பட்டிமன்றத்தில் நடுவராகப் போய் அமர்ந்தார்.  இதுதான் துணிச்சலா?  அப்போது கக்கத்தில் மடித்துவைக்கப்பட்டிருந்த துணிச்சல் இப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எப்படி கரைபுரண்டு ஓடுகிறது?  ஜெ சமாதியில் இருந்து எழுந்து வர மாட்டார் என்ற துணிச்சலில் தானே?  வலிய மிருகம் இல்லாத காட்டில் எலிக்கு ரத்தம் கொஞ்சம் சூடாகத்தான் பாயும், அதற்காக அதன்பெயர் துணிச்சலா? 

சரி வரும் துணிச்சல்தான் வருகிறதே, அதுவாவது தெளிவாக வருகிறதா?  மாநில அரசின் மீது கமல் ஊழல் புகார் தெரிவிக்கிறார். அமைச்சர், “ஆதாரம் இருக்கிறதா?” எனக் கேட்கிறார்.  அரசியல் தெரிந்த, சட்டத்தில் நம்பிக்கையுள்ள, உண்மையின் மீது நம்பிக்கையுள்ள ஒரு ஆள் என்ன செய்திருக்க வேண்டும்? ஆதாரத்தை கொடுத்திருக்க வேண்டும். மாறாக ஊருக்கே தெரிந்த விஷயத்திற்கு எதற்கு ஆதாரம் என்கிறார்.

ஆட்சியை கலைக்கச் சொல்லி மத்திய அரசுக்கு மெயில் அனுப்புங்கள் எனச் சொன்னாலாவது ஒரு அர்த்தம் இருக்கிறது.  ஆனால் மக்களை மாநில அமைச்சர்களுக்கு ஈமெயில் அனுப்பச் சொல்கிறார்.  கேலிக்கூத்தாக இல்லையா?  கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா?  சிங்காரவேலனை மறந்துவிட்டு நம்மை பகுத்தறிவுவாதி எனக் கொண்டாடிய முட்டாள் மக்கள்தானே, இதையெல்லாம் கேட்கவா போகிறார்கள் என்கிற திமிர்தானே!!

அட இப்போதாவது கமல் தட்டிக்கேட்கிறாரே என சிலர் நியாயம் சொல்லலாம். நீங்கள் ஒன்றை நன்றாக கவனித்தீர்களென்றால் தெரியும்.  கமல் மாநில அரசுக்கு எதிராக ஊழல் புகார் தெரிவித்தால் ஆளுக்கு முன்னாடி “நானும் ரவுடிதான்,” என வந்து நிற்கிறார் பாஜகவின் எச்.ராஜா. 

இங்கே நடைபெறும் அரசு மத்திய அரசின் கைக்கூலி அரசு.  மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு என்றெல்லாம் போலியாக ஏதேதோ செய்து ஏமாற்றுகிறதே தமிழக அரசு, இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவில்லை என அறிவித்தார்களா?  மாட்டார்கள்! 

அதனால்தான் அதிமுக அரசின் மீது ஊழல் புகார் சொன்னால் எச்.ராஜா, “என் சங்கத்து ஆளை அடிச்சது எவன்டா?” என ஆளுக்கு முன்னாள் வந்து நிற்கிறார்.  இதெல்லாம் கமலுக்கு தெரியாதா? மத்திய அரசை பற்றி  ஒருவார்த்தை பேசியிருக்கிறாரா?  நோயாளி செத்தபிறகு நோயாளிக்கு ஊசி போடுகிறேன் என கமல் வந்துநிற்கிறார்.  அதுவும் தவறான ஊசியைப் போடுகிறார்.  அதுவும் தவறான நோயாளிக்குப் போடுகிறார். அதனால்தான் தாமதமான நல்ல காரியம் என்று கூட இந்த நாடகத்தை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. 

பெரியாருடன் இதுவரை நான் முரண்பட்ட விஷயம் ஒன்றே ஒன்றுதான்.  “முற்போக்கு பேசும் பார்ப்பானர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்,” என்கிற அவரின் கருத்துதான் அது.  ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்கின்ற பிரபலங்களின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த பிக்பாஸ் நாடகத்தின் ஓட்டத்தில் திரைக்கதையில் ஒரு டிவிஸ்ட்டாக நிகழ்ச்சியை நடத்தும் கமலே அம்பலப்பட்டு நிற்பதை பார்த்தபின் பெரியாரின் அந்தக் கருத்திலும் நான் முழுமையாக உடன்படுகிறேன். 

தமிழகத்தின் ஒரு அறிவுஜீவியாக பார்க்கப்பட்ட ஒரு பிரபலத்தின் அறிவை இப்படி கூறுபோட்டுக் காண்பித்த காரணத்திற்காகவாவது தமிழக மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.  கருப்புச் சட்டை மீது மழை பெய்து சாயம்போனால் அது வெளுப்பாகலாம்.  அது இயல்பு.  ஆனால் கமல் அணிந்திருந்த கருப்புச் சட்டையோ காவி நிறத்தில் மாறியிருக்கிறது.  இது இயல்பான ஒன்றல்ல, பலநாள் நடிப்பு.

No comments:

Post a Comment