Wednesday, September 20, 2017

இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …?

சூரியன்
நவ, டிச 1990, ஜன 1991.
புதிய கலாச்சாரம்.

இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …?

Posted by வினவு

ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை பாசிஸ்டுகள் எப்போதுமே விரும்புவதில்லை. அயோத்தி விவகாரத்தில் தற்போது பாபர் மசூதி இருக்கும் இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்றும் அவனுக்கு ஆலயம் கட்டப்பட்டிருந்தது என்றும் கூறி வரும் விசுவ இந்து பரிசத், பாரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் ஆரம்ப காலத்தில் தங்களது கூற்றுக்கு ஆதாரம் காட்டுவது போல பொய்யையும் புனை சுருட்டுகளையும் கொஞ்சம் அவிழ்த்துவிட்டுப் பார்த்தார்கள். “இதோ ஆதாரம்” என்று வாதாடினார்கள். ஆனால் வரலாற்று ஆசிரியர்களும் ஜனநாயக உணர்வுள்ள அறிஞர்களும் அவற்றுக்கு எதிர்வாதங்களை வைத்து முறியடிக்க தொடங்கியவுடனே ராகத்தை மாற்றிக் கொண்டு விட்டனர், இந்து மதவெறியர்கள்.

அயோத்தியில் அவர்கள் குறிப்பிடும் இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்பதற்கு அசைக்க முடியாத வரலாற்று ஆதாரம் இருப்பதாகக் கூறியவர்கள் ”சரி அவற்றை முன் வைத்து கோர்ட்டில் வாதாடுங்கள்” என்றவுடனே ”இல்லையில்லை; இது ஒரு மதத்தினரின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை. இதன் மீதெல்லாம் கோர்ட் தீர்ப்பு வழங்க முடியாது” என்று மாற்றிப் பேசத் தொடங்கிவிட்டனர். இந்து மத நம்பிக்கை கொண்டவர்களை வெறி கொள்ளச் செய்யும் வகையில் இப்போது பேசுகின்றனர்.

“ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் லண்டனிலா கோயில் கட்ட முடியும்?” என்கிறார், அத்வானி. ”எல்லாம் வல்ல இறைவன் இராமனை கோர்ட் கூண்டில் வாதியாக நிற்க வைத்து வாதாடச் சொல்கிறீர்களா?” என்று திசை திருப்புகிறார், விஸ்வ இந்து பரிசத் தலைவர் சிங்கால்.

அயோத்தி நகரில் எந்த இடத்திலும் கோயில் கட்டக்கூடாது என்று யாரோ தடை விதித்து விட்டதைப் போல அத்வானி பேசுவதில் நயவஞ்சகத்தனமும் பித்தலாட்டமும் வெளிப்படையாகத் தெரிகிறது. பாபர் மசூதி இருக்குமிடத்தில் தான் ராமன் பிறந்தானா? என்று கேட்டவுடன் ”கடவுளைக் கூண்டிலேறி தனக்காக வாதாடச் சொல்கிறீர்களா?” என்று கேட்கும் சிங்காலையோ, விசுவ இந்து பரிசத்தையோ இராமனின் வக்கீலாக யார் நியமித்தார்கள்? அல்லது இந்து மதத்தினரின் பிரதிநிதியாக யார் தேர்ந்தெடுத்தார்கள்?

குருட்டு நம்பிக்கைகளையே தங்களது கோரிக்கைகளின் ஆதாரமாக வைக்கும் இவர்கள் வரலாற்றைத் திரிக்கும் வேலையை நிறுத்தி விட்டார்களா என்றால் இல்லை. அது ஒருபுறத்தில் நடந்து கொண்டு தானிருக்கிறது.

அக்டோபர் 30-ம் தேதி பாபர் மசூதியை இடிப்பதற்காக குஜராத் மாநிலம் சோமநாதபுரத்திலிருந்து தனது ரத யாத்திரையைத் துவங்கும் போது அத்வானி பேசியுள்ளதே இதற்கு ஆதாரம். ”சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது மீண்டும் மீண்டும் படையெடுத்துக் கொள்ளையடித்தான். கோயிலை நாசம் செய்தான். இந்த வரலாற்று இழிவைத் துடைப்பதையே தனது முதல் கடமையாக எடுத்துக் கொண்ட சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் இக்கோயிலை புனர் நிர்மாணம் செய்து தூய்மைப்படுத்தினார். அது முதல் கட்டம் தற்போது பாபர் மகுதி எனும் அவமானச் சின்னத்தைத் தகர்த்து ராமனுக்கு நாங்கள் கோயில் கட்டவிருப்பது இரண்டாவது கட்ட நடவடிக்கை. அன்று அதை எதிர்க்காதவர்கள் இன்று எங்களை மட்டும் எதிர்ப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரசை மதசார்பற்ற கட்சியாகவும், படேல் போன்ற இந்து மதவெறியர்களை மத சார்பற்ற தலைவர்களாகவும் ஏற்று தலையில் வைத்துக் கூத்தாடிய போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஒட்டுக் கட்சிகளால் இதற்கு பதில் சொல்ல இயலவில்லை.

”பிரிட்டிஷார் மட்டுமல்ல முஸ்லீம்களும் அன்னியர்களே. அவர்கள் அன்னியர்கள் மட்டுமல்ல. இகலாமிய மத வெறியர்கள். அதனால்தான் அவர்கள் இந்து கோயில்களைச் சூறையாடினார்கள். இடித்துத் தள்ளினார்கள். இந்த தேசிய அவமானத்தைத் துடைத்தெறிய அவ்வாறு கோயில்களை இடித்துக் கட்டப்பட்ட மசூதிகளை எல்லாம் இப்போது இடிக்க வேண்டும். பழையபடி அங்கே கோயில்களை எழுப்ப வேண்டும்” என்பதுதான் இந்து மத வெறியர்களின் தற்போதைய போர் முழக்கம்.

முஸ்லீம்கள் இந்த நாட்டுக்கு அன்னியர்கள் என்றால் ஆரியர்கள் மட்டும் என்ன? முஸ்லீம்களிலாவது மதம் மாறியவர்கள் பலர் உண்டு. ஆனால் ஆரியர்கள் யார்? முழுவதும் அன்னியர்கள் தானே!

இசுலாமிய மன்னர்கள் அனைவரும் மதவெறியர்களா? அதனால்தான் அவர்கள் இந்து கோயில்களை இடித்தார்களா? இந்து மன்னர்களும் மதத் தலைவர்களும் ஆர். எஸ்.எஸ் கூறுவது போல சகிப்புத் தன்மை மிக்கவர்களா? அவர்கள் சக மதத்தினரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு சில வரலாற்று ஆதாரங்களை நாம் பார்ப்போம். அதற்கு முன் மன்னர்களின் காலத்தில் அரசியலில் மதத்தின் பாத்திரம் என்ன? மதசார்பின்மை என்பது அப்போது நிலவியதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

மன்னராட்சிக் காலத்தில் இங்கு மட்டுமல்ல உலகெங்கிலுமே மதம் அரசியலுடன் பிரிக்க முடியாதபடி கலந்திருந்தது. மன்னனின் மதம் எதுவோ அதுவே அரசு மதமாக இருந்தது. பிற மதத்தினர் ஒடுக்கப்பட்டனர் அல்லது பாரபட்சமாக நடத்தப்பட்டனர். படையெடுப்புகள் நடத்தப்படும் போது வெற்றி கொள்ளப்பட்ட நாட்டினர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பின் அவர்களுடன் சேர்ந்து அவர்களது மதத்தையும் ஒடுக்குவதென்பது அடக்குமுறையின் வடிவமாக இருந்தது இதற்கு யாரும் விதிவிலக்கில்லை.

இன்று பேசப்படுகிற மதச்சார்பின்மை, அரசியலிலிருந்து மதத்தைப் பிரிப்பது என்ற கோட்பாடுகளெல்லாம் முதலாளித்துவ ஜனநாயக காலத்தின் கருத்துக்கள். மதச் சார்பின்மையைப் போலவே மதவெறி என்பதும் இன்றைய காலத்தில் தோற்றமெடுத்ததுதான். பல்வேறு மதங்களைச் சார்ந்த உழைக்கும் மக்களுடைய மதம் சம்பந்தப்படாத கோரிக்கைகளை வர்க்க அடிப்படையிலான கோரிக்கைகளைத் திசை திருப்புவதற்காக ஏகாதிபத்தியம் திட்டமிட்டே ஊட்டி வளர்த்தது தான் மதவெறிக் கோட்பாடு. எனவே இசுலாமிய மன்னர்களெல்லாம் மத வெறியர்கள் என்று பிரச்சாரம் செய்து அதன் மூலம் இந்து மதவெறியைத் துண்டி அதிகாரத்தைப் பிடிக்க திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதியை முறியடிக்க இந்து மன்னர்களின் ’சகிப்புத் தன்மைக்கு’ சில வரலாற்று உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.

கஜினி முகமது மற்ற பல கோயில்கள் இருக்க சோமநாதபுரத்தை மட்டும் ஏன் கொள்ளையடிக்க வேண்டும்? 11-ம் நூற்றாண்டின் துவகத்திலேயே இந்த ஆலயத்திற்கு 10,000 கிராமங்களும், 500 தேவதாசிகளும், 300 முடி திருத்துபவர்களும் சொந்தமாக இருந்தனர். மற்ற சொத்துக்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எனவே இந்து மதத்திற்கெதிரான வெறியல்ல கஜினியின் கொள்ளைக்கு காரணம்; மாறாக சோமநாதபுரம் ஆலயத்தின் சொத்துதான். இத்தகைய கொள்ளையை இந்திய வரலாற்றில் இசுலாமியர்கள் மட்டும்தான் செய்தார்களா என்றால் இல்லை.

11-ம் நூற்றாண்டின் இறுதியில் காஷ்மீர் பகுதியை ஆண்டு வந்த ஹர்ஷன் என்னும் இந்து மன்னன் தனது அரசவையில் விக்கிரகங்களைத் திருடுவதற்கென்றே ஒரு இலாகாவையும் அதற்கு ஒரு அதிகாரியையும் (தேவோத்பாதனா) நியமித்திருந்தான். மூட நம்பிக்கைகளையும் பொய்களையும் பரப்புவதன் மூலம் மக்களிடம் பணம் வசூல் செய்யலாம் என்று சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் மன்னனுக்கு ஆலோசனை வழங்குகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டு மக்கள் தனது மதத்தையே சேர்ந்தவர்களாக இருந்தாலும் அங்கிருந்த கோயில்களை இந்து மன்னர்கள் சூறையாடினார்கள். இதற்கு காரணம் கோயில்களில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் நிறைந்து கிடந்தது தான். இப்படிக் கொள்ளையடிப்பதை கஜினி மட்டும் செய்ய வில்லை, ராஜராஜ சோழன் முதல் ஹர்ஷன் வரை அனைவரும் செய்தனர்.

இசுலாமியர் ஆட்சியை எதிர்த்தனர் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் கும்பலால் புகழ் பாடப்படும் சிவாஜி போன்ற மராத்திய மன்னர்கள் வங்காளத்திலும், ஒரிசாவிலும் இந்துக்களைக் கொன்று குவித்ததையும், கொள்ளையடித்ததையும் என்னவென்று சொல்வது?
இந்து மன்னர்கள் மட்டுமல்ல மதப் பெரியார்கள் என இன்று வழிபடப்படுகின்ற ‘அன்பின் திருவுருவான ஆழ்வார்களும், நாயன்மார்களும் என்ன செய்தார்கள்? தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருமங்கை யாழ்வார் நாகை புத்த விகாரத்திலிருந்து தங்கத்தினாலான புத்தர் சிலையைத் திருடி உருக்கி விற்று ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிக்கு ’நன்கொடை’ கொடுத்திருக்கிறார் அவரது பாடல்களில் ஜைனர்களுக்கும், புத்தர்களுக்கும் எதிரான தாக்குதல் நிரம்பி வழிகிறது.

சொத்துக்களைக் கொள்ளையிடுவது ஒருபுறமிருக்க மற்ற மதத்தினரை ஆயிரக்கணக்கில் கொன்று குவிப்பதிலும் ’இந்து’ மன்னர்கள் முன்னணியில் நின்றனர்.

7-ம் நூற்றாண்டில் மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியை ஆண்டு வந்த சைவ மதத்தைச் சேர்ந்த சசாங்கன் என்ற மன்னன் புத்த மதம் தழைத்தோங்கிய 47 நகரங்களை (உ.பி. மாநிலத்தில்) பூண்டோடு ஒழித்தான். புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்ற போதி மரத்தை வெட்டித் தள்ளினான். அவனுக்கு முன் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜாதசத்ரு என்ற மன்னனும் இவ்வாறே புத்த மதத்தினரை வேட்டையாடினான்.

மெளரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் கங்க வமிச ஆட்சியைத் தோற்றுவித்த புஷ்யமித்திர சுங்கன் எனும் பார்ப்பன மன்னன் “ஒரு புத்த பிக்குவின் தலைக்கு நூறு பொற் காககள்” என்று பகிரங்கமாக பிரகடனம் செய்து புத்த மதத்தினரை ஒடுக்கினான்.

7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞான சம்பந்தர் பாண்டிய மன்னனை சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மதமாற்றம் செய்ததுடன் 8,000 சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றார் என்பது வரலாறு. இந்த வரலாற்றுக் களங்கத்தை மதுரையிலும், சீர்காழியிலும் இன்று வரை விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பது நாமறிந்ததே. ’இந்து’ மதத்தினரின் “சகிப்புத் தன்மைக்கு” இன்னும் வேறென்ன சான்றுகள் வேண்டும்?

பார்ப்பன் ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய ஒரே காரணத்திற்காக புத்த மதத்தினரை பார்ப்பனர்களும் அவர்களால் வழி காட்டப்பட்ட மன்னர்களும் துன்புறுத்தினர். புத்த பிக்குகளில் முக்கியமானவரான நாகார்ஜுனரின் பெயரால் அமைந்த ஒரு புத்த விகாரத்தைத் தகர்த்துத் தரைமட்ட மாக்கி அங்கேயிருந்த புத்த பிக்குகளை கொன்று குவித்தனர் பார்ப்பனர்கள். இதற்குத் தலைமை தாங்கி நடத்திச் சென்றவர் முதல் சங்கராச்சாரி என்பது குறிப்பிடத்தக்கது.

புத்த மதத்தின் மீது பார்ப்பன மதத்தினர் (அதாவது இந்து மதத்தினர்) கொண்டிருந்த வெறுப்பு அளவு கடந்தது. 11-ம் நூற்றாண்டில் துருக்கியர்கள் (இசுலாமியர்கள்) படையெடுத்து வந்த போது அவர்களை ’போதிசத்துவர்கள்’ என்று கூறி வரவேற்றது யார் தெரியுமா? பார்ப்பனர்கள்தான். யாரோடு கூட்டு சேர்ந்தாவது பெளத்த மதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் அவர்களுக்கு இருந்த வெறிக்கு இது ஒரு உதாரணம். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ’சூன்ய புராணம்’ எனும் வடமொழி நூல் இதற்கு ஆதாரமாக உள்ளது.

புத்த சமண மதங்களை எதிர்ப்பதில் மட்டுமல்ல; சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், காணாபத்யம் போன்ற 6 மதப்பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதிலும் படுகொலை செய்து கொள்வதிலும் கூட மூர்க்கமாகவே இருந்தனர். (’இந்து’ என்றொரு மதம் இருந்ததில்லை. வருணாசிரம தருமம் தான் இந்து மதம் என்று பின்னர் அழைக்கப்பட்டது. ஆனால் வழிபாட்டு முறைகளின் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் பல்வேறு மதங்கள் இந்தியாவில் நிலவின.)

வைணவ மதத்தைச் சார்ந்த ராமானுஜரும் அவரது சீடர்க்ளும் சோழ மன்னர்களால் துன்புறுத்தப்பட்டனர்; வேட்டையாடப்பட்டனர். கி.பி. 1098 முதல் 1122 வரை ஸ்ரீரங்கத்தை விட்டு ராமானுஜர் கர்நாடக மாநிலத்திற்கு ஓட வேண்டியிருந்தது. அங்கே ஹொய்சாள மன்னனை சமண மதத்திலிருந்து வைணவ மதத்திற்கு மதமாற்றம்செய்து அவனது தயவில் காலம் கழிக்க வேண்டிவந்தது.

வைணவத்திற்கும், சைவத்திற்கும் நடந்த மோதல்களுக்கும், வைணவத்திலேயே வடகலை, தென்கலை ஆகிய இரு உட்பிரிவுகளுக்கு இடையே நடைபெற்ற ஆயுதமோதல்களுக்கும் வரலாற்றில் ஏராளமான ஆதாரங்கள் உண்டு.

ஏன்? டெல்லியை ஆண்ட சுல்தான் ஷா அரசைத்தாக்கி அழித்த தைமூர் கூட ஒரு இசுலாமியன் தானே!

இந்துக்களுடன் சேர்ந்து விட்டதால் முகலாயர்களின் புனிதம் கெட்டுவிட்டதென்றும் அதனால்தான் அவர்கள் மீது படையெடுப்பதாகவும் அன்று தனது ஆக்கிரமிப்புக்கு நியாயம் கற்பித்தான் துருக்கியனான தைமூர். முஸ்லிம் மதவெறியன் என இன்று ஆர்.எஸ்.எஸ். கும்பலால் அவதூறு செய்யப்படும் திப்பு சுல்தான் எவ்வாறு முறியடிக்கப்பட்டான்? திப்புவை ஒழித்துக்கட்ட பிரிட்டிஷாருக்கு உதவியவர்கள் யார்? ’இந்து’க்களான மராட்டிய மன்னர்களும், முஸ்லிமான ஐதராபாத் நிஜாமும்தானே ஆர்.எஸ். எஸ். ”தேசபக்தர்கள்” இதற்கு என்ன விளக்கம் சொல்வார்கள்?

வரலாற்று நிகழ்வுகளில் இருந்து இன்னும் ஏராளமான உதாரணங்களை நாம் காட்டவியலும். இந்த உதாரணங்களெல்லாம் இசுலாமிய மதத்தைச் சேர்ந்த சில மன்னர்கள் இந்து மதத்தினர்மீது நடத்திய அடக்கு முறைகளை நியாயப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டவை அல்ல; மாறாக இசுலாமிய மன்னர்கள் மட்டுமல்ல; இந்து மன்னர்களும் அவ்வாறுதான் நடந்துகொண்டார்கள் என்பதை நிருபிக்கத்தான். சொல்லப் போனால் இசுலாமியர்கள் ’இந்து’ மதத்தினரிடம் காட்டிய சகிப்புத் தன்மையில் நூற்றிலொரு பங்கைக்கூட சமண, புத்த மதத்தினரிடம் இந்து மன்னர்களும், மதத் தலைவர்களும் காட்டவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

இசுலாமியர்களால் கறைபடுத்தப்பட்ட வரலாற்றைத் துடைத்து சுத்தம் செய்யப் போவதாகக் கூறும் ஆர்.எஸ்.எஸ். ’இந்து’ மன்னர்கள் தோற்றுவித்த கறைகளைக் கழுவ எத்தனை கோயில்களை இடிக்கத் தயாராக இருக்கிறது? மன்னர்களின் நாடு பிடிக்கும் வெறி, பொன்னாசை, மண்ணாசை ஆகியவற்றில் இருந்து விலகி நின்று தங்களுக்குத் தெரிந்த வகைகளில் எல்லாம் (அவை மூட நம்பிக்கைகளாயினும்) பல்வேறு மதத்தைச் சேர்ந்த மக்கள் மத நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் தோற்றுவித்து வளர்த்து வந்திருக்கிறார்கள்.

வடக்கே ஆஜ்மீரிலிருந்து தெற்கே நாகூர் வரை இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வழிபடும் இடங்கள் ஏராளமாக உள்ளன. துருக்கியர்கள், ஆப்கானியர்கள், பத்தானியர்கள், பாரசீகத்தினர், அராபியர்கள் போன்ற பல்வேறு இனங்களைச் சேர்ந்த இசுலாமியர்களும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ’இந்து’ மதத்தினரும் இணைந்து இந்தியப் பண்பாட்டின் வளர்ச்சியில், கலை, இலக்கியங்களின் வளர்ச்சியில் கணிசமான பங்காற்றியுள்ளனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியிலும், பிறகு முஸ்லிம் லீக்கிலும் இருந்த அப்துல் ரகுமான் சித்திக் என்பவர் ஒருமுறை கூறினாராம் ”ஒரு இந்து இறந்து விட்டால் அவனது உடலை எரித்து சாம் பலை நதியில் கலந்து விடுகிறார்கள். அந்த ஆற்று நீரோட்டம் சாம்பலை எங்கு கொண்டு சேர்க்குமோ, அது கடவுளுக்கே வெளிச்சம். ஆனால், ஒரு முஸ்லீம் இறந்து விட்டால் அவனுக்கு ஆறடி நீளம், மூன்றடி ஆழமுள்ள குழி ஒன்று தேவைப்படுகிறது. அவன் பிறப்பிலும், இறப்பிலும் இந்த நாட்டைச் சேர்ந்தவன்தான்”.

வரலாறு அனைவருக்கும் புரிகின்ற மொழிகளில்தான் எழுதப்பட்டுள்ளது. ஒரு வேளை ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறியர்களுக்கு அவை புரியவில்லை என்றால் அவர்களுக்கு புரிகின்ற மொழியில் நாம் பதில் சொல்வோம்.

No comments:

Post a Comment