Vijayasankar Ramachandran
Via Facebook
2017-09-22
பெரியார் - பார்வைக் கோளாறு
1. வரலாற்றுப் பிழை ஒன்று
கம்யூனல் ஜி.ஓ (எண் 613) எனப்படும் இட ஒதுக்கீடு ஆணை 1922இல் வெளிவந்தது. 1927இல் அல்ல.
2. வரலாற்றுப் பிழை இரண்டு
காங்கிரசில் இருந்து கொண்டே இதற்கான போராட்டத்தையும் நடத்திக் கொண்டிருந்தார் பெரியார். 1922இல் நடந்த காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சென்னை மாகாணத் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியார் இது இட ஒதுக்கீட்டீற்கான தீர்மானத்தைதான் முதலில் கையெடுத்தார். ஆனால் காங்கிரசிற்குள் அது நடக்க வில்லை. காங்கிரசிற்குள் இருந்த உயர்சாதி தலைவர்கள், குறிப்பாக பிராமணர்கள் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தனர். அதற்குப் பின் ஒவ்வொரு கூட்டத்திலும் தன் கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். காங்கிரசில் இருந்த பிராமணரல்லாத சில தலைவர்கள் கூட சமூக நீதிக் கோரிக்கை தேசிய இயக்கத்தைப் பிரித்து விடும் என்று வாதிட்டனர். என் தெருவுக்குள் வராதே, ஊர் பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்காதே என்று சமூக வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பிரித்து வைத்தது யார் என்று அவர்களைச் சாடினார். கடைசியாக காங்கிரசின் காஞ்சிபுரம் மாநாட்டிலும் இந்த தீர்மானத்தை முன்மொழியக் கூட விடாத காரணத்தால் வெளிநடப்பு செய்தார். அவர் காங்கிரசிலிருந்து வெளியேறியது 1925இல். 1927இல் அல்ல
3. பிழை மூன்று
காந்தியின் புனர் நிர்மாணத் திட்டம், காதி இயக்கம், மதுவிற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை காங்கிரஸ் காரர்களை விட அதிக தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவர் பெரியார். வைக்கம் போராட்டம், இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளிலும், வர்ணாசிரம தர்மம் ஒரு வேலைப் பிரிவினைதான் என்று காந்தியின் நிலைப்பாடு, காங்கிரஸ் நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் நடந்த சாதியப் பாகுபாடு என்று படிப்படியாக காங்கிரஸ் மற்றும் காந்தி மீது ஏற்பட்ட விரக்தியின் காரணமாகத்தான் அவர் அவர்களுக்கு எதிரான நிலைக்குச் செல்கிறார். அவரும் ராமனாதனும் (சுயமரியாதை இயக்க ஸ்தாபகர்) காந்தியைச் சந்தித்து நேரடியாக அவர்களி விமர்சனங்களை முன் வைத்து, அதற்கு அவர் அளித்த பதில்கள் திருப்தி தராததால்தான் அவர் காந்தி எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு என்று முடிவெடுக்கிறார். காந்தியை ஆரம்பத்திலிருந்தே வெறுத்தவர் என்று முத்திரை குத்துவது அக்கிரமம்.
பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் கட்டுரையில் என் கண்ணில் பட்ட வரை தெரிந்த தவறுகளை மட்டுமே இங்கு சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
வரலாற்றில் தனி இடம் பிடித்த ஆளுமைகளைப் பற்றி எழுதும்போது வரலாற்று விவரங்களைச் சரியாக கொடுக்கும் முனைப்பு இல்லாதது மட்டுமின்றி, வரலாற்றுப் பார்வையும் இல்லாமல் எழுதுவதுதான் பிரச்சினை. அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் மேற்கோள்களைக் காட்டி ஒருவரை மதிப்பிட்டு விட்டு, இது வரை பெரியாரைப் பற்றி ஒரு ‘சுத்தம் செய்யப்பட்ட” ஒரு பிம்பத்தைத்தான் தமிழ்நாட்டுக்கு வெளியே
திராவிட அறிவுஜீவிகள் உருவாக்கி இருக்கின்றனர் என்று சொல்லும் இவர் ஒர் அசுத்தமான பிம்பத்தைப் படைக்கும் அவசரத்தில் இப்படி ஒரு அரைகுறை கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment