Friday, September 15, 2017

Äll the Hindu gods are Criminals - நீ சொல்வதற்கும், நான் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கு

வாசுகி பாஸ்கர்
Via Facebook
2017-09-15

''Äll the Hindu gods are Criminals"'என்று ஜெயேந்திரன் வாயால் உதிர்க்கப்பட்ட பழைய பொன்மொழியை குறித்து நிறைய கிண்டல் கேலி பதிவுகள் நிரம்பி வழிகிறது, இந்த பதிவிற்கு பிறகு நானும் அதையே தான் செய்ய போகிறேன், அதற்கு முன்பு,

All the hindu gods are criminals என்கிற இந்த வாசகத்தின் அடிப்படை எதுவென்று பார்த்தால், சங்கர்ராமனை கொன்றதை நியாயப்படுத்தும் வாக்கியம். கொலைகள் சில நல்ல நோக்கங்களுக்காக காலம் காலமாக நடந்து கொண்டு தான் வருகிறது, அதை கடவுளர்களே செய்து இருக்கிறார்கள், அதற்காக ஒருவனை கிரிமினல் என்று சொன்னால், ஹிந்து கடவுள்கள் அனைவருமே அப்போ கிரிமினல்கள் தான் என்பதின் நீட்சி விளக்கம் தான் அந்த ஒரு வரி வாக்கியத்திற்கு பின்னே இருக்கும் தர்க்கம். இந்த விளக்கமே வாக்குமூலத்திற்கு சமம் தான்.

ஜெயேந்திரனுக்கு முட்டு கொடுக்கும் பார்ப்பனர்கள், மனதார; ஜெயேந்திரன் அந்த கொலையே செய்யவில்லை, அது சுமத்தப்பட்ட பழி என்று வெளிப்புறத்தில் பேசினாலும், அவர்களின் justification எதுவாக இருக்குமென்றால், ஜெயேந்திரன் சொன்ன அதே விவகாரம் தான். மக்களுக்காக அமைக்கப்பட்ட அந்த சட்டத்திற்கு முன்பு தான் இது கிரிமினல் தனமாக பார்க்கப்படுகிறதே ஒழிய, ஹிந்து தர்மத்தை காக்க, மடத்தை காக்க, ஒரு கொலை நடந்தால் தான் என்ன? அதை நியாயப்படுத்தினால் தான் என்ன? என்பது வரை நீள்கிறது.

ஆனால் இந்த தர்க்கத்தை சட்டத்தின் முன்னோ, பொதுசமூகத்தின் முன்போ வைக்க இயலாது, மனித சட்டங்களை தாண்டிய தர்மத்தை தங்களின் வசதிக்காக நிறுவிக்கொண்டது தான் பார்ப்பனீயம்.

வடஇந்திய பார்ப்பன வேத குரு ஒருவர் வர்ணாசிரமத்தை விளக்கும் காணொளியை சில வருடம் முன்பு பார்த்தேன். அவரின் விளக்கம், அவர் தொனியில் இருந்து இறுமாப்பு எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது, அவரது நேர்மை பிடித்திருந்தது. அத்தனை நேர்மையாக இருக்கும் ஒருவனது சித்தாந்தத்தை நாம் சுலபமாக எதிர்கொள்ளலாம். நடுநிலை என்கிற வேடத்தில், பார்ப்பனியத்தை நவீனமாக்கி பூசி மெழுகி, எல்லோருக்குமான சித்தாந்தமாக நிறுவ நினைப்பவர்கள் தான் கண்ணுக்கு தெரியாத எதிரிகள். கழிப்பிறை கழுவும் திரவ விளம்பரத்தில் 99 . 9 % கிருமிகள் கொல்லப்படுவதாக காட்டுவார்கள், கொல்லப்படுவதற்கு சாத்தியமில்லாத அந்த 0 .1 % கிருமிகள் தான் நடுநிலை பார்பனீயவாதிகள்.

வர்ணாசிரமத்திற்கு அந்த வேத விற்பன்னர் சொன்ன விளக்கம் அப்பட்டம். "ஆமாம், இந்த சாதி அமைப்பு இருக்கும் தான், அது இருக்க வேண்டும் தான், ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகம் சாத்தியமில்லை, இன்னார் இந்த வேலையை செய்தால் தான் சமூகம் நிறைவு பெரும், அது அவனது கர்மா, இது தான் ஹிந்து தர்மம், வர்ணாசிரம படிநிலை படி தான் இந்த சமூகம் அமையப்பெற வேண்டும்" என்பது, அவரின் வர்ணாசிரமத்திற்கான விளக்கம்.  

இப்படி ஒருவர் பேசினால், அதற்கு நேரெதிர் சித்தாந்தங்கள் பேசும் கடவுள் மறுப்பு, முற்போக்கு, கம்யூனிசம், பெரியாரிஸ்ம், அம்பேத்காரிசம் கொள்கையை ஏற்று கொண்டவர்களின் வேலை சுலபமாகி விடும். கழிவறை இடுக்கில் இருக்கும் கிருமிகளை கூட அழித்து விடலாம், நம் கையோடவே ஒட்டிக்கொண்டிருக்கும் கிருமிகளை ஒருபோதும் அழிக்க முடியாது, அப்படியாக கண்டறியப்பட முடியாத கிருமிகள் தான் "'தான் இன்ன சித்தாந்தவாதி'' என்று நேர்மையாக ஒப்புக்கொள்ளாத சித்தாந்தவாதிகள்.

அந்த வகையில் மறைந்த லேட்.ex சங்கராச்சாரி திரு.சந்திரசேகரிடம் கூட இந்த நேர்மை வெளிப்பட்டு இருக்கிறது, அதை வெளிப்படையாக பேசும் போது ஏனோ என் மனம் நேர்மைவாதிகள் மீது காதல் கொள்கிறது. ஏனினில் நான் உன்னை வீழ்த்தியோ, நீ என்னை வீழ்த்தியோ, இருவரும் இறந்து யாருக்காக பேசப்போகிறோம்?  பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது, அதை வளர்க்க வேண்டிய கடமை பார்பனீயவாதிகளுக்கு இருக்கிறது, அதை நேர்மையாக எதிர்கொள்ளும்வரை ஒரு பாதகமும் இல்லை, நான் நினைத்த மாதிரியான மனிதர்களே நிரம்பி இருக்க வேண்டுமென்பது பிறழ் மனநிலை, நாம் விரும்பினாலும் விரும்பாமல் போனாலும் இருக்க வேண்டியது, எதிர்க்க வேண்டியது இந்த பூமியில் இருந்தே தீரும்.

உங்களுக்கு பிடித்த வசீகரமான ஒரு ஆண் / பெண்ணை எடுத்து கொள்ளுங்கள், அவர்கள் மீது உங்களுக்கு கொள்ளை பிரியம், அவரை பார்க்கும் போதே உங்கள் தேக இடுக்குகள் சிலிர்க்கிறது, அந்தளவு பிரியமான ஆள், ''இந்த உலகமே நீ தான்'' என்கிறோம், ஆனால் உண்மையில் இந்த உலகமே அவராக இருந்தால் எப்படி இருக்கும்? உங்களுக்கு பிடித்த வசீகரமான ஆளை போலவே அத்தனை உலக ஆண்களும் பெண்களும் அதே உருவில், ஒரே தோற்றத்தில், ஒருகோடி பேர் இருந்தால் அவரை உங்களால் ரசிக்க முடியுமா? உங்கள் ரசனையின் பிரமிப்பு கூடி போகுமா? நிச்சயம் போகாது, சளிப்பின் உச்சத்தை நீங்கள் தொடுவீர்கள், ஒரு கோடி சல்மான்கான்கள் உங்கள் முன் இருக்கும் போது, சாக்கடையில் புரண்டு படுக்கும் ஒரு நாய் உங்கள் கவனத்தை ஈர்க்கும், பேரழகாக இருக்கும்.

மனித மனங்கள் இப்படியாக பரிணாமித்தது தான், நம்மை போலவே இருக்கும் மனித கூட்டம் சலிப்பு. மனதுக்கு பிடித்த உறவுகள் அருகருகே இருந்தும் சில நேரம் நாம் தனிமையை தேடுவது கூட, சில existence களில் இருந்து நாம் விடுபட முயல்வதின் முனைப்பு தான்.

சோ, இதெல்லாம் சேர்ந்தது தான் உலகம், வேறுபட்ட சித்தாந்தங்கள் மனிதனுக்கு புதிதல்ல, ஆனால் நான் இன்ன சித்தாந்தவாதி, ஆமாம் இது என் கொள்கை என்று உங்களால் வெளிப்படையாக சொல்ல முடியாமல் போனால், உங்கள் சித்தாந்தத்தின் கேவலத்தை, பிழையை, தவறை, சுயபரிசோதனை செய்யுங்கள்.

இங்கே பார்ப்பனியத்தை எதிர்த்து பேசி கொண்டு இருக்கிறேன், நேற்று என் அண்ணனுடன் இருக்கும் போது அதையே தான் பேசினேன், நேற்று சில தோழர்களை சந்தித்த போதும் அதையே தான் பேசினேன், நான் எழுதுவதை படிப்பதற்கும், என் உள்ளத்தில் கிடப்பதற்கும், என்னை நீங்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் போது பேசுவதற்குமான என் கொள்கைகள், சித்தாந்தங்கள் ஒன்று தான்.

ஏனினில் அதை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை, எங்களுக்கில்லை. அண்ணல் அம்பேத்கர் எதிர்த்தார், தந்தை பெரியார் எதிர்த்தார், எண்ணற்ற சமூக புரட்சியாளர்கள் எதிர்த்தார்கள், இன்று நானும் எதிர்க்கிறேன், இன்று இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தை ஒரு நாள் எதிர்க்கும், அதற்கான அவசியம் எங்களுக்கு இருக்கிறது, நாங்கள் எதிர்த்து தான் ஆகவேண்டும், பார்பனீயத்தால், சாதியால் நேரடியாக வீழ்த்தப்பட்ட, அடக்குமுறையை சந்தித்த இனம் நாங்கள், எங்களுக்கு அந்த கடமையிருக்கிறது, அதை செய்வோம்.

இதை எதிர்கொள்ளும் நேர்மை உங்களுக்கு இருந்தால் பார்ப்பனியத்தை வெளிப்படையாக பேசுங்கள், பூசி மொகுகாதீர்கள், ஒருபோதும் பார்ப்பனீயம் எங்களுக்கானதில்லை, அதில் எடுத்துக்கொள்ள, அதன் மூலம் பலனடைய, அதை தக்க வைப்பதால் அது எனக்கு நானே தீயிட்டு கொள்வதற்கு சமம் என்பதால் உங்கள் தர்மம் எங்களுக்கு தேவையில்லை, அப்படி சங்கரராமன்களை கொல்வது உங்களது தர்மம் என்றால், அதை எதிர்த்து பேசுவோம், குரல் கொடுப்போம், பார்பனீயத்தால் ஒரு அப்பாவி பார்ப்பனர் பலியிட படுவதை கூட "அவனும் பார்ப்பனன் தானே'' என்று இந்த சமூகம் விலகிச்செல்லாது, பார்ப்பனியத்தின் சூழ்ச்சியால் ஒரு பார்ப்பனர் தண்டிக்கப்படுவதை கூட அனுமதிக்க மாட்டோம், இதுதான் அறம்.

நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொண்டால் தான் உங்கள் மனம் நிம்மதியடையுமென்றால், அந்த நிம்மதியை ஒருநாளும் கொடுக்கமாட்டோம், எதிர்வினைகள் சமூகத்தில் இருந்தே தீரும், ஆகையால்  "all the hindu gods are criminals"' என்று நீங்கள் சொல்வதற்கும், அதையே நாங்கள் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

பண்பாட்டு ரீதியாக கடவுள்களின் மூலமாக பார்ப்பனீயம் வாழும் என்பதால் கடவுளை எதிர்க்கிறோம், இல்லாத கடவுளை எதிர்க்க மூர்க்கர்கள் அல்ல நாங்கள், ஆனால் அதே கடவுளை தங்களின் குற்றத்தை நியாயப்படுத்த criminals என்று சொல்லமளவு துணிந்தது தான் பார்ப்பனீயம் ,தன்னோட இருப்பை தக்க வைக்க எந்த எல்லைக்கும் போவது தான் பார்ப்பனீயம், அதன் வடிவங்களை பேசாத சமூகம் நாசமாய் போகும்.

No comments:

Post a Comment