Sunday, September 3, 2017

ஜாதியை கடப்பது

Karl Marx Ganaphaty
Via Facebook
2017-09-04

அனிதாவின் தற்கொலையையொட்டி சாதி குறித்த சீற்றமான உரையாடல்களை சமூகவெளியில் காண முடிகிறது. எனக்கு தலித்துகள், அருந்ததியர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நண்பர்களும் செட்டியார், நாயுடு, முதலியார், பிராமணர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த நண்பர்களும் உண்டு. இது தவிர குடும்பத்துடன் பழகுகிற அளவுக்கு நெருக்கமான இஸ்லாமிய, கிறிஸ்துவ நண்பர்கள் உண்டு. அதே போல திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி அனுதாபிகள் என எல்லா தரப்பிலும் நண்பர்கள் உண்டு. முரசொலி மாறன் காங்கிரஸ்காரர் தானே என்று கேட்ட, எந்த விதமான அரசியல் பதட்டங்களும் அற்ற நண்பர்களும் உண்டு.

இப்படியாக பலதரப்பட்ட நண்பர்கள் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை என்பதும் எனது அனுபவம். பள்ளி, கல்லூரிக் காலம் தொடங்கி வேலை தேடுகிற காலங்கள் வரை நாயாக அலைபவர்களுக்கு மாத்திரமே இத்தகைய அனுபவங்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாவல் எழுதும் அளவுக்கு எனக்கு இதில் தரவுகள் உண்டு. அதன் அடிப்படையில் சொல்கிறேன். சாதியை முழுக்கவும்  கடந்துவிட்ட தனிமனிதர்கள் என இரண்டு மூன்று பேரை மட்டுமே நான் எனது வாழ்வில் இதுவரைக் கண்டிருக்கிறேன். இதன் பொருள் மற்றவர்கள் எல்லாம் சாதி வெறியர்கள் என்பதல்ல. சாதியை மறுக்க முடிந்திராதவர்கள் என்பதே.

சுயசாதி விமர்சனத்தில் இருந்தே சாதி மறுப்பின் வெளிச்சம் தொடங்குகிறது. எவ்வளவு விரைவாக சுயசாதி, அபிமானத்தில் இருந்து வெளியேறுகிறோமோ அவ்வளவு விரைவாக நாம் சமத்துவத்தை நோக்கி நகர முடியும். இது கேட்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால் வாழ்ந்து பார்ப்பதற்கு அத்தனை சிரமமானது. இல்லையே... நான் சாதி பார்ப்பதில்லையே... என்று சொல்வதற்கு முன்பு மிகவும் அந்தரங்கமாக அது குறித்து நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உண்மை தெரியும். நீங்கள் புதிதாக அறிமுகமாகிற இடத்தில் நீங்கள் வெளிப்படுத்தாமல் உங்களது சாதியை நண்பர்களால் கண்டுபிடித்துவிட முடியுமெனில் நீங்கள் இன்னும் சாதியைக் கைவிடவில்லை என்று பொருள். நீங்கள் நல்லவராக இருக்கலாம், கருணை மிக்கவராக இருக்கலாம், திறமையானவராக இருக்கலாம், கனவுகள் கொண்டவராக இருக்கலாம். எல்லாம் இருந்தும் உங்களை அறியாமலேயே உங்களது சாதியை பிரகடனப்படுத்திக் கொள்பவராக இருந்தால் உங்களது ஆன்மாவின் ஒரு பகுதி அழுகியிருக்கிறது என்றே பொருள்.

இல்லை... எனது சாதி சார்ந்த பெருமிதங்களை நான் முன்னெடுக்காத போது அது சார்ந்த தவறுகளுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது. உங்களை அறியாமலேயே உங்களது சாதி சார்ந்த அடையாளங்கள் பொதுவெளியில் அடையாளப்படுத்தப்பட முடிகிறது என்றால் உங்களது சொல்லில், செயலில், நடையில், செயல்பாட்டில் இருந்து சாதியை அப்புறப்படுத்துவதில் நீங்கள் தோற்றிருக்கிறீர்கள் என்று பொருள். இதன் அர்த்தம் நீங்கள் சாதி என்பதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதே. இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம். இருக்கிறது. நீங்கள் அவ்வாறு செய்யும்போது சாதியில் பொதிந்திருக்கும் மேட்டிமைத்தனத்தையே செயல்படுத்துபவராக இருக்கிறீர்கள் என்பதே. அதன் வழியாக உங்களை அறியாமல் நீங்கள் ஒடுக்குமுறையில் ஈடுபடுகிறீர்கள் என்பதே. சாதியை உதறுவது என்பது ஒரு அரசியல் செயல்பாடு. மட்டுமல்லாமல் மிக நுணுக்கமாக ஒரு ஆன்மீகத் தளமும் அதற்கு இருக்கிறது. அது அத்தனை எளிதல்ல. நமது தோலை நாமே உரித்துக்கொள்வது போன்றது அது. அவ்வளவு தீவிரம் தேவை அதற்கு. அந்த வலியைப் பொறுத்துக்கொள்ள சுயசாதி விமர்சனம் எனும் செயல்பாடே வலி நிவாரணி.

இதன் முதல் தொடக்கம் சாதி என்பது, படிநிலையை போதிக்கிற, அடிப்படை மனித விழுமியங்களுக்கு எதிரான, ஒடுக்குமுறைக் கருத்தியல் என்பதை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. மேலும் இந்திய மக்கள் பரப்பில் மூன்று சதவிகிதம் மட்டுமே இருக்கிற பார்ப்பனர்கள் மட்டுமே சாதியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றும், படிநிலையில் அதற்குக் கீழே உள்ளவர்கள் சமத்துவம் பேணுவதற்கே முயல்கிறார்கள் என்றும் கருதுவது மிகவும் மேலோட்டமான பார்வை. ஒவ்வொரு சாதியும் அதனதன் அளவில் சாதித் தூய்மை பேணுபவையே. புனிதம் காப்பவையே. அந்த வகையில் ரத்தம் குடிப்பவையே.

பார்ப்பனன், சாதியின் உச்சபட்ச சுகங்களை அனுபவிக்கிறான் என்பதும், சாதிகளுக்கு இடையே சமத்துவ முரண்களின் அடிப்படையில் சண்டைகள் வருகிறபோது படிநிலையில் உயர்வாக இருக்கிற சாதியை நனவிலியாக அவன் ஆதரிக்கிறான் என்பதும், ஒவ்வொரு சாதியையும் அதனதன் படிநிலையில் இருத்தி வைப்பதற்குத் தேவையான தத்துவ அடித்தளத்தை புராண, இதிகாச அடிப்படையில் உருவாக்கி வழங்கும் பணியை இடையறாது செய்கிறான் என்பதும், நிகழும் இந்த வன்முறைக்கு கூடுதல் பொறுப்பேற்க வேண்டிய அவசியத்தை அவனுக்கு ஏற்படுத்துகிறது.

ஆனால், செயல்பாட்டுத்தளத்தில் ஒவ்வொரு சாதியும் அதனதன் அளவில் சாதிய வன்முறைக்கு பங்காற்றவே செய்கின்றன. ஆக, தம்முடைய பங்கேற்பிலிருந்து ஒவ்வொரு சாதியும் தம்மை படிப்படியாக வெளியேற்றிக்கொள்ளாத வரை இதற்கு விடிவு என்பதே இல்லை. ஆக, இந்த சுத்திகரிப்புப் பணி எங்ஙனம் நிகழ சாத்தியம்?

இரண்டு வகையில் இதன் சாத்தியப்பாடுகள் உள்ளன.

முதலில், அகரீதியாக  ‘சுய விமர்சனம்’ என்பதன் வழி,  ஆதிக்க சாதிக் கருத்தியலை ஒவ்வொரு தனிமனிதனும் தம்மிடமிருந்து வெளியேற்றிக்கொள்கிற ஆன்மீகச் செயல்பாடு. தாம் ஒடுக்குவதில் இருந்து வெளியேறுவதன் வழியாக, தம்மை ஒருவன் ஒடுக்குவதில் இருந்து தடுத்துக்கொள்வது. அதன் மூலம் தம்மை ஒடுக்குகிறவனை அவனது தவறிலிருந்தும் விடுவிப்பது. பிரக்ஞைபூர்வமான இது நம்மை முழுமையை நோக்கி உந்துகிற ஒரு பண்பாட்டு நகர்வு. இது எல்லா உயிர்களையும் அதன் படைப்பின் இயல்பான சமத்துவத்தோடு நோக்குகிற ஆன்மீக அடிப்படையைக் கொண்ட மனிதப் பண்பாக விரிவடையும்.

இரண்டாவது, புறரீதியாக படிநிலையில் கீழிருந்து ஒவ்வொரு சாதிக்கும் அது ஒடுக்கப்படும் விகிதத்துக்கு ஏற்றவாறு வாய்ப்புகளைக் கூடுதலாகப் பகிர்ந்தளிப்பதை உறுதிசெய்வது. அதன் வழியாக, நாம் முதலில் சொல்லியிருக்கும் ஆன்ம விடுதலையை நோக்கி மனிதத் திரளை நகர்த்தும் சாத்தியங்களை அதிகரிப்பது. இட ஒதுக்கீடு என்பது அந்த வகையில் காத்திரமான ஒன்று. சமத்துவத்தை நோக்கிய வழியில் நாம் பேண வேண்டிய நேர்மறையான பண்பாட்டுச் செயல்பாடு இது. இட ஒதுக்கீடு என்பதை சாதிகளுக்கு இடையேயான வேறுபாடுகளை வளர்க்கும் காரணியாக நாம் புரிந்துகொள்ளவேண்டியதில்லை. மதத்தின் அடிப்படை, ஆன்மீக விடுதலையை நோக்கி மனிதர்களை உந்துவதே. அது கடைபிடிக்கிற சடங்குகளின் வழியாக அது செயல்படுத்த முயல்வது அதுவே. இது அப்படியே இட ஒதுக்கீட்டுக்கும் பொருந்தும். இட ஒதுக்கீடு என்பதும் சமத்துவத்தை நோக்கிய  சடங்கே. ஆன்மீகத் தளத்தில் எவ்வாறு அதன் உச்சநிலையில் சடங்குகளின் அவசியம் இல்லாது போகிறதோ, அதே போல புற ரீதியாக நாம் சமத்துவத்தின் இலக்கை எட்டுகிறபோது இட ஒதுக்கீட்டிற்கான அவசியங்கள் இல்லாது போகும்.

விடுதலை என்பது இரண்டு வகையிலும் நடக்காமல் சமூக அமைதி சாத்தியமில்லை. ஆக, அகமாகவும் புறமாகவும் விடுதலை குறித்த நகர்வுகள் இருந்தே ஆகவேண்டும். இட ஒதுக்கீடு என்பதை இத்தகைய கலாச்சார அடிப்படையில் வைத்துதான் புரிந்துகொள்ள வேண்டும். அதை வெறும் சலுகையாகப் பார்க்கும் கீழ்மையில் இருந்து விலகாமல் அதன் மீதான ஒவ்வாமை விலகாது. அந்த ஒவ்வாமையைக் கைகொள்கிற யாருமே ஆன்மீகத் தளத்தில் முன்நகரமுடியாது.


இந்த ஒவ்வாமை எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், தன்னை உயர்சாதியாக கற்பித்துக்கொண்டு, அதைத் தக்கவைக்க முயலும் அற்பத்தனத்தில் இருந்தே வெளிவருகிறது. ஏனெனில், சாதியின் சுவாரஸ்யமான பண்பு, தன் மீதான மற்றவனது ஒடுக்குமுறையை, தனக்கு மற்றவனை ஒடுக்கக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கடக்க முயலும் என்பதே. இந்த செயல், அடிப்படையில் மானுட அறத்திற்கு எதிரானது. இட ஒதுக்கீடு என்பது அதிகாரப் பரவலாக்கத்தை சாத்தியப்படுத்துவதன் வழியாக அதிகாரமின்மையை நோக்கி நகரும் தன்மையை கொண்டிருப்பதால் அதுவரை அதிகாரத்தை சுவைத்த ஒரு தரப்பை பதட்டத்துக்கு உள்ளாக்கவே செய்யும். அதிலிருந்து மீளும் வழி அது தனது விடுதலை குறித்த பார்வையை மாற்றிக்கொள்வதிலேயே இருக்கிறது. ஒடுக்கும் கருத்தியலை வலுப்படுத்திக்கொள்வதில் அல்ல. ஏனெனில் சாதிய ஒருங்கிணைவு என்பது அதிகார ஒருங்கிணைவிவின் கனவில்  திளைக்கக் கூடியது. அதிகாரத்தின் வெற்றி படிநிலையைப் பராமரித்து பேணுவதில் இருக்கிறது. அதிகார சுகிப்பு மனநிலை அடிப்படையில் ஆன்மீகத்திற்கு எதிரானது. ஆக, சாதி சார்ந்த ஒடுக்குமுறைக்கு ஆன்மீகத் தளத்தில் எந்த பொருளும் இல்லை. அதை சீரழிவாக வரையறுப்பதும் அதைக் கைகொள்பவர்களை நோயாளிகளாகப் பார்க்கும் பண்புமே வளர்த்தெடுக்கப்படவேண்டும்.

நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதை உரசிப்பார்க்கும் வாய்ப்பு சமூக வெளியில் நிறைய உண்டு. உதாரணத்திற்கு, நமது சாதி குறித்து விமர்சனங்கள் வருகிறபோது நாம் அந்தரங்கமாக துணுக்குறுகிறோம் என்றால் அற்பத்தனத்தின் விளிம்பில் இருக்கிறோம் என்று பொருள். அதே சமயம் அதற்காக ரவுத்திரமடைகிறோம் என்றால் நாம் மூழ்கிக்கொண்டிருக்கிறோம் என்று பொருள். இங்கு நாம் கவனம் கொள்ளவேண்டியது நமது கடவுள்கள் இதற்கு வெளியே காத்திருக்கிறார்கள் என்பதே!

No comments:

Post a Comment