பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்
- தோழர் வே மதிமாறன்
பெரியார் அல்லது பெரியாரியம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த நெருக்கடி பார்ப்பனியத்தால், பார்ப்பனர்களால் ஏற்படுபவை அல்ல. அவர்களால் பெரியாரித்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாது. அப்படி நேரடியாக பெரியாரியத்தோடு மோதுகிற திராணி பார்ப்பனர்களுக்கும் கிடையாது.
இந்த நெருக்கடி பெரும்பாலும், ‘வளத்த கடா முட்ட வந்தா, வச்ச செடி முள்ளானா’ என்கிற பாணியில் அவரால் ஆளக்கப்பட்டவர்களாளேயே உண்டாக்கப்படுகிறது. பெரியார் காலத்திலேயே இதுபோன்ற நெருக்கடிகளை அவர் சந்தித்திருக்கிறார்.
1936ல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைவர் பெரியாரை மேடையில் வைத்துக்கொண்டே ப.ஜீவானந்தம், ‘பெரியார் நீதிக்கட்சிகாரர்களிடம் கட்சியை அடகு வைத்துவிட்டார்’ என்று கடுமையாக விமர்சித்தார். ஜீவானந்ததி்ற்கு நன்றாக உரைப்பது போல், பெரியார் உரிய சாட்டையடி பதிலை தன் தலைமை உரையில் தந்தார்.
ஆனாலும், பின்னாளில் ஜீவா, பெரியாரிடம் இருந்து விலகி, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கட்டினார். அதான் கம்பராமாயணத்திற்கு மார்க்சிய முலாம் பூசினார்.
அதற்குப் பிறகும் பார்ப்பனர்கள் மனம் குளிர வைக்கும் வகையில், பெரியாரை மிக கேவலமாக, ‘கைகூலி, சாக்கடை’ என்றெல்லாம் திட்டி எழுதினார். உண்மையில் அவரின் நோக்கம், பெரியாரிடம் இருந்தால் இந்து மதத்தை, பார்ப்பனர்களை, ஜாதி வெறியர்களை பகைத்துக்கொண்டு வாழ வேண்டும். பார்ப்பன ஆசிர்வாதம் இல்லாமல், நாம் தனி தலைவராக உருவாவது தடைபடும் என்பதுதான்.
சுருக்கமா சொல்லுனும்னா ‘கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சி ஆத்தவிட்டு பறந்து போயிடுச்சி’
இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஜீவா அறியப்படுகிறார். ஆனால், தமிழர்களின் வரலாற்றில் பெரியார்தான் தலைவராக போற்றப்படுகிறார்.
***
பெரியாரின் பிள்ளைகளாக இருந்த அண்ணாத்துரையும் அவரது கூட்டாளிகளும், 1949 ல் பெரியாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். அவர்கள் பெரிய குற்றமாக சொன்னது பெரியாரின் இரண்டாவது் திருமணம். உண்மையில் அதுவல்ல காரணம். நடிகர் வடிவேல் பாணியில் சொல்வதாக இருந்தால் அது ‘ச்சும்மா…’
அவர்கள் தனி வண்டி ஓட்ட ஆசைப்படடார்கள்.
பெரியார்-மணியம்மை திருமணம் 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் நடபெற்றது. அண்ணாத்துரை புதுகட்சி துவங்கியது அதே ஆண்டு செப்டம்பர் மாதம். அவ்வளவு வேகம்.
பெரியாரோடு இருந்தால், அது சாத்தியப்படாது. அதனால்தான், வெளியில் சென்றவுடன் பார்ப்பனியத்தை, இந்து மதத்தை, ஜாதியை விமர்சிப்பதை நிறுத்தி, எல்லோரும் வந்து எறிக்கொள்ளும்படியான, ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்ற போர்டு மாட்டிய தமிழ் வண்டி ஓட்டினார்கள். பெரியாருடன் சேர்ந்து பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு என்று பேசி, போராடி மக்களிடம் செருப்படியும், கல்லடியும் வாங்குவதற்கு பதில் – தமிழ், தமிழன் என்று பேசி தமிழர்களிடம் செல்வாக்கு பெருவது சுலபமாகவும், வசதியாகவும் இருந்ததால், இந்த தமிழ் வண்டி 100 மைல் வேகத்தில் பறந்தது.
‘தமிழன்’ என்ற சொல் கூட்டம் சேர்ப்பதற்கு வசதியாக இருந்தது. கூட்டம் சேர, சேர தமிழ் உணர்வும் பீறிட்டுக் கிளம்பியது. தமிழ் உணர்வு கட்சியாக மாறியது. கட்சி ஆட்சியாக மாறியது.
இன்றைக்கும் விஜயகாந்த் வரை, ‘தமிழ்-தமிழன்’ என்று கொஞசம் டென்சனாக சவுண்டு கொடுத்துப் பேசினால், கூட்டம் சேருகிறது. கூட்டத்தை பார்த்த உடனே அவர்களுக்கு ஆட்சி கனவு வருவதற்கு அண்ணாதுரையின் ‘பார்மெட்டே’ பிள்ளையார் சுழியாக பயன்படுகிறது.
இதில் வேடிக்கை, பெரியாரின் தலைமை பிடிக்காமல் தனியாகப் போய் கட்சி ஆரம்பித்த அண்ணாத்துரை, ‘திமுகவின் தலைவர் பதவி காலியாக இருக்கிறது. அது தந்தை பெரியாருக்காக காத்திருக்கிறது’ என்று பெரியாரை திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு திமுகவில் சேர அழைப்பு விடுத்தார். அல்லது பெரியார் மீது செண்டிமென்டாக தாக்குதல் நடத்தினார். இத்தனைக்கும் பெரியார், மணியம்மையை விவாகரத்துகூட செய்துவிடவில்லை. அப்புறம் ஏன் இந்த அழைப்பு?
பெரியாரின் தலைமையை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பவர்கள் ஏன் பெரியாரை விட்டு விலக வேண்டும்? ஏன் புதுக் கட்சி துவங்கவேண்டும்? பெரியாரின் தலைமைதான் முக்கியம் என்றால் மீண்டும் திகவிற்கே திரும்பி இருக்கலாம் அல்லது திகவைவிட்டு போகாமல் இருந்திருக்கலாம்.
பெரியாருக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பு, தொண்டர்கள் மத்தியில், ‘அண்ணாவிற்கு என்ன ஒரு பெருந்தன்மை? இவரல்லவா தலைவர்!’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கான யுக்தியல்லவா? இதை விடவா பெரியாரை கேவலப்பத்த முடியும்?
அண்ணாத்துரை மற்றும் கூட்டாளிகளின் இந்த செயல்களைப் பற்றி, சுருக்கமா சொல்லுனும்னா ‘இந்தக் கிளிக்கும் இறக்கை முளைளச்சிடுச்சி ஆத்தவிட்டு பறந்து போயிடுச்சி’
இன்றைக்கும் ஆட்சியில், அதிகாரத்தில் அண்ணாவும் அவரின் திமுகவும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், பெரியார் மட்டும்தான் வரலாற்றில் இருக்கிறார்.
***
பெரியாருக்கு பின் மிக சமீப காலங்களில் பெரியாரின் பேரன்களில் சிலர் திடீர் என்று ஒருநாள், ‘பெரியார் தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை. தலித்துகளுக்கு எதிராக இருந்தார்’ என்று அவதூறுகளை அள்ளி வீசி பெரியாரின் மார்பில் முட்டினார்கள்.
இன்னும் சில பிற்படுத்தபப்பட்ட குழந்தைகள், பெரியாரை நேரடியாக விமர்சிக்க தயங்கி, ’திராவிட இயக்கம் என்ன செஞ்சி கிழிச்சிது?’ என்று பெரியாரின் தாடி மயிரை பிடித்து இழுக்கிறார்கள்.
ப.ஜீவானந்ததிலிருந்து, இன்றைக்கு பெரியாரை விமர்சிப்பவர்கள் வரை, தங்கள் கொள்கை என்ன வென்று சொல்லாமல், பெரியாரை விமர்சிப்பதே தங்கள் கொள்கையாக அடையாளப்படுத்துகிறார்கள்.
“பெரியாரை விமர்சிக்கக் கூடாதா? பெரியார் என்ன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?”
இல்லை. தமி்ழ் நாடு கடவுளையே செருப்பால் அடித்த ஊரு. இங்கு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை.
ஆனாலும் பெரியாரை விமர்சிப்பவர்கள் அவரைத் தாண்டி சிந்தப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது செயல்படவேண்டும். ஆனால், இவர்களோ வரலாற்றை பின்னோக்கி இழுத்து, பெரியாரிடம் சண்டையிட்டு, பார்ப்பனியத்திடமும், இந்து மதத்திடமும், ஜாதிய அபிமானிகளிடமும் சரணடைகிறார்கள்.
பெரியாரை விமர்சித்த ஜீவா, பெரியாரின் தாக்குதலால் சாய்ந்தபோன கம்பராமாயணத்திற்கு முட்டுக்கொடுத்தார். பெரியாருக்கு எதிராக பார்ப்பன பாரதிக்கு காவடி தூக்கினார்.
பெரியாரோடு முரண்பட்டு புதுக்கட்சி உருவாக்கிய அண்ணாத்துரை, பெரியாரின் அரசியல் எதிரியான பார்ப்பன ராஜாஜியோடு தேர்தலில் கூட்டு வைத்துக்கொண்டார்.
பெரியாரை தலித் வீரோதியாக சித்திரித்த குணா, ரவிக்குமார் போன்றவர்கள் அதற்கு மாற்றாக பார்ப்பனியத்தை பரிந்துரைத்தார்கள்.
‘திராவிட இயக்க எதிர்ப்பு’ என்ற பெயரில் சுற்றி வளைதது மூக்கை தொடுவதைப்போல், மறைமுகமாக பெரியாரை சீண்டுகிற நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகளும், பார்ப்பனியத்தை ஆசையோடு கள்ளப் பார்வை பார்க்கிறார்கள்.
இப்படி பார்ப்பன ஆதரவு நிலைகொண்டு, பார்ப்பனரல்லாதவர்கள் கொடுக்கிற நெருக்கடியை பெரியார் மிகச்சாதரணமாக, பலமுறை தகர்த்திருக்கிறார். மாறாக, பெரியாரை தகர்க்க நினைத்தவர்கள்தான் தகர்ந்து போயிருக்கிறார்கள். மீண்டும் பெரியாரிடமே வந்து மண்டியி்ட்டு மன்னிப்பும் கேட்டு இருக்கிறார்கள்.
***
இதுபோன்ற பெரியார் எதிர்ப்பு-திராவிட இயக்க எதிர்ப்பு சூழல் 1992-93 ஆம் ஆண்டுகளில் தீவிரமாக இருந்தது.
பிரபஞ்சன், ராஜேந்திர சோழன் போன்ற எழுத்தாளர்கள், பார்ப்பன குடும்ப சூழலை பின்னணியாக கொண்டு, பார்ப்பன மொழி நடையில் எழுதப்பட்ட பார்ப்பன இலக்கியங்களை, ‘நவீன இலக்கியங்கள்’ என்று பெயர் சூட்டி, குறிப்பாக மவுனி, சுந்தர ராமசாமி, மலையாள பிட்டு படத்து கதையான ‘மோகமுள்’ நாவலை எழுதிய தி. ஜானகிராமன் போன்ற பார்ப்பன எழுத்தாளர்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டே –
இன்னொருபுரத்தில் தமிழ் மொழி உணர்வு, அரசியல் விழிப்பபுணர்ச்சி, யார் வேண்டுமானாலும் கவிதை, கதை எழுதலாம், எழுத்தாளராகலாம், பேச்சாளராகலாம், பத்திரிகை நடத்தலாம் அதற்கு பிறப்பின் அடிப்படையில் தகுதியோ, மொழிப் புலமையோ தேவையில்லை. சமூக அக்கறையும், மொழி உணர்வும் இருந்தால் போதும் என்று இலக்கியத்தை ஜனநாயகப்படுத்திய திக, திமுகவைச் சேர்ந்த திராவிட இயக்க எழுத்தளார்களை கேவலப்படுத்தினார்கள். இதில் பார்ப்பனரல்லாத பிரபஞ்சன் போன்றவர்களின் பங்கும் இருந்தது. ஆனால், பிரபஞ்சனின் பங்கு மிகத் தீவராமாக இருந்தது. (அப்போது ரவிக்குமார் திராவிட இயக்க ஆதரவாளராக, தீவிர பெரியார் பற்றாளராக இருந்தார். எஸ்.வி. ராஜதுரை-வ.கீதாவின் பெரியார் சமதர்மம் நூலை (96ஆம் ஆண்டு) அவர்தான் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.)
‘பெரியார்-மணியம்மை திருமணம் தவறு. அது செல்லாது’ என்கிற பாணியில் மிக கடுமையாக பெரியாரின் இரண்டாவது திருமணத்தை கண்டித்து நக்கீரனில் எழுதினார் பிரபஞ்சன். அவர் எழுதியதை ‘நன்றி பிரபஞ்சன்’ என்று நோட்டிஸ் போட்டுக் கொடுத்தார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்.
ஆக, பார்ப்பன ஆதரவு நிலைகொண்ட பார்ப்பனரல்லாதவர்களின் பெரியார் எதிர்ப்பு அல்லது திராவிட இயக்க எதிர்ப்பு காலபோக்கில் அவர்களாலேயெ கடைப்பிடிக்க முடியாமல் மீண்டும் பெரியாரிடமே வந்து சரணடைந்து விடுகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம், பெரியார் மீது இவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்பதைவிட, பார்ப்பனர்களால் இவர்களுககு காரியம் ஆகவேண்டும் என்பதுதான் முக்கியம்.
பெரியார் எதிர்ப்பாளராக இருந்தால் அந்தக் காரியம் சீக்கிரம் நடக்கும் என்பதுதான் பெரியார் எதிர்ப்பின் உள்ளர்த்தம். அப்படியும் காரியம் நடக்காமல் போனால்……? இருக்கவே இருக்கிறது மீண்டும் பார்ப்பன எதிர்ப்பு.
பெரியார் எதிர்ப்புக்கும், பாரதி அபிமானத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பெரியார் எதிர்ப்பையும் பெரியார் ஆதரவையும் மாறி மாறி செய்கிற இந்த அறிவாளிகள், பெரும்பாலும் பாரதி மீது் அபிமானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். காரணம், பெரியார் கருத்துக்களில் தன்னை ஈடுபாடு உள்ளவர்களாக காட்டிக் கொண்டாலும் பாரப்பனர்களோடு சுமுகமாக பழகுவதற்கு பாரதிதான் இவர்களுக்கு கைகொடுக்கிறார். பார்ப்பனர்களிடம் தன்னை முற்போக்காளனாகவும் காட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் உறவு முறியக்கூடாது. அப்படியானால் அங்கே பெரியார்-அம்பேத்கர் பற்றியா பேச முடியும்? பேசினால், கை குலுக்கலா நடக்கும்.? கை கலப்புதான் நடக்கும்.
இந்த இக்கட்டில் இருந்து பார்ப்பனரல்லாத அறிவாளிகளை காப்பதற்காகத்தானே, அவதாரம் எடுத்திருக்கிறான் ஆபத்தாண்டவன் பாரதி. அந்தக் காலத்து ஜீவா முதல் இந்தக் காலத்து திராவிட இயக்க எதிர்ப்பு எழுத்தாளர்கள் வரை இவர்களுக்கு கைகொடுக்கிற ஒரே கடவுள் பாரதி அய்யர்தானே.
***
பெரியாரின் மார்பில் முரட்டுத்தனமாக முட்டி மோதி பிறகு சறுக்கி, பெரியாரின் பாதத்தில் வந்து விழுந்துவிடுகிறார்கள், பரிதாபத்திற்குரிய பார்ப்பனரல்லாத, இந்த பெரியார், திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள்.
பார்ப்பனரல்லாத திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் பெரியார் மீது வீசிய கேள்விகளை குறித்து, 1993 ல் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நடத்திய ‘இனி’ இதழில் ஒரு கவிதை எழுதினேன்
பிரபஞ்சனின் திராவிட இயக்க எதிர்ப்பு மனோபாவமே, இந்த கவிதையை எழுதுவதற்கு எனக்கு உந்துதலாக அல்லது உள்ளடக்கமாக இருந்தது.
பெரியாரின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் அந்தக் கவிதையை இங்கு பிரசுரிக்கிறேன்.
இதை எழுதி 16 ஆண்டுகள் ஆகிறது. அப்போது பெரியாரின்-திராவிட இயக்கத்தின் எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள் இப்போது ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அப்போது ஆதரவாளராக இருந்தவர்கள் இப்போது எதிப்பாளராக மாறி இருக்கிறார்கள். இப்போதும் இந்தக் கவிதை பொறுத்தமாக இருக்கிறது. இந்தக் கவிதை எப்போது பொறுத்தமற்று போகிறதோ அப்பபோது் சமூகம் பல படி முன்னேறி இருக்கிறது என்று அர்த்தம். பார்ப்போம்.
***
“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும் தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை செய்பவர் கேட்டார்.
***
“பெரியாரின் முரட்டுத்தனமான
அணுகுமுறை அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.
***
“என்னங்கபெரியார் சொல்லிட்டா சரியா?
பிரமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில் கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா, சுந்தர ராமசாமிக்கு
இணையாக இலக்கிய
சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.
ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
***
- தோழர் வே. மதிமாறன்
No comments:
Post a Comment