Monday, September 4, 2017

திராவிட கல்வி முறை

Poovannan Ganapathy
Via Facebook
2017-09-04

கல்வி முறை

அரசின் அடிப்படை கடமை என்ன என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத புத்திசாலி கூட்டம் உருவாகி இருப்பது வேதனை தான்.

படிக்கின்ற அனைவரும் நூத்துக்கு நூறு வாங்க வேண்டும் என்பதா அரசின் வேலை. படிக்கின்ற அணைத்து மாணவமாணவிகளும் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமான ஒன்றா

பள்ளிகளில் சேர்ந்த மாணவ மாணவிகள் அனைவரும் பள்ளி படிப்பை நிறுத்தாமல் 12 ஆண்டுகள் படிக்கும் நிலையை உருவாக்க வேண்டியது அரசின் கடமை .

பள்ளிகளில் சேர்ந்த மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெரும் நிலையை உருவாக்க வேண்டியது அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.

பள்ளி படிப்பை முடித்தவர்களில் பெரும்பான்மையானோர் கல்லூரிகளில் சேரும் நிலையை உருவாக்க வேண்டியது அரசின் கடமை.

பள்ளிகளின், கல்வித்துறையின் கடமை,நோக்கம் பலருக்கு  சுத்தமாக விளங்கவில்லை என்பதனால் தான் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் கல்வியில் குறைந்தவர்கள் என்று எழுத முடிகிறது.அனைவரும் தேர்ச்சி பெரும் முறையில் பள்ளிகள் இருக்க வேண்டும் என்றால் நியாயம்.அனைவரும் நோபல் பரிசு பெற வேண்டும்,அனைவரும் நூத்துக்கு நூறு எடுக்க வேண்டும்.. அப்படி பெற்று தராத பள்ளிகள் இருந்தென்ன பயன் என்றால் சரியா

பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியில் படித்து பத்தாவது மற்றும் பணிரெண்டாவது தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு கல்லூரிகளில் சேரும் மாணவர்களை முட்டாள்கள் ,சரியான கல்வி கிடைக்காதவர்கள் என்று பல அறிவுஜீவிகள்  சொல்வதை கேட்டு வரும் கோவத்துக்கு அளவே இல்லை.

படித்து முடித்து அவர்கள் வைத்திருக்கும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழின் அடிப்படையில் தான் பல லட்சம் வேலைகளுக்கு ஆள் எடுக்கப்படுகிறது.ராணுவத்தில் சேர இது தான் அடிப்படை.தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி தரம் சரியில்லை என்று ராணுவத்துக்கு நடக்கும் தேர்வுகளில் தேர்வுஅதிகாரிகள்  சொன்னது கிடையாது. நானும் சில வருடம் அந்த பணியில் இருந்திருக்கிறேன்.மற்ற பல மாநிலங்களை விட இங்கு கல்வி அறிவு அதிகம்,தமிழ்நாட்டு மாணவர்கள் போல நினைத்து இங்கு கேள்விகளை கேட்க முடியாது என்று வட மாநிலங்களில் நடந்த தேர்வுகளின் போது சொன்னதை தான் கேட்டிருக்கிறேன் .

ராணுவத்தில் மாவட்டவாரி இட ஒதுக்கீடு உண்டு.பிளஸ் டூ முடித்தவர்கள் குறைவு என்பதால் சில மாநிலங்களில் பத்தாவது,எட்டாவது படித்தால் போதும் என்று அடிப்படை தகுதியை குறைத்து பணிக்கு எடுக்கும் நிலை இன்றும் உண்டு.

technical பணிகள்,கடற்படை,விமானப்படையில் மேலும் படிக்க வேண்டிய துறைகளில் முன்பும் சரி இப்போதும் சரி தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் மக்கள் தொகை சதவீதத்தை விட அதிக இடங்களை பிடிப்பது தான் நடக்கிறது.

பிளஸ் டூ அடிப்படையில் செவிலியர் பணிக்கு சேரும் பெண்களில் கேரளத்துக்கு அடுத்து தமிழக பெண்கள் தான் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவுவது இதே கல்விமுறை தான்.

விமான பணிப்பெண் வேலைக்கும் அடிப்படை தகுதி இதே பிளஸ் டூ பாஸ் தான்.விமானியாக பயிற்சி எடுக்க அடிப்படை தகுதியும் இதே பிளஸ் டூ தான்.

சினிமா சார்ந்த படிப்புகள் படிக்க ,கல்லூரியில் சேர அடிப்படை இதே பிளஸ் டூ தான்.அனைத்து  இடங்களிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள்,பயிற்சி பெறுகிறார்கள்,பணியில் சேருகிறார்கள்.மற்ற மாநில மாணவர்களை விட குறைவாக எங்கும் எதிலும் பாதிக்கப்பட்டது இல்லை என்று உறுதியாக கூறுவேன்.

பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் அதிக அளவு கல்லூரிகளுக்கு செல்லும் மாநிலமாக திகழ மிக முக்கிய காரணம் நம் பாடத்திட்டம் ,ஈஸி பாஸ்,சத்துணவு,லேப்டாப் ,சைக்கிள் தான்.இதனால் நன்மைகள் தான் மிக மிக அதிகம் .

பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மாணவமாணவிகள் அதிகம் இருக்கும் மாநிலங்களை எடுத்துக்காட்டாக ,பாட திட்டங்களை எடுத்துக்காட்டாக முட்டாள் கூட எடுத்து கொள்ளமாட்டான் என்று நினைத்தால் அதற்கு நேர்மாறாக அறிவுஜீவிகள் கூட்டமாக கூவுவது வேதனை அளிக்கிறது.

படிக்கின்ற பத்து லட்சம் மாணவ மாணவிகள் அனைவரும் பள்ளி படிப்பை நிறுத்தாமல் தொடரும் பாட திட்டத்தை திட்டும்,தேர்வு பெற்ற மாணவர்களின் மீது வன்மம் கக்கும் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை.

அகில இந்திய அல்லது அகில உலக அற்புத தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று 3000 பேர் மருத்துவம் சேர,2000 பேர் ஐ ஐ டி சேர  கல்விமுறையை கடுமையாக்க வேண்டும் என்று வாதிட கூட ஆட்கள் இருப்பார்கள் என்பதை நம்பவே முடியவில்லை.

நன்றாக கால்பந்து ஆடும் மாணவன்,மாணவி ,பூப்பந்து ஆடும் மாணவி ,ஓட்டப்பந்தயத்தில் ஓடும் மாணவி தன்னை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல தனி முயற்சி எடுப்பாள்.அதனை பள்ளிகள் எடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது சரியா .இது கல்விக்கும் அப்படியே பொருந்தும்.

அரசு பள்ளிகளில் நான்கு லட்சம் மாணவ மாணவிகள் படித்தால் மொத்தம் உள்ள இடங்களில் நாப்பது சதவீதம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு  என்று இட ஒதுக்கீடு செய்தால் தன்னால் நாமக்கல் பள்ளிகள் அழிந்து விடும்.கோச்சிங் பாக்டரிகளும் அழிந்து விடும்.அதை விட்டு விட்டு பத்து லட்சம்  மாணவர்களையும் ஒன்றாவதில் இருந்து fail  ஆக்க வேண்டும்,உலகிலேயே கடினமான பாட திட்டம் கொண்டு பாடம் எடுக்க வேண்டும் என்று பாட்டு பாடுவதால் ஏதாவது பயனுண்டா

படிக்கின்ற பத்து லட்சம் மாணவ மாணவிகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவமாணவிகள் இருவது சதவீதத்துக்கும் குறைவு தான்.மீதி 80 சதவீதம் ஒரு சில பாடங்களில் சரியாக பார்டரில் பாஸ் செய்யும் கூட்டம் தான்.இந்த  பாட திட்டமும்  ,அரசின் உதவிகளும் தான் இன்று 24 லட்சம் மாணவ மாணவிகள் தமிழ்நாட்டில் கல்லூரிகளில் படிக்கும் நிலை ஏற்படுத்தி உள்ளன .இதனை குலைக்க முயற்சிப்பது நியாயமற்ற,அறமற்ற செயல் என்று சொன்னால் மிகை இல்லை.

பள்ளி படிப்பை முடித்த மாணவமாணவிகள் கல்வி அறிவு அற்றவர்கள் என்று பேசும் கூட்டத்தை புறந்தள்ளி மாணவர்கள் மேலும் முன்னேற அரசு அனைத்து  உதவிகளையும் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment