Sunday, April 22, 2018

#தமிழ்தேசியம்: பிபிசி தமிழ் தொடர் 5

#தமிழ்தேசியம்: சம்ஸ்கிருத எதிர்ப்பில்தான் வாழ்கிறதா தமிழ்த் தேசியம்?

பத்ரி சேஷாத்ரி
அரசியல் விமர்சகர்

20 ஏப்ரல் 2018

(தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நிலையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் ஐந்தாவது பாகம். இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

இந்தியா பல மொழிகளின் தேசம். மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்துக்குப் பின், ஒவ்வொரு மாநிலமுமே ஒரு மொழிவழித் தேசிய இனத்துக்குச் சொந்தமானது என்று பொதுவாகக் கூறலாம். தமிழ்நாட்டில் தமிழர், கேரளத்தில் மலையாளி, ஆந்திரத்திலும் தெலங்கானாவிலும் தெலுங்கர், கர்நாடகத்தில் கன்னடர், வங்கத்தில் வங்கர், மகாராட்டிரத்தில் மராட்டியர், குஜராத்தில் குஜராத்தியர், பெரும்பாலான மத்திய மாநிலங்களில் இந்தி பேசுவோர் என்று அனைவருமே அவரவர் மொழிவழித் தேசியரே என்று எளிதில் கூறிவிடலாம். ஆனால் நிதர்சனத்தில் அது உண்மை இல்லை.

பல்வேறு மாநிலங்களில் வலுவான ஒரு மொழிவாரி தேசியப் பார்வையே கிடையாது. மலையாளிகள் தங்களை இந்தியாவிலிருந்து வேறாகப் பார்ப்பதில்லை. இத்தனைக்கும் ஒரு மாநிலமாக அது, அரசியல், சமூக அமைப்பில் இந்தியாவின் மையத்திலிருந்து வெகுவாக விலகியே உள்ளது. மதச் சிறுபான்மையினரான கிறித்தவர்களும் முஸ்லிம்களும் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் உள்ள மாநிலம் அது. முதல்முதலில் காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றை ஆட்சிக்குக் கொண்டுவந்த மாநிலம் அது.

இன்றும் கம்யூனிஸ்டுகள் ஓரளவுக்குப் பலம் பொருந்தியவர்களாக இருக்கும் மாநிலம் கேரளம். படிப்பறிவில் முதலிடத்தில் உள்ள மாநிலம். ஆண்களைவிடப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஒரே இந்திய மாநிலம். சிசு இறப்பு விகிதம், பிள்ளை பெற்ற தாய் இறப்பு விகிதம் ஆகியவை இந்தியாவிலேயே மிகக் குறைந்த இடத்தில் இருக்கும் மாநிலம். ஆனால் இந்த மாநிலத்தில் மொழி சார்ந்த அரசியல் என்பது கிடையாது. தென்னிந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த மொழிவாரி அரசியல் கிடையாது.

ஆனால் தமிழ்நாட்டில் அப்படியல்ல. அதற்குப் பல காரணங்கள் உண்டு.

தனித்து விளங்கும் ஒரே மொழி

தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் வலுவான தொன்மங்கள் உள்ளன. வடமொழியிலிருந்து இன்றைக்கும் தனித்துவிளங்கும் ஒரே மொழியாகத் தமிழ் மட்டுமே உள்ளது. மொழியியல் அடிப்படையில் இந்தியாவில், இந்தோ-ஐரோப்பிய, திராவிட, ஆஸ்திரோ-ஏசியாடிக், சீனோ-திபெத்தியன் என்று நான்கு மொழிக் குடும்பங்கள் உள்ளன. இவற்றில் கடைசியாகச் சொன்ன இரண்டு குடும்பங்களும் பெரும்பாலும் பழங்குடி மொழிகளைக் கொண்டவை.

இலக்கிய மொழியாக, அதாவது தனித்த எழுத்துகளையும் நீண்ட இலக்கியப் பாரம்பரியத்தையும் கொண்டவை முதல் இரு மொழிக்குடும்பங்களில் மட்டுமே உள்ளன. தோராயமாக, விந்திய மலையை எல்லையாகக் கொண்டு, அதன் வட பகுதியில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பெரும்பான்மையாகவும் தென் பகுதியில் திராவிட மொழிகள் பெரும்பான்மையாகவும் உள்ளன. ஆனால் திராவிட மொழிகளில் தமிழைத் தவிர்த்து மற்றவற்றில் இந்தோ-ஐரோப்பிய எழுத்துகளும் சொற்களும் வெகுவாகப் புகுந்துள்ளன.

கடந்த இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக தமிழ் மொழி மட்டும் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் வீச்சைத் தனியாக எதிர்த்து வந்திருக்கிறது. முதலில் சம்ஸ்கிருதம், அதன்பின் இந்தி என்று இரண்டு மொழிகளுடனும் போர் புரிந்துவந்துள்ளது தமிழ்.

மொழி, அதன் இலக்கணம், அதன் இலக்கியம், மதம், தோற்றத்துக்கான தொன்மம் என்று அனைத்திலுமே தமிழ், சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது என்பதில் தொடங்கி, சமஸ்கிருதத்தைவிட, சமஸ்கிருத கலாசாரத்தைவிட சீரியது தமிழ் மொழியும் தமிழ்க் கலாசாரமும் என்றும் தமிழையும் தமிழ்க் கலாசாரத்தையும் சமஸ்கிருதம் அழிக்கப்பார்க்கிறது, அவை அழிந்துவிடாமல் காப்பாற்றப்படவேண்டும் என்று கோருவதிலும்தான் தமிழ்த் தேசியத்தின் வேர் அடங்கியுள்ளது.

இம்மாதிரி மலையாளம், கன்னடம், தெலுங்கை உள்ளடக்கிய பிற இந்திய மொழிகள் நினைக்காததால்தான் தமிழ்த் தேசியத்துக்கும் பிறமொழித் தேசியங்களுக்கும் எந்தவித ஒப்புமையும் இருப்பதில்லை.

பண்பாட்டுரீதியில் மலையாளிகள், தமிழர்களிடமிருந்து பெரிய அளவில் வேறுபட்டவர்கள் அல்லர். ஆனால் அவர்கள் தமிழின் சங்க இலக்கியத்தைத் தம் இலக்கியமாக நினைப்பதில்லை. கடல் கொண்ட குமரிக் கண்டம்தான் தம் தோற்றுவாய் என்ற தொன்மத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தொல்காப்பியத்தைத் தம் மரபாக அவர்கள் கொள்வதில்லை. இவை எவையும் தமிழர்களுக்குத் தரும் பெருமித உணர்வை மலையாளிகளாலோ பிற திராவிட மொழியினராலோ புரிந்துகொள்ள முடியாது.

சமஸ்கிருதத்துக்கும் மூத்த தமிழ்

தமிழ் சமஸ்கிருதத்திற்கும் முற்பட்டது; சொல்லப்போனால் சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழ் மொழிக்கு வந்துள்ளதாகச் சொல்லப்படும் சொற்கள் உண்மையில் தமிழிலிருந்து சம்ஸ்கிருதத்துக்குப் போனவை என்று நிரூபிக்கும் முயற்சிகள் தமிழகத்தில் ஒரு பக்கம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

தமிழ் இலக்கியங்களின் காலக்கணக்கு சம்ஸ்கிருத வேத காலத்துக்கும் முற்பட்டது என்பதிலிருந்து, முதல் சம்ஸ்கிருதக் கல்வெட்டு, முதல் தமிழ்க் கல்வெட்டுக்குச் சில நூற்றாண்டுகள் கழித்து இருப்பதால், சம்ஸ்கிருதமே மிகவும் பிந்தைய மொழிதான் என்று நிரூபிப்பதுவரையான முயற்சிகளும் தமிழகத்தில் நடைபெறுகின்றன. இந்தியா முழுமையும் ஒரு காலத்தில் பரவியிருந்த பிராமி என்ற எழுத்துமுறை வடக்கில் தோன்றி தெற்குக்குப் பரவியதா அல்லது தமிழகத்தில் உருவாகி, வடக்குக்குச் சென்றதா என்ற கேள்வியும் தமிழ்நாட்டில் மட்டும்தான் கேட்கப்படுகிறது.

வேதம் தொடங்கி உருவான இந்து மதம் தமிழரின் மதமா அல்லது தமிழருக்கென்று தனி மதம் ஒன்று இருந்ததா என்ற விவாதமும் தமிழ்நாட்டில் மட்டும்தான் நிகழ்கிறது. அதன் நீட்சியாக வேதங்கள் மோசமானவை, இந்து மதமும் அதன் புனித நூல்களும் மோசமானவை, தமிழ்க் கடவுள்களை வடவர் ஆரியர்கள் அபகரித்துக்கொண்டுவிட்டனர் என்ற விவாதமும் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கிறது. சிந்து நாகரிகம் தமிழ் நாகரிகமே என்று நம்புவதும் கிட்டத்தட்ட பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் அவ்வாறு பேசப்படுவதும் தமிழகத்தில் மட்டுமே நடக்கும் ஒரு விஷயம்.

உண்மையில் இவையெல்லாம் சரியா, தவறா என்று ஆராய நான் இங்கு முயற்சி செய்யவில்லை. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிகப் பரந்த தளத்தில் சம்ஸ்கிருதத்தின், இந்தியின் வீச்சை எதிர்க்கக்கூடிய ஒரு செயல் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்பதைக் குறிப்பிடவே இவ்வளவு ஆதாரங்களை முன்வைத்தேன்.

வங்காளம், கர்நாடகம் போன்ற இடங்களில் சமீப காலங்களில் இந்தி புகுத்தப்படுவதற்கு எதிர்ப்புகள் தோன்றியுள்ளன. ஆனால் இந்த எதிர்ப்புகள் கோட்பாட்டுரீதியில் முன்னெடுக்கப்படாமல் சாதாரண எதிர்வினையாக மட்டுமே இருப்பதற்குக் காரணம், அந்த மொழிகளுக்கெல்லாம் வலுவான தொன்மங்கள் இல்லாதிருப்பதுவே.

19-ம் நூற்றாண்டில் திராவிட மொழிக்குடும்பம் குறித்த எல்லிஸின் பார்வையை அடுத்து கால்டுவெல் உருவாக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பரிதிமாற் கலைஞர் போன்றோர் உருவாக்கிய சம்ஸ்கிருதம் நீக்கிய தனித்தமிழ்ப் பயன்பாடு, உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் மீட்டெடுத்த சங்க இலக்கியங்கள், மறைமலை அடிகள் உருவாக்கிய தமிழர் மதம் என்ற கோட்பாடு, நீதிக் கட்சி தொடங்கி பின்னர் பெரியார் பங்களிப்பில் உருவான பார்ப்பன, ஆரிய, சம்ஸ்கிருத, இந்தி எதிர்ப்பு அரசியல் போன்றவையே இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் அடிப்படை.

இந்தியக் கூட்டரசில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பதுதான் இந்த அரசியலின் அடிநாதம். இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையினர் கொன்று குவிக்கப்பட்டதற்கு இந்தியாவின் இந்தி பேசும் பெரும்பான்மையினர் தமிழ்மீது கொண்ட வெறுப்பே காரணம் என்பதாகத் தமிழ்த் தேசியர்கள் கட்டமைக்கின்றனர்.

தமிழ்த் தேசியர்கள் பலர், இந்த ஈழத்தமிழர் படுகொலைக்கு சில மலையாளிகளையே நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகம் மட்டும் தனி நாடாக இருந்திருந்தால், இலங்கையில் நடந்த இனப் படுகொலையைத் தடுத்திருக்கலாம் என்பது இவர்கள் வாதம்.

நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதையும் இத்தோடு இவர்கள் சேர்க்கின்றனர். கடைமடைப் பகுதியாக இருக்கும் தமிழகத்துக்கு கர்நாடகத்துடன் காவிரிப் பிரச்சினை, கேரளத்துடன் முல்லைப் பெரியாறு பிரச்சினை, ஆந்திரத்துடன் பாலாறு பிரச்னை என்று உள்ளது. இவற்றில் மிக முக்கியமாக இருப்பது காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் விவசாயம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பகை நாடுகள்கூட நதிநீர்ப் பங்கீட்டை நியாயமாகச் செய்துகொள்ளும்போது இந்திய ஒன்றியத்தின் மாநிலங்களுக்கிடையே நியாயமான பங்கீட்டைச் செய்துகொள்வதை உறுதிசெய்ய முடியாத நிலையில் ஏன் இந்த ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்கிறார்கள் தமிழ்த் தேசியர்கள்.

சதிக் கோட்பாடு

இந்த அடிப்படையில் மத்திய அரசு கொண்டுவரும் எந்த ஒரு புது முயற்சியுமே தமிழர்களை ஒழித்துக்கட்ட உருவானது என்ற சதிக் கோட்பாட்டை தமிழ்த் தேசியர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். அது தேனியின் செயல்படுத்தப்பட இருக்கும் நியூட்ரினோ ஆராய்ச்சித் திட்டமாக இருக்கலாம், கூடங்குளம் அணு மின் நிலையமாக இருக்கலாம், காவிரிப் படுகையின் ஹைட்ரோகார்பன் திட்டங்களாக இருக்கலாம், தூத்துக்குடியின் ஸ்டெர்லைட் செப்புத் தொழிற்சாலையாக இருக்கலாம், சேது சமுத்திரத் திட்டத்துக்கான எதிர்ப்பாக இருக்கலாம், கடலோரச் சிறு துறைமுகத் திட்டமாக இருக்கலாம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பாக இருக்கலாம், ஒட்டுமொத்தமாக தமிழர்களைக் கொன்று குவிக்க தில்லியில் தீட்டப்படும் கொடூரத் திட்டங்களே இவை அனைத்தும் என்ற திடமான நம்பிக்கை அனைத்து தமிழ்த் தேசியர்களிடமும் உள்ளது.

வேறு எந்த மாநிலத்தையும்விட தமிழகத்தில் தேசியக் கட்சிகள் அரசியல் அரங்கில் தடுமாறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதற்கு உள்ளூரப் பரவியிருக்கும் இந்த தமிழ்த் தேசிய மன நிலையை எடுத்துக்காட்டலாம். முன்னர் காங்கிரஸ் கட்சியும் தற்போது பாரதிய ஜனதா கட்சியும் எதிர்கொள்ளும் வெறுப்புக்கு இவையே பெரும்பான்மைக் காரணங்கள். தமிழ்த் தேசியர்கள் என்று தங்களைக் குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாநில அரசியல் கட்சிகளுமே இந்த எதிர்ப்பைக் கடுமையாக முன்வைக்கின்றன. தேர்தலுக்காக அவை காங்கிரஸ் அல்லது பாஜகவோடு கூட்டணி சேர்ந்தாலும் உள்ளூர இந்தக் கட்சிகளைக் குறித்த அவற்றின் பார்வை இதுதான்.

மனிதகுல வரலாற்றில் தொன்மங்கள் மிக முக்கியமானவை என்கிறார் வரலாற்றாளர் யுவல் நோவா ஹராரி. தொன்மங்கள்தான் சமூக அமைப்பை, மத அமைப்பை, தேசியவாதக் கருத்தாக்கங்களை உருவாக்குகின்றன. இந்தியாவின் பிற மொழிகளுக்கு இல்லாதவகையில் தமிழுக்கு மட்டும் தனித்த தொன்மம் இருப்பதனால்தான் அல்லது உருவாக்கப்பட்டிருப்பதனால்தான் தமிழ்த் தேசியம் மட்டுமே இந்தியாவில் தனித்து விளங்குகிறது. இதனை, தமிழகத்துக்கு வெளியில் உள்ள யாருமே புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

https://www.bbc.com/tamil/india-43831399

No comments:

Post a Comment