Sunday, April 29, 2018

Rights-based governance' மற்றும் 'Duty-based governance'

Sridhar Subramaniam
2018-04-30

சோறும் சுத்தமும் 
===================
.
அரசு நிர்வாகத்தில் 'Rights-based governance' மற்றும் 'Duty-based governance' என்று இரண்டு வகை இருக்கிறது. குடிமகன்களுக்கு இருக்கும் உரிமைகளை அரசு உணர்ந்து கொண்டு, அவற்றைப் பேணி, உரிமைகளை அதிகரித்து பரிபாலனம் செய்வது. இன்னொன்று குடிமகன்களுக்கு இருக்கும் கடமைகளை அதிகரித்து, அவற்றை தொடர்ந்து குறிப்பிட்டு, அரசு சேவைகளுக்கு எல்லாம் அவற்றை நிபந்தனையாக வைப்பது.

உலகெங்கிலும் வலதுசாரி அரசுகள் கடமையை வலியுறுத்தும், எதிர்பார்க்கும் அரசுகளாகவே இயங்கி வந்திருக்கின்றன. நம் மத்திய அரசும் வந்த நாள் முதல் குடிமகன்கள் தேசத்துக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பாடம் எடுத்து அதற்கேற்ப திட்டங்கள் தீட்டுவதிலேயே கவனமாக இருந்து வந்திருக்கிறது.

- அரசு திட்டங்களுக்கு குடிமகன்கள் தங்கள் நிலங்களை கொடுக்க வேண்டும்,
- நாட்டில் கள்ளப்பணம் நீங்க வேண்டுமானால் மணிக்கணக்கில் கியூவில் நிற்க வேண்டும்,
- வரித்திட்டம் புனரமைப்பு செய்யும் போது உங்கள் தொழில் பாதிக்கப்பட்டால் அதற்கு தேவைப்படும் தியாகங்கள் செய்ய வேண்டும்,
- பிரைவசி என்பது தனிமனிதனுக்குக் கிடையாது, தேச முன்னேற்றத்துக்காக நீங்கள் உங்கள் தகவல்களை அரசுக்கு கொடுக்க வேண்டும்,

இத்யாதி இத்யாதி.

இதன் தொடர்ச்சிதான் 'சோறு வேண்டுமா, ஊரை சுத்தம் செய்!' என்பது.

குடிமகன்களுக்கு இருக்கும் உரிமைகள் இவர்களுக்கு பொருட்டாகவே இருக்காது. அப்படி ஒன்று இருக்கிறது என்பதே புரிந்து கொள்வது இவர்களுக்கு கடினம். அதனால்தான் சத்துணவு, ரேஷன் போன்ற திட்டங்களை அமுல்படுத்துவதில் பாஜக மாநிலங்கள் சுணக்கம் கொள்கின்றன. தமிழகம் அளவுக்கு உணவு விநியோகம் பாஜக ஆளும் மாநிலங்களில் இல்லை.

முந்தைய அரசு உரிமை சார்ந்த நிறைய சட்டங்கள் திட்டங்கள் கொண்டு வந்தது. ஊரக வேலை வாய்ப்பு திட்டம், ஆதாரக் கல்வி உரிமை, ஆதார உணவு உரிமை, தகவல் அறியும் உரிமை போன்றவை.  Rural Employment Act, Right to Education, Right to Food, Right to Information Act. இவை யாவுமே உரிமைகள் சார்ந்தவை. இவை யாவுமே இன்றைய அரசால் கிடப்பில் போடப்பட்டோ அல்லது சரிவர அமுல்படுத்தாமலோ பிரச்சனைகளை சந்தித்து வருவதற்கும் இதே சிந்தனைதான் காரணம்.

இங்கே குடிமகனுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் என்று பெரிதாகக் கிடையாது. ஆற்ற வேண்டிய கடமைகள் லிஸ்ட் மட்டும் நீளமாக இருக்கிறது.

புரிய வேண்டிய தியாகங்களின் லிஸ்டும் கூடத்தான்...

#Sridhar Subramaniam#

No comments:

Post a Comment