கல்லூரி படத்தில் ஒரு காட்சி, நாயகன் சரியாக sports practice க்கு வராததால் நாயகி அவன் வீடு தேடி போவாள், அங்கே கல் உடைக்கும் குவாரியில் வேலை செய்து கொண்டிருக்கும் அவனின் தங்கையிடம் அவள் அண்ணனை பற்றி விசாரிப்பாள், அண்ணனிடம் அழைத்து செல்ல அந்த சிறுமி தமன்னாவை அழைத்து கொண்டு வீட்டுக்கு போவாள், தமன்னா அந்த பெண்ணை வாகனத்தில் அமர சொல்ல 'நான் ஓடியாந்துகிறேன்ன்னு' அந்த சிறுமி முன் ஓட தமன்னா பின்னாலவே செல்வாள். அப்போ இரு சக்கர வாகனத்தில் ஒரு ஊர் பெரியவர் கடந்து போவார் , இந்த சிறுமி நின்று "ஐயா, கும்பிடுறேங்க அய்யா" என சொல்லி விட்டு மீண்டும் ஓட்டத்தை தொடர்வாள்.
அவன் வீட்டுக்கு போன பிறகு தான் நாயகனின் உண்மையான ஏழ்மை நிலை அவளுக்கு தெரிய வருகிறது, 'அண்ணன் வீட்டில இல்லை, ஏதாவது சாப்பிடுறீங்களா" என அந்த சிறுமி கேட்பாள், அன்பாக மறுத்து விட்டு, தமன்னா அந்த சிறுமியிடம் 'நீ படிக்கலையா" என்கிற கேள்விக்கு,
'நான் படிச்சிட்டு தான் இருந்தேன், எங்க அண்ணன் படிக்கணும்னு எங்க அய்யா என்னைய நிறுத்திட்டார்' என்பாள். அந்த குடும்பத்தின் சூழ்நிலை, நாயகன் தான் அந்த வம்சத்தில் முதலில் படித்து வேலைக்கு போகப்போகிறான் என்கிற ஒரே நம்பிக்கை, அதுவும் கல்லூரி வரை வந்து விட்டதால் இன்னும் சில காலமென அந்த பெண்ணும் அவனின் தந்தையும் இவனுக்காக கல் உடைத்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த சிறுமியின் முகத்தில் இருந்த வறண்ட சிரிப்பும், அங்கே இருந்த வறுமையின் அடையாளங்களும் மனதை உறுத்த, நாயகி அதே நினைவுகளோடு வீடு வந்து சேர்கிறாள்!
வீட்டிற்கு வந்து ஆறுதலாய் தன் பாட்டியின் மடியில் படுத்த படி, அவள் வீட்டு வரவேற்பறையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த போட்டோ பிரேம்களை பார்த்து, இவர்களெல்லாம் யார் என ஒவ்வொருவராய் பாட்டியை கேட்கிறாள்!
இவரு District Magistrate ராமானுஜம், இவரு ஸ்ரீநிவாசன் High Court Judge , இவரு IG of போலீஸ் ரங்கராஜன், என பதில் சொல்லி விட்டு, 'என்னமா ஆச்சி இன்னைக்கி உனக்கு' என பாட்டி சிரிப்பாள்!
அந்த காட்சி மெல்ல மறைந்து குவாரியில் கல் உடைத்து கொண்டிருக்கும் அந்த சிறுமியின் முகம் அந்த போட்டோ பிரேமுகளில் ஒன்றாக கலக்கும்! வசனம் இல்லாமல் அங்கே இயக்குனர் சொல்ல வந்தது, இத்தனை தலைமுறை கல்வியை கண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து இந்த கம்பீர போட்டோக்களை பார்க்கும் போது, ஒரு தலைமுறை கல்விக்கே தாயை கல் குவாரியில் இழந்து, அப்பாவும் பெண்ணும் ஒருவரை படிக்க வைக்க போராடி கொண்டிருக்கிறார்களே என்பது தான்!
இந்த வாழ்க்கை போராட்டத்தின் பல படிகளை தாண்டி தான் நீங்களும் நானும் இன்று வாழ்க்கையில் ஓரளவேனும் முன்னுக்கு வந்து விட்டோம், நம் தாத்தா, ஆயாக்கள் எல்லாம், அரசாங்க நீதிபதிகளோ, டாக்டர்களோ, ஜில்லா கலக்க்டர்களோ இல்லை, இப்படியான பின்புலத்தில் பிறந்து, எங்கோ வளர்ந்து, இன்று 5 டிஜிட் சம்பளம் வாங்கி, காரில் ஏசி போட்டுகொண்டு, பிடித்த பாடலோடும், பிடித்த வாகனத்தோடும் அலுவலுகம் செல்லும் அந்த மகராசன் அரை மணி நேரம் கூட அலுவளுகத்துக்கு தாமதமா போக மாட்டாராம்!
மக்கள் பிரச்சனைக்காக போராடும் கட்சியோ, இயக்கமோ இவர்கள் கண்ணில் சாலையில் பட்டால் "shit " தான், கட்சிகளின் மீதும், இயக்கங்கள் மீதும் நமக்கு ஆயிரம் விமர்சனம் இருக்கலாம், ஆனால் போராட்ட களம், மக்கள் பிரச்சனை என்று தெரிந்த பிறகு அதன் அவசியத்தை உணர முடியாத அளவுக்கு நீங்கள் முன்னேறி இருப்பதின் பின்னணியில், இப்படியான பல தர்ணாக்கள், பட்டினி போராட்டங்கள், மறியல்களை தாண்டி உருவான வளர்ச்சியில் வந்தது தான் உச்சி வெயில் வெளியே காய, சில்லென்று அலுவலுகத்திலும், காரிலும் வீசும் ஏசி!
தான் ஒருவன் முன்னேறி விட்டால் சமூகமே முன்னேறி விட்டதாக கொள்பவன் கண்டிப்பாக சுயநல அயோக்கியனே! அதிகார வர்கத்தை விட கொடியவன்! கட்டுக்கு அடங்காத சமூக நிராகரிப்பு அவனிடம் இருக்கிறது என்று அர்த்தம்!
மக்களாட்சி நடைபெறும் நாட்டில், அதிகாரத்திற்கு முன் சாமானியனுக்கு இருக்கும் ஒரே கருவி, ஆயுதம் போராட்டம் மட்டுமே, அதை செய்வதால் தான், அப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதையாவது நாம் பதிவு செய்ய முடியும். உனக்கும், எனக்கும் அலுவலுகத்தில் சுற்றுலாவுக்கு விடுப்பு கிடைக்காதது தான் பிரச்சனை என்றால், அதை தாண்டிய பல வாழ்வாதார பிரச்சனை உண்டு! அங்கே போராடி கொண்டிருப்பவன், நமக்கும் சேர்த்து தான் போராடுகிறான்.
வன்முறை இல்லாத ஒரு போராட்டத்தின் முக்கியவத்தமே நடைமுறை சமூக சுயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, இயங்கி கொண்டிருப்பதால் தான் உங்களுக்கு பிரச்சனை தெரியவில்லை, என் கோரிக்கையோடு அதை முடக்குகிறேன், அப்போதாவது என் குரல் உனக்கு கேட்கிறதா என்பது தான் போராட்டத்தின் காரணம்! அதிலும் உனக்கு பிரச்சனை இல்லாமல், அலுவலுகம் சீக்கிரம் போய் சேர்கிற வண்ணம் ஓரமாக போராட்டம் நடத்தலாம் என்கிற வாதம் எந்த வகையில் நியாயம்?
நீ தாமதமாக அலுவலுகம் போகணும், அதற்கு காரணம் என்னவென்று உன் மேலாளர் கேட்கணும், அந்த காரணத்தை நீ சொல்லணும், அப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா, அதற்காக போராடுகிறார்களா என்பது உன் மேலாளருக்கு தெரியணும், இப்படி தான் சமூக கவனத்தை ஈர்க்க முடியுமே தவிர, ரெட் ஹில்ஸ் ஓரமா ஒருத்தன் உண்ணாவிரதம் இருந்தா, செத்து போய் கிடப்பான், ஒரு லைன் நியூஸ் வரும்! முடிஞ்சிடும்!
வாழ்க்கை எவ்வித தடையும் இல்லாமல் இயங்க வேண்டுமென்பது ஒவ்வொருவரின் விருப்பம், ஆனால் இவையெல்லாம் ஒரு தொடர்பு சங்கிலி, நீ இன்று அனுபவித்து கொண்டிருக்கும் வசதிகளுக்கு கூலியாக உன் நேரத்தை அது கேட்கும், அதற்கு அந்த உரிமை உண்டு. உனக்கான உரிமைக்காக போராடிய வேறு ஒருவனின் நேரம் உனக்கு கடந்த காலத்தில் தேவை பட்டு இருக்கிறது, திருப்பி செலுத்துதல் அவ்வளவு கடினமான காரியமாக சொகுசு வாழ்க்கை உன்னை மாற்றி அமைத்திருக்கிறது!
இந்த உலகத்தை, அமைப்பை, சுற்றத்தை, பிரச்சனைகளை, அடக்குமுறைகளை, ஒடுக்கப்படுவதை கண் திறந்து பார்த்தால், கவனித்தால், உணர்ந்தால் கல்லூரி படத்தின் நாயகி போல நான்கு தலைமுறை கற்றவர் இருந்த மேல்தட்டு குடும்பத்தில் பிறந்திருந்தால் கூட, போராட்ட வடிவங்களின் தேவை புரியும், முதல்ல படிச்சிட்டு வேலைக்கு போறதே, நீயோ அல்ல உங்க அப்பாவாக தான் இருக்கும், நீ ஏன் what the fuck ன்னு சீன் போடுற?
குறைந்த பட்சம் போராடுகிறவர்களை பகடி செய்யாமல் நகர்ந்து விடு, அல்லது இறங்கி போராடு!
*---- வாசுகி பாஸ்கர்* ( 19-10-2016 )
No comments:
Post a Comment