Wednesday, April 4, 2018

பெரியாரின் தமிழ்தேசியம்

புலம்பெயர் தமிழர்களால் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் 'எதிரொலி' இதழுக்காக எழுதிய கட்டுரை. 

பெரியாரின் தமிழ்தேசியம்
-அசோக்.R (டான் அசோக்)

இந்தக் கட்டுரையை எழுதத் துவங்கும்போது இரண்டு சிறப்பான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.  ஒன்று தென்னக இந்தியாவின் முதல்வர்களில் ஒருவர் துவக்கி வைத்திருக்கும் திராவிடநாடு உரையாடல்.  இதை பலர் பெரியார் காலத்தில் எழுந்த தனிநாடு கோரிக்கை என நினைக்கிறார்கள். இல்லை.  இது ஒருகாலத்தில் திமுக முன்மொழிந்த, மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் ஆதரவில்லாததால் கிடப்பில் போட்ட, ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ (Federal Government) என்பதே.  அதாவது அமெரிக்காவைப் போல மாநிலங்களுக்கும் அதிக அதிகாரம் கொடுக்கும் கூட்டாட்சி அரசு!  இந்தி எதிர்ப்பு, சமூகநீதி என எல்லாவற்றிலும் எப்படி தமிழகம் விழித்துக்கொண்ட பல ஆண்டுகளுக்கு பின்னரே மற்ற மாநிலங்கள் விழித்துக்கொண்டனவோ, அதேபோல கூட்டாட்சி கோரிக்கை எழுப்புவதிலும் இப்போது விழித்திருக்கிறார்கள். 

ஏனைய இந்திய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பலமடங்கு வளர்ச்சியடைந்த தென் மாநிலங்களின் வரிப்பணத்தைப் பிடிங்கி வட மாநிலங்களுக்கு தானம் செய்யும் மத்திய அரசின் போக்கை எதிர்கொள்ளும் வண்ணம் இந்த உரையாடல் துவங்கியிருக்கிறது.  அத்தோடு நிதி ஒதுக்குதலில் மக்கள் தொகை ஒரு முக்கிய காரணியாக இருப்பது நியாயம் போல் தோன்றினாலும் அது பலத்த பின்னடைவு என்பது கொஞ்சம் உற்று கவனித்தால் புரியும்.  அதாவது பத்து பேர் உள்ள ஒரு வீட்டில் மூன்று பேர் உழைத்துப் போடுகிறார்கள்.  உழைத்த பணத்தில் பெரும்பங்கு வெட்டியாக உட்கார்ந்து திங்கும் மீதியுள்ள 7 பேருக்கும் அதிக அளவில் போய்ச்சேருகிறது.  தமிழ்நாடு மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் செலுத்துகிறது என்றால் தமிழ்நாடு திருப்பிப் பெறுவதோ 0.47பைசா.  ஆனால் உத்திரபிரதேசம் 49பைசா மட்டுமே செலுத்தி 1.47 ரூபாய் மத்திய அரசிடம் பெற்றுக்கொள்கிறது.  சரி! சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டதே கொஞ்சமாவது சமூகதளத்திலோ, உட்கட்டமைப்பிலோ, அறிவுதளத்திலோ வளர்ந்திருக்கிறார்களா என்றால், யோகி போன்ற பாதி அகோரிகளை முதல்வர்களாக தேர்ந்தெடுப்பதோடு, மேலும் பல பாஜக முதல்வர்களைத் தேர்ந்தெடுத்து வேத காலத்துக்கு வேகமாக பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  “இவர்களின் இந்த சோம்பேறித்தனத்திற்கும், உழைப்பின்மைக்கும், வளர்ச்சியின்மைக்கும், சமூக அறிவின்மைக்கும் எத்தனை நாள் நாங்கள் உழைத்துக்கொட்டுவது?  கூட்டாட்சி முறையை விவாதிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது,” என கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏனைய தென்னகத் தலைவர்கள் ஏற்றிருக்கிறார்கள்.

மற்றொரு விஷயம், மனித வரலாற்றுக்கான மேக்ஸ் ப்ளாங்க் அறிவியல் கழகம் ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்கும் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய முடிவுகள்.  சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் பங்குபெற்ற இவ்வாராய்ச்சியின்படி ‘திராவிட மொழிக்குடும்பம்,’ ஏறத்தாழ 4500 ஆண்டுகள் பழமையானது என்பதும், உலகில் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மொழிகளான தமிழ், தெலுகு, கன்னடம் உள்ளிட்ட 80 வகை திராவிட மொழிகளைப் பேசுகின்றவர்கள் ஏறத்தாழ 22 கோடி பேர் வாழ்கிறார்கள் என்பதும், திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியாக விளங்கும் தமிழ், சமஸ்கிருதத்தைப் போலவே பழம்பெறும் மொழி என்பதும், சமஸ்கிருதம் போல் அல்லாமல் இன்னமும் உயிரோடு இருப்பது அதன் தனிச்சிறப்பு என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  அத்தோடு இதுவரை பல மொழி வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளோடு இது சாலப் பொருந்துவதும், யாரும் மாற்றுக்கருத்தை முன்வைக்க முடியாத அளவிற்கு உறுதியான ஆதாரங்களோடு இவ்வாராய்ச்சியின் முடிவுகள் இருப்பதும் கூடுதல் சிறப்பு.  

கூட்டாட்சி கோரிக்கை தேசிய கட்சிகளின் முதல்வர்களிடமிருந்து எழுந்திருப்பதால் அதை ‘முழக்கம்’ என்று பூரிக்கவோ, நாளை மத்தியில் காங்கிரஸ் அரசு வந்தாலும் இதே கொள்கையில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள் என்றோ நாம் நம்புவதற்கில்லை.  ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே புழக்கத்தில் இருந்த திராவிடம் என்கிற வார்த்தையை, சமகாலத்தில் கேரள பொதுமக்கள் கையிலெடுத்து தென்னிந்தியா முழுமைக்கும் பரவச்செய்தார்கள் என்றால், திமுகவின் கோரிக்கையாக மட்டுமே இருந்த கூட்டாட்சி தத்துவத்திற்கு இன்று கர்நாடகம் உயிர் கொடுத்திருக்கிறது. ஆக திராவிடம் என்கிற வார்த்தையையும், கூட்டாட்சி கோரிக்கையையும் ஏதோ தமிழ்நாடு மட்டுமே முழங்கி வந்ததாகச் சொல்லப்பட்டுவந்த கூற்று கடந்த சில மாதங்களில் முற்றிலும் தகர்க்கப்பட்டிருப்பது நல்லதொரு முன்னேற்றம். 

இப்படி உலகமும், தென்னிந்தியாவும் திராவிடம் என்கிற மொழிசார் பேரினத்தின் இருப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் சூழலில், தமிழர்கள் மத்தியில் திராவிடம் என்கிற வார்த்தை மீதான புரிதலும், தமிழ்தேசியத்திற்கும் அதற்குமான தொடர்பும் திராவிட இயக்கத்தவர்களைத் தாண்டி, பிறரிடம் எப்படி இருக்கிறது என்பதை நாம் விரிவாகப் பார்க்க வேண்டும்.  உங்கள் அரசியல் பார்வை எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி,  திராவிட அரசியல் என்பது தமிழ்தேசிய அரசியலுக்கு எதிரானது என நினைப்பவராக இருந்தாலும் கூட, நான் கூறுப்போவதை முன்முடிவுகளை ஒதுக்கிவைத்துவிட்டு நீங்கள் பார்க்கவேண்டும் என வேண்டுகிறேன்.

பெரியார், திராவிட இனத்தின் மீது ஆரிய இனம் காட்டிய ஆதிக்கத்தை எதிர்த்தே தன் வாழ்நாள் முழுதும் செயல்பட்டாலும் கூட, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்களைச் செய்திருந்தாலும் கூட, அவரை வெறும் இனப்போராளியாகவோ, மொழிப்போராளியாகவோ நாம் சுருக்க முடியாது.  அவர் மிகத்தெளிவாக, “எனக்கு தேஷாபிமானமோ, பாஷாபிமானமோ கிடையாது”, எனச் சொல்கிறார்.  பின் என்ன அபிமானத்திற்காக திராவிடம் என்கிற வார்த்தையை சுமந்துகொண்டு போராடினார்?  என்ன அபிமானம் அவரை 90 வயதுவரை மூத்திரச்சட்டியோடு செயல்பட வைத்தது? மனிதாபிமானம் என்கிற அபிமானத்தைத் தவிர அவருக்கு வேறொன்றுமே முக்கியமானதாகவோ, பெரியதாகவோ, முதன்மையாகவோ படவில்லை.  தன் இறுதிக்காலம் வரை அவர் ஆற்றிய உரைகளிலும் சரி, எழுதிய எழுத்துக்களிலும் சரி, அது ஒன்றையே தன் வாழ்வின் மையநோக்காக வைத்து செயல்பட்டிருக்கிறார்.  இந்த புரிதலோடுதான் நாம் பெரியாரின் ஒவ்வொரு வார்த்தையையும், போராட்டத்தையும் அணுக வேண்டுமேயொழிய, மொழி, இனப்பற்றை வைத்து அல்ல.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர், “பெரியாரை நாங்கள் தாக்கவில்லை என்பது எங்கள் ஆவணத்தைப் பார்த்தாலே தெரியும்,” என்று கூறினார்.  இதைவிட ஒரு பெரும்புரட்டு எதுவும் கிடையாது.  ஏனெனில் ஆவணம் எனப்படும் அந்தக் கேவலத்தை ஆழப்படித்தவன் என்கிற முறையிலும், அதன்மீது விமர்சனக்கட்டுரை எழுதியவன் என்கிற முறையிலும் எண்ணற்ற நாம் தமிழர் தம்பிகளைவிடவும் அந்த ஆவணம் எவ்வளவு அறிவீனமாக பெரியார் மீதான தாக்குதலைத் தொடுத்தது என்பது எனக்குத் தெரியும்.  ஒவ்வொரு வரியிலும் ‘திராவிடம்’ ‘திராவிடம்’ எனக் குறிப்பிட்டு திராவிடத்தைவிடவும் தமிழனுக்கு தீங்கிழைத்தது ஏதுமில்லை என்ற தொனியில்தான் அந்த ஆவணம் முழுமைக்குமே ஒலித்த்து. அதோடு பெரியாரின் பேச்சுக்களில் இருந்து பல வரிகள் எடுத்தாளப்பட்டு திராவிடம் இவ்வாறு பேசியது, திராவிடம் இவ்வாறு எழுதியது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  ஆக அவர்கள் திராவிடம் எனக் குறிப்பிடுவது பெரியாரைத்தானே தவிர வேறு யாரையும் அல்ல என்பதை அதைப்படிக்கும் குழந்தையும் கூட புரிந்துகொள்ளும். 
அப்படியெல்லாம் புழுதிவாரி தூற்றியவர்கள் இப்போது ஏன், “பெரியாரை நாங்கள் அவதூறு செய்யவில்லை?” எனப் பம்முகிறார்கள் என்றால், எச்.ராஜா வகையறா ஆட்கள் பொதுமக்களிடம் வாங்கும் அடியைப் பார்த்துதானே தவிர அது உள்ளார்ந்த மனமாற்றமோ, அரசியல் மாற்றமோ இல்லை.  ஏனெனில் இன்னமும் நாம் தமிழர் கட்சியினரும், அவர்களுக்கு ‘உரமிட்டு’ வளர்த்த புலம்பெயர்த் தமிழர்களில் சிலரும், திடீரென 2009ல் உருவான தமிழ்தேசியவாதிகளும் இன்னமும் பொதுப்படையாக பெரியாரையும், திராவிடம் எனும் எல்லா வகையிலான ஆதிக்கத்திற்கும் எதிரான கருத்தியலையும் தூற்றிக்கொண்டு இருப்பதை நாம் காணலாம்.
தமிழுரிமையைப் பொறுத்தவரை அதை பெரியார் அணுகியதற்கும், திராவிட இயக்கத்துடன் நேரடித் தொடர்பில்லாத தமிழார்வலர்களான மறைமலையடிகள், ம.பொ.சி போன்றவர்கள் அணுகியதற்கும் கடலளவு வேறுபாடு இருக்கிறது.  இது ம.பொ.சி, மறைமலையடிகளுக்கு மட்டுமல்ல, சமகாலத்தில் வாழும் தமிழறிஞர்கள் பலருக்கும் பொருந்தும்.

உதாரணத்திற்கு சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூறுகிறேன்.  எச்.ராஜாவின் தந்தை எழுதிய நூல் வெளியீட்டு விழா நடக்கிறது.  அந்த மேடையில் தமிழுக்கு மட்டுமல்லாது மனித உரிமைக்கே கூட அநீதிகள் இழைக்கப்படுகின்றது.  விஜயேந்திரனுக்கு தனி மேடை.  அதாவது இரட்டைக்குவளை முறையைப் போல இரட்டை மேடை.  இதைப் பார்த்தும் எந்த வித சூடும், சொரணையும் இல்லாமல் தமிழறிஞர் சாலமன் பாப்பையா உட்கார்ந்திருக்கிறார்.  தேசியகீதத்திற்கு எழுந்து நின்ற விஜயேந்திரன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழவில்லை.  அதுவும் சாலமன் பாப்பையாவின் சொரணையைச் சுரண்டவில்லை.  பின்னர் விஜயேந்திரன் சொல்கிறார், “சமஸ்கிருதமும், தமிழும் நடராஜனின் உடுக்கையில் இருந்து பிறந்தவை,” என்று.  இந்தப் புரட்டும் சாலமன் பாப்பையாவின் மான அறிவை உசுப்பவில்லை.  மாறாக அதை வழிமொழிந்து பேசிவிட்டு வருகிறார்!!  பல தமிழறிஞர்களுக்கு தமிழ்ப்பற்றோடு சேர்த்து கூடவே வரும் இத்தகைய  ‘தன்மைகளை,’ பெரியார் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளின் தமிழ்த் தொண்டை யாரும் மறுக்க முடியாது.  ஆனால் 1928ல் சுயமரியாதை இயக்கத்தினர் தாழ்த்தப்பட்டோருக்காக நடத்திய கோவில் உள்நுழைவு போராட்டத்தை கண்டித்து ஒரு மேடையில், “தாழ்த்தப்பட்ட வகுப்பார் கோயில்களுக்குப் போக இடம் பெறுகின்றார் இல்லை.  இதற்குக் காரணம் அவ்வகுப்பாரில் துப்புரவான நடை, உடை, ஒழுக்கங்கள் இல்லாமையும், புலால் உண்ணும் வழக்கமும்தான் காரணம்.  அவர்கள் உயர்ந்த வகுப்பார்களான பார்ப்பனர், வேளாளர் ஆகியோரின் பழக்கவழக்கங்களை மேற்கொண்டு தங்களை மாற்றிக்கொண்டால் யாரும் அவர்களை தடுக்க மாட்டார்கள்,” எனப் பேசியிருக்கிறார்.   இதற்குப் பெரியார், “நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பவன். புலால் உண்பவன்.  ஆனால் தன்னை யாரும் கோவிலுக்குள் வராதே எனத் தடுப்பதில்லையே, ஏன் தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் தடுக்கிறார்கள்?” என எதிர்கேள்வி கேட்டிருக்கிறார்.  தூய்மையின் அடிப்படையிலா கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவதை தடுக்கிறார்கள்?  எவ்வளவு பெரிய பொய் இது?  தமிழ்ப்பற்றும், சைவ வேளாள, சைவ சமயப்பற்றும் ஒருங்கே கொண்டே மறைமலையடிகளின் பெரியார் வெறுப்பு எந்த அளவுக்குப் போகிறதென்றால், “வைணவக் குறும்பு” என பெரியாரைத் தாக்கி ஒரு சிறிய நூல் எழுதும் அளவிற்கு!  அதாவது பெரியார் நாயக்கர் சாதியைச் சேர்ந்தவராதலால் மறைமலையடிகளுக்கு இப்படி ஒரு எண்ணம் வருகிறது! அந்த நூலின் அபத்தத்தாலோ என்னவோ யாரும் அதை அப்போது பதிப்பிக்க முன்வரவில்லை.  ஆனால் நகைச்சுவை என்னவென்றால் சைவ சமய நூலான பெரியபுராணத்தை தாக்கிப்பேசிய பெரியார், வைணவ சமய நூலான கம்பராமாயணத்தை கொளுத்தவே சொன்னார் என்பதுதான்!!  (இதுபோன்ற பல சுவையான வரலாற்றுச் சம்பவங்களை தன் “பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம் நூலில் அந்தந்த கால நூல்களின், பத்திரிக்கைகளின், அறிக்கைகளின் ஆதாரங்களோடு அய்யா சுபவீ எழுதியிருக்கிறார்.) 

மேலே சொன்ன வரலாற்று சம்பவத்தில் நாம் ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்.  பெரியாரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்றால், அந்தக்காலத்தில் இருந்தே எதிர்தாக்குதல் நடத்துகின்றவர்கள் கையிலெடுப்பது பெரியாரின் பிறப்பு அடையாளங்களைத்தான்.  அதாவது சைவ சமயத்தைச் சேர்ந்தவருக்கு பெரியார் சொல்வது வலிக்கிறதென்றால், உடனே பெரியார் நாயக்கர் என்பதால்தான் சைவமதத்தை திட்டுகிறார் என்பதும், தமிழிலக்கியங்களில் உள்ள பெண்ணடிமைத்தனத்தையும், மூடக்கருத்துக்களையும் பெரியார் சாடினால் உடனே அவரை கன்னடர் என்பதால்தான் தமிழைத் திட்டுகிறார் என்பதும் இன்று நேற்றல்ல, 1920களில் இருந்தே நடந்து வருகிறது. 

இன்று திராவிடக் கருத்தியலை தமிழ்தேசியத்திற்கு எதிராக நிறுத்தும் ஆட்கள் பயணிப்பதும் இதே வழியில்தான்.
பிறப்பினால் வரும் அடையாளங்கள், அந்த அடையாளங்களினால் ஒரு மனிதன் அனுபவிக்கும் சுகங்கள், முன்னுரிமைகள், பெருமை என எல்லாவற்றையும் அடித்து நொறுக்குவதுதான் பெரியாரின் இயல்பு.

தமிழ் இலக்கியம் ஆயிரம் காலத்தொன்மையானது என்றால் பெரியார் அதைக் கொண்டாட மாட்டார்.  ஆனால் அதில் மனித வாழ்வுக்கு தேவையான, மனிதனை முன்னேற்றுவதற்காக விஷயங்கள் இருக்கிறது என்றால் கொண்டாடுவார்.  தமிழிலக்கியங்களில் நிறைந்து கிடக்கும் பெண்ணடிமைத்தனத்தையும், மூடத்தனங்களையும் புறந்தள்ளிய அதே பெரியார்தான் நாடெங்கும் திருக்குறள் மாநாடுகளை நடத்தினார்.  அதைக் கூட பெண்ணடிமைத்தனம் பேசும் குறள்களின் மீது விமர்சனத்தோடுதான் செய்தாரேயொழிய 1330குறள்களை அப்படியே ஏற்றுக் கொண்டாடவில்லை.  அண்ணா நாடாளுமன்றத்தில் முழங்கினாரே, “நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்,” என்று.  பெரியார் ஒருகாலமும் அதை ஏற்க மாட்டார்.  அதனால்தான் திமுக கண்ணகிக்கு சிலைவைத்தபோது முதல் ஆளாக அதை எதிர்த்தார் பெரியார்.  அண்ணாவோ அது பெண்ணடிமைத்தனத்தை பறைசாற்றுவதாக ஆகாது, தமிழின் பெருமையை பறைசாற்றுவதற்காகத்தான் என பதில் அளித்தார்.  இந்த வேறுபாட்டை உணர்ந்தால்தான் பெரியாரின் அரசியலை, சமூகவியலை புரிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு வகையில் மக்களை பெருமிதம் கொள்ளவைக்க வேண்டிய தேவை இருக்கிறது.  அந்த பெருமிதத்தின்பால் தூண்டப்படும் உணர்ச்சியை வாக்காக மாற்றும் தேவை அவர்களுக்கு இருக்கிறது.  அது மொழிப்பெருமையோ, மதப் பெருமையோ, சாதிப்பெருமையோ, முப்பாட்டன் பெருமையோ!  பெரியாருக்கு அது தேவைப்படவில்லை.  கறுப்பை கறுப்பு என அழைத்தார்.  வெள்ளையை வெள்ளை என்றார்.  முகத்தில் அறைவதைப் போல உண்மைகளைச் சொன்னார். 

.பெரியாரின் பொதுவாழ்வு பரந்துவிரிந்தது.  தனித் திராவிடநாடு கோரிக்கையை முன்வைத்த பெரியார் பின்னாட்களில் அவசியமறிந்து அதை தனித்தமிழ்நாடு கோரிக்கையாக்கிக் கொள்கிறார்.  நேரு அரசு தட்சிணாப்பிரதேசம் எனும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பெருமாநில திட்டத்தை முன்வைக்கும்போது அதை ஏற்றுக் கொள்ளவேண்டாம் என்றும், அதனால் தமிழர்களின் உரிமை ஏனைய திராவிட மாநில மக்களால் பறிபோகும் என்றும் அன்றைய முதல்வர் காமராசரிடம் தெரிவித்தவரும் பெரியார்தான்.  பார்ப்பனர்கள் ஆங்கிலத்தைப் படித்து நீதிபதிகளாகவும், மருத்துவர்களாகவும் உயர் பதவிகளில் அமர்ந்தபோது இங்கே தமிழறிஞர்கள் தமிழை மட்டும் அதன் பழமைவாதங்களோடு சேர்த்து தூக்கிவைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்த சூழலில் தமிழர்கள் ஆங்கிலம் படிக்கவேண்டியது அத்தியாவசியம் என்கிறார். பின்னர் 1970களில் கலைஞர் தமிழ்வழிக்கல்வி தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவரும்போது, அதை காமராசர் உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள் கடுமையாக எதிர்த்து கலவரம் செய்த சூழலில், தமிழ்வழிக்கல்வியை ஆதரித்து அறிக்கையளிக்கிறார்.  அதே அறிக்கையில் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என்பதை முதல்வர் உறுதி செய்யவேண்டும் என்று தன் அக்கறையை வெளிப்படுத்துகிறார். 

இன்று தமிழ்தேசியம் பேசுகிறேன், தமிழர் பெருமை மீட்கிறேன் என்கிற பெயரில் மாயோன், பேயோன், காவடி, ராஜராஜசோழன் எனக் கிளம்பியிருக்கும் ஆட்களுக்கு பெரியார் எதிரியாகத் தெரிவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.  ஏனெனில் மாயோன், பேயோனுடன் சேர்த்து இந்தியையும் ஓட ஓட விரட்டியவர் பெரியார்.  ராஜராஜசோழன் என புகழ்பாடினால் அவருக்கு ராஜராஜசோழன் உருவாக்கிய கோவில் தெரியாது.  அவன் கட்டிவைத்த சாதிக்கொரு சேரிகள்தான் தெரியும்.  தஞ்சை பெரியகோவிலில் தாண்டவமாடிய தேவதாசி முறைதான் அவருக்கு முதலில் தெரியும்.  இந்த முரண்களைப் புரிந்துகொண்டால் பெரியார் முன்வைத்த தனித்தமிழ்நாடு என்பது, அதாவது தமிழ்தேசியம் என்பது எத்தகையது என்பதும், அதன் அடிப்படைகளாக இருப்பவை சமூகநீதி, பாலினப் பாகுபாடு அற்ற சமூகம், ஆதிக்கமற்ற சமூகம், மனித உரிமை போன்றவையே தவிர தமிழ்ச்சமூக மேம்பாட்டிற்கு எந்தவகையிலும் உதவாத பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டு திரிவதல்ல என்பதும் புரியும்.

ஆக, பெரியாரை தமிழ்தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பதென்பது, மார்க்ஸை கம்யூனிசத்தின் எதிரியாக சித்தரிக்கும் செயலுக்கு சற்றும் சளைக்காத முட்டாள்த்தனம்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு புலம்பெயர் தமிழர் அவர் அவர் நண்பர்களுடன் அவர் உரையாடிக் கொண்டிருந்ததை பார்க்க வேண்டியிருந்தது.  அவரது முகநூல் பக்கத்தில் அவர் தமிழ்தேசிய அரசியலில் பற்றுகொண்டவர் என்பதும் தெரிந்தது.  பிரபாவின் படங்களுக்கும் குறைவில்லை.  கோவில்களுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவது குறித்து அந்த விவாதம் நடந்துகொண்டிருந்தது.  அதில் அந்த நண்பர் சொல்கிறார், “குளிக்காமல் நீ உள்ள வந்தீனா எவன் உன்ன வுடுவான்?” என்று.  இது தமிழகத்தைச் சேர்ந்த மறைமலையடிகளின் வார்த்தை என்பதை மேலே பார்த்தோம்.  ஆனால் அந்த புலம்பெயர்த்தமிழர் இதைக் கடன் வாங்கியதோ ஈழத்தைச் சேர்ந்த சைவ சமய பரப்புரையாளரான, மறைமலையடிகளைப் போலவே தமிழின் மேல் அமோகப் பற்றுகொண்ட ஆறுமுக நாவலரிடம் இருந்து!!!

ஒன்றைக் கவனியுங்கள்.  1920களின் இறுதியில் மறைமலையடிகள் சொன்ன வார்த்தையை இப்போது தமிழகத்தில் யார் சொன்னாலும் எல்லாரும் சிரிப்பார்கள்.  ஆதிக்க சாதியினர் கூட இதுபோன்ற கேலிக்கூத்தான காரணங்களைச் சொல்ல தமிழகத்தில் கூச்சப்படுவார்கள்.  ஆனால் 2018ல், அதாவது 90ஆண்டுகளுக்குப் பின்னும் ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு புலம்பெயர் தமிழருக்குள் இன்னமும் மறைமலையடிகளின், ஆறுமுக நாவலரின் வார்த்தைகள் குடிகொண்டிருக்கிறதென்றால், தமிழ்தேசியக்கனவில் பெரியாரின் இல்லாமை என்ன செய்யும் என்பதற்கு இதைவிட என்ன சான்று தேவை?  

இன்று தமிழ்தேசியம் பேசும் பலர் தெரிந்தோ, தெரியாமலோ பெரியாரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ம.பொ.சி, மறைமலையடிகள், பிரபாவின் படத்தை மட்டுமே வைத்து நிரப்பிவிடலாம் என நினைக்கிறார்கள்.  ஆனால் மக்களே, பிரபாகரன் சாதியற்ற, ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க கனவு கண்டதாக அவர் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.  அதற்கும் அங்கே பெரியார்தான் முதன்மையாகத் தேவைப்பட்டிருப்பார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

பெரியார் கண்ட தமிழ்தேசியம் என்பது முப்பாட்டன் முருகனுக்கு காவடி தூக்கும் தமிழ்தேசியமோ,  “நாங்கள் 10000 வருடத்திற்கு முன்பே வேத காலத்தில் விமானம் விட்டோம்,” என ஆரியர்கள் பெருமை பீற்றுவார்களே, அதுபோல, ”என் பாட்டன் அதைச் செய்தான்… இதைச் செய்தான்,” என கற்பனையில் பேசித்திரியும் பழமைவாத தேசியமோ அல்ல.  அது சமூகநீதியும், சுயமரியாதையும், பாலின உரிமையும், மனித உரிமையும் நிறைந்த, எத்தகைய ஆதிக்கமுமற்ற தமிழ்தேசியம்.

- அசோக்.R (டான் அசோக்)
   idonashok@gmail.com

https://m.facebook.com/story.php?story_fbid=1659005594207399&id=815716175203016

No comments:

Post a Comment