Friday, April 27, 2018

அவற்றிற்கு இடையூறு இல்லாமல் விலகி நிற்பதே.

Lafees Shaheed
2018-04-27

எம்மை விட பிரிதான இன்னொரு கலாச்சாரத்திற்கு நாம் செய்யக் கூடிய குறைந்த பட்ச மரியாதை எமக்கு உவப்பில்லாத விடயங்களில் கருத்துச் சொல்லாமல், அவற்றிற்கு இடையூறு இல்லாமல் விலகி நிற்பதே.

என்னைப் பொறுத்தவரையில் முஸ்லிம் பெண்கள் தமதுடலின் குறிப்பிட்ட சில பாகங்களை மறைத்து ஆடை அணிவது ஷரீஆ வலியுறுத்தும் ஒரு கலாச்சாரம். அதற்கான சமூக, கலாசார காரணிகளை நாம் ஆராய முற்படலாம். ஆனால் அதற்காக வேண்டி உடலை திறந்து ஆடை அணிந்து செல்லும் பிற சமூக, மதப் பெண்களை நான் ஒழுக்க, நெறி கேடானவர்கள் என்று கருத மாட்டேன். எமது சொந்த பண்பாடு /கலாச்சாரம் அல்லாத பிற கலாச்சாரங்களை எம்மால் நூறு சதவீதம் புரிந்து கொள்ள முடியாது எனும் புரிதலில் தான் மானுட குலத்தின் மீதான அன்பும், சமூகங்களுக்கு இடையிலான சக வாழ்வும் துளிர்க்க முடியும். ஒரு கலாச்சாரத்தின் தர்க்கங்கள், மனோபாவத்தின் அடிப்படையில் பிரிதொரு கலாச்சாரத்தை அளக்க முடியாது / கூடாது. அப்படி அளக்க நினைப்போம் எனில் எமது பண்பாட்டு அசைவுகளுக்கு இசைந்து போகாத, இணைந்து நிற்காத பிற கலாச்சாரங்களின் மாந்தர்களை நாம் கலாச்சார அழிப்பாளர்கள் என்று கருத ஆரம்பித்து விடுவோம். ஹிட்லர் தன்னுடைய மெய்ன் காம்ப் எனும் நூலில் யூதர்களை கலாச்சார அழிப்பாளர்கள் என்று தான் அடையாளப்படுத்தினார். இதுதான் யூதப் படுகொலைகளில் சென்று முடிவடைந்தது என்பதை வரலாறு எமக்கு கூறும். பாசிசத்தின் தோற்றுவாய் இதுதான்.

இஸ்லாத்தின் உள்ளேயே இறைதூதர்களின் ஷரீஆக்களுக்கு இடையிலான வரலாற்று வளர்ச்சி மற்றும் வேறுபாடுகள் குறித்து கவனம் ஈர்க்கும் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) இதே தர்க்கத்தின் அடிப்படையில் இஸ்லாம் அல்லாத பிற கலாச்சாரங்கள், நம்பிக்கைகளை உடன்பாடான அணுகல் முறையுடன் கையாள வேண்டிய அவசியம் குறித்து பேசுவார். இப்ராஹிம், மூஸா, ஈஸா மஸீஹ் போன்ற இறைதூதர்களின் ஷரீஆ நெறிமுறைகளில் பொதிந்திருந்த அநேக அம்சங்களில் இருந்து முஹம்மத் (ஸல்) அவர்களின் ஷரீஆ வேறுபட்டு இருப்பது கண்கூடு. ஆயினும் நாம் முந்தைய இறைதூதர்களையோ அவர் தம் நெறிமுறைகளையோ அசூசையாக பார்த்திட முடியுமா? வெறுத்திட முடியுமா?

பிற நம்பிக்கைகள், பண்பாடுகளின் நியாயத்தை ஏற்றுக் கொள்வது தான் உயர்ந்த மானிட நெறிமுறை. 'உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு எனது மார்க்கம்' என்று அல் குர்ஆன் இந்த மனோபாவத்தினையே கட்ட முயல்கிறது. நபிகளார் மதீனா சமூகத்தில் பிற சமூக, சமய நம்பிக்கைகளின் இருப்புக்கு இடமளித்து இந்த அல் குர்ஆனிய கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

ஆம், விசுவாசிகளின் அன்னை ஆயிஷா (றழி) கூறுவது போல நபிகளாரின் பண்பாடு அல் குர்ஆனாகவே இருந்தது....!

#இங்கிருந்து அறிவோம்

#பாதையை_செப்பனிடல்

https://m.facebook.com/story.php?story_fbid=966667930178636&id=100005063134008

No comments:

Post a Comment