Karl marx ganapathy
Via Facebook
2018-04-22
இன்றைய அரசியல் குறித்து ஒற்றை வார்த்தையில் யாராவது என்னை வரையறுக்கச் சொன்னால் அதை நான் “பீதியூட்டும் அரசியல்” என்றே வகைப்படுத்துவேன். கடந்த இருபது ஆண்டுகளில் அரசியல், அரசு, கண்காணிப்பு, பொதுமக்கள் பங்கேற்பு ஆகிய கருதுகோள்களில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றம் என்பது இந்த “பீதியூட்டும்” பண்பை மையமாகக் கொண்டிருக்கிறது என்று நான் அவதானிக்கிறேன். இதன் வலுவான தொடக்கம் மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐந்தாண்டுகளில் செறிவடைந்தது.
வலதுசாரிகள், கார்ப்பரேட், மீடியா ஆகியோர் முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக அமைத்த கூட்டணி, சமூக ஊடகங்களின் வழியாக பெரும் மக்கள் பரப்பை எட்டியது அவ்வாறுதான். இன்று அதன் ரத்த வெறி உச்சத்தில் இருக்கிறது. ஒவ்வொரு செய்தியின் வழியாகவும் பீதியூட்டுவது; ஒரு செய்தியின் வண்ணமும் வசீகரமும் அதனால் ஏற்படும் அதிர்ச்சியின் அளவைப் பொறுத்ததாக உருவெடுத்து நிற்பது என்பதாக செய்தி வழங்குதலின் அடிப்படைகள் மாறியிருக்கின்றன. டிஸ்கவரி சேனலில் கூட ஒரு மான் மேய்வதன் அழகு அதன் மீது எந்நேரமும் ஒரு புலி வந்து பாயும் வாய்ப்பில்தான் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அபத்தம் நமது வாழ்வின் ஒவ்வொன்றிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. அது குறித்த பிரஞ்ஞை நம்மிடம் இல்லை. நாம் நமது ஆன்மாவின் சொரனையின்மையை நோக்கி வெகு வேகமாக நடந்துகொண்டிருக்கிறோம். நமது குழந்தைகளைக் கூட அந்த வழியில் நடத்துகிறோம். செயற்கை சுவையூட்டிகளுக்காக உணர்வு மொட்டுகளை இழப்பதைப்போல.
செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களின் வழியாக இன்றைய சமூக எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒருவர் மனநோயாளி ஆவதற்கே சாத்தியம் அதிகம். ஆரம்பகால கட்டத்தில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இந்த பீதியூட்டும் அரசியல், அதன் இயல்பில் இன்று பொதுமக்களைக் கூட அதன் பங்கேற்பாளராக மாற்றியிருக்கிறது.
ஒரு கொலை அல்லது ஒரு பாலியல் வல்லுறவுச் செய்தி என்பது அன்றைய நாளின் சமூகக் கொதிநிலைக்கு போதுமானதாக இருக்கிறது. நடந்துவிட்ட கொடூரத்துக்கு நாமும் கருத்து சொல்லாவிட்டால், “அந்தக் கொடுமையைச் செய்தவருடன் அந்தரங்கமாகத் தானும் பிணைக்கப்பட்டுவிடுவோம், தாமும் அதற்கு பொறுப்பாக்கப்படுவோம்” என்று தனிமனிதர்களின் தன்னிலை பதட்டமடையும் அளவுக்கு இருக்கிறது நிலைமை.
இது ஏன் நிகழ்கிறது?
சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு தவறும் வேக வேகமாக ஒரு அரசியல் தரப்புடன் பிணைக்கப்படுகிறது. அதனால் அந்த அரசியல் சார்புடன் இருப்பவர்களை அதற்கு அரூபமாக பொறுப்பாக்குகிறது. இந்த உருவமற்ற அழுத்தம் அரசியல் சார்புடைய தனிமனிதர்கள் பொதுவெளியில் செயல்படும் விதத்தில் பிளவை உருவாக்கி வைத்திருக்கிறது. ஒன்று அதீதமாகக் கொந்தளிப்பது அல்லது வக்கிரமாக முட்டுக்கொடுப்பதாக அதன் தன்மைகள் மாறுகின்றன.
மோடியை முட்டாளாக சித்தரிக்கும் ஒரு திமுக அனுதாபி கருணாநிதியை ஊழலே செய்யாத செய்யாத நேர்மையாளராக முன்வைக்க விரும்புகிறார். இந்த நாட்டில் நடந்த எல்லாவற்றிற்கும் காங்கிரஸ்தான் காரணம் என்று கைகாட்டும் காவி ஆதரவாளர் நடந்துவிட்ட காஷ்மீர் வன்கொலைக்கு வித்திட்ட பொத்தான் எது என்ற கேள்வி வருகிறபோது தனது கால்களுக்கிடையில் தலையைப் புதைத்துக்கொள்கிறார். இந்த பதட்டத்தின் பின்னுள்ளது நமது சாய்வுகள் குறித்த தெளிவின்மையே.
உதாரணத்துக்கு, ஜெயலலிதாவை முழுவதும் வெறுக்கும் ஒருவன்தான் கருணாநிதியை சிலாகிக்க முடியுமா என்ன? இங்கு சர்வாதிகாரமே அரசியல் புரிதல் என்று பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் அடிப்படையே, சரி மற்றும் தவறுகளின் எதார்த்தத்தோடு உரையாடலைத் தக்கவைத்துக்கொள்ளும் பண்பில்தான் இருக்கிறது. இன்று இத்தகைய விழுமியங்கள், சோரம் போவதாக அடையாளம் காணப்பட்டு வெறுப்பு வளர்க்கப்படுகிறது. இங்கு கிளம்பும் வெறிக்கூச்சலுக்குப் பின்னால் இருப்பது இந்த தெளிவின்மையின் மூர்க்கமே. இதற்கு எல்லா தரப்புமே பொறுப்பேற்க வேண்டும். கலக்கும் நஞ்சில் எல்லோரது பங்கும் இருக்கிறது. சமூக ஊடகங்களில் பங்காற்றும் தனிமனிதர்களும் இந்த திசையில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும்.
நிர்பயா வன்கொலை நடந்த போது, இந்தியா முழுக்க இருக்கும் பெண்கள் அனைவருமே வன்கொலைக்கு இலக்காகி இருப்பதைப் போன்ற பிம்பத்தை மீடியாக்கள் கட்டமைத்தன. வாய் திறவா மவுனியான மன்மோகனே மீடியாவின் முன் வந்து விளக்கம் தரவேண்டிய அழுத்தத்தை அவை ஏற்படுத்தின. பிரஸ் மீட் முடிந்தவுடன் “என்னுடைய பதில்கள் எப்படி இருந்தன...” என்று அருகிலிருந்த உதவியாளரிடம் அவர் கேட்டது கூட பதிவு செய்யப்பட்டு அது விவாதமாக்கப்பட்டது. (அது குறித்த எனது அப்போதைய பொங்கல் பதிவு ஒன்றும் எனது டைம்லைனில் இருக்கிறது). அன்று காவிகள் மற்றும் காவி ஆதரவு ஊடகங்கள் பெருத்த எக்காளத்துடன் அதில் கலந்துகொண்டு “இந்தியா வாழ்வதற்குத் தகுதியற்ற நாடாக மாறிக்கொண்டிருக்கிறது என்று ஒப்பாரி வைத்தார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றால் நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று முத்தாய்ப்பாக சொல்லி வைத்தார் வாழும் காந்தி மோடிபிரான்.
இன்று என்ன நிலைமை? பலாத்காரம் என்றால் பலாத்காரம் தான். அது மனித விரோதமானது. அதை அரசியலாக்காதீர்கள் என்று கண்கள் கசங்க லண்டன் வாழ் இந்தியர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார் மோடி. இன்று அதே பீதியூட்டும் அரசியலை காங்கிரசும், முற்போக்கு முகாமும் காவிகளை விட வேகமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ராகுல் தனது தங்கையுடன் இந்தியா கேட்டில் சென்று போராடுகிறார். “உங்களது ஆட்சியில் நடந்த வன்கலவிகள் எத்தனை பாருங்கள்...” என்று காவி ஆதரவு அறிவுஜீவிகள் நடந்த சம்பவங்களைப் பட்டியலிடுகிறார்கள். அந்தப் பட்டியலுக்கு எதிராக “உங்களுக்குக் கொஞ்சமும் இரக்கமில்லையா...” என்று காவி எதிர்ப்பு நடுநிலைகளின் ஊளைச்சத்தம் காதைத் துளைக்கிறது.
காஷ்மீரில் எந்த அடையாளமும் இல்லாமல் ரகசியமாகக் கொன்று புதைக்கப்பட்ட இளைஞர்களால் சுடுகாடுகள் நிரம்பி வழிந்தது இத்தனை ஆண்டுகால காங்கிரஸ் அரசில்தான் என்பதை, மோடியை முன்னிட்டு நாம் மறந்துவிட வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் தம்மை நடுநிலையானவர்கள் என்று அறிவித்துக்கொள்பவர்கள் ஏன் காங்கிரசுக்கு முழு விடுதலையை வழங்கிவிட்டு எல்லா வன்முறைகளையும் மோடியின் கணக்கிலேயே வரவு வைக்க விரும்புகிறார்கள்? இன்று மோடி அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறார் என்பதே காங்கிரசை விடுவிக்கப் போதுமானதா? அது குறித்த வெளிப்படையான விவாதங்கள்தானே இங்கு தேவை.
ஆனால் நடப்பதோ ஒரு நிழலின் பின்னால் இன்னொரு பிசாசை மறைக்கும் யுக்தி. அதனால்தான் அது அரசியல் தளத்தில் ஒரு அடிப்படைவாதத்தை இன்னொரு அடிப்படைவாதத்தைக் கொண்டு முறியடிக்க முயலும் செயலாகத் திகைகிறது. வெகுமக்கள் தளத்தில், ஹெச். ராஜா, எஸ். வீ சேகர் போன்ற கருத்தியல் உள்ளீடற்ற கோமாளிகளைக் கூட அச்சமூட்டும் ஆகிருதிகளாக உருவகித்து பீதியடைவதாக அது அடுத்த கட்டத்துக்கு நகருகிறது.
எத்தகைய பீதியூட்டலின் வழியாகத் தாங்கள் துரத்தப்பட்டார்களோ அந்த ஆயுதத்தின் வழியாகவே தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்று காங்கிரஸ் நினைப்பதைக் கூட புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அதீத பீதியூட்டலுக்குப் பின்னால் அவர்களின் செயல்திட்டம் இருக்கிறது. வரலாற்றில் மோடியின் பிளவு அரசியல் மட்டுமே காங்கிரசுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்பது நகைமுரண் அல்ல. இந்திய அரசியலின் மிக மோசமான மறைக்கப்பட்ட ஒரு பகுதி அது.
ஆனால் பதட்டத்தில் இருக்கும் மக்களிடம் “நீங்கள் நினைப்பது போல நிலைமை ஒன்றும் மோசம் அல்ல...” என்று சொல்வதற்கு இங்கு யாருமே இல்லை என்பதுதான் அபத்தம். இப்படிச் சொல்ல விரும்பும் ஒருவன், வரும் ஆபத்தை குறைத்து மதிப்பிடும் ஒருவனாக, வலது சாரித் தன்மைக்கு சோரம் போனவனாகத் தூற்றப்படும் சூழல் இங்கு உருவாக்கப்படுகிறது. இது எல்லா வகையிலும் அமைதிக்கு எதிரானது என்றே நான் கருதுகிறேன்.
எத்தகைய அரசியல் சார்பும் உரையாடலுக்கான வெளியை மிச்சம் வைப்பதாக இருக்க வேண்டும். அது இந்துத்துவத் தரப்பென்றாலும் சரி. இஸ்லாமியத் தரப்பென்றாலும் சரி. ஆனால் இன்றைய நிலைமை, நடக்கும் துயரத்தை எதன் மீது கணக்கெழுதுவது யாரைப் பொறுப்பாக்குவது என்பதிலேயே கவனம் குவிக்கிறது. அதன் வழியாக ஒன்று இன்னொன்றை மற்றமையாக உருவகித்து நிறுத்துகிறது. அரசியல் புரிதல் என்பது நமது சாய்வுகளில் காலூன்றி நிற்பது மட்டும் அல்ல மற்றமைகளின் சாய்வுகளையும் புரிந்துகொள்வதே. இது எல்லா தரப்பிற்கும் பொருந்தும்!
https://m.facebook.com/story.php?story_fbid=1929360103764170&id=100000705985759
No comments:
Post a Comment