Tuesday, April 17, 2018

எல்லா வன்புணர்வுகளையும் அதிகாரமும் ஆதிக்கமும் மட்டும்தான் முடிவு செய்கிறது

Rajasangeethan John
Via Facebook
2018-04-17

பெண்கள் தினத்தை ஒட்டி Pink படத்தை பற்றி பேசும் திரைக்களம் சந்திப்பு ஒன்றை கடந்த மாதத்தில் வாசகசாலையில் இருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அந்த நிகழ்வில் பேசுகையில் படத்தை சிலாகித்துவிட்டு நான் சொன்னது இதுதான்,

"பெண் உடல் மீதான ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது அதிகாரம்தான். வெறும் ஆண்-பெண் சண்டையாக மட்டும் இந்த பிரச்சினையை சுருக்குவது கயமை. அல்லது அறியாமை!

வடநாட்டில் ஓர் உயர்நீதிமன்றம் கூட்டு வன்புணர்வை பற்றிய விசாரிக்கும்போது அந்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் என்ன கேட்டார் என தெரியுமா? வன்புணரப்பட்ட போது அந்த பெண் கால்களை திறந்து படுத்திருந்தாளா என. அப்படி படுத்திருந்தால், அவள் அந்த வன்புணர்வுக்கு சம்மதித்தாள் என அர்த்தமாம்.

எல்லா பாலியல் பிரச்சினைகளுக்கும் தனி ஆணை குறை சொல்லி பேசுவதே ஒரு மிகப்பெரிய திரிபு அரசியலின் வெளிப்பாடுதான்.

பிங்க் படத்தில் மேகாலயா என்னும் வடகிழக்கு மாநிலத்தில் இருந்து வந்த பெண் ஒருத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என எதிர்தரப்பு வழக்கறிஞர் அந்த பெண் சார்ந்த மாநில பெயரை முன்னிலைப்படுத்த முயன்று கொண்டே இருப்பார். ஏனெனில் அந்த மாநிலத்தில் இந்திய ராணுவமே பெண்களை வன்புணர்ந்து கொண்டிருக்கிறது.

அதிகாரத்தில் இருக்கும் ஆண் மைய சிந்தனையை அகற்றாமல் சமூகத்தில் இருக்கும் ஆண் மைய சிந்தனையை நீங்கள் அகற்றவே முடியாது. அதிகாரம் பெண்ணை பற்றி என்ன சிந்தனை கொண்டிருக்கிறதோ அதுதான் சமூகத்தின் பொதுபுத்தியாகவும் மாறும். Whatever the power favors is what becomes the sense of public!"

Asifa-வில் தொடங்கி பன்வாரிலால் புரோகித் வரை இதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லாவகை ஒடுக்குமுறைகளும் பெண்ணை ஒடுக்குவதில் இருந்துதான் மிக தொடங்குகிறது. எல்லாரையும் ஒடுக்கும் அதிகாரம் அதனால்தான் பெண்ணை வன்புணர்வதை ஒரு பெரும் பிரச்சினையாக பார்ப்பதில்லை. அதுவே கவர்னர் பதவியில் அமர்ந்துகொண்டு தனக்காக பெண்களை அனுப்பி வைக்க ஒரு பெண் பேராசிரியையை வேலை பார்க்கவும் சொல்லும். ஒரு சிறுமலர் வன்புணரப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் வன்புணர்ந்தவர்களுக்கு ஆதரவாக பெண்களை பேரணி நடத்தவும் செய்யும்.

பேராசிரியை ஆணா, பெண்ணா? Asifaவை கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி சென்றவர்கள் எல்லாம் ஆண்கள் மட்டுமா? பெண்ணுக்குள் இருக்கும் ஆணின் ஆதிக்க சிந்தனையை என்ன செய்ய போகிறீர்கள்?

ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் தகப்பனை, அண்ணனை, மாமனை என எல்லா ஆண்களையும் அவர்களின் தகுதியை தாண்டி மதிக்க சொல்லி கட்டாயப்படுத்தும் தாய் ஆணா, பெண்ணா?

தற்போதைய நிலவரப்படி இந்திய ஆண்கள் எல்லாரையும் செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பி விட்டாலும் இந்தியாவில் ஆணாதிக்கம் இருக்கும். ஏனெனில் அதிகாரம் இங்கு ஆண் மைய சிந்தனைக்கான அதிகாரம். இங்கு உள்ள மதம், குடும்பம் என எல்லா அதிகார மையங்களுமே ஆண் சிந்தனையால் நிறுவப்பட்டவை. இங்குள்ள பல பெண்களுமே அதற்கு பழக்கப்பட்டவர்களே. இதை ஏதும் உணராமல், அதிகாரத்தை ஏதும் கேள்வி கேட்காமல், பொத்தாம்பொதுவாய் ஆணை மட்டும் கேள்வி கேட்க பெண்களை நிர்ப்பந்திக்கும் முதலாளித்துவ கார்ப்பரெட் சிந்தனையும் அங்குள்ள ஆண்களின் புத்தி சாதுர்யத்தில் உருவாக்கப்பட்ட ஆண்மைய சிந்தனையே!

வன்புணர்வை அரசியல் ஆயுதம் என்கிறான் வீரசாவர்க்கன். சமண பெண்களை வன்புணரும் சக்தியையும் வாய்ப்பையும் அருள சொல்லி கடவுளை வேண்டுகிறான் திருஞானசம்பந்தன். கன்னியாஸ்திரியை புணருகிறான் போப்பாண்டவன். மனிதவளத்துறை அமைச்சனுக்கு நடிகையை அனுப்புகிறான் சங்கரன். கவர்னனுக்கு மாணவியை அனுப்புகிறாள் பேராசிரியை.

ஈழத்தில் கொலைகளை விட வன்புணர்வுகள்தான் அதிகம். ஏனெனில் கொலைகள் இருக்கும் தலைமுறையை அழிக்கும். பெண்ணுறுப்பு சிதைப்பு, வன்புணர்வு ஆகியவை இனி வரும் தலைமுறைகளையே இல்லாமல் ஆக்கும். அதனால்தான் கோத்ரா ரயில் துறவிகளுக்கு பெண்ணுறுப்பின் மேல் அத்தனை ஈடுபாடு. குஜராத், பெங்கால் பிரிவினை என எத்தனை கலவரங்களை வேண்டுமானால் எடுத்து பாருங்கள். எல்லா படையெடுப்புகளையும் பாருங்கள். வன்புணர்வுகள்தான் அதிகம் நிகழும். ஏனெனில் power favors it.

எல்லா வன்புணர்வுகளையும் அதிகாரமும் ஆதிக்கமும் மட்டும்தான் முடிவு செய்கிறது.
.
Credits
https://m.facebook.com/story.php?story_fbid=1663801560391224&id=100002841874410

No comments:

Post a Comment