Thursday, April 19, 2018

பேரினவாதத்தின்  கோர முகம்....!

Lafees Shaheed
2018-04-19

பேரினவாதத்தின்  கோர முகம்....!

(காலச்சுவடு ஏப்ரல் - 2018 இதழில் வெளியான கட்டுரை)

இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியின் தலைநக‌ரும், உலகின் மிக முக்கியமான பெளத்த கேந்திரமுமான கண்டி நகரின் திகன, அக்குறணை போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் மீதான பெளத்த பேரினவாதிகளின் தாக்குதல்களில் இதுவரையில் ஒருவர் பலியாகி இருக்கிறார் ; முஸ்லிம் பொருளாதார மையங்கள், வீடுகள் மீதான தாக்குதல்களின் சேத மதிப்பு விபரங்கள் இன்னும் முறையாக கணக்கெடுக்கப்படவில்லை. ஏறத்தாழ முன்னூறு கோடிகளுக்கும் மேலான சொத்தழிப்புகள் இருக்கலாம் என்கிறது ஓர் உத்தியோக பூர்வமற்ற கணக்கீடு. இனவாத தாக்குதல்கள் முடிவுக்கு வந்து இருந்தாலும் இன்னும் பதட்டம் முழுமையாக விலகவில்லை. மீண்டும் இப்படியான தாக்குதல்கள் இடம் பெறலாம் எனும் அச்ச நிலையை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் களப்பணிகளில் ஈடுபட்ட பொழுது காண நேர்ந்தது. சமூக ஊடகங்கள் இதனை 'கலவரம்' என்று குறிப்பது நெறிகேடு. ஏனெனில் வெறியூட்டப்பட்ட இரண்டு சமூக குழுக்களின் மோதல் அல்ல இது. முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட இனவெறித் தாக்குதல். சில பகுதிகளில் தங்களைத் தாக்க வந்த சிங்கள கடும்போக்காளர்களை திருப்பி தாக்கியதை மட்டுமே முஸ்லிம்கள் செய்தார்கள். நெருக்கடி நிலையின் போதான தற்காப்பு உத்தி மட்டுமே அது. இவ்வளவு பாரிய அழிவுகளை ஏற்படுத்திய இனவாத தாக்குதல்களின் உடனடிக் காரணி - Triggering Point - என்ன?

பெப்ரவரி 28 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு சிறிய விபத்து ஒன்றின் மீதான சச்சரவொன்றின் பொழுது குடி போதையில் இருந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிங்கள இளைஞரை கடுமையாக தாக்கி விடுகின்றனர். ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அந்த சிங்கள இளைஞர் மார்ச் மாதம் மூன்றாம் திகதி மரணித்து விடுகிறார். இது இடம்பெற்ற இடம் கண்டியின் திகன பகுதி. இளைஞர் மரணித்த உடனேயே பெளத்த பேரினவாதிகளும், கடும் போக்கு சிங்களவர்களும் திகனையில் பெருமளவுக்கு குவியத் தொடங்குகின்றனர். இறந்த உடலை வைத்துக் கொண்டு வெறியூட்டும் பேச்சுக்கள் மூலமாக முஸ்லிம் துவேஷம் கக்கப்படுகிறது. இறந்த உடலை அடக்கம் செய்யப்பட்ட மார்ச் ஐந்தாம் திகதி திகனையில் பாரியளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்படுகின்றனர் ; கண்டியில் உள்ள முஸ்லிம் பகுதிகளிலும் பதட்டம் சூழ்கிறது. இறந்த உடலை அடக்கம் செய்து விட்டு திரும்பிய பேரணி முஸ்லிம் கடைகளை தீ வைத்துக் கொளுத்துகிறது. முஸ்லிம் வீடுகளை குறி வைத்து தாக்கி அழிக்கிறது. திகன பகுதியில் ஆரம்பித்த இனவாத தாக்குதல்கள் கண்டியின் ஏனைய பகுதிகளிலும் பரவ ஆரம்பிக்கிறது. மீண்டும் தீ வைப்புகள் ; முஸ்லிம் வீடுகள் மீதான தாக்குதல்கள் ; ஏராளமான சொத்தழிப்புகள். இலங்கை அரசு அவசர நிலை - Emergency - பிரகடனம் செய்கிறது. ஊரடங்கு சட்டங்கள், பாதுகாப்பு படையினரின் குவிப்பு போன்றவற்றின் மூலமாக இனவாத தாக்குதல்கள் முடிவுக்கு வந்து இருந்தாலும் கூட பதட்டம் இன்னும் முழுமையாக விலகவில்லை. இலங்கை முஸ்லிம்கள் எரிமலையின் மீது அமர்ந்து இருப்பது போன்ற அசெளகரியத்தை உணர்கிறார்கள். அவர்கள் இருப்புக்கு இன்று உத்தரவாதம் இல்லை.

ஆபத்து இன்னும் முற்றிலும் விலகாத நிலையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் களப்பணிகள் மூலமாக சில உண்மைகளை அறிந்து கொள்ள முடிந்தது. குறித்த சச்சரவின் பொழுது நிறைவெறியில் இருந்த முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்டு இறந்த சிங்கள இளைஞனின் மரணத்துக்காக வேண்டி பழிவாங்கும் நடவடிக்கையாக எழுந்த 'கலவரம்' அல்ல இது. குறைந்த பட்சம் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட சீற்றம் கொண்ட மக்களின் இலக்கற்ற தாக்குதல்கள் கூட அல்ல இது. கண்டி முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்கள் மிகவும் நுணுக்கமான முறையில் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை ; இலக்கு குறித்த தெளிந்த பிரக்ஞையுடன் மேற்கொள்ளப்பட்ட காடைத் தனம். எந்த வகையில் இந்த முடிவுக்கு எம்மால் வர முடிகிறது?

திகன பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் கட்டிடமும், வியாபாரமும் இரண்டுமே முஸ்லிம்களுக்கு சொந்தமானவை எரியூட்டப்பட்டிருக்கின்றன. கட்டிடம் சிங்களவர்களுக்கு சொந்தமானது, ஆனால் வியாபாரத்துக்கு உரித்தானவர் முஸ்லிம் எனும் பட்சத்தில் கட்டிடத்துக்கு சேதமேற்படாத வண்ணம் வியாபாரத்தை மட்டும் குறி வைத்து தாக்கப்பட்டிருக்கிறது.

திட்டமிடாமல் இவை சாத்தியமாகுமா?

கண்டி இனவாத தாக்குதல்களின் பொழுது பேரினவாதிகளின் இலக்கு முஸ்லிம்களின் பொருளாதாரம் மீது மட்டுமே. உயிர்கள் மீதான தாக்குதல்களை முற்றிலும் தவிர்க்கப்பட்ட நிலையில் மிகவும் நுட்பமான இனவெறியாட்டத்தை கடும் போக்கு வாதிகள் ஆடினார்கள். முஸ்லிம் இளைஞன் ஒருவன் உயிரிழந்தது கூட உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதல்ல. தவறுதலான உயிரிழப்பு அது. பழிவாங்கும் நோக்கத்துடன் தன்னிச்சையாக எழுந்த தாக்குதல்கள் எனில் நிச்சயமாக உயிரிழப்புகள் பாரியளவுக்கு இருந்திருக்கும்.

ஏனெனில் கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்பதே பழிவாங்கும் வெறியின் தர்க்கம். வெறி கொண்ட இருள் மனதின் தர்க்க சஞ்சாரம் இப்படி நுணுக்கமான முறையில் சிந்தித்து தாக்குதல்களில் இறங்காது. எனில் உடனடிக் காரணத்தை தாண்டிய இந்த இனவாத தாக்குதல்களின் பின்னணி என்ன?

கண்டி இனவாத தாக்குதல்களின் சேத விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் எளிய பரிசீலனையாக சில விடயங்களை ஓரளவு தூரம் அலசலாம். கடந்த நூறு வருடங்களாக இலங்கையில் செயல்பட்டு வரும் சிங்கள - பெளத்த பேரினவாதத்தின் கோர முகத்தின் இன்னொரு வெளிப்பாடு தான் கண்டி முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்.

எப்பொழுதுமே பிரிதான இன்னொரு சமூக, இன, மொழி அடையாளத்தை அல்லது மற்றமையை - Other - சிங்கள இனத்துக்கு நேரெதிராக நிறுத்தி தீவிர தேசியத்தை உருவாக்கும் பெளத்த பேரினவாதத்தின் உளவியலின் கொடுங்கரங்கள் இழைத்த அழிவின் வரலாறு மிக நீண்டது.

1883 இன் கிறிஸ்தவ எதிர்ப்பியக்கம் ; 1915 இன் (அவப்) புகழ்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் ; 1930 களில் மலையாளிகளை இலங்கையை விட்டு வெளியேற்றுதல் ; 1948 இல் மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பு ; 1956 இல் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் இன்னும் நீண்டு 1983 இல் தமிழர்கள் மீதான பாரிய இனவழிப்புக் கலவரமாக விடிந்தது. இந்த தொடர் கண்ணியின் ஓரங்கம் தான் கண்டி முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்கள்.

தன்மை மற்றும் அளவுகளில் வேறுபட்டு இருந்தாலும் சிங்கள - பெளத்த இனவாத உணர்வு நிலையின் பயணத்தை இந்த விதத்தில் தான் தன்னுடைய Ethnic and Class Conflicts எனும் நூலில் விளங்கப்படுத்துகிறார் குமாரி ஜயவர்த்தனா. இதில் 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் அரசே தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தது. இத்தகைய நிலையில் 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பிறகான சூழலில் முஸ்லிம்கள் பெளத்த இனவாதிகளின் மைய இலக்காக மாறி நிற்கிறார்கள்.

நூறு வருடத்தில் கிறிஸ்தவர்கள் - தமிழர்கள் - முஸ்லிம்கள் என்று பெளத்த பேரினவாதத்தின் இலக்குகள் வேறுபட்டு இருந்தாலும் மற்றமை மீதான வெறுப்பை கட்டமைத்து அதன் மீதான அரசியல், பொருளாதார நலன்கள் எனும் சாராம்சம் மட்டும் மாறவே இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வட்டத்தின் ஒரு சுற்றை முடித்து மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வருவது போல மீண்டும் பேரினவாதம் முஸ்லிம்களை இலக்கு வைத்து இயங்கத் தொடங்கி இருக்கிறது. இதன் தூலமான அடையாளம் தான் கண்டி முஸ்லிம்களின் பொருளாதார நிலைகள், வீடுகள், சொத்துகள் மீதான தாக்குதல்கள். பொதுவாக கிழக்கிலங்கைக்கு வெளியே முஸ்லிம்கள் நில ரீதியாக தொடர்பற்ற சிதறிய அமைப்பில் தான் வாழ்கிறார்கள். சிங்கள பெரும்பான்மை கடலில் இடைக்கிடை தென்படும் தீவுத் திட்டுக்கள் போல முஸ்லிம் நிலப்பரப்புகள் சிதறி இருப்பதால் அவர்களை அரசியல் ரீதியாக அணி திரட்டல் செய்வது இன்று வரைக்கும் முஸ்லிம் அடையாள அரசியலுக்கு ஒரு சவால் தான். அத்துடன் கிழக்கிலங்கைக்கு வெளியே உள்ள முஸ்லிம்களின் முக்கியமான வாழ்வாதாரம் வணிகம் தான். கொடுக்கல் - வாங்கல், ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரம் தான். ஆக முஸ்லிம் வணிக நிறுவனங்களை தாக்குவதன் மூலமாக முஸ்லிம் சமூகத்தினை அடி பணிய வைத்திட முடியும் என்று சரியாகவே பேரினவாதம் கணித்து வைத்திருக்கிறது.

அந்தக் கணிப்பை செயல்படுத்திடும் முனைப்பு தான் கண்டி முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்கள்.

இலங்கையில் அரச இயந்திரம் முழுவதும் சிறுபான்மை எதிர்ப்பு உணர்வு மூலமாக கட்டப்படும் நிலையில் முஸ்லிம் பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்கள் என்பதன் சமூக, அரசியல் பரிமாணத்தை நாம் தெளிவுற உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

இலங்கையில் மட்டுமின்றி பொதுவாக எந்த நாடுகளிலாக இருந்தாலும் இன - வர்க்க முரண்பாடு என்பது அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக ஆதிக்கம் பெற்ற ஒரு சிறு குழுவினரின் நலனுக்காக வேண்டியே உருவாக்கப்படுகின்றன. இது குறித்து ஏராளமான கோட்பாட்டு ஆக்கங்கள் இருப்பதால் அதனை மீண்டும் அலசுவதை விடுத்து இதன் இன்னொரு ஆபத்தான கூறை கொஞ்சம் அவதானிக்கலாம்.

பெளத்த வகுப்பு வாதமும் , குருதி வழி இனத் தூய்மை வாதமும் கடந்த நூறு வருடங்களில் தம்மை பாசிசத் தன்மையுடன் வளர்த்து வந்திருப்பதை கண்டி இனவாத பிரச்சனையின் பொழுது நேரடியாக கள ஆய்வுகளின் பொழுது கண்டு கொள்ள முடிந்தது. கண்டி முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்கள் ஈடுபட்டது பொது பல சேனா, ராவணய பலய போன்ற பெளத்த கடும் போக்கு வாதிகள் மட்டுமல்ல, ஏராளமான சிங்கள நடுத்தர வர்க்கத்தினரும், விளிம்புகளும் அதில் கலந்து கொண்டதை முஸ்லிம்கள் பலத்த அதிர்ச்சியுடன் நோக்குகின்றனர். பாசிசத்தின் சமூக உளவியலை நோக்கி பெளத்த பெரும்பான்மை மக்களை இனவாத சக்திகள் கொண்டு செல்லும் முனைப்பின் வெளிப்பாடு இது. ஹிட்லரின் ஜெர்மனியில் யூதர்கள் மீதான தாக்குதல்கள் இப்படியொரு ஒட்டுமொத்த ஜெர்மன் மக்களின் ஏற்புடனே நிகழ்ந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1915 இல் முதல் முறையாக பெளத்த பேரினவாதம் இலங்கை முஸ்லிம்களின் மீதான கலவரத்தை உண்டு பண்ணி பாரிய சொத்திழப்புகளுக்கும், உயிர் சேதங்களுக்கும் வழிகோலியது.

முஸ்லிம்கள் பிரதான இலக்காக இருந்தாலும் தமிழர்கள் போன்ற 'அந்நிய' வர்த்தகர்கள் மீதான வெறுப்பும் இழையோடிய கலவரம் அது.

1915 இல் பெளத்த உணர்வு நிலையின் பெருவெடிப்பை நிகழ்த்திய நாயகனாக அநகாரிக தர்மபால இருந்தார்.

அநகாரிக தர்மபால ஆரிய இனமேன்மை கருத்தியலில் நின்று குருதி வழி இனத் தூய்மை வலியுறுத்தி இயங்கியவர். ஷேக்ஸ்பியர் கதாபாத்திரமான லாபவெறி கொண்ட யூத சுரண்டல்வாத வணிகனான ஷைலாக் உடன் முஸ்லிம்களை ஒப்பீடு செய்து பிரசாரம் செய்யும் அளவுக்கு இலக்கியத்திலும், வரலாற்றிலும் அகன்ற படிப்பு கொண்டவர்.

அநகாரிக தர்மபாலவை பொறுத்தவரையில் இலங்கையின் சுதேச கலாச்சாரம் என்பது சிங்கள - பெளத்த கலாச்சாரம் தான். பெளத்த கலாச்சாரம் என்பதை ஆரிய மேன்மையுடன் இணைத்த அநகாரிக தர்மபால முஸ்லிம்கள், தமிழர்கள், கிறிஸ்தவர்கள், மலையாளிகள் போன்றவர்களை இலங்கையின் பண்பாட்டு மையத்துக்கு 'வெளியே' நிற்கும் அந்நியர்களான வரையறை செய்தார்.

மகா வம்ச காலம் முதல் இருந்து வரும் இலங்கை மீதான அந்நியர்கள் ஆக்கிரமிப்பு குறித்த பயமும் மற்றும் இலங்கை என்பது பெளத்த தூய்மையின் நிலப்பரப்பு எனும் கற்பிதமும் இந்த வகையில் அநகாரிக தர்மபாலவுக்கு துணை புரிந்தது.

1915 இன் நூறாண்டு நிறைவு நீட்சியாக 2015 இலும் ஓர் இனக் கலவரம் உருவாகும் எனும் அச்ச உணர்வை முஸ்லிம் மைய நீரோட்ட கதையாடலை 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான Holocaust முதல் முஸ்லிம் சமூகம் உருவகித்து வந்திருந்தது.

2015 இல் நினைத்த அளவுக்கு எந்த கலவரத்தையும் பெளத்த இனவாத சக்திகளுக்கு உருவாக்கிட முடியவில்லை என்றாலும் 2018 இல் விட்டதை பிடித்து விட்டார்களோ என்று தான் தோன்றுகிறது. மீண்டும் இருப்பு குறித்த பாரிய உளவியல் பதட்டத்துக்குள் முஸ்லிம்கள் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இவற்றிற்கு மத்தியில் சிறுபான்மையின (தமிழ், முஸ்லிம்) புத்திஜீவிகளில் சிலர் சிங்கள இனவாதத்தை புத்தரின் போதனைகளுடன் பொருத்தமற்ற முறையில் முடிச்சுப் போட்டு பேசுகின்றனர்.

கொல்லாமை, உயிர் வதை தடை செய்தல், சகல உயிரினங்கள் மீதான அன்பை வலியுறுத்தல் போன்ற உயர்ந்த பெளத்த நெறிகள் சடங்கு, வழிபாட்டு ரூபத்தில் அல்லாமல் தத்துவ தளத்தில் இருப்பதன் காரணமாகவே அவை பெளத்தர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்ற முடியவில்லை. தத்துவம் என்பது எப்போதுமே கல்வி ரீதியாக சிறப்புரிமை பெற்ற ஒர் உயர் குழாமுக்குரியதே ('உயர் குழாம்' என்பது கல்வி ரீதியாக பெற்ற சமூக மூலதனம்). அவை வெகு மக்களுக்குரியதல்ல. பெளத்த தத்துவத்தின் பிரச்சனை அதன் அடிப்படை கருதுகோள்களை வெகு மக்களுக்கு நகர்த்திடும் செமித்திய மதங்களை ஒத்த (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) வழிபாட்டம்சங்கள், சடங்காசாரங்கள் அதற்கு கிடையாது என்பதே.

இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் உள்ள பெளத்த பேரினவாதத்தை நாம் பெளத்த நெறிகளின் உள்ளடுக்குகளில் தேடுவதில் பயனில்லை. ஏனெனில் சடங்குகள், வழிபாடுகள் அற்ற நிலையில் பெளத்தம் தான் செல்ல நேர்ந்த பிராந்தியங்களின் உள்ளூர் பண்பாடுகள், நாட்டாரியல் மரபுகளுக்கு ஏற்ப தகவமைய நேரிட்டது. அடிப்படையில் கடவுள் மறுப்பு நாத்திகரான புத்தரின் போதனைகளையும் மீறிக் கொண்டு பெளத்த பொது மக்கள் நாட்டாரியல் தெய்வ வழிபாடுகளையும் பெளத்த நெறிகளுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக புத்தரின் அசலான போதனைகள் தத்துவ தளத்தில் மட்டுமே சஞ்சரிக்க பெளத்தர்கள் (அதாவது பொது மக்கள்) அவ்வந்த உள்ளூர் கலாச்சாரங்கள் மூலமாக பாதிப்பு பெற்று சமூக, அரசியல் கண்ணோட்டங்களை உருவாக்கினார்கள். இந்த வேறுபாடுகள் மிக முக்கியமானவை.

இந்த கோட்பாட்டு சட்டகத்தின் அடியாக நோக்கினால் பெளத்த இனவாதிகளை நோக்கி நீங்கள் புத்தரின் பிரபஞ்ச அன்பு, கொல்லாமை போன்ற போதனைகளில் இருந்து நெறி பிறழ்ந்து விட்டீர்கள் என்று குற்றம் சாட்டுவது அறிவீனம். அது அவர்களின் சிந்தையை உசுப்பாது. ஏனெனில் பெளத்த சமூக உளவியலை இயக்குவது உள்ளூர் பண்பாடுகளே. கலாச்சார தகவமைப்புகளே. புத்தர் ஓர் தத்துவ வாதி. மத நிறுவனரோ அல்லது இறையியலாளரோ அல்ல.

சிங்கள / பெளத்த இனவாத வேர்கள் மகா வம்ச காலம் வரை நீள்பவை. அது எப்படி, ஏன் என்று இங்கே பேசிட முயலவில்லை. தற்போதைய இனவாதத்தை எந்த வகையில் மகா ஞானியான சாக்கியமுனி புத்தருடன் இணைத்து புரிந்து கொள்ள முடியும் என்று பரிசீலனையில் பிறந்த எளிய அவதானங்கள் மட்டுமே இவை.

இந்த வரலாறுகளை தொகுத்துக் கொள்ளும் பொழுது ஒரு விடயத்தை அவதானிக்க முடிகின்றது. 1915 இலும் அதற்கு பிறகான காலப் பகுதிகளிலும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஆளுமை மிக்க பல தலைவர்கள் இருந்தார்கள்.

ஐ. எல். எம் அப்துல் அஸீஸ், எம். சி அப்துர் ரஹ்மான், மாக்கான் மாக்கார் போன்ற தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார, மத ரீதியான, பொருளாதார இருப்பையேனும் பாதுகாத்தார்கள் (பெளத்த இனவாத நோக்கு நிலையின் அழிவுகரமான கூறுகளுக்கு எதிராக இவற்றை முன் வைத்தே பேசுகிறேன். மற்றபடி முஸ்லிம் தலைவர்களை விமர்சனமற்று விதந்தோதுவது என் நோக்கமல்ல).

ஆனால் இன்றைய நிலை? எமக்கான தலைவர்கள் யார்? எம்மை அரசியல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் வழிநாடத்தக் கூடிய ஆளுமைகள் யார்?

கானல் நீர் கதை தான் இன்றைய முஸ்லிம்களின் நிலை. காற்றில் தோன்றும் உருவெளித் தோற்றங்களை உண்மை என்று நம்பி காலத்துக்கு
காலம் முஸ்லிம்கள் ஏமாறுகிறார்கள்.

ஆனாலும் நாம் நிராசையடைய தேவையில்லை. பா. சிங்காரம் 'புயலிலே ஒரு தோணி' நாவலில் கூறுவது போல 'மனதை இழக்காத வரையில் நாம் எதனையும் இழப்பதில்லை'

நாம் மனதை இழக்க கூடாது என்றால் முதலில் பெளத்த பேரினவாதத்தின் இயங்கு தளங்களை, வேர்நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

பெளத்த தூய்மை வாத உலக கண்ணோட்டத்துடன் பின்னிப் பிணைந்த அந்நியர் குறித்த அச்சம் - Xenophobia - தான் பெளத்த இனவாத உணர்வு நிலையின் அடித்தளம்.

மகா வம்ச காலத்தில் இருந்தே அந்நிய ஆக்கிரமிப்பு குறித்த பயம் மனதில் ஆழப் பதிந்தவர்களாகவே சிங்கள மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மொழி ரீதியாக தேசிய உணர்வு கொண்டவர்கள் என்பதால் அதன் மூலமாகவே உலக அளவில் தம்மை சிறுபான்மையினராக உணரும் பதட்டம் கொண்டவர்களாகவும் அவர்கள் திகழ்கிறார்கள். இதனுடன் இலங்கையின் தேரவாத பெளத்த அதி தூய்மைவாதம் இணைந்த உலக கண்ணோட்டத்துடனேயே அவர்கள் சகல சமூக விவகாரங்களையும் அணுகுகிறார்கள்.

ஈழப் போராட்டம் முதல் முஸ்லிம் அடையாள அரசியல் வரைக்கும் இந்த உலக கண்ணோட்டத்துடன் தான் சிங்களவர்கள் அணுகுகிறார்கள்.

இந்த உலக கண்ணோட்டத்தின் சமீபத்திய வெளிப்பாடு கண்டி முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்கள். களப்பணியில் நாம் உணர்ந்த விடயம் இது. தொடர்ந்த பரீசிலனையில் வேறு கோணங்களும் துலங்கலாம்.

உரையாடல் தொடர்கிறது....!

-லபீஸ் ஷஹீத்

https://m.facebook.com/story.php?story_fbid=962467240598705&id=100005063134008

No comments:

Post a Comment