Monday, April 16, 2018

திமுக மீதான சாதிப் பாகுபாடு குறித்த விமர்சனங்கள

Karl marx ganapathy
Via Facebook
2018-04-16

திமுக மீதான சாதிப் பாகுபாடு குறித்த விமர்சனங்கள் ஒன்றும் தமிழக அரசியலில் புதிதல்ல. அண்ணாவின் காலத்தில் அது முதலியார் கட்சி என்று விமர்சிக்கப்பட்டது. காஞ்சிபுரம் தேர்தலில், அண்ணாவின் சாதியப் பின்னொட்டுடன் தேர்தல் பிரச்சார போஸ்டர்கள் அடிக்கப்பட்டபோது, “எங்கிருந்து புதிதாக முளைத்தது இந்த முதலியார் என்னும் வால்...” என்று பெரியார் விமர்சித்ததெல்லாம் ஆவணமாக இருக்கிறதுதான்.

திகவில் இருந்து பிரிந்து வெகுஜன தேர்தல் கட்சியாக திமுக வெளியேறிய போதே அதன் சமரசங்கள் தொடங்குகின்றன. இது திகவுக்கும் திமுகவுக்குமான வேறுபாடு மாத்திரம் அல்ல மாறாக இதுவொரு தேர்தல் சாராத இயக்கத்துக்கும் வாக்கரசியல் கட்சிக்குமான அடிப்படை வேறுபாடு. இது இந்திய அளவில் செயல்படுகிற தலித் இயக்கங்கள் உள்ளிட்ட எல்லோருக்குமே பொருந்தும். திகவின் வழிமுறைகளை திமுக முழுவதுமாக வரித்துக்கொள்ள முடியாது. அப்போதும் சரி இப்போதும் சரி... இனி எப்போதுமே கூட.

இந்த அரசியல் புரிதலுக்கு வராதவரை அதிருப்தியடைவதை நம்மால் நிறுத்திக்கொள்ளமுடியாது. இயக்கத்துக்கும் கட்சிக்குமான அணுகல் முறைகளில் இருக்கும் சிக்கல்கள் குறித்து திருமாவளவன் பேசியிருப்பதைக் கேட்டால் இன்னும் தெளிவாகப் புரியும். அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு மற்றும் சந்தையூர் விவகாரம் போன்றவற்றில் தேர்தல் சாராத தலித் இயக்கத்துக்கும் தேர்தல் சார்ந்த தலித் கட்சிக்குமான அணுகல் முறையில் வேறுபாடு இருக்கவே செய்யும்.

இவ்வாறு சொல்கிறபோது பிரதானமான கேள்வி வருகிறது. இது சமரசங்களைப் பூசி மெழுகுவதாகாதா...? சீரழிவுகளுக்கு முட்டுக்கொடுப்பதாகாதா...? என்பதே அது. இதற்கு ஆம் அல்லது இல்லை என்கிற ஒற்றை பதில் கிடையாது என்பதே எனது அரசியல் புரிதல். ஏனெனில் சமூக இயங்கியல் அப்படியான ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல. அதிலும் குறிப்பாக சாதி என்பது பல கண்ணிகளுடன் செயல்படுகிற நுண்ணிய அலகு.

நாம் கவனம் செலுத்த வேண்டியது எதில் என்றால், தனது எல்லா சமரங்களுடனும் தேர்தல் அரசியலில் ஈடுபடுகிற ஒரு அரசியல் கட்சி தன் மீதான விமர்சங்களை எதிர்கொள்ளும் குறைந்த பட்ச நேர்மையுடன் இருக்கிறதா, அது சார்ந்த உரையாடல்களுக்கு முகம் கொடுக்கிறதா, தனது உறுப்பினர்களிடம் இருக்கும் சாதிய மேட்டிமை மனநிலையை கொஞ்சமாவது நெகிழ்த்தும் வழிமுறையை தனது அரசியல் பண்பாகக் கொண்டிருக்கிறதா, கட்சிக்குள் இருக்கும் வேறுபட்ட சாதிப் பிரதிநிதிகளுக்குள் குறைந்த பட்ச செயல்திட்டத்துடன் கூடிய இணக்கப்பாட்டை அது சாத்தியப்படுத்துகிறதா, அந்தப் பிரதிநிதிகளின் இணக்கப்பாடு அவர்கள் சார்ந்த சாதிகளுக்கு  இடையேயான நல்லிணக்கத்தை வளர்க்கும் பண்பாக கீழ் மட்டத்தில் தொழிற்படுகிறதா என்கிற மதிப்பீடுகளையே. 

இந்த அளவுகோலின்படி பார்த்தால் திமுக ஒப்பீட்டளவில், அதன் போதாமைகளுடன் சிறப்பாகவே செயல்படுவதைப் புரிந்துகொள்ள முடியும்.

அதன் போதாமைகள் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டுமெனில் கருணாநிதி கட்சித் தலைமைக்கு வந்த காலகட்டத்தில் இருந்த சாதியச் சூழல் குறித்த அடிப்படைப் புரிதல் நமக்கு இருக்கவேண்டும். தனது எல்லா சாதிய மேட்டிமைத்தனங்களுடனும், சுதந்திரத்துக்குப் போராடிய கட்சி எனும் அடையாளத்துடனும், தனது முதலாளித்துவ எச்சங்களைக் கைவிடாமல் அப்போது ஆட்சியில் இருக்கிறது காங்கிரஸ். அதன் மீதான தேர்தல் சாராத பெரியாரிய இயக்கம் தொடுத்த விமர்சனங்கள் ஏற்படுத்திய திறப்பின் வழியாக மக்களிடம் நுழைந்து ஆட்சியைப் பிடிக்கிறது திமுக.

அதிலிருந்துதான் திமுகவின் சாதனைகள் தொடங்குகின்றன. ஆனால் மிக நுணுக்கமாக நாம் கவனிக்கவேண்டிய மற்றொரு புள்ளி என்னவெனில் அரசு என்று வருகிறபோது, நாம் திமுகவின் வழிமுறையைக் காங்கிரசின் முந்தைய வழிமுறையுடன் பொருத்திப் பார்த்துதான் விமர்சிக்கவேண்டுமே தவிர திகவின் வழிமுறையோடு அல்ல. இங்குதான் திமுகவை விமர்சிப்பவர்கள் சறுக்குகிறார்கள். அந்த சறுக்கல் இப்போதும் தொடர்கிறது. இப்போதும் திமுகவை அதிமுகவுடன் ஒப்பிட்டுப் பரிசீலிக்காததன் அபத்தம் அதனால்தான் நேர்கிறது.

சமரசங்கள் என்று வருகிறபோது, ஒப்பீட்டு அளவில் கண்டிக்கும் அலகாக நெறிப்படுத்தும் அலகாக பெரியாரியத்தை திமுகவுக்கு இருத்தமுடியுமே தவிர, திகவின் அரசியல் நோக்கங்களை அப்படியே ஆட்சியில் செயல்படுத்தும் ஒரு கட்சியாக திமுகவைப் பார்க்க முடியாது. ஏனெனில் அது அதிகாரத்துக்கு வந்தததே குறைந்த பட்ச சமரசங்களின் வழியாக என்கிற போது அதிகாரத்துக்கு வந்தவுடன் அது தனது சமரச வழிமுறையை அப்படியே கைவிட்டு விட முடியாது. அவ்வாறு செய்யுமெனில் அது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு, இல்லாது போய்விடும் சாத்தியங்களே அதிகம். அந்த வெற்றிடம் அந்த கொள்கைக்கு எதிரான கருத்தை வைத்திருக்கும் கட்சிகள் வளர உதவும் என்பது அதன் உபவிளைவாக இருக்கும். இந்த கருத்தாக்கம் இன்றைய சூழலுக்கும் பொருந்தக் கூடியதே.

முழுக்கவும் வெளியில் இருந்து எப்போதும் அதிகாரத்துக்கு எதிராகப் போராடுவதை விட அதில் பங்கு பெறுவதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்வது என்னும் அண்ணாவின் வழிமுறை திராவிட இயக்கத்துக்கு எல்லா வகையிலும் நேர்மறையாகவே பங்களித்தது. அதுவே அண்ணாவின் சாதனை. ஆகவே நாம் அண்ணாவை பெரியாருக்கு எதிராக நிறுத்தி அவரை மதிப்பிடுவது பிழை. இணையாக நிறுத்தி மதிப்பிடும்போதுதான் நாம் குறைகளையும் நிறைகளையும் நேர்மையாகப் பரிசீலிக்கமுடியும். ஏனெனில் முன்னவர் இயக்கவாதி. பின்னவர் அரசியல்வாதி. இருவரும் அவரவர்களின் சிறப்புகளுடனுமே போதாமையுடனுமே இருக்கமுடியும். இருக்கவும் செய்கிறார்கள்.

அந்தவகையில் கருணாநிதியின் பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாதது.

ஏனெனில் அண்ணாவுக்கு இருந்த சாதிய உயர்வு நிலை கருணாநிதிக்குக் கிடையாது. அவர் தமிழகத்தில் இருக்கும் மிகச் சிறுபான்மையான ஒடுக்கப்பட்ட ஒரு சாதியில் இருந்து வந்தவர். அந்தஸ்திலும் எண்ணிக்கை பலத்திலும் வலு குறைந்த அவரது சாதியப் பின்னணி, திமுகவை அவர் நகர்த்திய விதத்தில் அண்ணாவின் வழிமுறையில் இருந்து முழுக்கவும் வேறாக இருந்தது. அது சமூகத்தளத்திலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றே நான் மதிப்பிடுகிறேன்.

குறிப்பாக, கட்சியில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, கட்சிக்குள் இருக்கும் சாதிய உறுப்புகளுக்கு இடையில் முரண்கள் நீடிப்பதை உறுதி செய்பவராகக் கருணாநிதி இருந்தார். ஒவ்வொரு ஆதிக்க சாதியும் அதனளவில் தனது எதிரிகளை கட்சிக்குள்ளேயே கண்டடைந்து போராடிக்கொண்டிருக்கும் தன்மையை அவர் ஊக்கப்படுத்தினார்.

எண்ணிக்கை அளவில் குறைந்திருந்தாலும் கூட சமூக அந்தஸ்தில் உச்சத்தில் இருந்த சாதிகளை மிகத் திட்டமிட்ட வகையில் உடலுழைப்பு சாதிகளுக்கு எதிராக நிறுத்தியதிலும், உடலுழைப்பு சாதிகள் கட்சி அதிகாரப் படிநிலையில் மேலெழுகிற போது அதன் இயல்பில் மூளை உழைப்பு சாதிகள் அவர்களை கட்டுக்குள் வைப்பதுமான ஏற்பாடுகளை உருவாக்கி நிலை நிறுத்திய வகையிலும் அவரது கட்சி அரசியல் என்பது இந்திய அளவில் முன்னுதாரணம் இல்லாதது. அவர் அரசியல் சாணக்கியராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதற்குப் பின்னால் அதன் “முழு அர்த்தத்திலான சாணக்கியத்தனம்” உண்டுதான். இந்த வழிமுறையை அவர் கூட்டணிக் கட்சிகளிடமும் பயன்படுத்தினார். 

இந்த நுண்ணரசியலின் வழியாகவே கட்சிக்குள் ஒரு சமன்பாட்டை அவர் உருவாக்கி வைத்தார். இந்த சமன்பாட்டில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதன் பொருட்டு அவர் தனது அரசாட்சியின் போது கைகொண்ட வெளிப்படையான சமரசங்கள், சாதியொழிப்பின் மீது அக்கறை இல்லாதவர் என தலித் இயக்கங்கள் அவரை விமர்சிக்கவும், அதே சமயத்தில் “ஒரு தாழ்ந்த சாதிக்காரனின் கீழ் சாதிப்பற்று” என உயர் மற்றும் ஆதிக்க சாதிகள் அவரைத் தூற்றவும் வழியமைத்துக்கொடுத்தது.

கட்சிக்கு உள்ளே அவர் கட்டமைத்திருந்த இந்த சாதியச் சமன்பாடுகளை என்பதுதுகளில் தோன்றி மேலெழுந்து வந்த  “சாதி அடையாள அரசியல்” எனும் அலை பெருமளவில் பாதித்தது. குறிப்பாக வன்னியர்களின் எழுச்சி மற்றும் அவர்கள் சங்கமாகத் திரண்டது ஆகியவை. அவர் மிக வேகமாக அதைப் புரிந்துகொண்டார். கட்சியின் உள்ளே வன்னியப் பிரதிநிதுத்துவத்தை  மறுவரையறை செய்யத் தொடங்கினார். அதே காலகட்டத்தில், தலித் அடையாளத்துடன் புறப்பட்ட விடுதலைச் சிறுத்தைகளை பெரும் ஆசுவாசமாக உணர்ந்தார். அவர்களை வன்னியர் சங்கத்தைக் களத்தில் எதிர்கொள்ளும் அமைப்பாக இனங்கண்டார். அவர்களை அரவணைத்தார்.

இரண்டு இயக்கங்களையும் ஒன்றை மற்றதற்கு எதிராக நிறுத்துவதன் மூலம் திமுகவை அதன் கட்டமைப்பு சிதையாமல் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று அவர் நம்பினார். அதில் வெற்றியும் அடைந்தார். இந்த சாதிய முரண்கள் எதுவும் அவர் உருவாக்கியது அல்ல. இருக்கும் ஒன்றை பயன்படுத்துவது. manipulate செய்வது. ஆனால் கருத்தியல் தளத்தில் திகவின் விழுமியங்களுக்கு எதிரானது இது. ஆனால் இன்றைய காவிகளின் திட்டமிட்ட ஊடுருவலுடன் ஒப்பிட, ஒரு அரசியல் கட்சி தான் கைகொள்ளும் அரசியல் வழிமுறை என்று திமுக தன்னை நியாயப்படுத்திக்கொள்ளும் சாத்தியங்களையும் கொண்டது.

கொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் சாதியாகத் திரண்ட போதும் கருணாநிதி இதே வழிமுறையைத்தான் கையாண்டார். இந்த சாதி சார்ந்த சமரசங்களைதான் தேவைப்பட்ட இடங்களில் வெட்டியும் ஒட்டியும்  தமழ் தேசியம் பயன்படுத்திக்கொண்டது. அவருக்கு எதிரான கருத்தாக அதைத் திரட்டி மக்கள் முன் வைத்தது. ஆனால் அதை மிகத் தந்திரமாக செய்தது. சாதிக்கு எதிரான விமர்சனமாக அந்த வழிமுறைகள் திரண்டுவிடாமல் அதன் தவறான விளைவுகளுக்கு மட்டும் கருணாநிதியைப் பொறுப்பாக்கியது. இப்போதும் செய்கிறது. சாதிக்கு எதிராக அதன் நல்லிணக்கத்துக்கு ஆதரவாகக் கருணாநிதி செய்தவற்றில் ஒரு பகுதியைக் கூட செய்யாத தமிழ் தேசிய இயக்கங்கள் மக்களுக்கு எதிராக கருணாநிதியையும் திமுகவையும் நிறுத்தியதில் அடைந்த வெற்றி என்பது இவ்வாறு சாதிக்கப்பட்டதுதான்.

வெளியே மிக நாகரிகமாகத் தோற்றமளித்தாலும் தமிழர்களின் சாதிய அருவறுப்பு முகத்தை வேறு யாரையும் விட மிகத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தவர் கருணாநிதி. அதனால்தான் எந்தக் குற்றவுணர்ச்சியுமற்று அவர் அதை அரசியலில் கையாண்டார். ஏனெனில் அதை விமர்சிக்கும் தார்மீகம் யாருக்கும் இருந்திருக்கவில்லை என்பதே. எல்லாரும் தனித்தனி கணக்குகளுடன் இருந்தபோது அந்தக் கணக்குகளுக்கு இடையேயான தந்திரக் கண்ணிகளை நெயததன் வழியாகவே அவர் தனது அரசியலை நகர்த்தினார். அதன் வழியாக இணக்கத்தையும் சாத்தியப்படுத்தினார். அதுவே இப்போதும் திமுகவின் அரசியலாக இருக்கிறது.

இதுவே, சமூக நீதி என்று வருகிறபோது வேறு எந்த தமிழகக் கட்சியையும் விட நிறைய சாதித்தது திமுக என்பதை மறுக்க முடியாததாக வைத்திருக்கிறது. அதுவே கருணாநிதியின் சாதனை. வரலாற்றில் வெளிச்சம் என்பது இருட்டின் இன்னொரு பகுதி அல்ல. அதன் உள்ளீடாக அதிலேயே இருப்பது அது. அதனால்தான் திமுக தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத இன்றியமையாத தரப்பாக தன்னை நிறுவிக்கொள்கிறது. திமுகவின் சாதனைகளும் தோல்விகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தே இருக்கும். ஆம், ஒன்றில்லாமல் மற்றது இல்லை!

https://m.facebook.com/story.php?story_fbid=1923229347710579&id=100000705985759

No comments:

Post a Comment