Sunday, April 22, 2018

#தமிழ்தேசியம்: பிபிசி தமிழ் தொடர் 7

#தமிழ்தேசியம்: வாழ்வுரிமையை முன்னிறுத்துவது தேசிய இன அரசியல்

க.அய்யநாதன்

 அரசியல் செயற்பாட்டாளர்

22-ஏப்ரல்-2018

(தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நிலையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் ஏழாவது பாகம். இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

ஓர் இனம் தன் தொன்றுதொட்ட வாழ்வியலின் ஆதாரமாக இருந்துவரும் நிலம், நீர்ப்பரப்பு, இயற்கை வளங்கள் ஆகியவற்றையும், தங்களின் சுதந்திர வாழ்வையும், அடிப்படை உரிமைகளையும் காத்துக் கொள்வதற்கும், தங்கள் உரிமைக்கு உட்பட்ட நிலத்திலுள்ள வளங்களைக் கொண்டு, அறிவையும் உழைப்பையும் இணைத்து தங்களுடைய பொருளாதார வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்குமான தன்னுரிமையை நிலைநாட்டும் அரசியலே தேசியமாகும்.

மேற்கண்ட உரிமைகள் சார்ந்த அவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும் அவர்கள் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்பால் வஞ்சிக்கப்பட்டு, சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் ஆட்படுத்தப்படும்போது அதிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளவும், தம்முடைய இயற்கை உரிமை சார்ந்த சுதந்திர வாழ்வை நிலை நிறுத்தவும் தங்களின் பூர்வீக அடையாளத்தை முன்னிறுத்தி செய்யும் அரசியலே தேசிய இன விடுதலையாகும். 

அதற்கென முன்னெடுக்கப்படும் அரசியல், அந்த தேசிய இனம் உள்ளாக்கப்படும் ஒடுக்குமுறைக்கு ஏற்ப தனக்கான வடிவத்தை உருவாக்கிக் கொள்ளும். அது சட்ட ரீதியான உரிமைகள் பறிப்பாயின் அதற்கு எதிரான அந்த தேசிய இனத்தின் எழுச்சி அரசியல் கட்சி அல்லது இயக்க வடிவத்தைப் பெறும்.

வேறுவிதமான ஒடுக்குமுறை என்றால் அதன் தன்மைக்கு ஏற்ப தேசிய இன அரசியலும் உரிய வடிவத்தைப் பெறும்.

இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசியல் ஆதிக்கம் அங்கு தமிழீழ விடுதலைக்கான அரசியல் போராட்டமாக உருவெடுத்தது. அதனை அனைத்து வழிகளிலும் ஒடுக்கிட இலங்கை இனவாத அரசு முற்றப்பட்டு அது திட்டமிட்ட இன அழித்தலை மேற்கொண்டபோது அதன் இயற்கையான எதிர்வினையாக விடுதலையை இலக்காகக் கொண்ட ஆயுதப் போராட்டம் உருப்பெற்றது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வகுத்தளித்த அதிகாரங்களை அரசியல் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு பறித்து இந்திய ஒன்றிய அரசின் அதிகாரத்தை அதிகரித்து மாநில அரசுகளின் அதிகாரத்தை குறைத்து அதன் மூலம் கூட்டாட்சித் தத்துவம் ஆழமாக குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. இந்திய ஒன்றிய அரசு ஏகாதிபத்திய ஆட்சியாக மாறி வருகிறது. 

வளர்ச்சி, மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் மாநிலங்களின் அதிகாரத்தை புறந்தள்ளி கொள்கை வகுப்பு, திட்டங்கள் என்ற பெயரால் தான் திட்டமிடுவதை தடையின்றி செயல்படுத்தி வருகிறது. இன்றைய வர்த்தக உலகமயமாக்கல் அமைப்பின் விதிமுறைகளாலும் சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) ஆலோசனைகளின் உந்துதலாலும் இந்திய நாடு கடந்த பல ஆண்டுகளாக உலகளாவிய, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தடையற்ற வர்த்தக மற்றும் வளங்களின் சூரையாடலுக்கு வழி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நல அரசாக இயங்க வேண்டிய இந்திய ஒன்றிய அரசு பன்னாட்டு தொழில் வர்த்தக நிறுவனங்கள் அளவிடற்கரிய இலாப நோக்கிற்கு இந்நாட்டைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் ஒரு முகாமையாளர் போல செயல்பட்டு வருகிறது. இது இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் மக்களையும் கடும் வாழ்கை மற்றும் வாழ்வாதார நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.

எடுத்துக் காட்டாக தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைக்காமல் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களைக் கூறலாம்.

இந்நாட்டின் விவசாயிகள் விளைவித்த பொருட்களை உள்நாட்டு சந்தையில் நல்ல விலை கொடுத்தே இந்நாட்டின் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதை ஏன் விலை நிர்ணயம் செய்யும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை?

இந்திய ஒன்றிய அரசின் போக்கால் பெரும் நெருக்கடிக்கும் உரிமைகள் பறிப்புக்கும் ஆளாகியுள்ள மாநிலமாக தமிழ்நாடு ஆகியுள்ளது. இங்குள்ள அரசின் பலவீனத்தைப் பயன்படுத்தி கார்ப்பரேட் நலன் சார்ந்த திட்டங்களான ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, அணு உலைகள், ஆறு வழிச்சாலை, இராணுவத் தடவாள உற்பத்தி தளங்கள், எண்ணெய் மண்டலங்கள், எரிவளி குழாய்கள் அமைப்பு, நீட் தேர்வு, அயல் மாநிலத்தவர்களை துணை வேந்தர்களாக்குவது... என்று தனது அதிகாரத்தை திணித்து வருகிறது ஒன்றிய அரசு.

இதனைத் தடுத்து தமிழ்நாட்டைப் பாதுகாக்கவும், காவிரி நீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீட்கவும் தமிழ்த் தேசிய அரசியல் உருவாகியுள்ளது.

இம்மண்ணின் உரிமைகள் மீட்பில் அப்பழுக்கற்ற நேர்மையுடன், மெய்யான பற்றுடன் ஈடுபடுகிற, இம்மண்ணின் பண்பாட்டை ஏற்று வாழும் எவரும் இந்த அரசியலுக்குத் தகுதி பெற்றவரே.

https://www.bbc.com/tamil/india-43848990

No comments:

Post a Comment