Tuesday, April 17, 2018

குட்/பேட் டச் - ஆசிஃபா

Samsu Deen Heera
Via Facebook
2018-04-17

விடுமுறையைக் கழிக்க ஊருக்குச்சென்றிருந்த யாஷிராவும் ஹினாவும் நேற்று இரவு வீடு திரும்பினர். படுக்கையறையில் இரவு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இருவரும் விடுமுறைக் கொண்டாட்டங்களை உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். நான் பேச நினைப்பதையெல்லாம் உடனே பேசி குழந்தைகளின் அந்த உற்சாக மனநிலையைக் குலைக்க வேண்டாமெனக் காத்திருந்தேன். நாளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்ற உறுதி மொழியை வாங்கிக்கொண்ட குஷியில் இருவரும் இருந்தனர். மணி 12 ஐத் தாண்டியிருந்தது.

காஷ்மீர் ஆசிபாவின் வீடியோவைப் போட்டுக் காட்டினேன். யாருப்பா இந்தப் பாப்பா..? என்றபடி எழுந்து அமர்ந்தாள் யாஷிரா. சொல்லத்துவங்கினேன். ஓடிவந்து மடியில் புதைந்துகொண்டாள் ஹினா. ஒரு கதை கேட்கும் ஆர்வத்தோடிருந்த இருவரின் முகமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறியதை உணர முடிந்தது. வெளிப்புறமாக மடித்து கால்கள் ஒடிக்கப்பட்டபோது ஏற்பட்ட ஆஷிபாவின் வலி இப்போது யாஷிராவின் முகத்தில் தெரிந்தது. லேசாக நடுங்கியது ஹினாவின் உடல். ஆஷிபாவின் தலையில் போடப்பட்ட கல்லைக் கற்பனை செய்திருக்கக் கூடும்.  இவ்வளவு விலாவரியாக குழந்தைகளிடம் சொல்லவேண்டுமா என நினைத்தாலும் அமைதியாகப் படுத்திருந்தாள் ரேஷ்மா.

ஒரு குருவியின் மரணத்திற்கு ஒரு செல்ல நாயின் மரணத்திற்குத் துடித்துப்போய் அழுத மெல்லிய இதயங்களுக்கு ஒரு கொலைபாதக செயலை, தன்னைப்போன்ற ஒரு குழந்தையின் மரணத்தைத் தாங்கும் வலிமை இருக்குமா என்று ஆரம்பத்தில் நானும் கொஞ்சம் தயங்கவே செய்தேன். அங்கு நிலவிய ஆழ்ந்த நிஷப்தமும், தாய்ப்பறவையின் உடல்சூட்டில் பதுங்கிக்கொள்ளும் குஞ்சுகள் போல இருவரும் என்னை அரவனைத்து அமர்ந்திருந்த தோரனையும் அந்தத் தயக்கத்தைக் கொடுத்தன. இருந்தாலும் சொல்லித்தானே ஆகவேண்டும். இந்தச்சமூகத்தின் கேடுகளைப் புரிந்துகொண்டால்தானே இந்தச் சமூகத்தில் அவர்களால் போராட முடியும். ஒருவழியாக அவர்களுக்குப் புரியும்படி உதாரணங்களோடு சொல்லி முடித்தேன். பாலியல் வன்கொடுமை என்ற வார்த்தையெல்லாம் அவர்களுக்குப் புரியாதென்பதால் 'பேட் டச் பன்னாங்க' என்றுதான் சொன்னேன்.

அறிமுகமில்லாத நபர்கள் அழைத்தாலோ பேசினாலோ பலவந்தமாகப் பிடித்தாலோ எப்படி எதிர்கொள்வது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தேன். அசாதாரன சூழல்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று விளக்கினேன். அடுத்த வாரம் பெரோஸ் மாமாவ வரச்சொல்லி இன்னும் கொஞ்சம் ட்ரிக்ஸ் கத்துத்தரச் சொல்றேன் என்றேன். இருவரும் புரிந்துகொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் இந்தச் சமூகத்தின் மீதான அவநம்பிக்கையையும் அச்சத்தையும் இந்தப் பிஞ்சுகளின் மனதில் விதைத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியும் இருந்தது.

கடையியாக ஹினா கேட்டாள்..

"பேட் டச் பன்னக்கூடாதுன்னு அந்த பாய்சோட அப்பா அம்மா ஏன் அவங்களுக்கு சொல்லித்தரல..?"

https://m.facebook.com/story.php?story_fbid=1950664191671726&id=100001844931721

No comments:

Post a Comment