Monday, April 23, 2018

மார்க்சிய மெய்ஞானம்' மாஸ்கோ பதிப்பகம்.

Samsu Deen Heera
2018-04-22

ஒரு பத்துப் பணிரெண்டு ஆண்டுகள் இருக்கும். என் எல்லா நண்பர்களையும் போல நானும் அந்த மணவாளன் இளைஞர் மன்றம் என்கிற aiyf கிளைக்கு கேரம்போர்டு விளையாடவே சென்றிருந்தேன். ஆட்கள் நிறைய பேர் இருந்ததால், தோற்றுப்போன அணியினர் இன்னொரு அணி தோற்கும் வரை காத்திருக்க வேண்டும். நானிருந்த அணி தோற்றுப்போனதால் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். விளையாடிய அணிகளின் ஆட்டம் சலிப்பூட்டும்படி நீண்டதால், துருப்பிடித்த அந்த ஹைதர் அலி காலத்து மேசையின் டிராயருக்குள் அட்டையின்றி நைந்து கிடந்த அந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டினேன். அந்தப் புத்தகத்தின் தாள்களை அழுத்தி மடக்கினால் ஒடிந்துவிடும் நிலையில் பொரிக்கப்பட்ட அப்பளம் போல இருந்தது.

அதிக நேரமெல்லாம் இல்லை ஒரு பதினைந்து நிமிடம்தானிருக்கும். எனக்குள் ஏதோ ஒன்று ஊடுறுவிப்போவது போல உணர்ந்தேன். அதுவரை நான் இறுகப் பற்றியிருந்த என் நம்பிக்கைகளை, ஏதோ ஒன்று திரிந்துபோன பாலைப்போல சலனமடையச் செய்தது. முதலில் அதிர்ச்சியடைந்தேன். புத்தக ஆசிரியர் மீது கடுமையான கோபமும் வந்தது. கண்காணாத தூரத்துக்கு புத்தகத்தைத் தூக்கியெறிந்துவிட முடிந்தால் தேவலாம் என்றிருந்தது. ஆனாலும் முடியவில்லை.

அதற்கு முன்பு எத்தனையோ முறை கம்யூனிசம் குறித்து என்னிடம் விவாதித்து, சண்டையிட்டு, என் வறட்டுப் பிடிவாதத்தால் சலிப்படைந்திருந்த மன்றச் செயலாளரைப் பார்த்தேன். ஆர்வத்துடன் கேரம்போர்டைப் பார்த்துக்கொண்டு இருந்தவரிடம் இந்த புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாமா என்று கேட்டேன். ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்த அவர் எதையோ புரிந்துகொண்டதைப் போல மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தார். ஆயிரம் விவாதங்கள் செய்ய முடியாத மாற்றத்தை ஒரு புத்தகம் செய்துவிடுகிறது. ஏனென்றால் விவாதங்கள் நமக்கும் இன்னொரு நபருக்கும் இடையிலான ஈகோ கலந்த உரையாடலாகவே பெரும்பாலும் இருந்து விடுகிறது. ஆனால் வாசிப்பு நம்மை இரண்டாகப் பிளந்து நமக்குள்ளாகவே விவாதிக்கச் செய்கிறது. இத்தகைய விவாதங்கள் நம் ஈகோவை சுக்குநூறாக உடைத்தெரிந்து விடுகிறது.

வழக்கமாக வைரமுத்துவையும் ஜான் ரீடையும் வாசித்துவந்த எனக்கு அன்றைய வாசிப்பு புதிய அனுபவமாக இருந்தது. சிக்கலான அந்த மொழிநடையைப் புரிந்துகொண்டு உள்வாங்க சிரமப்பட்டேன்.  லேசாகத் தலையும் வலித்தது. மணி இரண்டானது மூன்றாகியது ஐந்தும் ஆகித் தொலைத்தது. வாசிப்பு நிற்க்கவில்லை.

அதுவரையிலான என் 'அறிவு' குறித்த வெட்டிப் பெருமிதங்கள் சொட்டுச் சொட்டாகக் கரைந்துகொண்டு இருந்தது. பெருங்காட்டில் அலையும் சிறு ஈயாக எனை உனர்ந்தேன். ' ஆன்மா இருப்பது உண்மையா? உயிர் என்றால் என்ன? சிந்தனை என்றால் என்ன? தன்னறிவு என்றால் என்ன? என்பதுபோன்ற, நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த, காலங்காலமாக நாம் உபயோகித்துவந்த எளிய தலைப்புகளைப் பற்றிய விளக்கங்கள்தான் அவை. ஆனால் அதுவரை நான் யோசித்தேயிராத புதிய கண்ணோட்டத்தில் விளக்கப் பட்டிருந்தன.

அடுத்த ஒருவாரமும் திரும்பத் திரும்ப வாசித்தேன். எனக்குள் தொடர்ந்து நிகழ்ந்த கடுமையான ஆழ்மனப் போராட்டங்கள்  என்னை முற்றிலும் குழப்பிப் போட்டிருந்தது. ஆண்டாண்டு காலமாக நம்பியிருந்த நம்பிக்கைகள் சீட்டுக்கட்டு போல சடசடவெனச் சரிந்துகொண்டு இருந்ததை ஜீரனிக்க மறுத்தது மனம். குழப்பம், தயக்கம், தடுமாற்றம் எல்லாவற்றையும் மீறி எனக்குள் ஏதோ ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருந்தன.

இரண்டாவது வாரத்துவக்கத்தில் கிளைச் செயலாளரை அழைத்தேன்.. " அண்ணா, நான் aiyf ல சேரலாம்னு இருக்கேன்.. ஆனா எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு.. அதுக்கு நீங்க தட சொல்ல மாட்டீங்கல்ல..?"  அவர் சொன்னார் " நீ எந்த மதத்தைப் பின்பற்றுவது குறித்தும் கட்சிக்கு ஆட்சேபனை இல்லை.. ஆனால் நீயாகவே நம்பிக்கைகளை விட்டுவிடுவாய்.." என்றார். ஒரே வருடத்தில் அவர் சொன்னது நடந்து விட்டது..

வாய்ப்பிருந்தால் ஒரு முறையேனும் வாசித்து விடுங்கள்.. உங்களைப்பற்றியே  நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள்.. ' மார்க்சிய மெய்ஞானம்' மாஸ்கோ பதிப்பகம்.

#உலக_புத்தக_தின_வாழ்த்துகள்..

சென்ற வருடம் எழுதியது..

https://www.facebook.com/samsu.deen3/posts/1958430707561741

No comments:

Post a Comment