Thursday, April 5, 2018

போராட்டத்தில் கார்பரேட் கம்பெனி ஊழியர்கள்

Rajasangeethan John

பன்னாட்டு முதலாளிகளை கூட விடுங்கள். ஏன் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் மேலாளர்களோ டீம் லீடர்களோ தமிழர்கள் இல்லையா? காவிரி மேலாண்மை வாரியம் அவர்களுக்கு தேவை இல்லையா?

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். தோழன்தான் டீம் லீடர். பொங்கலுக்கு லீவ் கிடைக்காது. தீபாவளிக்கு மட்டும் ஷேமமாக கிடைத்துவிடும். எங்களுக்கு இருந்த மேலாளர்கள் அப்படி. நானும் நண்பனும் ஒவ்வொரு முறையும் அமெரிக்கக்காரனிடம் சண்டை போட்டு பொங்கலுக்கு லீவ் வாங்குவோம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு  விடுமுறை, பெர்மிஷன் எதுவும் இல்லை.

அலுவலகம் முடிந்து நேரே கடற்கரைக்கு  சென்றுவிடுவேன். அலுவலகம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன் வீடு திரும்பி, refresh ஆகிக் கொண்டு அலுவலகம் புறப்படுவேன். தூக்கம் கண்ணை கட்டும். இருந்தும் விடாமல் அத்தனை நாட்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்திருக்கிறேன். அதிகாலையில் லேசாக போராட்ட தோழர்கள் அயர்வார்கள்.  அப்படியே பெஞ்சில் ஒரு மணி நேரம் சாய்ந்து கிடப்போம். அப்போதும் முகநூலில் போராட்டத்தின் தேவைகளை அப்டேட் செய்தபடிதான் படுத்து கிடப்போம்.

அலுவலகம் வந்தால்தான் காமெடியாக இருக்கும். போராட்டத்துக்கு பெர்மிஷன் கொடுக்காத மேலாளரிடமிருந்து ஒரு ஈமெயில் வந்திருக்கும். 'In solidarity with the agitations, our employees will stand for a peaceful protest for one hour this Saturday!' என மண்ணில் இருந்து புடைத்தெழும் சிவப்பு கை மற்றும் ஒரு காளையின் புகைப்படங்களுடன் மெசேஜ் இருக்கும். போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத கோபத்தை ஒரு மணி நேர காமெடியில் தணித்து விட விரும்பும் முனைப்பு.

அந்த சனிக்கிழமையில் அந்த ஒரு மணி நேரமும் எப்படி இருக்கும் தெரியுமா?

ஒவ்வொரு டீமில் இருந்தும் ஒவ்வொரு பாதியாக அனுப்பப்பட்டு peaceful protest காமெடி நடக்கும். மொத்த டீமும் அனுப்பினால் productivity என்னாவது?

"அப்படி எதுக்கு வேலை பார்க்கணும்.. அந்த வேலைய தூக்கிப் போட்டுட்டு போராட்டத்துக்கு வரலாமே சகோ!" என ஜாலியாக கேட்கலாம்.

இங்கு எல்லாருமே அன்றாடங்காய்ச்சிகள்தான். அதே நேரம் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் உணர்வும் நிரம்பியவர்கள்தான். சம்பளத்துக்கான போராட்டத்துக்கும் உரிமைக்கான போராட்டத்துக்கும் இடையில் புகுந்து வேலி கட்டுகிறார்கள் பாருங்கள், அவர்கள்தான் உண்மையான அரசியல்வாதிகள்.

ஜல்லிக்கட்டு போராட்ட காலத்துக்கு முன்னும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்திருந்தேன். HR-கள், ER-கள் மற்றும் மேலாளர்களை கொண்டு, வேலை பார்ப்பவர்களின் அத்தியாவசிய விடுப்பு நாட்களுக்கும் சம்பள உயர்வுக்கும் பேரம் பேசப்படும். வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கைகளில் எப்போதும் கத்தி தொங்கவிடப்படும் இந்த நேர்த்தியான சதி அமைப்புக்கு எதிராக குரலெழுப்பினோம். சங்கத்துக்கான தேவையை சொல்லத் தொடங்கியதால் வெளியேற்றப்பட்டோம். வெளியேறுகையில் நாங்கள் குரல் எழுப்பிய சக ஊழியர்களே எங்களின் ஆதரவுக்கு வந்து நிற்கவில்லை.

Jerry Maguire படத்தின் Tom Cruise போல் ஒற்றையாக வெளியே வந்தோம். But we were able to understand their reluctance.

அழகு என்னவென்றால் உங்களின் விடுமுறைக்கோ, போராட்டத்துக்கான விடுமுறைக்கோ அல்லது பொங்கல் விடுப்புக்கோ நீங்கள் உரிமை கோபம் கொண்டு குரல் எழுப்பினால், மேலாளரிடம் இருந்து பதில் வரும், "உங்களை லீவ் எடுக்க வேணாம்னு நாங்க சொல்லல.. எடுத்துக்கோங்க.. பட், உங்க லீவ் LOP-யா மார்க் ஆகும். No issues" என்று. சம்பளமா, உரிமையா, வாழ்க்கையா என்ற இடத்தில் கொண்டு வந்து உங்களை நிறுத்துவார்கள். கல்யாணத்துக்கே ஒருநாள் விடுமுறை கொடுக்கும் சம்பவங்கள் எல்லாம் அரங்கேறுகின்றன.

இப்படி நம்முடன் இருப்பவர்களை வைத்தே, நமக்கெதிரான முடிவுகளை, நாம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதுதான் மிகப்பெரிய அரசியல்!

தான் இயங்கும் ஒரு மாநிலத்தின் உரிமைகளுடன் சம்பந்தப்படாமல், தனக்கு வேலை பார்த்து கொடுப்பவர்களின் வாழ்க்கைகளுக்கும் அக்கறைப்படாமல், அவர்களின் உணர்வுகளையும் பொருட்படுத்தாமல், ஒரு மிகப்பெரிய கூட்டம் தொடர்ந்து இயங்கிக்கொண்டு, லாபங்களை மட்டும் இங்கிருந்து அள்ளிக் கொண்டு செல்ல முடிவது எத்தனை பெரிய அரசியல்?

காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் பிரச்சினை, ஜல்லிக்கட்டு பிரச்சினை, நீட் பிரச்சினை, ரேஷன் கடை பிரச்சினை என தொடங்கி தனி நபரின் கல்யாணம், அவன் குடும்பம், அவனின் விடுப்பு, அவனின் வாழ்க்கை, வேலை பார்க்கும் பெண்ணுக்கான உழைப்பு நேரம், அவள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான காலம், நோய், அகச்சிக்கல் என்பது வரை எல்லாவற்றையும் ஒருநாளின் productivity ஆக மட்டும் பார்ப்பது எப்படி அனுமதிக்கப்படுகிறது?

கல்லெறியப்பட வேண்டியது பேருந்துகள் மீது அல்ல. இந்த மொத்த சமூகத்தில் இருந்தும் விலகி, தன் ஊழியர்களையும் விலக்கி, லாபங்களை மட்டும் ஸ்வாஹா செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் மீதே!

https://m.facebook.com/story.php?story_fbid=1253525051416555&id=100002772164687

No comments:

Post a Comment