Wednesday, November 30, 2016

பொருளியல் 3 - இந்த டிமானிடேஷனால் என்ன ஆனாது?



பகுதி 3

Broad money, Narrow money, Reserve money, Cash velocity, CRR, GDP இது எல்லாவற்றையும் பற்றி முதல் இரண்டு பகுதியில் பார்த்தோம்

மொத்தம் 115 லட்சம் கோடி பணம் உள்ளது.இதில் 15 லட்சம் கோடி மக்கள் கையில் பணமாகவும் 10 லட்சம் கோடி வங்கி கையிருப்பாகவும் இருப்பதை பார்த்தோம். மிச்சம் 85 லட்சம் கோடி வங்கியில் நீண்டகால இருப்பாக , மற்றது RBIயில் வங்கிகளின் கட்டாய இருப்பதாக பார்த்தோம். ஆண்டு இந்திய ஜிடிபி (ஆண்டு பொருள் மற்றும் சேவை விற்பனை )150 லட்சம் கோடியை இந்த 115 லட்சம் கோடி பணம் மூலம் நாம் அடைகிறோம் அதாவது பணம் 1.3 முறை மாறுவதை படித்தோம்.


ஆனால் உண்மையில் கிட்டத்தட்ட 80 லட்சம் கோடி வங்கியில் நீண்டகால இருப்பாக இருக்கிறது. இது உடனடியாக வருடத்தில் மாறுவதில்லை. 25 லட்சம் கோடி மிச்ச பணமே மாறுகிறது. ஆக மக்களிடம் இருக்கும் 25 லட்சம் கோடி பணம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 7.5 முறை மாறுகிறது. ஆக உங்களிடம் உள்ள ஒரு பண தாள் ஒரு ஆண்டில் 7.5 முறை மாறுகிறது. 7.5 மடங்கு பொருள்/ சேவை தேவையை உருவாக்குகிறது.

இதில் உள்ள ஏனைய காரனிகளை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

இந்த டிமானிடேஷனால் என்ன ஆனாது?

புழக்கத்தில் இருந்த பணத்தில் 15 லட்சம் கோடி செல்லாது போய்விட்டது.இது மெதுவாக தான் மீண்டும் வரும். அடுத்ததாக வங்கியில் உள்ள பணத்தை எடுக்க பல கெடுபிடி உள்ள நிலையில் அதுவும் முடங்கிபோகிறது.

நிலைமை சீராகும் வரை எளிதில் மாறும் இந்த பணம் மாறாமல் போகிறது. வங்கி பரிவர்தனை மூலம் பணம் மாறுமே என்றால் உண்மை !!?? ஆனால் இன்று 100 ரூபாய் கையில் இருந்தால் உடனே செலவாகும் பணம் இல்லை என்றால் ? திரும்ப எடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். இந்தியாவில் ஆன்லைன் பண பரிமாற்றம் மற்றும் டெபிட் கார்ட் பண தரவுகள் மிக குறைவு. ஆண்டுக்கு 7.5 முறை மாறும் பணம் இந்த 2-4 நான்கு மாத பிரச்சனையில் 5 முறையே மாறும். பணம் மாறுவது குறையும் போது பொருள் வாங்குவது குறையும், பொருள்/ சேவை வாங்குவது குறையும் போது உற்பத்தி , தின கூலி ஆட்கள் தேவை, போக்குவரத்து மற்றும் பொருள் மாற்று பரிமாற்றம், புதிய பொருள் வாங்கும் செலவு என பிற உற்பத்திகளும் குறையும். ஆக வரும் ஆறு மாதத்தில் ஜிடிபி குறைந்து போகும்.

இது பெரிய பணக்கார்ர்களை பாதிக்குமா ? இல்லை! ஏன் பணக்கார்ர்கள் சேமிப்பு அதிகம், பொருள் மாற்றுவது குறைவு என்று பகுதி 2 ல் பார்த்தோம். நடுத்தர, ஏழை மக்கள் தனி நபராக குறைவாக வாங்குனாலும் கூட்டாக பொருட்களை அதிகமாக மாற்றுகிறார்கள்.

வசதி படைத்த வங்கி தேவை உள்ள தளங்களில் உள்ளவர்களின் விற்பனை எந்தளவிலும் பாதிக்கபடபோவதில்லை. ஏனெனில் அங்கே பொதுவாக வாங்குவோர் இணைய , டெபிட் கேரிடெட் வசதி வைத்தே வாங்குவர். ஆனால் சிறு தொழிலும், மூல பொருட்கள், போக்குவரத்து, உற்பத்திநிறுவனங்களும், ரோட்டோர கடைகார்ர்களும், சிறு வணிக நிறுவனங்களும் என அதிக பொருள் வாங்கும் இடம் பாதிக்கப்படும். ஆக ஜிடிபியின் பாதிப்பது இணையத்தில் எழுத முடியாத ஏழை, நடுத்தர மக்களுக்கே அதிகம் ! நாட்டிற்காக தியாகம் செய்ய சொல்லும் மக்களுக்கு பெரியபாதிப்பு இல்லை !

சரி இதன் செலவு எவ்வளவு , எவ்வளவு கருப்பு பணம் பிடிக்கப்படும், நீண்டகால அடிப்படையில் என்னவாகும், இதன் தீர்வு தான் என்ன......

பார்ப்போம்...

பேரழிவு (15) - டெக்னாலஜியை எதிர்க்க நான் யார்... என் மீது திணிக்க நீங்கள் யார்...!!!

Saravana Kanth
via facebook
2016-Nov-30
டெக்னாலஜியை எதிர்க்க நான் யார்... என் மீது திணிக்க நீங்கள் யார்...!!!

என் வீட்டில் லேண்ட்லைன் போன் இருந்தது. இப்போது இல்லை. என்னவாயிற்று...? யாரும் இரவோடு இரவாக வந்து லேன்ண்லைன் போனை தூக்கி சென்றுவிட்டார்களா ? இல்ல இனி செயல்படாது என அறிவித்து என்னை செல்போன் வாங்க வைத்தார்களா ? இல்லையே. அலைபேசியின் பயன்பாடுகள், வசதிகள் என்னை ஈர்த்தது உடனே வந்துவிட்டேன்.

என் வீட்டின் சைக்கிள் இருந்தது. இதுவும் அப்படியே யாரும் தூக்கி செல்லவில்லை.. இனி சைக்கிள் இருந்தால் செல்லாது பழைய இரும்பு கடையில் போட்டுவிட்டு.. பைக் வாங்குங்கள் என சொல்லவில்லை.. அதன் உபயோகம் அதனால் கிடைக்கும் பலன் என்னுடைய பொருளாதாரம் பார்த்து இப்போது பைக் ஓட்டுகிறேன். இதுதான் மாற்றம்.

என்னை கேஷ் எகானமிக்கு கொண்டுவரவிரும்பினால்... வசதிகளை கொடு. நாம் சம்பாரித்த பணத்தை நான் எடுக்க வங்கியில் கமிஷன் கொடுக்கிறேன். கொடுத்து எடுத்த பணத்தில் பெட்ரோல் போட்டால் அதற்கும் வரிகட்டுகிறேன். (இதில் 27ரூ. எதற்கு என்றே தெரியவில்லை. காங்/பிஜேபி இரண்டும் அழுத்தமாய் கொள்ளையடிக்கிறது). அந்த வண்டியில் ஹோட்டல் சென்று சாப்பிட்டால் அதற்கும் வரி கட்டுகிறேன். இதில் என்ன கொடுமையென்றால்.. சாலைவரி வண்டி வாங்கும் போதும்.. ஒவ்வொரு முறை சுங்கச்சாவடி கடக்கும் போதும்.. பெட்ரோல் போடும் போது கட்டுகிறேன். ஆனால் நான் தூசுகளின் ஊடாக செல்கிறேன்... இது போக பெரும்பாலான பொருட்களில் 1% கல்வி வரி கட்டுகிறேன். ஆனால் எங்கள் ஊரில் அரசு பள்ளியில் ஆசிரியரே வாறுகாலில் கால்பரப்பி நிற்கிறார்...?

ஆக இதுவரை கட்டுன வரி எங்க ? நீ தூக்கி பணக்காரனுக்கு கடன் கொடுப்ப.. அப்புறம் வைப்டு ஆஃப்... ரைட் ஆஃப்ப்... வராக்கடன்னு கதைவிட்டு கழிச்சிடுவா..? ஆனா என்னோடு ஜூவல்ஸ்லோன் வாங்க வீட்டுக்கு கார் எடுத்து வருவ... எஜூகேசன் லோனுக்கு அடியாள் அனுப்புவ...

200 ரூ பெட்ரோலுக்கு ரூ 37 தண்டமா வரிகட்றேன்... இது கார்டு யூஸ்பண்ணா 11.50ரூ எக்ஸ்ரா கட்றேன்... இது போக அது வேற வங்கி கார்டா இருந்தா... எக்ஸ்ட்ரா புடுங்குவா... இது போக அந்த கார்டுல செய்ற மொத்த செலவுக்கு ஒரு கமிஷன் போடுவா... ? நீ அரசாங்கம் நடத்திரியா இல்லை புடுங்கி திங்கிறியா ?

லண்டன்ல சம்பாத்தியத்தில 60% வரிக்கே போகுதாம். கியூபாவுலயும் அப்படித்தான். ஆனா அங்க வசதி செஞ்சு கொடுத்துட்டு வாங்குறான். இங்கே வசதி செஞ்சுதாரோம்னு வாங்கி... ஒன்னியும் புடுங்கல... இதுல எனக்கு அட்வைஸ் பண்றே...? என்ன செஞ்சிருகனும்...?

கார்டு யூஸ் பண்ணா மொத்தம் இவ்ளோ ரூபாய்க்கு இவ்ளோதான் கமிஷன்.. ஒவ்வொரு கடைக்கும் கமிஷன் இல்லைனு சொல்லியிருக்கணும்...

ஒவ்வொரு வங்கியும்..இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமில்லை.. பிராந்திய மொழிகள்ளையும் பரிவர்த்தனை நடத்தனும் சொல்லியிருக்கனும்...

தவறான பரிவர்த்தனை அல்லது செல்லுபடியாகத பரிவர்த்தனை நடந்தா..7 தினங்களுக்குள் பணம் கொடுக்கப்படும்னு சட்டம் கொண்டுவந்திருக்கனும்

வங்கிகள் அவர்களிடம் வியாபாரக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக கார்டு சுவைப்பிங் மெஷின் கொடுக்க சொல்லி சொல்லியிருக்கனும்... கார்டுல வாங்குனா இவ்ளோ தள்ளுபடி சொல்லிருந்தா அவனே கார்டு யூஸ் பண்ணுவான். நீ என்ன சொல்லித்தர்றது... உன்னோட சுயலாபத்துக்காக நீ அதானிக்கும் பதஞ்சலிக்கும் குனியுறா... எனக்கு 10 ரூ லாபம்னா நானே மாறுவேன்.

இங்கே இன்னும் 2ஜி டவரே இல்லாத கிராமங்கள் உண்டு... மின் வசதி இல்லாத கிராமங்கள் உண்டு.. தினப்படி 500 கூலிக்கு வேலைபார்க்கும் வியாபாரிகள் உண்டு.. அவன் கார்டுக்கு வா கார்டுக்கு வானா...யாரு லூசு. நீங்கதான்.

இப்ப என்ன நடந்திருக்கு... பேங்க் இதுவரைக்கும் கொடுத்த எந்த கடனும் வரல

தொழில்கடன் கொடுத்தது வரவே இல்லை (ஏன்னா அவங்கட்ட வாங்கி தின்னுருக்கோம். அதுனால கேட்க முடியல)

எஜூகேஷன் லோன் கேட்க முடியல (ஏன்னா நாம தான் கல்வி வள்ளல வளர்த்தோம்... அவன் எல்லாரையும் அரைகுறைய படிக்க வச்சி...ரோட்ல விட்டுட்டான். அவனுக்கு வேலை கொடுக்க உங்களுக்கு வக்கு இல்லை. கொடுத்த கடன கேட்க முடியல)

விவசாயகடன் வரல (உங்களோட கேவலமான தண்ணீர் அரசியல் ஒட்டரசியல்ல சிக்கி அவன் ஒன்னு தூக்கு மாட்டி செத்துபோறான்... இல்லை நிலத்தை வீடுகட்ட வித்துறான்)

இப்படி இதுவரைக்கும் இந்த தேசத்தில் அத்தனை கோடி மக்களிடம் வாங்கிய வரிப்பணத்தை வீணடித்துவிட்டு... வங்கியில் பணம் இல்லாத நிலையை உருவாக்கிவிட்டு... எங்களை மிரட்டி பணத்தை எல்லாம் வங்கியில் போடவச்சிட்டு இப்ப எங்களுக்கு பாடம் நடத்துறீங்க....

போங்கடா.... போலிகளா... இப்பவும் சொல்றேன்.... கணக்கில வராத பணம் எல்லாம் கறுப்பு பணம் சொல்லும் நொன்னைகளுக்கு சொல்றேன்.. குடிகார அப்பனுக்கு ஊதாரி அப்பனுக்கு தெரியாம அம்மா சேகரிச்ச பணம் தாண்டா... அம்மாவோட நகைதாண்டா இன்னைக்கு உங்களுக்கு இப்படி மூளைகெட்டுபோய் பேச வைக்குது . சொந்த மக்கள கூட்டிக்கொடுக்க வைக்குது.

பேரழிவு (14) - கள்ளப் பணம் அல்லவென்று நிரூபிக்க வேண்டும்

துணைத் தளபதி மார்கோஸ்
Via Facebook
2016-Nov-30

பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு முதல் படி. அவசியமானது தான். இந்தப் பொய் திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. பொதுப் புத்தியும் இது ஓரளவு பலன் தரும் என்றே நம்ப வைக்கப் பட்டுள்ளது.

இரண்டரை லட்சத்துக்கு மேலே ஆன டெபாசிட்டுகளுக்கு 85 % வரி. இந்த வரி விதிப்பு எவ்வளவு அயோக்கியத்தனமானது.

இரண்டரை லட்சத்துக்கு மேலே ஆன வருமானத்துக்கு நான் வரி கட்டுகிறேன். இது ஒரு #வருட வருமானத்துக்கு.

இப்போது வங்கியில் கட்டப்பட்ட பணம் மக்களின் ஒரு வருட வருமானமா? வங்கி சாராமல் அவர்கள் சம்பாதித்த வாழ் நாள் பணம் அல்லவா அது? வாழ் நாள் சம்பாத்தியம் தான் என்று மக்கள் எவ்வாறு நிரூபிப்பார்கள். முடியாதே. எப்படி சம்பாதித்தார்கள் என்பதையும் நிரூபிக்க முடியாது. கிராம சந்தைப் பொருளாதாரத்தில் வாழும் மக்கள் தமது வாழ்வையும் பொருளாதார செயல்பாட்டையும் இரண்டாய் பார்க்காதவர்கள். அவர்கள் ஆடிட்டர் வைத்துக் கொண்டு வாழ முடியாது.

ஆடம் ஸ்மித்தின் புனித வரி விதிப்புக் கொள்கையில் முதல் விதி சமத்துவ விதி [ CANON OF EQUITY ]. ஏழைகள் மீது குறைந்த வரியும் பணக்காரர் மீது அதிக விதியும் என்பது அதன் சாரம்.

இது அப்பட்டமாய் மீறப்பட்டுள்ளது.

பல வருடங்களாய் தாம் சம்பாதித்த பணத்தைப் பொது மக்கள் வங்கியில் கட்டியுள்ளார்கள். கட்டிய பணம் எவ்வாறு கிடைத்தது என்று நிரூபிக்க முடியாது. அமைப்பு சாரா தொழிலாளிகள் என்ன நிரூபனத்தைக் கொடுத்து விட முடியும்?

இது தடா சட்டத்தை நினைவூட்டுகிறது. அரசு யாரை வேண்டுமானாலும் தடாவில் கைது செய்து கொள்ளலாம். தான் குற்றவாளி அல்லவென்று கைது செய்யப் பட்டவன் நிரூபித்துக் கொள்ள வேண்டும். அதுவரையும் அவன் சிறையில் இருக்க வேண்டியது தான். கைது செய்த அரசுக்கு எந்த பொறுப்பும் இல்லை. கைது செய்யப்பட்டவர் குற்றவாளியென்று நிரூபிக்கும் பொறுப்பு அரசுக்கில்லை.

அதே போன்று திருவாளர் பொது ஜனம் தான் கட்டியது கள்ளப் பணம் அல்லவென்று தானே நிரூபிக்க வேண்டும். நிரூபிக்கும் வரை அது கள்ளப் பணம் தான்.

காவி பயங்கரவாதம் தனது பொருளாதார பயங்கரவாத முகத்தைக் காட்டியுள்ளது.

Tuesday, November 29, 2016

பேரழிவு (13) - அரசு எனும் சர்வாதிகாரி

Poovannan Ganapathy
Via Facebook
2016-Nov-29

அரசு எனும் சர்வாதிகாரி

  500 ,1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அரசின் சர்வாதிகார அறிவிப்பினை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் நடந்து வரும் உரையாடல்கள் ஒன்றை மிக மிக தெளிவாக உணர்த்துகின்றன.மக்கள் ஆட்சி என்பதனை அடைய நாம் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருக்கிறது என்பது தான் அது.இன்னும் மன்னர் ஆட்சி என்பதையே தான் மக்கள் ஆட்சியாக நம்மில் பெரும்பான்மையானோர் எடுத்து கொண்டு அதற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே கடமை என்று வாழும் உண்மை வேதனையை தருகிறது.

  கடந்த 30 ஆண்டுகளில் அதிகரித்த கல்லூரிகளில் குறிப்பிட்ட சதவீதம் சட்ட கல்லூரிகளாக இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் எழுகிறது.பள்ளி,கல்லூரிகளில் 6 ஆம் வகுப்பு முதல் சட்டம் பற்றிய பாடத்தை கட்டாயமாக்கினால் தான்  நாம் மக்கள் ஆட்சியை நோக்கி முன்னேற முடியும்.அப்படி செய்ய தவறினால் மக்கள் ஆட்சி என்ற பெயரில் மன்னர் ஆட்சியையே நாம் ஏற்று கொண்டு அடிமையாக வாழும் நிலை தான் தொடரும்.

  மக்கள் ஆட்சியில் பிரதமர்,மத்திய அமைச்சரவை,பாராளுமன்றம்,எதிர்க்கட்சிகள்,,சட்டமன்றம்,மாநில முதல்வர் ,மாநில அமைச்சரவைக்கு,ரெசெர்வ் வங்கி ஆளுநர்,அவர் உரிமைகள்,ரெசெர்வ் வங்கி ஆளுநர்,துணை ஆளுநர்களின் தன்னாட்சி உரிமைகள் என்று எதையும் அறியாமல் தான் பெரும்பான்மை மக்கள் வாழ்கிறார்கள்.அடுத்து பிரதமர் என்ன சர்வாதிகார அறிவிப்பு போகிறார் என்று மெத்த படித்தவர்கள் முதல் படிக்காத மக்கள் வரை சமூக ஊடகங்களில் குறுந்செய்திகளாக பரப்புவதில் இருந்து தேநீர் கடைகளில் அலசி தள்ளுகிறார்கள்.

31 சதவீதம் வோட்டு வாங்கிய (99 சதவீதம் வோட்டு வாங்கிய கட்சியாக,தலைவராக இருந்தாலும் )கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ன வேண்டுமானாலும் யாரையும் ஆலோசிக்காமல்,அனுமதி பெறாமல் ,எந்த துறையிலும் தலையிட்டு தன்னிச்சையாக முடிவுகளை அறிவிக்க உரிமை உண்டு என்று ஆழமாக நம்புகிறார்கள்.மன்னரின் தொடர்ச்சியாக தான் மக்கள் ஆட்சியின் பிரதமர் பதவியை பார்க்கிறார்கள்.543 உறுப்பினர்களில் பாதிக்கு மேலான உறுப்பினர்கள் இருந்தால் எந்த கழுதையும் பிரதமராக முடியும்.அவர்களின் ஆதரவு போய் விட்டால் உலகிலேயே சிறந்த அறிவாளி,நல்லவர்,நிர்வாகியாக இருந்தாலும் அவரின் பதவி  போய் விடும் என்பது தான் நம் மக்கள் ஆட்சியின் அடிப்படை.

   சட்ட்டங்களை தனி நபர்கள் இயற்ற முடியாது. தண்டனைகளை தனி நபர்கள் அதிகரிக்க முடியாது.புதிதாக தண்டனைகளை உருவாக்க முடியாது.மக்களுக்கு கட்டாய மை வைப்பேன்,மொட்டை அடிப்பேன் என்று ஆணவமாக ஆட முடியாது  என்ற அடிப்படைகளை கூட நம்ப மறுக்கும் நிலையில் தான் பெரும்பான்மை மக்கள் 2016 யிலும் உள்ளனர் என்பது மிகவும் வருத்தம் தரும் ஒன்று.

  அரசின் நிர்வாகத்தில்  திடீர் ஆச்சரியம்,அதிர்ச்சி என்பதே மக்கள் ஆட்சியில் கிடையாது என்ற அடிப்படை உண்மையை மிக மிக பெரும்பாலோர் கூட புரிந்து கொள்ள மறுப்பதை விட அடிமைத்தனமான சிந்தனை என்ன இருக்க முடியும்.மக்கள் ஆட்சி என்பதே கூட்டு முடிவு தான்.நான் கல்லூரி மாணவர் சங்கத்தில்,கல்லூரிகளின் கூட்டு மாணவர் சங்கத்தில் மருத்துவர்கள் சங்கத்தில்,முன்னாள் ராணுவத்தினர் சங்கத்தில்.கூட்டுறவு சங்கத்தில்,முன்னாள் மாணவர் சங்கத்தில் ,வாழும் குடியிருப்போர் நலன் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன்.இதில் பதவிக்கு பல குழுக்கள் போட்டி போடும்.ஒரு குழு ஒரு வோட்டிலோ அல்லது ஆயிரம் வோட்டு வித்தியாசத்திலோ வெற்றி பெற்று பதவிகளை பெரும்.பதவிகளை பெற்ற குழு என்ன பணிகளை செய்யலாம் என்று தெளிவான விதிமுறைகள் உண்டு.அனைவரையும் பாதிக்கும் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம் எதிலுமே கிடையாது.வெற்றி பெற்ற குழுவின்,தனி நபரின் உரிமைகள் எதுவும் தோல்வி பெற்ற உறுப்பினர்களை ஆதரித்த மக்களுக்கு எதிராக கிடையாது.அனைவருக்கும் பொதுவாக தான் வெற்றி பெற்ற மனிதர் செயல்பட வேண்டும்.

  போர் புரிய எடுக்கும் முடிவாக இருந்தாலும் அனைத்து கட்சிகளின் ஆலோசனை மற்றும் ஒப்புதலின் பேரில் தான் மக்கள் ஆட்சியில் அண்டை நாடுகளின் மீது போர் அறிவிக்க முடியும்.மனு நீதியில் ஒரு குடும்பம் நன்றாக இருக்க ஒருவரை பாலி கொடுக்கலாம் ,ஒரு ஊர் நன்றாக இருக்க ஒரு குடும்பம் பலி கொடுக்கலாம் ,ஒரு நாடு வெற்றி பெற ஒரு கிராமம் பலி கொடுக்கலாம் உண்டு.அது கொடுங்கோல்,சர்வாதிகார மன்னர் ஆட்சிக்கு பொருந்தும்.கண்டிப்பாக மக்கள் ஆட்சிக்கு பொருந்தாது.

இங்கு மனு நீதியே திருப்பி போடப்பட்டு ஒரு மனிதர் வெற்றிக்காக,போலி பிம்பத்துக்காக  நாடே சிரமத்தில் ஆழ்த்தப்படலாம்,எந்த தவறும் செய்யாத பல கோடி மக்கள் தண்டிக்கப்படலாம்,பணிகளை செய்யும் தொழிலை இழக்கலாம் என்று சொல்வது நியாயமா என்று கூட சிந்திக்காத பெரும்பான்மை மக்கள் தான் இன்றும் உள்ளனர்.

பிரதமர் என்னுடைய மருத்துவ பணியில்,வீட்டில் நான் வாழும் வாழ்க்கையில்,சமூகத்தில் நான் வாழும் வாழ்க்கையில் திடீர் என்று தன்னிச்சையாக இவை குற்றம்,செல்லாது என்று அறிவிக்க முடியுமா.குறிப்பிட்ட  மக்களுக்கு மருத்துவம் பார்க்காதே,சான்றிதழ்கள் வழங்காதே என்று கட்டளை இட முடியுமா .அப்படி சொன்னால் கூட சுயமரியாதை உள்ள யாராவது அதை கேட்பார்களா .பெருகி கிடைக்கும் கோடிக்கணக்கான வழக்குகளை தீர்க்க பிரதமர்  நீதிபதிகளுக்கு,வழக்கறிஞர்களுக்கு கட்டளையிட முடியுமா .அப்படி சொன்னால் அவர்களின் அடிப்படை உரிமைகளில் ,அவர்களின் பணி தரும் உரிமைகளில் சர்வாதிகாரமாக தலையிட்டால் ஒருவராவது ஏற்று கொள்வார்களா

  வழக்கறிஞர் பணிக்கும்,மருத்துவர் பணிக்கும் வங்கி பணிக்கும் என்ன வித்தியாசம் ,முன்னதில் இருக்கும் சுயமரியாதை,சர்வாதிகாரத்தை எதிர்க்கும் குணம்,தங்கள் பணியின் அடிப்படையான அவர்களின் வாடிக்கையாளர் நலன் போன்றவற்றை தூசி போல உதறி தள்ளி  அரசு உட்கார சொன்னால் உருளும் நிலையில்வங்கி அதிகாரிகள்  இருக்க முக்கிய காரணம் ஏதுவாக இருக்க முடியும் (ஊடகங்களை பற்றி எமெர்ஜெண்சி கொண்டு  வரப்பட்ட போது சொல்லப்பட்ட உவமை).இந்தியாவில் உள்ள பணிகளில் inclusiveness மிக மிக குறைவாக உள்ள பணி வங்கி பணி தான்.பேருக்கு 1950 முதல் SC /ST பிரிவை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு,1994  முதல் ஓபிசி பிரிவினருக்கு இருந்தாலும் வங்கி உயர் அதிகாரிகளில் 100 இல் 95 சதவீத பணிகளில் இருப்பவர்கள் இடஒதுக்கீடு பெறாத சாதிகளை சார்ந்தவர்கள் தான்.

   தன் மகன்/மகள் திருமணத்துக்காக,புதுமனை கட்ட/புகுவிழாவிற்காக ,வெளிநாடுகளுக்கு மேற்படிப்பு செல்ல,பணி ஓய்வு விழாக்கள் நடத்த,பிறந்தநாள் விழா கொண்டாட,குடும்ப உறுப்பினர் இறப்பு தொடர்பான நிகழ்வுகளுக்காக,மருத்துவ செலவுகளுக்காக ,தொழில் நடத்த ,பிறருக்கு உதவ தன் பணத்தை எடுக்க இருக்கும் ஆயிரம் தடைகளை அவர்களுக்கு பணி செய்ய பணியில் அமர்த்தப்பட்ட வங்கி அதிகாரிகள் போடுவதை விட அறமற்ற செயல் வேறு உண்டா.வங்கி அதிகாரியாக அவருக்கு இருக்கும் அதிகாரத்தின் படி ஐந்து லட்சம் கொடுத்தால் ,ஐம்பதாயிரம் கொடுத்தால் அது சட்டப்படி குற்றம் கிடையாது என்பதை உணர்ந்தும் , கெஞ்சும் வாடிக்கையாளர்களை கிள்ளுக்கீரையாக நடத்துவது சரியா என்ற எண்ணத்தை கூட வரவிடாமல் செய்வது எது.

  இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை,மக்கள் ஆட்சியின் அடிப்படைகளை  மக்கள் ஓரளவிற்கு புரிந்து கொள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு இன்றியமையாதது என்பதை தான் வங்கி அதிகாரிகளின் நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்துகின்றன.எளிதாக கடன் கிடைக்கும்,வங்கி அட்டைகளை பயன்படுத்தும் குழுக்கள் அவற்றை தொடாத மக்களை பார்த்து கைகொட்டி சிரிப்பதின் பின் உள்ள வன்மத்தின் காரணம் இது தானோ .1976 இல் நீதித்துறை வளைந்தததின் ,ஊடகங்கள் உருண்டதின் பின் உள்ள காரணம் இதுவாக தான் இருக்க முடியும்.

  பழங்குடி உறுப்பினரின் பசுவதை தடைக்கு எதிரான வாதங்களை,ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுக்கு எதிரான ஹிந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த சிலரின் வாதங்களை சிறிது கொண்டே புறந்தள்ளிய அரசியல்நிர்ணய சபையின் பெரும்பான்மை (அங்காவது பெரும்பான்மை உறுப்பினர்கள் ,இங்கே தனி மனிதர்)பின் உள்ள காரணம் அடுத்தவர் மீதுள்ள வெறுப்பும்,தன் உடை,உணவு,சடங்குகள்,பண பரிமாற்றம் உயர்ந்தது என்ற எண்ணம் தானே.

    அனைவரையும் தன் வழிக்கு கட்டாயப்படுத்தி கொண்டு வர வேண்டும் என்பதை எதிர்க்கும் உரிமை தான் மக்கள் ஆட்சி.தங்களுக்காக பணி செய்ய உள்ளவர்கள் தான் பிரதமர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,முதல்வர்,காவல்துறை அதிகாரிகள்,நீதிபதிகள்,வங்கி அதிகாரிகள்.இதை  மக்கள் உணர்ந்து கொள்ள  ,உணர்ந்து கொண்டு போராட அவர்களுக்கு வேண்டியது சுயமரியாதை,சுயமரியாதை,.

பேரழிவு (12) - plastic money கட்டுமான வசதி

அனுஷ்
Via Facebook
2016-Nov-28

மோடி அரசும் அதனுடன் இயங்கும் இந்த அதிகார அமைப்பும் ஒரே நேரத்தில் அடித்தட்டு மக்களை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குகினறனர். வங்கி பரிவர்த்தனைகள் பற்றி தெரியாமல் இருப்பது மிகப்  பெரிய பாவமாகவும் முட்டாள்தனத்தின் உச்சமாகவும் மக்களை நம்புபடி பிரச்சாரம் செய்கினறனர். எல்லாவற்றையும் மாற்றியமைக்கிறோம் என்கிற பெயரில் இதை பற்றி புரிதல் இல்லாத கோடான கோடி மக்களின் மீது  வன்முறையாக தங்களின் அமைப்புக்குள் வரும்படி இழுக்கின்றனர்.

e- Governence, e -transations னை  செயல்படுத்தும் முன்னால் எத்தனை சதவிகித மக்கள் அதனை பயன்படுத்துகினறனர், அதை பற்றிய புரிதலுடன் உள்ளனர் என தெரியாமல் ஒரே இரவில் எல்லோரையும் அதை நோக்கி நகர்த்துவது வன்முறை இல்லாமல் வேறென்ன.

அடிப்படை கட்டமைப்பை மாற்றாமல்  மக்களிடம் வலுக்கட்டாயமாக நீங்கள் இதனை பழகி கொள்ளுங்கள் எனச்சொல்ல அரசுக்கு என்ன உரிமை உள்ளது. என் தேவைக்காக நான் செயல்படுவதும் உங்கள் திட்டமிடலை நோக்கி என்னை இழுப்பதுற்குமான வித்தியாசம் பாரதூரமானது .   

நம் பணத்தை வங்கி பெற்றுக் கொள்கிறது. பின் அதன் நம்பகத்தன்மையை நாம் கேள்வி கேட்பது தேசவிரோதம் என இந்த அமைப்பு சொல்கிறது. நாட்டில் எத்தனை அமைப்பு சாரா தொழிலார்கள், தினக் கூலிகள், இடப்பெயர்வு தொழிலார்கள் உள்ளனர் என சரியான கணக்கீடு அரசிடம் இல்லாத போது இவர்களுக்கு இத்திட்டத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை பற்றி யார் கணக்கீடுவது.

எல்லோரிடமும் கைபேசி உள்ளமையால் அது  எப்படி நாட்டின் வளர்ச்சியுடன்  ஒப்பிடமுடியாதோ அது போலவே எல்லோரையும் வங்கி பரிவர்த்தணைக்குள் கொண்டு வந்தால் கருப்பு பணத்தை ஒழித்து விடலாம் என எண்ணுவதும் ஒன்றுதான்.

இன்னும் 50 நாள் பொறுத்திருங்கள், 50 நாள் பொறுத்திருங்கள் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள்.ஆனால்  கடைசி வரை அந்த ஐம்பதாவது நாள் வரவே வராது என்று உங்களை போலவே நாங்களும் நன்கறிவோம்.  

கருப்பு பணத்தை ஒழிப்பதில் எங்களுக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் அதனை வைத்திருப்பவர்கள் உங்கள் பாதுகாப்பில் இருப்பதனால் இதை ஒழிப்பேன் என்று நீங்கள் கூறும் இந்த நாடகத்தினை மக்கள் முன்  நீண்ட நாட்கள்  நடத்த முடியாது.

Monday, November 28, 2016

பேரழிவு (11) - மரணங்கள்

டான் அசோக்
Via Facebook
2016-Nov-29

மோடி செய்தது பொருளாதார ரீதியில் சரியா தவறா என்பதையெல்லாம் கூட விடுங்கள்.  நான் கேட்பது மிக மிக மிக எளிமையான கேள்விகளை தான். 

அரசின் அவசரக் குடுக்கைத்தன ஆணையினால், ஏற்பாடுகளை ஒழுங்காகச் செய்ய வக்கற்ற தன்மையினால்  70க்கும் அதிகமான ஏழை/வயதான குடிமக்கள் க்யூவில் மரணித்திருக்கிறார்கள். 

1) அந்த 70 பேரில் அம்பானி குடும்பத்தையோ அதானி குடுபத்தையோ சேர்ந்தவர்கள் யாராவது இருந்திருந்தால் இந்த அரசும், அரசுசார் ஊடகங்களும் இப்படியேதான் அதை பாராமுகமாக எதிர்கொள்ளுமா?

2)இந்தியாவில் இப்போது நடப்பதை போல Govt sponsored மரணங்கள் வேறெதாவது ஜனநாயக நாட்டில் நடந்திருக்கிறதா?  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என தேசபக்தர்களுக்கு பிடிக்காத தேசங்களில் கூட Govt sponsored deaths என்பதை கேள்விப்பட்டதே இல்லையே!!  ஹிட்லர் காலத்தில் குளிக்கலாம் வாருங்கள் என யூதர்களை அழைத்துப்போய் விஷவாயுவை ஷவர் வழியாக திறந்துவிடுவார்கள்.  இங்கே தேசநலன் என்ற பெயரில் கியூவில் நிற்க வைத்து சாகடிக்கிறார்கள். 

3)ஒரு தவறும் இழைக்காமல், பென்சனையும், சேமிப்பையும் எடுக்கச் சென்ற ஏழைகளும், முதியோர்களும் செத்து மடிவதை நாட்டின் முன்னேற்றத்திற்காக என தேசபக்தர்கள் நியாயப்படுத்துவதற்கும், அப்பாவிகளை குண்டு வைத்து கொன்றுவிட்டு புனிதப்போருக்காக என்றும், பெரிய காரணத்திற்காக சிறிய இழப்பு என்றும் தீவிரவாத இயக்கங்கள் நியாப்படுத்துவதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?  இனி தீவிரவாத இயக்கங்களை குறை சொல்லும் தார்மீக உரிமை அரசுக்கு இருக்கிறதா?

4) விபத்தினால், நோயினால், பயங்கரவாதத்தினால் என வேறுஎந்த வகையிலும் மக்கள் உயிர் விடுவதை என்னால் வருத்தத்துடன் ஏற்க முடிகிறது.   ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கும் மரணங்களுக்கு அரசும், அரசின் ஆணையும் காரணமாக அமைவதை ஒருக்காலும் ஏற்க முடியாது. 

5)மனித மரணங்களின் வேடிக்கையே அவை அடுத்தவன் வீட்டில் நிகழும் போது நம்மை பெரிதாக பாதிப்பதில்லை என்பதுதான்.  அரசின் அடாவடியால், திட்டமிடாமையால் உயிரிழந்த இந்த 70 பேரும் நம்மைப் பொறுத்தவரை ஒரு செய்தி.  அதனால்தான் அம்மரணங்களை நம்மால் எளிதாக கடந்துபோய்விட முடிகிறது.  அதனால்தான் நம்மில் சிலரால் அரசின் இந்த மடமையை, சாடிச போக்கை மனசாட்சி இல்லாமல் நியாயப்படுத்த முடிகிறது.  இந்த 70 பேரில் ஒருவரை உங்கள் அப்பாவாகவோ, அம்மாவாகவோ, சகோதரனாகவோ, தாத்தா-பாட்டியாகவோ கற்பனை செய்து பாருங்கள்.  இப்படியா ஆதரவளித்துக் கொண்டிருப்பீர்கள்? இன்று மோடிக்கு ஆதரவாக நீட்டிமுழக்கும் எச்.ராஜா வீட்டிலேயோ, எஸ்.வி.சேகர் வீட்டிலேயோ அல்லது அவரது ஆதரவாளர்கள் யாரின் வீட்டிலோ இப்படியோர் மரணம் நிகழ்ந்தால் இப்படியா ஆதரித்து பேசிக் கொண்டிப்பார்கள்?  முதல் ஆளாக வெறிகொண்டு எதிர்த்திருப்பார்களா இல்லையா?

6) பணக்காரர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வார்கள்.  ஏழைகளைக் காப்பாற்றத்தான் அரசு.  ஆனால் 4% பெரும் பணக்காரர்களை குறிவைத்து தாக்கி பணத்தைக் கைபற்ற வக்கில்லாமல், ஒட்டுமொத்தமாக எல்லோர் மீதும் ஆசிட் மழையை திறந்துவிட்டிருக்கிறது அரசு.  அதிலும் டெபிட் கார்டு/க்ரெடி கார்டு, மேலைநாட்டு வாசம் என பாதுகாப்பான கூரைகளில் ஒதுங்கி இருக்கும் 20% மக்கள், கூரைகளின்றி கருகிக்கொண்டிருக்கும் 80% மக்களைப் பார்த்து நாட்டுக்காக பொறுத்துக்கொள்  என்கிறார்கள்.  இதைப் போல ஒரு மனசாட்சியற்ற குடிமக்கள் வேறெந்த நாட்டிலாவது இருப்பார்களா?

7) மக்களே மக்களை ஆளுவதுதான் ஜனநாயகம்.  அரசர்களின், சர்வாதிகாரிகளின் ஒற்றை ஆள் முடிவுகளால் மனித இனம் பட்ட இன்னல்களில் இருந்தெல்லாம் கற்றுதான் ஜனநாயக ஆட்சிமுறைக்கு மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது.  மக்கள் உழைத்துச் சேர்த்த பணத்தை மக்கள் எடுக்கமுடியாது என சர்வாதிகாரத்தனமாக ஆணையிடுகிறார் மோடி.  நியாயமாக நமக்கு சூடு, சுரணை வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. 

70 பேர் இறந்ததற்கு கொஞ்சம் மனிதாபிமானமாவது எட்டிப் பார்த்திருக்க வேண்டும்.  குஜராத்தையே இலேசில் ஊதிவிட்ட நமக்கு அதுவும் இல்லை.

எனது இந்தப் புலம்பலுக்கும் கூட நாலு பேர் வந்து மோடி ஆதரவு பதில்களைத் தருவார்கள்.  ஆனால் ஒன்றே ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  அநியாயம் செய்கின்றவர்கள் வரலாற்றில் தீயவர்களாக பதிவு செய்யப்படுவார்கள்.  ஆனால் களங்கம் அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்கள் மீதே அதிகம் படிகிறது. 

-டான் அசோக்.

பொருளியல் 2 - narrow/broad money

Chochalingam Murugaiyan
Via Facebook
2016-Nov-28

https://m.facebook.com/story.php?story_fbid=10154732075043735&id=517973734

நீங்கள் 100 ரூபாய் எடுத்துக்கொண்டு வெளியே போகிறீர்கள். உங்கள் மனைவி ஆரஞ்சு வாங்கிவர சொல்கிறார், உங்கள் மகன் சாக்கிலேட் வாங்கி வர சொல்கிறார் என்று வையுங்கள்

முதல் சினாரியோ : நீங்கள் பன்னாட்டு நிறுவன குளிரூட்டு பழ நிலையத்திற்கு போகிறீர்கள். அங்கு ஒரு கிலோ ஆரஞ்சு 100 ரூபாய் என்று சொல்கிறார்கள்.  வாங்கிவிட்டீர்கள் ஆனால் மிட்டாய் வாங்க காசு இல்லை .

இந்த நிறுவனம் பழம் கொள்முதல் செய்த விலை 40 ரூபாய் என்று வையுங்கள், அவர்கள் பிக்சட் செலவு 20 ரூபாய் என்று வைத்தால் அவர்கள் லாபம் 40 ரூபாய்.

இரண்டு : நீங்கள் இந்திய குளிரூட்டு காய்கறி பழ அங்காடிக்கு போகிறீர்கள். பழ விலை 80 ரூபாய். நீ்ங்கள் ஒரு கிலோ வாங்கிவிட்டு மகனுக்கு 2 பத்துரூபாய் மிட்டாய் வாங்கி வருகிறீர்கள்.

இந்த கடை கொள்முதல் விலை 50 ரூபாய், கட்டாய நிர்வாக செலவு 25 ரூபாய் என்றால் லாபம் 25 ரூபாய்.

மூன்று : நீங்கள் தெரு பழக்கடைக்கு போகிறீர்கள் , பழவிலை 60 ரூபாய், இப்போது நீங்கள் 60 ரூபாயக்கு பழம் வாங்கி 20 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கி, மிச்சம் உள்ள 20 ரூபாய்க்கு புத்தகம் வாங்கி போவீர்கள். இல்லை என்றால் அந்த 20 ரூபாய் பல செலவுகளை சேமித்து பிடித்த பொருள் வாங்குவீர்கள்

பழ விலை 30 ரூபாய்., நிர்வாக கட்டாய செலவு 20 ரூபாய் கடைகாருக்கு 10 ரூபாய் லாபம்

நீங்கள் குறைவான நிர்வாக கட்டிணம் உள்ள, செலவு உள்ள இடத்தில் பொருள் வாங்கும் போது உங்களின் மொத்த வாங்கும் திறன் அதிகரிக்கிறது. விலை அதிகமாக கொடுத்து வாங்கும் போது வாங்கும் திறன் குறைகிறது.

அதே போல் உங்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும் போது ஒரு நூறு ரூபாய் பல ரூபாயாக பலரிடம் கைமாறுகிறது. அதுவே நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்க உங்கள் வாங்கும் திறன் குறைய பணம் சில இடங்களில் மட்டும் இருப்பை சுருக்கிக்கொள்கிறது.

பழத்தின் விலை போக, கட்டாய நிர்வாக செலவு போக லாபம் வேறுவேறாக இருந்தால் வாழ்க்கைதரம் வேறுவேறாக இருக்கும். தெருவோர கடைகார்ர் வாழ்க்கை தரம், நடுத்தர பழக்கடை அண்ணன் வாழ்க்கை தரம், பெரிய சூப்பர் செயின் உள்ள ஒருவரின் வாழ்க்கை தரம் வேறு வேறாக இருக்கும். செலவை போல் சேமிப்பும் இருக்கும். சிறு கடைகார்ர் ஐந்து ராய் சேமித்தால் அடுத்த பெரிய கடை நடத்துபவர் 15 ரூபாய் சேமிக்கிறார், பெரும் கார்பரேட் முதலாளி  25 ரூபாய் சேமிக்கிறார்

இந்த சேமிப்பு வங்கியில் முடங்கிவிடுகிறது. அதாவது நீங்கள் கொடுத்த 100 ரூபாய் பெரும் கார்பரேட்டிம் போக 25ரூபாய் முடங்கி 75 ரூபாய் வெளியேபோகிறது, நடுத்தர கடையிடம்போக 15 ரூபாய் முடங்கி 85 ரூபாய் போகிறது, தெருவோர கடைகார்ரகள் பலரிடம் போக 5 ரூபாய் சேமிப்பு போக 95 ரூபாய்புழக்கத்தில் போகிறது.

இந்த 75,85,95 ரூபாய் கொண்டு அவர்கள் பொருள் வாங்க அது 60,70,80 பின் 45,55,65 பின் 30,40,50 அதன் பின் 15,25,35 பின் 0,15,25 பின் 0,0,10 என மாறுகிறது.

ஆக வசதி குறைந்தவரிடம் போகும் பணம் பல முறை சமூகத்தில் சுற்றுகிறது. பல பொருட்களை மொத்த விலை அடிப்படையில் அந்த பணம் வாங்குகிறது. அதுவே வசதி மிகுந்தவரிடம் செல்லும் பணம் குறைவாக புழங்குகிறது மிச்சது வங்கியில் டெபாசிட்டாக இருக்கிறது.

இது தான் பேஸ். RBI இணையத்தில் போய் பார்த்தால் தற்போது மக்களிடம் புழக்கத்தில் 16 லட்சம் கோடி இருப்பதாக சொல்கிறார்கள், ஜிடிபி 150 லட்சம் கோடி, நாம் ஏற்கனவே படித்த கேஷ் வெலாசிட்டி 1.3 அப்ப மிச்ச கோடிகள் எங்கே ?

கையில் புழங்கும் காசு தவிர மிச்சதெல்லாம் எங்க இருக்கும் ? வங்கியில் இருக்கும், தபால் சேமிப்புகணக்கில் இருக்கும் (வங்கிகள் விரிவடைய தபால் அலுவலகம் பக்கம் யாரும் போறதில்லை) இன்றைய நிலையில் 16 லட்சம் புழக்கத்தில் பணமாக இருக்கு, 10 லட்சம் கோடி டிமான்ட் டெபாசிட்டாக இருக்கு . அது என்ன டிமான்ட் டெபாசிட் ? நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள கூடிய ஏடிஎம், செக் மூலம் எடுத்துக்கொள்ள கூடிய வங்கி பேலன்ஸ் பணம், நாள் முடிவு டெபாசிட் இது எல்லாம் டெமான்ட் டெபாசிட். அடுத்து கிட்டத்தட்ட 90 லட்சம் கோடி வைப்பு தொகையாக - பிக்சட் டெபாசிட்டாக இருக்கு. ஆக மொத்தம் 115 லட்சம் கோடி.

ஆக 150 லட்சம் கோடி ஜிடிபி அதாவது பொருள் மற்றும் சேவை விற்பனையை 115  லட்சம் கோடி பணம் பெற்று தந்து உள்ளது. கிட்டத்தட்ட 1.3 மடங்கு பணம் தன் பங்கைவிட அதிகமாக பரிமாறப்பட்டுள்ளது.

இதில்  மக்கள் மற்றும் நிறுவனங்கின் கையிலிருக்கும் பணம் வெறும் 25/லட்சம் கோடிதான் (கையிருப்பு + வங்கி டிமான்ட் இருப்பு ) இந்த 25 லட்சம் கோடியை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் . இது லிக்விட் பணம் அதாவது எளிதில் எடுத்து மாற்றி பொருள் வாங்க உதவும் பணம். இதை தான் M1 என்று சொல்கிறார்கள். அதாவது narrow money அதாவது உடனடியாக எடுக்கக்கூடிய பரிமாற்றம் செய்யக்கூடிய பணம்.

இதனுடன் நீண்டகால வங்கி இருப்பை சேர்த்தால் வரும் 115 லட்சம் கோடி மொத்தமாக வங்கியிலும் கையிலும் மக்கள்+ நிறுவனங்கள் வைத்து உள்ளார்கள். இந்த வங்கி மற்றும் கையிருப்பு பணத்திற்கு பெயர்  M3. அதாவது மொத்தம் உள்ள மக்கள் மற்றும் நிறுவனங்களின் கைஇருப்பு மற்றும் வங்கி இருப்பு பணம் (நீண்டகால இருப்பும் சேர்த்து) இதற்கு பெயர் broad money.

வேறு எங்கெல்லாம் பணம் இருக்கும் ? ஆர்பிஐ தன்னிடம் குறைந்தபட்சம் இவ்வளவு பணம் தன்னிடம் வைக்க வேண்டும் என்று வங்கிகளிடம் சொல்கிறது இந்த பணம் தனி, இன்னபிற வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் ஆர்பிஐயிடம் வைத்திருக்கும் பணம் என வேறு பண இருப்புக்கள் உண்டு.

Reserve money என்றால் என்ன  மக்கள் + நிறுவனங்களிடம் கையிலிருக்கும் பணம் + உடனடியாக எடுக்ககூடிய வங்கியில் உள்ள பேலன்ஸ் அல்லது உடனடியாக எடுக்ககூடிய பணம் ( நீண்ட கால டெபாசிட் சேர்க்க கூடாது )+ RBI இருப்பு என மொத்தமாக உடனடி புழக்கத்தில் உள்ள + ஆர்பிஐயிடம் உள்ள பண இருப்பு தான் ரிசர்வ் மணி. குறைந்த காலத்தில் இந்த பண இருப்புகளை உடனடியாக எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். அதாவது வங்கிகளிடம் பண இருப்பு கூடினால் (இப்போது போல்) ,RBI வங்கி RBIயிடம் அதிகமான பணத்தை வைக்க வேண்டும் என்று சொல்லும் அப்படி சொல்லி புழக்கத்தில் உள்ள பணத்தை குறைக்கும் அல்லது சரி செய்யும் அதுவே புழக்கம் குறைந்தால் RBI, தன்னிடம் வங்கிகள் கட்டாயமாக வைக்க வேண்டிய பண அளவை விகித்ததை குறைத்துக்கொள்ளும். இதனால் RBI யிடம் இருந்த பணம் வங்கியில் வரும் அதாவது புழக்கத்தில் வரும். இந்த RBIயிடம் வங்கிகள் கட்டாயமாக வைக்கும் பணம் பெயர் தான் cash reserve ratio.

இவை எல்லாவற்றிற்கும் என்ன சம்மந்தம் ? கையிருப்பு பணம் குறைந்தால் என்னவாகும் ? டிமான்ட் பணம் நீண்ட காலமாக போனால் என்னவாகும்? டிமான்ட் பணத்தை எடுப்பதில் சிக்கல் வந்தால் அரசு கெடுபிடி வந்தால் என்னவாகும்? விற்பனை சிறு நிறுவனங்களில் இருந்து பெரிய நிறுவனங்களிடம் செல்ல பொருளாதாரத்தில் என்ன தாக்கம் வரும் ????

பார்ப்போம்....