Tuesday, November 15, 2016

பேரழிவு 4 - Shankar ji

Shankar ji
Via Facebook
2016-Nov-15

நேற்று வேறு வழியில்லாமல் கையிருப்புக் கரைந்துபோய் ஏ டி எம் வாசலில் வரிசையில் நின்றேன்.

எனக்கு முன்பாக 35 தேச பக்தர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். சுமார் 2 மணி நேரம் பொறுமையாக நின்று 2000 ரூபாய் எடுத்தேன். நூறு ரூபாய் நோட்டுகள். வெளியே வந்தால் வரிசை இன்னும் பெரியதாகிவிட்டிருந்தது.

எஸ் பி ஐ ஏடிஎம் இரண்டில் ஒரு இயந்திரம் மட்டுமே வேலை செய்தது. மூன்றாவதாக இருந்த பணம் பெற்றுக்கொள்ளும் இயந்திரம் செல்லா நோட்டுகளால் நிரம்பி வழிந்து செயலிழந்தது. டெப்பாசிட் செய்ய வந்தவர்கள் முழித்துக்கொண்டிருந்தார்கள். காவலர்கள் அனைவரும் மக்களிடம் பரிவுடன் நடந்துகொண்டார்கள். கடுகளவும் கடுமை காட்டாத காவலர் முகங்களை நேற்றுதான் முதன் முதலில் பார்த்தேன். ஒரு பெரிய மக்கள் எதிர்ப்பை எதிர்நோக்கிய முன்னேற்பாடின் உத்தரவாக இருக்கலாம்.

ஒவ்வொரு நாளும் அன்றாட செலவுக்காக இரண்டுமணி நேரம் ஏடி எம் வாசலில் நின்றால் என் பிழைப்பு என்னாவது என்று ஒருவர் புலம்பிக்கொண்டிருந்தார்.

சில இடங்களில் மட்டும் ஏ டி எம் வேலை செய்கிறது. சில வங்கிகளில் பணம் டெப்பாசிட் செய்ய முடிகிறது, சில வங்கிகளில் செக் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ள சில வங்கிகளில் பணம் மாற்ற முடிகிறது. முழுமையான சேவை எந்த வங்கியிலும் இல்லை.

₹10000 கொடுத்தால் 4 ₹2000 தாளும், ஒரு ₹20 கட்டும் தந்ததைப் பார்த்தேன். அந்த ₹2000 க்கு யார் சில்லறை தருவார்கள்? அந்த சில்லறை எந்த வங்கியில் அல்லது ஏ டி எம்மில் கிடைக்கும் என்ற கேள்விக்கு ஸ்ரீமான் மோடியிடமோ, தேசபக்தர்களிடமோ பதில் இருக்காது.

அந்தக் காசு வாங்கும் கடைக்காரர்கள் முழுத்தொகைக்கும் பொருள் வாங்குங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். எனில் வேறு செலவுகளுக்குக் கையில் பணம் இருக்காது.

ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்து இருக்கும் ஒரு பெண்மணி செக் கொடுத்து பணம் பெற முயன்றார். இருவரும் ஒரிஜினல் ஐடியுடன் வந்து செக் கொடுத்தால் மட்டுமே காசு தரப்படும் என்று கறாரான பதில் வந்தது. அவரு அடிபட்டு ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி இருக்காருங்க என்ற செய்திக்கான பதில் அங்கே இல்லை.

இதுபோன்று கோடிக்கணக்கில் மக்களின் துன்பத்திற்கு அரசு இயந்திரத்திடம் விடை இல்லை. இந்த நிலையை சரியாகத் திட்டமிட்டு தவிர்த்திருக்கலாம்.

பத்து இன்னோவா காரை வைத்து ஆயிரக்கணக்கில் மீட்பு நடவடிக்கை செய்ததை ஒட்டிய தைரியத்தில் இதுபோன்ற ஒன்றை செயல்படுத்திவிட்டார்கள் போல, மைண்ட் வாய்ஸை உண்மை என்று நம்பியதால் நாடு ஸ்தம்பித்ததுதான் மிச்சம்.

தனியார் வங்கி ஊழியர்களே அரசு வங்கி ஊழியர்களை முறியடித்துவிடுமளவிற்கு அவர்கள் புன்னகை காணாமல் போய், பொறுமை க்ரில் செய்யப்பட்டு தீய்ந்துபோனதைக் கண்டேன். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இந்த மாபெறும் பணியில் அவர்களின் பங்கு மகத்தானது.

நான் சென்ற எஸ் பி ஐ ஏ டி எம் பேலியோலெத்திக் காலத்தில் வடிவமைக்கப்பட்டது. எனக்கு முன்பாகப் பணம் எடுத்தவருக்கு ஆற அமர நன்றி சொல்லி முடிக்க முழுதாக 2 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது. அதற்குப் பின் ஒரு ப்ளூ ஸ்க்ரீன். அதற்குப் பிறகு எஸ் பி ஐ கார்டை நுழைத்தால், ஏதேனும் இரண்டு இலக்க எண்ணை அழுத்தவும் போன்ற வழக்கமான திராபையான வழிமுறைகளில் நேரவிரயம் செய்து ஒரு வழியாகப் பணம் எடுக்க அனுமதித்தது. நானே தடுமாறிப் பணம் எடுக்கும் அளவிற்கான வழிமுறைகள். அதிகம் இந்தப்பக்கம் வராத ஒரு கிராமத்து மனிதர் என் செய்வார்?  எவ்வளௌ நேர விரையம்?

இதனை மாற்றி எளிமையாகப் பணம் எடுக்க வழிவகை செய்யாமல் அதற்கான முன்னேற்பாடுகளுக்கு வக்கில்லாமல் இந்த மிகப்பெரிய முடிவினை எடுத்தது முட்டாள்தனத்தின் உச்சம். குறைந்தபட்சம் துரிதமாக பணம் எடுக்கும் அளவிற்கான வழிமுறைகளை ஏ டி எம்மில் செய்திருக்கலாம்.

இந்த இக்கட்டான நேரத்தில் இன்னும் ₹100, ₹50, ₹20 சரியான புழக்கத்தில் இல்லாத நேரத்தில், அவற்றைக் கையாளாத ஏ டி எம்களை வைத்துக்கொண்டு ₹2000 நோட்டு எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்று புரியவில்லை. இது சர்வ நிச்சயமாக என் போன்ற சாமானியனுக்கான நோட்டு அல்ல. இதற்குப் பின்னாலும் ஏதேன மோடிமஸ்தான்  திட்டம் இருக்கலாம். ஆனால், அன்றைக்கும் இந்த ₹2000 நோட்டை வலிந்து திணிக்கப்பட்ட மக்கள்தான் அவதிப்படுவார்கள்.

வரும் காலத்தில் ₹2000 , ₹100 செல்லாக்காசாக அறிவிக்க முன்வந்தால், 30 செகண்டில் பணம் எடுக்க வக்கிருக்கும் ஏ டி எம், எல்லா விதத்திலும் இயங்கும் அளவிற்கான வங்கி வசதிகள், பணப்பட்டுவாடா போன்றவற்றை தயார் செய்துவிட்டுக் களத்தில் இறங்குங்கள் மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் ஏரோப்ளேனில் சுற்றுப்பயணம் செய்யும்போது, நடுவானில் பறக்கும்பொழுது, பெட்ரோல் தீர்ந்துவிட்டது. இனி இந்த விமானம் பறக்காது நாட்டு நலனுக்காக, அந்நிய செலாவணிக்காக இதைப் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் உங்களுக்கு எத்தனைக் கேள்விகள் வருமோ, எவ்வளவு கோவம் வருமோ அதனைவிட அதிகமாக உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களிடம் இருக்கிறது.

இதற்கான காரணம் சொதப்பலான செயல்திட்டம். மோசமான கட்டமைப்பு. இதனை ஒத்துக்கொள்ளாமல் நாட்டு மக்களைப் பார்த்து தேசபக்தி இல்லை என்று சொல்வது அயோக்கியத்தனத்தின் உச்சம். சரியான செயல்திட்டம் இல்லாமல் ஒரு தேசத்தின் மக்களை அவர்களின் ஜீவாதாரத்தை அசைத்து சரியான முன்னேற்பாடுகள் செய்யாதவர்கள்தான் அக்மார்க் தேசத் துரோகிகள் புலம்பும் என்னைப்போன்றவர்கள் அல்ல.

ஜெய் ஹிந்த்.

No comments:

Post a Comment