Wednesday, November 2, 2016

தமிழுக்கு தொண்டு செய்யவேண்டும்

கேள்வி: 
கிளி எனக்கு தமிழுக்கு தொண்டு செய்யவேண்டும் போல இருக்கிறது. திராவிட இயக்கங்கள் செய்ததைபோல பெரிய போராட்டங்கள் நிகழ்த்த திராணியில்லை. அதேபோல என்னால் தமிழின் பெயரில் நடத்தப்படும் இயக்கங்களுக்கு அழ பணமும் இல்லை. நான் என்ன செய்வது?
பதில்: 
பெரிதாக ஒன்றுமில்லை. சுலபமாக செய்யக்கூடிய தொண்டுகளை சொல்கிறேன்.

1) ஏ.டி.எம்களை பயன்படுத்தும்போது தமிழை பயன்பாட்டு மொழியாக தேர்வு செய்து பயன்படுத்துங்கள். தமிழ் இல்லாத, அல்லது தமிழ் வேலை செய்யாத ஏ.டி.எம்களை பற்றி "ஏன் தமிழ் இல்லை?" என்றோ "ஏன் தமிழ் வேலை செய்யவில்லை? என்றோ ஒரு புகாரை தட்டிவிடுங்கள். மிஞ்சிப்போனால் ஐந்து நிமிடம் ஆகும். இதே வேலையை மத்திய அரசு வங்கிகளிலும் செய்யலாம்.
2) வாடிக்கையாளர் சேவை மையங்களை அழைக்கும்போது தமிழை தேர்வு செய்தாலும் ஆங்கில அதிகாரிகளே பெரும்பாலும் பதில் சொல்வார்கள். உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழ் அதிகாரிக்கு மாற்ற சொல்லுங்கள். மிஞ்சிப்போனால் இரண்டு நிமிட காத்திருப்புதான். தமிழ் அதிகாரி இல்லை என்று பதில் சொன்னால் உங்கள் எதிர்ப்பை மிகக்கடுமையாக பதிவு செய்யுங்கள்.
3) சோறு எனச் சொல்வது அவமானம் என கருதும் கும்பல் ஒன்று எப்போதுமே தமிழகத்தில் உள்ளது. எப்போதும் உங்கள் குழந்தைகளிடம். சோறு என்றே சொல்லுங்கள். தக்காளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் அல்ல. தக்காளிசோறு, எலுமிச்சை சோறு, தயிர்சோறு. தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவதை பழகுங்கள், குழந்தைகளுக்கும் பழக்குங்கள்.
4) பள்ளியில் இரண்டாம் மொழியாக இந்தி, சமஸ்கிருதம், பிரஞ்சு மொழியை தேர்ந்தெடுக்காமல் தமிழைத் தேர்ந்தெடுங்கள், தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள். பிறமொழிகளில் தான் அதிக மார்க் வாங்கலாம் என மூடர்கள் சொல்லுவார்கள். உண்மையில் மொழிப்பாடங்களில் 200க்கு 200 வாங்கினாலும் எந்த பயனும் இல்லை. கட் ஆஃப்க்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அது தொப்பை போல தேவையில்லாத ஒன்று.
5) இதுதான் முக்கியமான ஒன்று. தமிழின் பெயரில் உண்டியல் குலுக்கும் எவருக்கும் பத்துபைசா கூட காசு போடாதீர்கள். உங்கள் காசு ஐரோப்பாவில் குடிக்கவும், பாங்காக்கில் காண்டம் வாங்கவும்தான் பயன்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment