Saturday, November 12, 2016

நான் தியாகி அல்ல - ஷாஜகான்

ஷாஜகான்
Via Facebook
2016-Nov-12

நான் தியாகி அல்ல

500/1000 ரூபாய் நோட்டு விஷயத்தில் எதற்காக பீதியைக் கிளப்புகிறீர்கள்? அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்கக்கூடாதா என்று நேற்று ஒரு நண்பர் இன்பாக்சில் கேட்டார். அவர் மோடியின் ஆதரவாளர்தான். அதற்காக அவருடைய கருத்தை நிராகரிக்க மாட்டேன்.

ஆனால் நான் பீதியைக் கிளப்பவில்லை. நிலவரத்தை மட்டுமே காட்டியிருக்கிறேன். இருக்கிற நிலைமையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ரிசர்வ் பேங்க் வழிமுறைகளை எல்லாம் தமிழில் தந்திருக்கிறேன். புதிதாக பல சிக்கல்கள் பிறக்கும்போது அவற்றை விளக்குகிறேன். மற்றபடி, இந்தத் திட்டமே அர்த்தமற்றது, பலனற்றது என்பதே என் கருத்து. பலனற்றது என்னும்போது, சிறிதும் பயன் கிடைக்காது என்று பொருள் அல்ல. இதனால் கிடைக்கும் பயன், இதன் விளைவாக ஏற்படும் நஷ்டங்களைவிட மிகக் குறைவாகவே இருக்கும் என்பதே என் உறுதியான கருத்து. அதை தர்க்கரீதியாக முன்வைக்கிறேன்.

ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கியதில் அதிருப்தி அடைந்திருப்பவர்கள், இங்கே எழுதுபவர்கள் எல்லாரும் கறுப்புப் பணம் அப்படியே தொடர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல.
கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களும் அல்ல. கறுப்புப்பணக் காரர்களுக்கு ஆதரவாளர்களும் அல்ல. கள்ள நோட்டின் ஆதரவாளர்களும் அல்ல.
எல்லாரும் நடுத்தர, கீழ்நடுத்தர வகுப்பினர்தான்.
அதேபோல மோடி எடுத்த நடவடிக்கை என்பதற்காகவே எதிர்ப்பவர்களும் அல்ல. இதை காங்கிரஸ் செய்திருந்தாலும் எதிர்த்தே இருப்பார்கள்.
If you are not with us, you are with them என்கிற வளையத்தில் பொருத்தப் பார்க்காதீர்கள் யாரும்.

இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக எழுதுகிறவர்கள் எல்லாரிடமும் ஒரு விஷயத்தைப் பொதுவாகப் பார்க்கிறேன். “எதற்கு இவ்வளவு பதற்றம்? பொறுமையாக இருக்கலாமே? காசு இல்லாட்டி என்ன, ஆன்லைன்ல வாங்கிக்கலாமே? கிரெடிட் கார்டு இல்லையா, டெபிட் கார்டு இல்லையா?”
மளிகையும் காய்கறியும் பாலும் ஆன்லைனில் வாங்குகிற அளவுக்கு நான் மக்களிடமிருந்து இன்னும் விலகவில்லை என்பது ஒருபக்கம் இருக்க, இது என்னைப் பற்றிய விஷயமில்லை. நெடிசன்களைப் பற்றிய விஷயமில்லை. பெரும்பான்மை மக்களைப் பற்றிய விஷயம்.

2015இல் ஓர் கணக்கின்படி, இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 53%தான்.
டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள் 22.1%
கிரெட்டி கார்ட் பயன்படுத்துவோர் 3.4%
அவசரத் தேவைகளுக்கு நண்பர்கள் அல்லது உறவினரிடமிருந்து கடன் பெறுவோர் 32%
வங்கிகள் அல்லாத தனிநபர்களிடமிருந்து (கந்து வட்டி) கடன் பெறுவோர் 12.6%

இவர்கள் எல்லாருக்கும் கையில் பணப்புழக்கம்தான் அன்றாடம் தேவை. காலையில் கடன் வாங்கி, மண்டியில் காய்கறி எடுத்துவந்து விற்றுவிட்டு, மாலையில் வட்டியுடன் கொடுப்பவர்கள் ஏராளம்.

//ஒருவர் - தள்ளுவண்டிகளில் காய்கறிகள் வித்துட்டுதான் இருக்காங்க. மக்கள் வாங்கிட்டுதான் இருக்காங்க. பெரிய அளவுக்குப் பிரச்சினை இல்லை.

நான் - போய் அந்த தள்ளுவண்டிக்காரன்கிட்டே பேசிப்பாருங்க. அது நேத்து வாங்கின காய்கறியா முந்தாநேத்து வாங்கினதான்னு. கையில் இருக்கிற ஸ்டாக் அதிகபட்சம் எத்தனை நாள் அழுகாம இருக்கும்னு கேட்டுப்பாருங்க. முதலீடு, அதுக்கான வட்டி, தள்ளுவண்டி வாடகை, போலீஸ் மாமூல், அவனுடைய உழைப்பு இதுக்கேத்த வரும்படி இருக்குதான்னு கேளுங்க.
மக்கள் வாங்கறாங்களே, அவங்க வழக்கமா வாங்கற அளவுக்கு வாங்கறாங்களா, கையில இருக்கிற சில்லறைக்கு ஏற்ப வாங்கறாங்களா, இல்லே வந்து பாத்துட்டு எடையும் போட்டுட்டு, சில்லறை இல்லாம வெறும்பையைத் திருப்பி எடுத்துட்டுப் போறாங்களான்னு கொஞ்ச நேரம் பக்கத்துல நின்னு பாருங்க.//

எல்லாரும் ஏடிஎம் வசதியும், பக்கத்திலேயே பேங்க் வசதியும், வீட்டில் உட்கார்ந்தபடி பயன்படுத்தும் இன்டர்நெட் பேங்கிங்கும் வைத்திருப்பவர்கள் அல்ல. வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், சிறு வியாபாரிகள் புழக்கப் பணத்தை அவ்வப்போது வங்கியில் செலுத்தி-எடுத்து, செலுத்தி-எடுத்து வியாபாரம் செய்ய முடியாது. அதற்கு அவர்கள் வங்கியிலேயே குடியிருக்க வேண்டியிருக்கும்.

அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இவர்களுக்குப் புரியவில்லை, புரியவும் செய்யாது. எல்லாவற்றையும் நகரத்தின் பார்வையிலேயே பார்ப்பவர்கள்.

அதுதான் எதிர்ப்பாளர்கள்-ஆதரவாளர்கள் இடையே இருக்கும் வித்தியாசம்.

என்னிடம் ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டு இருக்கிறது. லேசர் பிரின்டரில் டோனர் காலியாகி விட்டது. அதை நிரப்ப வருவார் மெகானிக். அவருக்கு 400 ரூபாய் தர வேண்டும். சில்லறை இல்லை. காசு தர மாட்டேன், வந்து நிரப்பிவிட்டுப் போ என்று சொல்லிவிட்டேன். பல்லாண்டுகால உறவு என்பதால் அவரும் ஓகே சொல்லி விட்டார். ஆனால் அவருக்கும் டோனர் வாங்க எங்கிருந்து காசு வரும்?  வாடிக்கையாளர்களுக்கு மூன்று புத்தகங்களை பிரின்ட் எடுத்துத்தர வேண்டும். 350 ரூபாய்க்கு ஏ4 காகிதம் வாங்க வேண்டும். மூன்று நாட்களாக முடியவில்லை. திங்கள்கிழமை வாடிக்கையாளரின் திட்டுகளை வாங்க வேண்டும். இனி எப்போது முடியும் என்றும் தெரியவில்லை. ஈசிஜி எடுக்க வேண்டும் என்று நான்கைந்து நாட்களாக யோசனை. போவதற்கு கையில் சில்லறை நோட்டுகள் இல்லை. என்னுடைய பிரச்சினை ஒருபக்கம் இருக்க, என்னைப்போல பலர் போகாதிருப்பதால் அந்த பரிசோதனை மையத்துக்கு வருவாய் குறைந்திருக்காதா? இதுபோல எத்தனை கோடிப்பேரின் தொழில்கள் முடங்கியிருக்கும்? அந்த நஷ்டத்தின் மதிப்பு என்ன?
What would be the value of loss of man-hours spent by millions in ques to exchange and / or deposit their old currencies?
Their income loss if they have to take leave for this?
Is there any value for their woes?
What would be the value of losses met by small merchants because of short of cash - without which they won't be able to purchase?
Even if they purchase and keep stock, there wont be buyers as there is no liquid cash with the people to buy, what would be value of their losses due to dead stock even if it is for a few days?
What would be the production cost of the notes demonitised worth of about 15 lakh crore rupees?
And the cost of security, transportation and handling of the same throughout the country?
What would be the cost for a huge exercise of transporting new currency to all branches, ATMs?
What would be the cost of money and labour spent on resetting ATMs to suit the new currency? I think this will take much more time than expected. (Even in Delhi, the capital of India, in my area alone there are about 40 ATMs and none of them are working.)
Cost of crores and crores of photocopies? Cost of their storage and maintenance?
What would be the value of loss of business due to the shortage of funds in all sectors - construction, SSI industry etc. As on today, it seems it may take at least a month for things to turn normal.
Taking into account all these losses, is it worth to the so-called black money which is likely to come out?
இவைதான் நான் கேட்கும் கேள்விகள். கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை.

இது முன்கூட்டியே மதிப்பிட்டு நடவடிக்கை எடுக்கக்கூடிய திறமையற்ற, டிரையல் அண்ட் எர்ரர் பார்க்கும் அரசாக இருந்திருக்கிறது என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது முந்தாநாள். இவர்கள் மிகைப்படுத்திச் சொல்லுகிற அளவுக்குக் கறுப்புப்பணம் நிச்சயமாக இருக்காது என்றாலும் கறுப்புப்பணம் கொஞ்சம் இருக்கவே செய்யும். அது கள்ளத்தனமாக வெளியேவரப் பார்க்கும். எந்தெந்த வழிகளில் வரக்கூடும் என்று முன்னரே கணக்குப் போட்டிருக்க வேண்டாமா? இரவோடு இரவாக தங்கம் வாங்கப் போன பிறகுதான் இப்படியொரு வழி இருப்பதே அரசுக்குத் தெரிந்தது. தொலைதூர ரயிலில் முதல்வகுப்பு ஏசி டிக்கெட்டுகளை மொத்தமாக புக் செய்த பிறகுதான் இந்த வழியும் தெரிய வந்தது. இன்னும் இதுபோல எத்தனை எத்தனை வழிகளில் கறுப்புப்பணம் வெள்ளை ஆகியிருக்க முடியும். இதெல்லாம் முன்னரே யோசிக்காத அரசு என்ன அரசு?

தில்லியில் உப்பு கிலோ 400 ரூபாய். வதந்திகளை நம்பாதீர்கள் என்று கூறுகிறது அரசு. 400 ரூபாய் கொடுத்தாலும் உப்பு ஸ்டாக் இல்லை என்கிறார் பக்கத்து வீட்டு மளிகைக்கடைக்காரர். (நேற்று கடைசியாக 500 ரூபாய் நோட்டு வாங்கிக்கொண்டு அரசி கொடுத்தார், இனி 500 ரூபாய் நோட்டு வாங்க முடியாது, கரன்ட் அகவுன்டிலும் இனி 500/1000 ரூபாய் நோட்டுகளை செலுத்த முடியாது என்று பேங்கில் சொல்லிவிட்டதாகச் சொல்லிச் சென்றார்.)
இதுபோன்ற சிக்கல்கள் எல்லாம் வரும் என்று தெரியாத அரசு என்ன அரசு? இதையெல்லாம் ஊகிக்க முடியாதவர்கள் என்ன பொருளாதார வல்லுநர்கள் ?

10ஆம் தேதி முதல் டிசம்பர் வரையான காலத்தில் 2.5 லட்சம் செலுத்தப்பட்ட கணக்குகளைக் கண்டுபிடித்து, அவர்களின் பெயர்களை வருமானவரித்துறைக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்கள். என்னே புத்திசாலித்தனம்! உண்மையிலேயே அறிவாளிகளாக இருந்தால், சொல்லாமல் கமுக்கமாகச் செய்திருக்க வேண்டாமா? இப்போது எல்லாரும் விழித்துக்கொண்டார்கள். நேற்று இன்னொரு அறிக்கை வருகிறது - அதெல்லாம் இல்லை, இரண்டரை லட்சம் போடுகிறவர்கள் மீது வருமான வரி நடவடிக்கை ஏதும் இருக்காது என்று. எவ்வளவு அபத்தமாக இருக்கிறது இது? இதெல்லாம் உங்கள் கண்களில் படவே இல்லையா? இவ்வளவு முட்டாள்தனமாகச் செயல்படும் அரசுதான் கறுப்புப்பணத்தை ஒழிக்கப்போகிறதா?

கடைசியாக ஒரு விஷயம். வங்கிகள், ஏடிஎம்களில் காசுப்பற்றாக்குறை, ஏடிஎம்கள் இன்னும் புதிய நோட்டுகளுக்குத் தயாராகவே இல்லை என்பதை எல்லாம் ஏற்கெனவே எழுதி விட்டேன். இன்னொரு முக்கிய விஷயத்தில் இந்த அரசு எப்படி கோட்டை விட்டது என்று பார்ப்போம்.
இப்போது புதிதாக வந்திருப்பது 2000 ரூபாய் நோட்டு. 500 ரூபாய் நோட்டு இன்னும் விநியோகத்தில் காணவில்லை. பழைய நோட்டுகள் செல்லாது என்பதால் 100 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் பற்றாக்குறை. வங்கிகளும் தருவதில்லை. அதைக் கையில் வைத்திருப்பவர்களும் பதுக்கிக் கொள்வதால் அவை புழங்குவதும் இல்லை.
ஆக, ஏடிஎம்களில் இப்போது வைக்கக்கூடியது 2000 ரூபாய் நோட்டுகளாகவே இருக்க முடியும். எனக்கு 5000 ரூபாய் அவசரத் தேவை, அல்லது கணக்கில் இருப்பதே 5000 ரூபாய், அதை எடுத்தாக வேண்டும் என்றால், ஏடிஎம்மில் அதற்கேற்ப சில்லறையில் நோட்டுகள் இருக்க வேண்டும். 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் இருந்தால் 4000தான் எடுக்க முடியும். அப்போது, கணக்கிலும் பணம் இருந்தும், ஏடிஎம்மிலும் பணம் இருந்தும், நாயிடம்சிக்கிய தேங்காய் போலத்தான் என் பணம் இருக்கும்.
இந்தச் சிக்கல் காரணமாகவும் ஏடிஎம்கள் இன்னும் முழுமையாக இயங்கவில்லை என்று தெரிகிறது.
(500 ரூபாய் நோட்டு ஹை டினாமினேஷன் என்றால் அந்த நோட்டே கேவலமாகச் சிரிக்கும்.)

இவ்வளவு மோசமாகத் திட்டமிட்டதற்காக (!) விமர்சனம் செய்யாமல் இருக்கும் அளவுக்கு தியாக குணம் என்னிடம் இல்லை.

நாட்டின் பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை மொத்தமாக குலைந்திருக்கிறது.

மக்களின் போராட்டகுணம் மந்தமடைந்து பல காலம் ஆகி விட்டது என்பதே இந்த ஆட்சியின் அதிர்ஷ்டம். இல்லையேல் இங்கே நடந்திருக்கக் கூடியது முற்றிலும் வேறு.

- Shahjahan R

No comments:

Post a Comment