மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 4
ஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப் படுகிறார்கள்?
நவம்பர் 21, 2016
கௌதம சன்னா
மோடி பேசும் பொய்களை நம்புவதற்கும் அதை பரப்புவதற்கும் அவரது அடிபொடிகள் தயாராக இருக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏன் அப்படி இருக்க வேண்டும். ரூபாய்களை ரத்துச் செய்ததால் விலைகள் குறையும் என்று நம்பச் சொல்கிறார் மோடி. அது நடப்பதற்கு சாத்தியம் இல்லை மாறாக ஒட்டுமொத்த நாசம்தான் விளையப் போகிறது. போன கட்டுரையில் சில்லறை வணிகம்எப்படி அடித்தட்டு மக்களை பாதித்து சீரழிக்கும் என்பதை பார்த்தோம். இந்த கட்டுரையில் ஏன் சில்லறை வணிகம் மோடியினால் குறிவைக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
மோடியின் ரூபாய் ஒழிப்பு அறிவிப்பின் தாக்கம் முதல் நாளில் தெரியவில்லை. மக்கள் பொருள்களை வாங்க அலைமோதியதால் சில்லறை வணிகர்கள் மகிழ்ச்சியில் நிறைந்தார்கள். ஆனால் மறுநாள் கடைகளில் பொருள்களை வாங்க ஆள் இன்றி நட்டத்தை எதிர்கொள்ளத் தொடங்கினார்கள். இதில் முதலில் சுதாரித்துக்கொண்டது கேரள வணிகர்கள்தான். அவர்கள்தான் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து போராட்டத்தில் குதித்தார்கள். மற்றவர்கள் இனிமேல்தான் இறங்குவார்களோ என்னவோ.
சரி, ஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
• இந்தியாவில் மொத்தம் 130 மில்லியன் சில்லறை வியாபாரக் கடைகள் உள்ளன.
• இவற்றிற்கு 2016-17ஆம் ஆண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட வியாபார இலக்கு ரூ.47லட்சம் கோடி.
• அதன்படி ஒட்டுமொத்த இந்திய சில்லறை வணிகத்தின் ஒரு நாள் வியாபாரம் சாரரியாக ரூ.12,876 கோடிகள் இருக்கும்.
மேற்கண்டத் தகவலை Yes Bank மற்றும் Assocham ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
இந்த தகவல்களைக் கொண்டு பார்க்கும்போது மோடி நிகழ்த்தியது பேரழிவு என்பது தெரியவரும்.
10 நாள்களுக்கு மேற்படி அளவில் வியாபாரம் இருக்குமாயின் அது 1 லட்சத்து 28 ஆயிரம் கோடிகள் இருக்க வேண்டும். இதில் 50 சதவிகிதம் இருக்குமாயின் அது ஏறக்குறைய 60 ஆயிரம் கோடி ரூபாய்கள் சில்லறை வணிகம் இழப்பைச் சந்தித்திருக்கும், ஆனால் இதன் சதவிகித அளவும், விற்பனைச் சரிவும் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என பொருளாதார ஆய்வறிஞர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். எனவே டிசம்பர் மாதத்திற்குள் 5 லட்சம் கோடிகளாவது இழப்பு ஏற்படலாம் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க ஏன் இதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை புரிந்துக் கொள்ள பின்வரும் விவரங்கள் உங்களுக்கு உதவும்.
• இந்திய சில்லறை வணிகம் 96 சதவிகிதம் வரை நேரடிப் பணப் பரிவர்த்தனை (Cash Dealing) அடிப்படையில் இயங்குகிறது. வெறும் 4 சதவிகிதம் மட்டுமே வங்கியின் மூலம் நடைபெறுகின்றது.
பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் இந்த 4 சதவிகிதத்திற்குள் அடங்கி விடுகின்றன. ஆனால் ஒருங்கிணைக்கப்படாத இந்தச் சில்லறை வணிகம் மட்டுமே பெரும்பாலும் பணப் பரிவத்தனையை கையாள்கிறது என்பது இதில் உள்ள சிறப்பம்சம்.
ஆனால் இப்படி இருந்துவிட்டால் அதன் மீது இப்படி ஒரு தாக்குதல் விழுந்திருக்காது. அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த A.T. Kearney என்கிற நிறுவனம் உலகின் 30 சிறந்த சில்லறை வணிகச் சந்தைகளை பட்டியலிட்டது. அதில் நான்காவது இடத்தில் உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய சந்தையாக இந்திய சில்லறை வணிகச் சந்தை இருக்கிறது என்பதை கணித்திருக்கிறது.
அதுவுமின்றி. மற்றொரு ஆய்வு இந்திய சில்லறை வணிகச் சந்தையின் தற்போதைய மதிப்பு 490 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருக்கிறது என்றும் 2023ல் அது 865 மில்லியன் டாலர் மதிப்பில் இருக்கும் என்றும் கணித்திருக்கிறது.
மேலும், நவீன மால்களின் மூலம் நடைபெறும் வணிகம் வெறும் 27 மில்லியன் டாலர் மட்டுமே என்றும் அது 2023ல் 220 மில்லியன் டாலர் அளவிற்கு இருக்கும் என்று கணித்திருக்கிறது.
எனவே சில்லறை வணிகம் என்பது வெறும் சில்லறை விசயமல்ல என்பதை இப்போது பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் புரிந்துக் கொண்டுள்ளன. வரும் காலங்களில் உலகின் பெரிய சில்லறை விற்பனை சந்தையாக மாறக்கூடிய இந்திய சந்தையை கைப்பற்றுவதின் மூலம் கார்ப்ரேட் வணிகம் தனது ஆக்டபஸ் கரங்களை நீட்டத் தொடங்கியுள்ளது.
13 மில்லியன் கடைகளாக பரந்து விரிந்துள்ள இந்தியச் சில்லறைச் சந்தையோடு போட்டியிடுவது கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எளிதான காரியம் அல்ல. அரசின் துணை இல்லாமல் அதை செய்வதற்கு சாத்தியமே இல்லை. எனவே தற்போது இருக்கும் சில்லறை வணிக முறையினை முடிவுக்குக் கொண்டு வராமல் கார்ப்ரேட் நிறுவனங்கள் தமது காலை ஊன்ற முடியாது என்பது தெளிவு. அதற்கு அவை இரண்டு இலக்குகளை நிர்ணயித்துள்ளன.
நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் நடைபெறும் சில்லறை வணிகத்தின பணச் சுற்றோட்டத்தை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதின் மூலம், அதன் அன்றாட மூலதனப் பெருக்கத்தை தடை செய்ய முடியும், அதன் மூலம் தொடர் நட்டமும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்ப போட்டியிடா நிலையையும் உருவாக்க முடியும்.
96 சதவிகிதம் ஒருங்கிணைக்கப்படாத வணிகத் துறையாக இருக்கும் இந்த சில்லறை வணிகத்தை ஒருங்கிணைக்கப்பட்டத் துறையாக மாற்ற வேண்டும். அப்படி மாற வேண்டுமானால் வங்கி பரிவர்த்தனை மூலமே அதை நடத்த முடியும். அப்படி ஒருங்கிணைக்கப்பட்டால் நேரடி பண நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத ஏராளமான சிறு கடைகள் மூலதனப் பிரட்டல் இன்றி மூடப்படும் நிலை உருவாகும். மட்டுமின்றி ஏராளமான சிறு நிறுவனங்கள் கார்ப்ரேட் நிறுவனங்களின் சங்கிலித் தொடர் அமைப்பிற்குள் இழுக்கப்பட்டு விழுங்கப்படும்.
எனவே பண நீக்கம் என்ற முதல் நடவடிக்கையின் மூலம் சில்லறை வியாபாரத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 47லட்சம் கோடிகள் நிதியினை உருவாக்க வேண்டுமானால் கோடிக்கான வியாபாரப் பரிவர்த்தனைகள் நடைபெற வேண்டும். அதற்கு சுற்றோற்றத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் சுற்றிச் சுற்றி வரவேண்டும். அப்படி வந்தால்தான் ஒரு நாளைக்கு ரூ.12,800 வியார பண மதிப்பை உற்பத்தி செய்ய முடியும். சுற்றோட்டத்தில் இருக்கும் பணத்தை தடுத்தால், விற்பனையும், பண உற்பத்தியும் அடியோடு நிலைகுலைந்துப் போகும்.
இந்த நிலைதான் தற்போது நடந்துக் கொண்டுள்ளது. இது விற்பனை மட்டுமல்ல, வெறும் பணம் மட்டுமல்ல. 13 மில்லியன் கடைகளில் வேலைப் பார்க்கும் கோடிக்கணக்கா தொழிலாளர்களின் வருமானமும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் சார்ந்தது. இந்த கோடிக்கணக்கா தொழிலாளர்கள் தமது வருமானத்தின் மூலம் இந்த சில்லறை வணிகச் சந்தையை மேலும் வளர்க்கிறார்கள், வருமானத்தை பெருக்குகிறார்கள். எனவே இருவிதமான இழப்புகளை சில்லறை வர்த்தகச் சந்தை உடனடியாக சந்தித்து சிதைகிறது.
அதனால்தான் மோடி நிகழ்த்தியது பேரழிவு என்று சொல்கிறோம். இந்தப் பேரழிவினை யாருக்காக மோடி நிகழ்த்தியிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள். அதனால் இழப்பினை சந்தித்துள்ள சில்லறை வணிகர்கள் இழப்பிற்கு காரணமான அரசிடம் இழப்பீடு பெற உரிமையுள்ளவர்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமா, கருப்பு பணம் என்கிற பூச்சாண்டியைக் காட்டி கார்ப்பரேட் பூதங்களிடம் விழுங்கக் கொடுத்த மோடியிடம் இழப்பீடு கேட்பது தவறாகாது. எனவே சில்லறை வணிகர்கள் இழப்பீடு தமக்கும் தமது தொழிலாளர்களுக்கும் கேட்க வேண்டும்.
இப்படிப்பட்ட பேரழிவு சில்லறை சந்தையில் என்றால் பிற துறைகளில் அவரது பேரழிவு எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பார்ப்போம்
No comments:
Post a Comment