Wednesday, November 16, 2016

பேரழிவு... (7) - திருப்பூர் குணா

#இந்த_கட்டுரை_நம்_பார்வையை_இன்னும்_விசாலமாக்கலாம்

பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நொடியிலிருந்து சராசரி மக்கள் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வங்கியின் வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.

நடப்பிலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில்தான் ஆபத்து இருந்தது என்றால், மாற்று நோட்டுகளை அடித்து தயார்நிலையில் வைத்துக்கொண்டு மக்களிடம் பழைய நோட்டுகளை உடனடியாக சரண்டர் செய்யும்படி வலியுத்தியிருக்க முடியும். அப்படி சரண்டர் செய்கிற தொகைக்கு ஈடான புதிய நோட்டுகளை மொத்தமாக திருப்பிக் கொடுத்து விடவும் முடியும்.

புதிய தொழில்நுட்பத்தில் 2000 ரூபாய் அச்சிட முடியும் என்றால், அதே தொழில்நுட்பத்தில் 500 ரூபாய் தாள்களும் அச்சிட முடியும். ஆகவே, திருப்பித் தருவதற்காக புதிய தொழில்நுட்பத்தில் 100, 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகித்திருக்க முடியும்.

இதன் மூலம் மக்களின் மொத்த பணமும் மக்களிடமே வந்திருக்கும் என்பதோடல்லாமல், சில்லறைத் தட்டுபாட்டில் திணற வேண்டிய அவசியமும் உருவாகி இருக்காது. இப்படி எதுவும் நடக்கவில்லை.

இதற்கு மாறாக நடப்பது என்ன?

1.   நாம் எவ்வளவுதான் பணத்தை வங்கியில் ஒப்படைத்தாலும், நமக்கு திருப்பித் தருகிற தொகையின் அளவு வரம்பிடப் பட்டிருக்கிறது.

2.   அப்படி அளவான வகையில் அளிக்கப்படும் தொகையை 2000 ரூபாய் நோட்டுகளாக வழங்குவதன் மூலம் எளிதாகப் பயன்படுத்த முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

3.   மக்கள் உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டுக்கான தேவைகள், மருத்துவம், உடை, திருமணம் உள்ளிட்ட சமூக நடவடிக்கைகள் அனைத்துக்குமான தேவையை ஈடுகட்ட முடியாத நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் முக்கிய அம்சமாகும்.

என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறது அரசு?

இதோ நாம் மருந்து வாங்குகிறோம். பெட்ரோல் நிரப்ப பங்க்கில் நிற்கிறோம். உணவருந்தி விட்டு கடைக்காரரின் கல்லாவின் முன் நிற்கிறோம். நம்மிடம் புதிய, தூய்மையான 2000 ரூபாய் இருக்கிறது.

ஆனால் நாம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கவில்லை, எண்ணெய் நிரப்பவில்லை அல்லது உணவருந்தவில்லை. கல்லாவில் இருப்பவர் சில்லறை இல்லை என்கிறார். புதிய, தூய்மையான 2000 ரூபாய் நமக்குப் பயன்படவில்லை.

இது தடை செய்யப்பட்ட செல்லாத நோட்டின் பிரச்சினையல்ல. சில்லறைத் தட்டுப்பாடு. புதிதாக 500 ,1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்காமல், அதேபோல கூடுதலாக 100, 50 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்காமல் எல்லாவற்றையும் 2000 ரூபாய் நோட்டுகளாக மட்டும் வெளியிட்டு உருவாக்கப்பட்ட நெருக்கடி.

ஆக, நம்மிடம் திணிக்கப்பட்ட புதிய, தூய்மையான 2000 ரூபாய்த் தாள்கள் நமது பணத்தை பெற்றுக்கொண்ட வங்கி நமக்கு அளித்துள்ள வெறும் டோக்கன் மட்டுமேயாகும்.

இப்போது இன்னொன்றையும் கவனியுங்கள்.

நமக்குப் பின்னாலிருக்கும் இன்னொருவர் இதே அளவு கொள்முதல் செய்துவிட்டு கல்லாவின் அருகில் வருகிறார். அவர் கையில் புதிய, தூய்மையான 2000 ரூபாய் இல்லை. மாறாக அவரது வங்கிக் கணக்கின் கடன் அட்டை (ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு) இருக்கிறது. அதை உரசிவிட்டு சிக்கல் இல்லாமல் செல்கிறார்.

இங்கு நமக்கு உணர்த்தப்படுவது என்ன? பணமாக கையில் இருப்பதைவிட பணத்திற்கான வங்கி அட்டைகள் இருந்தால் பிரச்சினை இல்லை என்பதாகும். பணம் பாக்கெட்டில் இருப்பதைவிட வங்கியில் இருப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது என்பதாகும்.

இதற்குத்தான் வங்கிகள் எஸ்.எம்.எஸ், ஈ-மெயில், போன் கால் மூலம் கடன் அட்டை விளம்பரங்களை இடைவிடாது செய்துகொண்டிருக்கின்றன. கடன் அட்டை விநியோகிப்பதற்கான ஏஜென்சிகளை உருவாக்கி, விரிவாக்கி வருகின்றன. ஐ‌சி‌ஐ‌சி‌ஐ வங்கி கடந்த ஆண்டின் பாதியிலிருந்தே இதற்கான முகவர்களை உருவாக்கி தயார்நிலையோடு முன்னிலையில் இருக்கிறது.

ஷாருக்கான் வேறு காய்கறி வாங்குவதற்கு எஸ்‌எம்‌எஸ் அனுப்பினால்போதும், அவர்கள் நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு பொருளை அனுப்பி விடுவார்கள் என விளம்பரபடுத்துகிறார்.

இப்போது பெட்ரோல் பங்குகள், உயர் மருத்துவமனைகள் மற்றும் உணவகங்கள், தங்கும் விடுதிகளில் இருக்கும் வங்கி அட்டைகளை உரசும் இயந்திரம் வெகுவீச்சாக மளிகைக் கடைகள் வரைக்கும் வரவிருக்கிறது.

நாம் கடன் அட்டையில் வாழ்வதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறோம்.

இதனால் என்ன கேடு வரும்?

1.    கடன் அட்டையில் அனைத்துப் பொருட்களையும் தொடக்கத்தில் மலிவு விலைக்கு வழங்குவதன் மூலம் பெருநிறுவனங்கள் அனைத்து வணிகத்தையும் கைப்பற்றும். இப்போதே செருப்பு, கடிகாரம், செல்போன், பேண்ட், சட்டை, ஜட்டி என அனைத்தையும் ஆன்லைன் வணிகத்தின் மூலம் கைப்பற்றி வருகிற பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். சில்லறை வணிகர்கள் ஒழித்துக் கட்டப்படுவார்கள்.

2.   சேமிப்பு மனநிலை மாறி ஆடம்பரப் பொருட்களுக்கான நுகர்வுவெறி மேலோங்கி செலவாளி சமூகம் உருவாகும். வங்கியில் வைத்துள்ள தொகைக்கும் அதிகமாக கடன் தந்து பொருட்களை வாங்க வைப்பதன் இறுதியில் கடனாளி சமூகமாகி சீரழியும்.

பொதுவாக இந்திய மக்களின் வாழ்க்கை முறையானது தங்கம் மற்றும் நிலம் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்புள்ள கையிருப்பை உருவாக்கி சேமிக்கும் தன்மையுடையது. அவர்கள் வங்கிக் கணக்கை வைத்திருந்தாலும், தனியாரிடம் சீட்டு முதலான வழிகளில் சேமித்தாலும் அது ஒரு குறிப்பிட்ட தொகையாக திரளும்வரை காத்திருந்து, முடிவில் சக்திக்கேற்ற வகையில் தங்கம் அல்லது நிலம் என்பதாக மாற்றுவார்கள்.

இப்போது வங்கி நமது பணம் முழுவதையும் பறித்துக்கொண்டு, நாம் எதை வாங்க வேண்டுமென்றாலும் கடன் அட்டைகள் மூலம் வாங்க வைப்பதால் இயல்பாக வங்கிக் கணக்கு என்பதே அன்றாட தேவைக்கானதுதானே என்ற செல்வாளி மனநிலை மேலோங்கும். நம்மை வசீகரிக்கிற விளம்பரங்கள் மூலம் பொருட்கள் நம்மீது திணிக்கப்படும். கையிருப்பு உறிஞ்சப்படும்.

உலகில் இதுவொன்றும் புதிதல்ல. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் ஆளும்வர்க்கம் மக்களை கடனாளியாக ஆக்கியது குறித்து சி.பி.ஐ (எம்)-இன் மத்தியக் கமிட்டி தோழர் அய்ஜாஸ் அகமது கூறுகிறார்- “அடிப்படையில் செலவு செய்வதற்குமுன் சேமிக்க வேண்டும் என்ற தன்மை கொண்ட சேமிப்பு சமூகமாக இருந்த நவீன சமூகத்தை 1930-களில் அறிமுகப்படுத்தப்பட்ட கடன்முறை திட்டத்தின் மூலம் முதன்முதலாக "செலவாளி சமூகமாக" உருவாக்கியது நவீன முதலாளித்துவம். அதாவது, ஒரு பொருளை வாங்குவதற்கு தேவையான பணம் கொஞ்சம்கூட உங்களிடம் இல்லாவிட்டாலும், நீங்கள் கடன் வாங்கி (உதாரணமாக., கடன் பெற்று கார் வாங்குதல், அடமானத்தின் அடிப்படையில் வீடு வாங்குதல் போன்ற) செலவழிக்கலாம்... உற்பத்திதான் வளர்ச்சிக்கான இயக்க விதி என்பதை மாற்றி, நுகர்வுதான் அனைத்துமென நகர்ந்த முதலாளித்துவம் சுயமோகமும், ஊதாரித்தனமும் கொண்டதாக சமூக அமைப்பாக மாற்றியது...” (காண்க- “பின்நவீனத்துவமும் அடையாள அரசியலும் - முதலாளித்துவத்தின் புறவழிப் பாதை” நூல்)

1930-களில் கடன்முறைத் திட்டத்தை மேற்கொண்ட அமெரிக்கா, அண்மையில் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. கடன் வாங்கியவர்கள் திருப்பி செலுத்த முடியாததால் ஏற்பட்ட அந்நெருக்கடியை அந்நாடு சமாளித்ததற்கு அடிப்படைக் காரணம் அமெரிக்காவில் பெரும்பான்மை மூலதனம் உள்நாட்டு சொந்த மூலதனமாகும்.

ஆனால் இந்தியாவில் அதுபோலொரு நெருக்கடி ஏற்படுமாயின் வெளிநாட்டு மூலதனங்கள் அனைத்தும் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறி, மேலும் நெருக்கடியாகும். தேவைக்கான எதுவும் கிடைக்காமல் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் நிலைமை உருவாகும்.

இது உடனே நேராது என உத்தரவாதம் அளிக்கலாம். ஆனால், நமது சந்ததிகள் நிச்சயமாக இதனால் கொடுந்துன்பங்களையே அனுபவிப்பார்கள்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திட்டமிட்டு புழக்கத்தில் விடப்பட்டன, திரும்பப் பெறப்பட்டன!

கிட்டதட்ட 130 கோடிபேர் உள்ள இந்தியாவில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாங்கும் திறனற்றவர்கள். அதாவது அவர்களின் குடும்ப வருமானம் நாளொன்றுக்கு ரூபாய் 100-க்கும் குறைவானதாகும். ஆக இவர்களின் பயன்பாட்டுக்கு தேவைப்படுவது என்பது 100, 50, 20, 10, 5 ரூபாய் நோட்டுகளேயாகும்.

ஆனால், புழக்கத்தில் விடப்பட்டுள்ள மொத்த தொகையான 17 இலட்சம் கோடி ரூபாய்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மட்டும் 14 லட்சத்து 15 ஆயிரத்து 500 கோடி ரூபாயாகும். இது புழக்கத்தில் விடப்பட்ட மொத்த ரூபாய் நோட்டுகளில் 83 சதவீதமாகும்.

அதாவது பெரும்பான்மை மக்களின் பயன்பாட்டிற்கான 100, 50, 20, 10, 5 ரூபாய் நோட்டுகள் வெறும் 17 சதவீதம்தான். அதன் மதிப்பு 2 லட்சத்து 84,500 கோடிதான்.

ஆக, ரூபாய் நோட்டை திரும்பப் பெறுகிற வகையில் நிலைமைகள் உருவாக்கப்பட்டன என்பதே உண்மை.

எனவே மோடி அரசு கருப்புப் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கொஞ்ச நஞ்சமாகவேனும் கையிருப்பு சமூகமாக இருக்கிற மக்களை கடனாளி சமூகமாக மாற்றுகிற நடவடிக்கையைத்தான் எடுத்திருக்கிறது.

கூடவே, இந்தியப் பெருமுதலாளிகள் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் 9 இலட்சம் கோடி ரூபாய்களால் (நிலுவையிலுள்ள கடன் 7 ½ இலட்சம் கோடி ருபாய். முந்தைய காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது 1 ½ இலட்சம் கோடி ருபாய்) திவாலாகிக் கொண்டிருக்கும் இந்திய பொதுத்துறை வங்கிகளையும் காப்பாற்றி இருக்கிறது.

குறிப்பு-

எல்லாவகையிலும் நாடு கடும் நெருக்கடிக்குள்தான் தள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவுகள் எவ்வளவு காலத்தில் என்ன மாதிரி இருக்குமோ எனத் தெரியவில்லை. ஆனால் அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.

அது உள்நாட்டு நெருக்கடியை அயல்நாட்டுடனான நெருக்கடியாக காட்சிப்படுத்துகிறது. பாகிஸ்தானோடு உரசலை மேற்கொள்கிறது. சிறுசிறு போர் நடவடிக்கைகளை கட்டமைக்கிறது. இது பெரிதாகலாம். நாடு அபாயத்தில் இருக்கிறதென அறிவிப்புகள் வரலாம். நாட்டில் நெருக்கடி நிலைமைகள் அறிவிக்கப்பட்டு, ஒருவகையான இராணுவ ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தலாம்.

அடுத்த தேர்தல் உள்ளிட்ட அனைத்து சனநாயக வழிமுறைகளும் அடைக்கப்படலாம்.

- திருப்பூர் குணா

No comments:

Post a Comment