கௌதம சன்னா
Via Facebook
2016-Nov-11
மோடி நிகழ்த்திய பொருளாதார பேரழிவு - 2…
கரன்சியில் நடத்திய நாடகம்..
ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.
மோடி எதற்காக புதிய கரன்சிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.. மக்களின் தேவைகளை பார்த்து அவற்றை தீர்ப்பதற்கு பதில் ,அவர்களின் தேவைகளை பேராசையாக மாற்றி தமது வெற்றியை பறித்துக் கொண்டதில் மோடிக்கு நிகர் மோடியே. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தைக் கொண்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்துக் கொடுக்கப்படும் என்று மோடி மக்களிடம் பேராசையைத் தூண்டினார். மோடியால் ஏன் அப்படி சிந்திக்க முடிந்தது என்று இப்போது தேச பக்தர்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை.
கருப்புப் பணத்தை மீட்பேன் என்று சொன்னவர் திடீரென கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று மாற்றிப் பேசுவதில் உள்ள மோடியின் கையாலாகாதத் தனத்தையும், பேராசையையும் தேசபக்தர்கள் கணக்கில் சேர்ப்பதே இல்லை. பொருளாதாரப் புரிதல் சிறிதும் இல்லாத ஒரு பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் வெட்கப்படவுமில்லை.
கருப்புப் பணம் என்பது சிவாஜி படத்தில் காட்டப்படுவதைப் போல எங்கேயாவது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்ற அப்பாவியான புரிதலில் இருந்த மோடி மக்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டினார். பணம் என்றால் என்ன என்பதைப் பற்றின அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் அவர் இந்த புரிதலுக்கு வந்தார் என்பது ஒரு புறமிருந்தாலும், சுவிஸ் வங்கியில் அப்படித்தான் அடுக்கிக் வைக்கப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்துக் கொண்டாரே அதுதான் நமது சாபக்கேடு.
சுவிஸ் வங்கி என்பது இந்தியப் பணங்களை கட்டுக்கட்டாக சேர்த்து வைக்கும் கிடங்கு அல்ல. அது வைக்கப்படும் பணத்தை வைத்து பரிமாற்றம் செய்துக் கொள்ளும் ஒரு நிறுவனம். வங்கியின் செயலே அதுதானே. கிடங்காக வைத்திருந்தால் வாடகை மட்டும்தான் கிடைக்கும். வங்கி என்பது வட்டித்தருவதும், வட்டி வாங்குவதும், முதலீடு செய்வதும் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்கிறது. இந்தியர்கள் சேர்த்து வைத்தப் பணத்தை அந்த வங்கி அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டது. எந்த வங்கியும் தனது வாடிக்கையாளரின் கணக்கு விவரங்களை வெளியில் சொல்லாதது போலவே சுவிஸ் வங்கியும் நடந்துக் கொண்டது. எனவே சுவிஸ் வங்கியில் இந்திய கரன்சிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது அளவு கடந்த கற்பனை, நப்பாசை. இதை நம்பித்தான் மோடி இந்தியர்களுக்கு 15லட்சம் தருவதாக வாக்களித்தார். ஆனால் மோடி வாக்களிக்கும் முன்னே சுவிஸ் வங்கியில் இருந்த இந்திய பணம் என்னவானது என்பதைப் பற்றின புள்ளி விவரங்கள் வந்திருக்கின்றன..
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சேர்த்து வைத்துள்ள கருப்புப்பணம் 2006ம் ஆண்டு கணக்குப்படி 1,456 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இருக்கிறது என்று அன்றைக்கு சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் 2012ல் அது 92.95 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அது குறைந்துப் போனது. அதாவது 6% அளவிற்கு அது குறைந்துவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அரசு சார் அழுத்தங்கள் இதற்கு முக்கிய காரணம். அதே நேரத்தில் இந்தியர்களின் கருப்புப் பணம் சுவிஸ் நாட்டில் மட்டும் இல்லாமல் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறி இருந்தது. ஆனால் ஊடகங்கள் சுவிஸ் நாட்டை மட்டும் பிரதானப்படுத்தி எழுதிய காரணத்தினாலும் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய பணத்தின் பெரும் பகுதி வேறு நாடுகளுக்குப் போய்விட்டது. எனவே சுவிஸ் வங்கியில் இருந்த கருப்புப் பணத்தை காங்கிரசால் மீட்க முடியவில்லை என்கிற பிம்பத்தைப் பயன்படுத்தி மோடி தான் மீட்கப்போவதாக தனது ஆயிரம் இன்ச் மார்பை விரித்துக் காட்டினார்.
ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு மிச்சமிருந்த கொஞ்சப்பணமும் சுவிஸ் வங்கியிலிருந்து திரும்பப்பெறப்பட்டு அது இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் முதலீடாக போய் சேர்ந்துவிட்டது. இந்த தாக்குதலை மோடி எதிர்பார்க்கவில்லை, அதனால் மக்களின் முன் முற்றிலும் தனது அறியாமையை வெளிக்காட்டி அம்பலப்பட்டுப் போனார். எனவே மாற்று வழிகளை அவர் தேடிக்கொண்டிருந்தார். வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க வழியில்லை. உள்நாட்டிலாவது ஏதாவது தேறும் என்று எதிர்பார்த்தார், ஆனால் மசிந்தவர்கள் கொஞ்சம் பேர்தான். ஏனென்றால் இந்திய மக்கள் தொகையில் 1 சதவிதம் பேர்தான் வருமான வரி செலுத்தும் பழக்கம் உள்ளவர்கள், இதில் 2 சதவீகிதம் பேர் அரசு ஊழியர்கள். மீதமுள்ள 99 சதவீகிதம் பேரை வருமான வரிகட்ட வைக்க மோடியிடம் எந்த திட்டமும் இல்லை. இவரிடம் மட்டுமல்ல முந்திய காங்கிரஸ் அரசிடமும்தான்.
மக்களை வருமான வரி கட்ட வைக்க என்ன செய்ய வேண்டும். அதற்கு எளிய வழி வருமான வரி கட்டும் அளவிற்கு அவர்களுடைய வருமானத்தை அரசு பெருக்க வேண்டும். இதை 1000 இன்சு மார்பு கொண்ட மோடியின் மார்பினால் செய்ய முடியுமா..? அதற்கு பதில் மக்களிடம் கருப்புப்பணம் இருக்கிறது என்கிற பூச்சாண்டியை காட்டி அவர்களையே குற்றம் சாட்ட முடியும். அதைத்தான் மோடி செய்தார். அப்படியானால் இந்தியாவில் உள்ள கருப்பு பணம் கிடங்குகளில் பதுக்கி மட்டுமே வைக்கப்பட்டிருக்குமா..
கிடங்குகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம், தீவிரவாதிகளால் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் பணம் என்பவை காரணமாக ரிசர்வ் வங்கியால் காரணம் சொல்லப்பட்டது. 500 ரூபாய் நோட்டுகள் 76 %மும், 1000 ரூபாய் நோட்டுகள் 109%மும் புழக்கத்தில் அதிகரித்திருக்கிறது என்கிறது ரிசர்வ் வங்கி. இது சுழற்சி முறையில் ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும் பழைய பணத்திற்கு ஈடாக புதிய பணத்தை அச்சிட்டு வெளியிடும் கணக்கீடுகளின் அடிப்படையில் அமைந்த புள்ளி விவரங்கள் அல்ல. சந்தையில் சுற்றோட்டத்தில் இருக்கும் பணத்தின் அளவை சுற்றோட்ட கணக்கீடு (Random) புள்ளிவிவரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது. எனவே இதை முழுவதும் நம்ப வேண்டுமா வேண்டாமா என்பது நமது விருப்பத்தின் பாற்பட்டது.
ஏனென்றால் கருப்பு பணம் இருக்கும் சதவிகிதம் துல்லியமாக அரசிற்கு தெரியவில்லை. இன்றைய நாளிதழ்களில் அந்த தெளிவின்மையை அரசே வெளிச்சமிட்டிருக்கிறது. கருப்பு பணத்தின் அளவு ஒரு சதவிகிதம் என்றால் 14850 கோடி, 2 சதவிகிதம் என்றால் 29700 கோடி, 3 சதவிகிதம் என்றால் 44500 கோடி, 5 சதவிகிதம் என்றால் 70000ம் கோடி, 10 சதவிகிதம் என்றால் 1லட்சத்து 40ஆயிரம் கோடி. இதில் எது இலக்கு என்று இன்னும் அரசு துல்லியப்படுத்தவில்லை.
சரி, இப்போது இந்த கருப்புப்பணத்தை அழிக்க வைத்துவிட்டு புதிய பணத்திற்கு மோடி என்ன செய்தார். சுற்றில் இருக்கும் 500, 1000 ரூபாய் மொத்த பணம் அரசின் கணக்கின்படி 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகள். இதற்கு மாற்றாக புதிய நோட்டுகளை அச்சடிக்க 12ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. அதாவது அச்சிட்ட பணத்தில் 0.8 சதவிகிதம்.
இந்த செலவை ஈடுகட்டுவது எதில் என்பது ஒருபுறமிருக்கட்டும். மோடி அழிக்க நினைக்கும் கருப்புப்பணம் 1லட்சத்து 40ம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு 12ஆயிரம் கோடிகளை முதல் தவனையாக செலவழித்துள்ளார் என்பதும் ஒரு புறம் இருக்கட்டும். சந்தையில் புழங்கும் 1000, 500 நோட்டுகளுக்கான மொத்ததொகையான 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகளுக்கு இணையாக இந்தியாவின் முன்னணி கார்ப்பேர்ட் நிறுவனங்கள் வாராக்கடனாக வைத்திருக்கும் 14லட்சம் கோடி ருபாய்கள் கருப்புப்பணம் இல்லையா. இந்த பணத்தை மீட்க துப்பில்லை என்று வங்கி ஊழியர்களின் சம்மேளனம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்களே அதெல்லாம் தேச பக்தர்களுக்கு தெரியவில்லையா…
ஆனால் கருப்புப்பணம் மீட்கப்படும் என்று பொய் சொன்ன மோடி தொடர்ந்து கருப்புப்பணம் அழிக்கப்படும் என்று துணிந்து பொய் சொல்ல முடிகிறதென்றால் தேசபக்தர்கள் என்பவர் முட்டாள்களாய் மட்டுமே இருக்க முடியும் என்பதை அவர் நம்புவதால்தான்.
எனவே மோடி கருப்பு பணத்தை அழிக்க முதலில் 12ஆயிரம் கோடிகளை மட்டும் செலவிட்டு இழப்பை உருவாக்கவில்லை. ஒட்டுமொத்த தேசத்தையையே நிலைகுலைய வைத்து பொருளாதாராத்தை ஆட்டம் காண வைத்துள்ளார். அது எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து பார்போம்.
-கௌதம சன்னா
11.11.2016
No comments:
Post a Comment