இந்துவும், சாதியில் அவரது நம்பிக்கையும்
- பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
(1) சேர்ந்து உண்ணக்கூடாது என்ற தடை,(மனு X.28 )
(2) கலப்புத் திருமணம் செய்யக்கூடாது என்ற தடை, (மனு X.31)
(3) சில வகுப்பு மக்களைத் தொடக்கூடாது என்ற தடை.
முதல் இரண்டு தடைகளும் சாதிப்பிரிவினையாகும்; மூன்றாவது தடை தீண்டாமையாகும். சாதி இந்துவுக்குத் தடைகளின் எண்ணிக்கை பற்றிக் கவலையில்லை. தடைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்பதில் அவர் குறியாயிருக்கிறார். தடையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவரிடம் கூறினால், ஏன் வேண்டாம் என்று அவர் திருப்பிக் கேட்கிறார். அவருடைய வாதம் இதுதான்: முதல் இரண்டு தடைகளையும் நான் பின்பற்றலாம் என்றால், மூன்றாவது தடையைப் பின்பற்றுவதில் என்ன தவறு? உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஒரே ஒருங்கிணைந்த முறைமை ஆகும். சாதி இந்துக்கள் தீண்டாகையைப் பின்பற்றுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும். (மனு X.39.)
இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றை விட்டு மற்றது பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்கமுடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தே தான் வீழும்.
சட்டத்தின் மூலமான அல்லது பகுத்தறிவு ரீதியான யுக்திகளால் தீண்டாமை மறைந்துவிடாது என்பதற்கு மற்றொரு காரணம் உள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி இந்து சமூக அமைப்பு படிப்படியான சமத்துவமின்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்தக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தைப் பலர் உணரவில்லை என்றால் அது மிகையல்ல. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு, படிப்படியான சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.
முன்னது பலவீனமானது, தன்னைத்தானே பாதுகாத்துக்கொண்டு நிலைக்கும் திறன் இல்லாதது. ஆனால், பின்னது தன்னைத்தானே பாதுகாத்துக்கொண்டு நிலைக்கும் திறன் கொண்டது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பில் கீழ்நிலைப் பிரிவுகள் ஒன்று சேர்ந்து அமைப்பைக் கவிழ்த்து விடமுடியும். அவற்றில் எதற்கும் அந்த அமைப்பைப் பாதுகாப்பில் விருப்பம் கிடையாது.
படிப்படியான சமத்துவமின்மை உள்ள அமைப்பில், பாதிக்கப்பட்ட பிரிவுகள் சேர்ந்து பொதுவான தாக்குதல் நடத்தும் வாய்ப்புக்கு இடமேயில்லை. இத்தகைய அமைப்பில் பாதிக்கப்பட்ட பிரிவுகள் பொதுவான நிலையில் இல்லை. உயர்ந்தது, தாழ்ந்தது என்ற நிலைகள் மட்டும் உள்ளபோதுதான் இவ்வாறு இருக்கமுடியும். படிப்படியான சமத்துவமின்மை முறையில் மிக உயர்ந்தவர்கள் (பிராமணர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, சற்று அதிகம் உயர்ந்தவர்கள் (சத்திரியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, உயர்ந்தவர்கள் (வைசியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கிழே, தாழ்ந்தவர்கள் (சூத்திரர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, அதிகம் தாழ்ந்தவர்கள் (தீண்டப்படாதவர்கள்) உள்ளனர். இவர்கள் அனைவருமே மிக உயர்ந்தவரிடம் மனத்தாங்கல் கொண்டவர்கள்தாம்; அவர்களைக் கீழே வீழ்த்திவிட விருப்பம் உள்ளவர்கள்தான். ஆனால், அவர்கள் ஒன்று சேரமாட்டார்கள். சற்று அதிகம் உயர்ந்தவன் மிக உயர்ந்தவனை ஒழித்துவிட ஆவலாயிருக்கிறான்; ஆனால் அவன், உயர்ந்தவனுடனும் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் சேர விரும்பவில்லை; அவர்கள், தன்னுடைய நிலையை அடைந்து தனக்குச் சமம் ஆகிவிடுவார்கள் என்று அவன் நினைக்கிறான்.
உயர்ந்தவன் தனக்கு மேலே உள்ளவனான சற்று அதிகம் உயர்ந்தவனை வீழ்த்திவிட விரும்புகிறான்; ஆனால், அவன் தாழ்ந்தவனுடனும் மிகத்தாழ்ந்தவனுடனும் சேர விரும்பவில்லை; அவர்கள் தனது அந்தஸ்துக்கு உயர்ந்து தன்னுடன் சமநிலை பெற்றுவிடுவார்கள் என்று அவன் நினைக்கிறான். தாழ்ந்தவன், மிக உயர்ந்தவனையும், சற்று அதிகம் உயர்ந்தவனையும், உயர்ந்தவனையும் கீழே தள்ளிவிட விரும்புகிறான்; ஆனால் அவன் மிகத் தாழ்ந்தவனுடன் கூட்டுச் சேரமாட்டான். மிகத் தாழ்ந்தவன் அந்தஸ்தில் உயர்ந்து தனக்குச் சமம் ஆகிவிடுவான் என்று அவன் அஞ்சுகிறான்.
படிப்படியான சமத்துவமின்மை உள்ள அமைப்பில், சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள பிரிவைத் தவிர முற்றிலுமாக உரிமைகள் இல்லாதவர்கள் என்று எந்த வகுப்பும் இல்லை. மற்ற வகுப்புக்கூட, மிகத் தாழ்ந்த வகுப்புடன் ஒப்பிடும் போது, ஓரளவு உரிமைகள் பெற்றுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கும் உரிமைகள் இருப்பதால், இந்தச் சமூக அமைப்பைப் பராமரிப்பதில் ஒவ்வொரு வகுப்புக்கும் அக்கறை இருக்கிறது.
தீண்டாமை, தீண்டப்படாதவர்களுக்கு ஒரு சாபமாயிருக்கலாம். ஆனால், இந்துக்களுக்கு ஒரு வரப்பிரசாதமே என்பதில் சந்தேகம் இல்லை. தங்களைவிடத் தாழ்ந்தவர்களாகக் கருதுவதற்கு ஒரு வகுப்பை, அது அவர்களுக்குக் கொடுக்கிறது. யாருமே முக்கியமானவர்களாயில்லாத ஒரு அமைப்பை இந்துக்கள் விரும்பவில்லை.
எல்லோருமே முக்கியமானவர்களாக உள்ள அமைப்பையும் அவர்கள் விரும்பவில்லை. தாங்கள் முக்கியமானவர்களாகவும் மற்றவர்கள் முக்கியமில்லாதவர்களுமாக உள்ள ஓர் அமைப்பை அவர்கள் விரும்புகிறார்கள். தீண்டப்படாதவர்கள் முக்கியமில்லாதவர்கள். இது, இந்துக்களை முக்கியமானவர்கள் ஆக்குகிறது. தீண்டாமை முறை இந்துவின் இயல்பான பெருமை உணர்வுக்குத் தீனிபோட்டு, அவர்கள் தங்களைப் பெரியவர்களாக நினைக்கவும், பெரியவர்களாக காட்டவும் உதவுகிறது. இந்துக்கள், முக்கியமாகச் சிறியவர்களாக இருக்கும் பெரிய பெரும்பான்மை மக்கள், தீண்டாமை முறையைக் கைவிடும் வாய்ப்பு ஏன் இல்லை என்பதற்கு இது மற்றொரு காரணமாகும்.
இந்து சமூக அமைப்பு முழுவதும், குறிப்பாக, சாதி முறை ஒழிந்தால் தான் தீண்டாமை மறையும். இது முடியுமா? ஒவ்வொரு அமைப்பு முறையும் ஏதேனும் ஒரு அங்கீகாரத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது.
ஓர் அமைப்பு முறைக்கு இவ்வாறு உயிர்ச் சக்தி அளிக்கும் அங்கீகாரங்கள் மூன்று வகைப்படும். அவை சட்ட, சமூக, சமய அங்கீகாரங்கள் ஆகும். அமைப்பு முறையின் உயிராற்றல் இந்த அங்கீகாரத்தின் தன்மையைப் பொறுத்தே அமைகிறது. சாதி முறையின் பின்னே உள்ள அங்கீகாரத்தின் தன்மை என்ன? துரதிர்ஷ்டவசமாக, சாதி முறையின் பின்னே உள்ள அங்கீகாரம் சமய அங்கீகாரம் ஆகும்.
வர்ண முறையின் புதிய வடிவமான சாதி முறை, தனது அங்கீகாரத்தை இந்து சமயத்தின் புனித நூலாகவும், தவறுதல் அற்றதாகவும் உள்ள வேதங்களிலிருந்து பெறுகிறது. ‘துரதிர்ஷ்டவசமாக’ என்று நான் கூறுவதற்குக் காரணம், சமய அங்கீகாரம் பெற்ற எதுவும், புனிதமானதாகவும் நிரந்தரமானதாகவும் ஆகிவிடுகிறது என்பதே. இந்துவுக்குச் சாதி புனிதமானது, நிரந்தரமானது.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு - தொகுதி 9)
No comments:
Post a Comment