Thursday, November 3, 2016

ஏன் பௌத்தம்? - பகுதி ஒன்று

Leo Joseph D
via Facebook
2016-Nov-03

ஏன் பௌத்தம்? - பகுதி ஒன்று

இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல , அது ஏவல்களையும் கட்டளைகளையும் உள்ளடக்கிய விதிமுறைகளின் தொகுப்பே, மதம் என்பது தத்துவம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்கிற அண்ணல் அம்பேத்கர் , தீண்டப்படாத மக்கள் இந்து மதத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதே சமூக விடுதலைக்கு ஒரே வழி என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறார்.

மதமாற்றம் என்பதே தீண்டப்படாத மக்களின் நீண்ட கால இழிநிலை நீங்க ஒரே வழி என்பது பாபாசாகேப் அவர்களின் தீர்க்கமான முடிவு. இந்துவாக பிறந்த நான் ஒரு போதும் இந்துவாக இறக்க மாட்டேன் என்பதை உறுதிபட தெரிவித்த அண்ணல் அம்பேத்கர், தனது மதமாற்ற முடிவை நீண்டகாலம் கழித்தே அறிவிக்கிறார். அதற்கான காரணம் மத மாற்றம் ஏன் அவசியம், மத மாற்றம் தீண்டதகாதவர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதனை பல வழிகளிலும் அலசி ஆராய்ந்த பிறகே , தனது பௌத்த தேர்வை பிரகடனப்படுத்துகிறார்.

இந்து மதம் தவிர்த்து இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம் , சமணம், பௌத்தம் என பல மதங்கள் இந்தியாவில் இருக்கையில் , பாபாசாகேப் ஏன் பௌத்தத்தை தேர்வு செய்தார்? அல்லது இந்து மதத்தை புறக்கணிக்க மக்கள் நாத்திகத்தை/கடவுள் மறுப்பை வலியுறுத்தாமல் ஏன் பௌத்தத்தை தேர்வு செய்தார் என்கிற கேள்விகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இதற்கான பதில்கள் வெறுமனே அண்ணல் அம்பேத்கரின் பேச்சுகளை, எழுத்துகளை மேற்கோள் காட்டுவதனால் மட்டும் புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்று அல்ல. இதற்கான பதிலை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் அம்பேத்கரைப் படிக்க வேண்டும், அம்பேத்கரியம் என்பது எதுவென உள்வாங்க வேண்டும். குறைந்த பட்சம் இந்து மதம், மதங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு , மதமாற்றம் தீண்டப்படாதவர்களுன் வாழ்வில் விளைவிக்க விழையும் மாற்றம், பௌத்தம் மற்றும் பார்ப்பனியம் குறித்து பாபாசாகேப் ஆய்ந்து தெரிவித்த கருத்துகளை நாம் உள்வாங்க வேண்டியது அவசியம்.
அம்பேத்கரியம் என்பது பரவலாக பேசப்படுவது போல சாதி ஒழிப்பு அல்ல. அம்பேத்கரியத்தின் பிரதான இலக்கு சமூக விடுதலை / சமூக ஜனநாயகம். இந்த சமூக விடுதலை / சமூக ஜனநாயகத்தை நோக்கிய வழுமுறைகள் அல்லது படிநிலைகள் தான் மதமாற்றம் மற்றும சாதி ஒழிப்பு. 
வழிமுறைகளை இலக்குகள் என தவறாக புரிந்து கொண்டதன் விளைவுதான், இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் அம்பேத்கரியத்தால் சாதியத்தை ஒழிக்க முடியவில்லை, ஆகவே அம்பேத்கரியம் தோல்வி அடைந்துவிட்டதாக சிலர் பிரச்சாரம் செய்யவும் காரணமாகும்.

சமூக ஜனநாயகம் / சமூக விடுதலை என்பதே பிரதான இலக்கு என்பதால் அதை அடையும் இருவழிகளாகவே மத மாற்றம் மற்றும் சாதி ஒழிப்பு ஆகியனவற்றை காண வேண்டும்.

இந்து மதம் சமூக ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். ஒருவர் இந்து மதத்தை விட்டு விலகி , இஸ்லாம், கிறிஸ்தவம் , பௌத்தம் உள்ளிட்ட மதங்களில் தன்னை இணைத்துக் கொள்ளும் போது சாதி ஒழிப்பு என்பதை விட, எந்த அளவு ஜனநாயகத் தன்மை கூடி இருக்கிறது என்பதே ஒப்பு நோக்க தக்கது. கிறிஸ்தவத்திலும் சாதி இருக்கிறது, அதனால் மதமாற்றம் சாதியை ஒழிக்காது, எனவே அம்பேத்கரியம் தோற்றுவிட்டது என்பது புரிதலின்மையால் எழும்பும் கூற்று. இந்து மதத்தோடு ஒப்பு நோக்கும் போது கிறிஸ்தவத்தில் ஜனநாயகத் தன்மை சற்று கூடுதல் என்பதே பிரதானமானது. மதம் என்பது தனி மனித ஆளுமை வளர்ச்சிக்கும் சமூக கூட்டிணைவு வாழ்வுக்கும் எந்தளவிற்கு துணை புரிகிறது என்பதை கொண்டே மதிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். 
அண்ணல் அம்பேத்கர் சகோதரத்துவம் பற்றிந தனது வாதத்துக்கு வலுவூட்ட கிறிஸ்தவர்களின் பைபிளிலிருந்து தான் மேற்கோள் காட்டுகிறார். ஆனாலும் அவர் தீண்டப்படாத மக்களின் மத மாற்றம் என்று வரும் போது கிறிஸ்தவத்தை பரிந்துரைக்கவில்லை.
முகமதியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களை நீண்ட தகாதவர்களாகவே நடத்தினார்கள் என்கிற ஒரு எடுத்துக்காட்டைத் தவிர இஸ்லாம் மதத்தின் மீதும் அவர் கடுமையான விமர்சனங்கள் எதையும் முன் வைத்ததாக தெரியவில்லை. 
ஆனாலும் மத மாற்றத்தின் போது பௌத்தத்தையே தன் மக்களுக்கான சிறந்த தேர்வாக பரிந்துரைக்கிறார். அது ஏன் என்கிற கேள்விக்கு நிச்சயமாக, தாழ்த்தப்பட்டவர்களின் பூர்வீக மதம் பௌத்தம் என்ற ஒற்றை வரியிலான தட்டையான புரிதல் பதிலாக அமைய முடியாது.

தொடரும்....

---

URL:
https://www.facebook.com/dleokommedu/posts/1213532282037446

No comments:

Post a Comment