மணி மணிவண்ணன்
Via Facebook
2016-Nov-08
தீபாவளிக்கும் நரகாசுரன், ராமன் ஆகியோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவை பின்னால் இட்டுக்கட்டப்பட்ட கதைகள். தீபாவளி ஒரு சமணப் பண்டிகை. வர்த்தமான மகாவீரர் முற்றியடைந்த நாள். அமாவாசையன்று நல்லெண்ணை தேய்த்துத் தலைக்குக் குளிப்பது என்பது நீத்தார் கடன். அந்த நீத்தார் கடனை நிறைவேற்றிவிட்டு அவர் முற்றிய நாளைக் கொண்டாடுவது சமணர் பழக்கம். அது அவர்களுடைய புத்தாண்டு நாள். ஆண்டுக்கணக்கு தொடங்கும் நாள்.
சமணர்களையும், சமணப்பண்டிகைகளையும் சைவ, வைணவ சமயங்கள் தன்வயப்படுத்தத் தொடங்கியபோது வடக்கிலும் தெற்கிலும் வெவ்வேறு கதைகளை இட்டுக்கட்டி விட்டார்கள். தெற்கில் நரகாசுரன் கதையையும் வடக்கில் ராமன் அயோத்தி மீண்ட கதையையும் கட்டி விட்டார்கள். நரகாசுரன் தமிழனில்லை. தீபாவளி தமிழ்ப்பண்டிகையுமில்லை. கார்த்திகை விளக்கின் பல கூறுகளைப் பின்னால் தீபாவளி எடுத்துக் கொண்டது. விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு முன்னால் தீபாவளி தமிழகத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லை. கார்த்திகை விளக்கு தொன்மையான விழா. விளக்கு வரிசை விழா (வடமொழியில் தீபம் என்றால் விளக்கு, ஆவளி என்றால் வரிசை) போன்றதொரு விழா உலகில் பல மதங்களில், பல மரபுகளில் உள்ளன. வாண வேடிக்கைகள், வெடிகள், போன்றவை சீனர்களிடமிருந்து கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் இறக்குமதி செய்தவை. இன்றும்கூடப் பல தமிழர் குடும்பங்களில் தீபாவளி பெரிய விழாவே அல்ல. ஆனால், ஹாலோவீனைக் காட்டிலும், வேலண்டைன் நாளைக் காட்டிலும் தீபாவளி நமக்கு நெருங்கிய பண்பாட்டுத் தொடர்புள்ளது. உறுதியாக நம் முன்னோர்களில் பலர் சமணர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் நினைவாகவாவது தீபாவளியை நாம் சிறப்பாகக் கொண்டாடலாம்.
No comments:
Post a Comment