Saturday, November 12, 2016

அவசரக்காரனுகதான் பேங்குல கியூவுல நிக்கிறாங்க - ஷாஜகான்

Shahjahan R
Via Facebook
2016-Nov-12

அவசரக்காரனுகதான் பேங்குல கியூவுல நிக்கிறாங்க. செல்பி எடுக்கிற ஆசையில்தான் கூட்டமா போய் அம்முறானுக. மத்தபடி கூட்டமே இல்லே. பிரச்சினையே இல்லே. நான் நேராப் போனேன், எடுத்துட்டு வந்துட்டேன். எங்கியும் எந்தக் குழப்பமும் இல்லே. எல்லாம் சுமுகமாப் போயிட்டிருக்கு.... அப்படீன்னு சொல்றதை எல்லாம் பார்க்கும்போது குண்டுமணித் தங்கம் வச்சிருந்தவன் கதைதான் ஞாபகம் வருது. அது கிடக்கட்டும்.

இவங்க சொல்றதெல்லாம் லாஜிக்கலா சரிதானா? நிசமாவே பணப் புழக்கத்துக்கேற்ப நோட்டுகள் கிடைக்குதா? இங்கே புலம்பிட்டிருக்கிறவன்லாம் மோடி மேலே வெறுப்பால மட்டும்தான் புலம்பறானா? கொஞ்சம் பார்ப்போமா? (கறுப்புப் பணம் அல்ல, கறுப்புப் பொருளாதாரம்தான் பிரச்சினை என்பது பற்றி இங்கே விவாதிக்கப் போவதில்லை.)

ஏன் கூட்டம் போய் ஏறுது? சும்மா பொழுது போகாமலா? சினிமா தியேட்டருக்கே கியூவில நிக்கிறதைக் குறைச்சாச்சு நம்மாளுக இப்போ. பேங்க் கியூவுக்கு விரும்பியா போய் நிப்பாங்க?
நேத்திக்கி கியூவுல நின்னோம். மதியம் பணம் தீந்து போச்சுன்னு சொன்னாங்க. இன்னிக்கு சீக்கிரமே போய் நிப்போம்னு ஒரு குரூப்பு இருக்கும். இன்னிக்காவது லைன்ல நிக்கலாம். நாளைக்கு நாடு முழுவதுக்கும் பணமே இல்லாமப் போயிட்டா, சுத்தமா ஒண்ணுமே இல்லாமப் போயிட்டா என்னாகும்னு ஒரு குரூப்பு ஓடும். என்னைப்போல சுத்தமா காசு இல்லாம, வேற வழியில்லாம நொந்துகிட்டே நிக்கும். மத்தபடி விருப்பத்தோட மணிக்கணக்குல நிக்க எவனுக்கும் ஆசையும் இருக்காது, நேரமும் இருக்காது.

இப்போ வேற சில புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம்.

• நாட்டில் புழக்கத்தில் இருந்த மொத்த ரூபாய் நோட்டுகளில் 80 சதவிகிதம் 500/1000 ரூபாய் நோட்டுகள்தான். மீதி 20 சதவிகிதம்தான் 100/50/20/10 ரூபாய் நோட்டுகள். இப்போ, அந்த 80 சதவிகித நோட்டுகள் செல்லாதுன்னு ஆக்கியாச்சு. இருக்கிற 20 சதவிகித நோட்டுகள்தான் அந்த 80 சதவிகித நோட்டுகளின் இடத்தையும் பூர்த்தி செய்யணும். அதுவும், 80 சதவிகித நோட்டுகள் 500 - 1000 ரூபாய் மதிப்புடையவை. இந்த 20 சதவிகித நோட்டுகள் வெறும் 100-10 ரூபாய் மதிப்புடையவை.  ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு நிகரா 10 நூறு ரூபாய் நோட்டு வேணும். அப்போ பயங்கர தட்டுப்பாடு ஏற்படும்தானே?

பேங்குகள் அந்தத் தட்டுப்பாட்டை தீர்த்து வைக்கும் அப்படீன்னு சொன்னது அரசு. ஆனா பேங்குகளுக்கு நோட்டு அவ்வளவாப் போய்ச் சேரலே. ஏன்னா, 80 சதவிகித நோட்டுகளின் மதிப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு 100 ரூபாய் நோட்டுகளே இருக்காது. அதனால தீர்த்துவைக்கவே முடியாது. லைன் நின்னுட்டே இருக்கு. பணம் தீந்து போச்சு. நாளைக்கு வாங்கன்னு சொல்றாங்க.
போஸ்ட் ஆபீஸ்ல கிடைக்கும்னு சொன்னாங்க. இப்போ பாத்தா, பிராஞ்ச்ல கிடைக்காது, ஹெட் போஸ்ட் ஆபீஸ்ல மட்டும்தான் கிடைக்கும்னு சொல்லியாச்சு. அதுலயும் ஆப்பு.
ஆக, உங்ககிட்டே பணம் இருக்கு. செல்லாத நோட்டுன்னு அறிவிச்சாலும் அதுக்கான மதிப்பு இப்பவும் அப்படியே இருக்கு. ஆனா அதைப் பயன்படுத்த முடியாது.

• அதுதான் புது நோட்டு வந்திருச்சே... அதை மாத்திக் குடுக்கலாமே? அப்படீன்னு கேப்பீங்க.
மேலே சொன்ன மாதிரி மணிக்கணக்குல நின்னு பழைய நோட்டைக் குடுத்து புதுசு வாங்கிட்டீங்க. (ஒரு நாளைக்கு 4000 ரூபாய் மாத்தலாம்னு சொன்னாங்க, பல இடங்களில் 2000தான் தர முடியும்னு சொல்றாங்க. அவங்களைச் சொல்லியும் தப்பில்லே. இருக்கிறதை எல்லாருக்கும் முடிஞ்ச அளவு பகிர்ந்து குடுக்கலாம்னு நினைச்சிருக்கலாம்.)

புது நோட்டு 500 அல்லது 2000 ரூபா நோட்டு. அதை வாங்கிட்டுப்போயி என்ன செய்வீங்க? கடைக்குப் போறீங்க. மொத்தமா 2000க்கு அல்லது அதில் பெரும்பகுதிக்கு பொருள் வாங்கினா அவன் நோட்டை வாங்கிக்குவான், ஏதோ கொஞ்சம் சில்லறை மீதம் தருவான். ஆனா 100 ரூபாய் அல்லது 200 ரூபாய்க்கு பொருள் வாங்கிட்டு 2000 ரூபா நோட்டை கடைக்காரனுக்குக் குடுத்தா, அவன் மீதிப் பணம் தரணும். அவன்கிட்டே சில்லறை இல்லாதப்போ அவன் எங்கிருந்து குடுப்பான். அதனாலே, உங்ககிட்டே நோட்டு இருக்கும், ஆனா இருக்காது. ஆக, உங்ககிட்டே செல்லுபடியாகிற நோட்டு இருக்கு. ஆனா பயன்படுத்த முடியாது.

• பேங்க்ல அகவுன்ட்லிருந்து எடுக்கிற விஷயம் பார்ப்போம். நாளுக்குப் பத்தாயிரம் எடுக்கலாம். வாரத்துக்கு 20 ஆயிரம்தான் எடுக்க முடியும்.  அதை அவங்க 2000 ரூபாய் நோட்டாதான் தர முடியும். இந்த நோட்டுகள் முழுப் புழக்கத்தில் பயன்பாட்டுக்கு வர காலம் ஆகும். அந்த நோட்டுகளை மேலே இருக்கிற அதே காரணத்தால் உங்களால் முழுசாத்தான் பயன்படுத்த முடியுமே தவிர சில்லறையா பயன்படுத்த முடியாது.

• இப்போ ஏடிஎம் விஷயத்துக்கு வருவோம்.
11ஆம் தேதியிலிருந்து ஏடிஎம்கள் வேலை செய்யும்னு சொன்னாங்க. எங்கேயும் ஏடிஎம் வேலை செய்யலே. அவ்வளவு சீக்கிரம் வேலை செய்யறது சாத்தியமும் இல்லை. ஏன்னா... ஏடிஎம் இயந்திரங்கள் இன்னும் புது நோட்டுக்கேற்ப கான்ஃபிகர் செய்யலே.
(ஆறுக்குட்டி பெரியசாமி எழுதிய பதிவிலிருந்து சுருக்கமா சொல்றேன்.)

ஏடிஎம் இயந்திரத்துக்கு தன்கிட்டே இருக்கிற நோட்டை எண்ணத் தெரியும், ஆனா அது நூறு ரூபா நோட்டா, ஆயிரம் ரூபா நோட்டான்னு உணரத் தெரியாது. 100 / 500 / 1000 நோட்டுக்கேத்த டிரே இருக்கும். அதில் பணம் அடுக்கி வைப்பாங்க. ஒவ்வொரு டிரேக்கு ஒரு சென்சார் இருக்கும்.

நீங்க 10000 ரூபாய் வேணும்னு சொன்னா, அதுக்கேற்ப, 1000 ரூபாய் டிரேவிலிருந்து 9 நோட்டு, 500 ரூபாய் டிரேவிலிருந்து 1 நோட்டு, 100 ரூபாய் டிரேவிலிருந்து 5 நோட்டு - ஆக பத்தாயிரம் குடுக்கும். (100 ரூபாய் நோட்டு டிரேவில் தவறுதலா 1000 ரூபா நோட்டு வச்சுட்டா... உங்களுக்கு செம லாபம்தான். அது கிடக்கட்டும்)

ஆனா, இப்போ 500ம் கிடையாது, 1000ம் கிடையாது. அப்போ, புது நோட்டுகளுக்கேற்ப டிரேக்களை அட்ஜஸ்ட் செய்யணும். அது மட்டுமில்லை. அதுக்கான சாஃப்ட்வேரும் கான்ஃபிகர் செய்யணும். அதுக்கு அந்தந்த கம்பெனி என்ஜினியர் வந்துதான் செய்யணும். டிரேக்கள் சரி செய்ய - சாப்ட்வேர் சரி செய்ய இரண்டுக்கும் இரண்டு பேர் வரணும்.  அதுவும் நாட்டில் இரண்டு லட்சத்து பத்தாயிரம் மெஷின்கள் இருக்குதாம். அத்தனை மெஷின்களுக்கும் கான்ஃபிகர் செய்யும் வரை ஏடிஎம்மிலும் தட்டுப்பாடு இருக்கும்.

அதுபோக, இப்போ எல்லாருக்கும் புழக்கத்துக்குத் தேவைப்படுவது 100 ரூபாய் நோட்டுதான். ஏடிஎம்மில் 100 ரூபாய் நோட்டுகளையே அதிகம் வைக்க வேண்டியிருக்கும். ஒரு பத்து 1000 ரூபாய் நோட்டால் பத்தாயிரம் ரூபாய் ஈசியா வந்துடும். ஆனா அதே 100 ரூபாய் நோட்டுக்கு நூறு நோட்டு தேவைப்படும். இவ்வளவு நோட்டு பேங்கிலும் இருக்காது. அதனால், ஏடிஎம் வேலை செஞ்சாலும், நீங்க 2000 / 500 எடுக்கலாம். ஆனா அவ்வளவு சுலபமா செலவு செய்ய முடியாது. ஏன்னா, நோட்டு புதுசுதான், செல்லும்தான், ஆனா அதை செலுத்தற இடத்தில் சில்லறைத் தட்டுப்பாடு. (மேலே சொன்ன அதே காரணம்)

• ஏடிஎம் பத்தி இன்னொரு விஷயமும் பார்ப்போம். ரிசர்வ் பேங்க் புள்ளிவிவரப்படி, ஜூலை மாசத்தில் மட்டும் ஏடிஎம்மில் மட்டும் —
கிரெடிட் கார்டில் 606314 டிரான்சாக்சன், 2922.41 மில்லியன் ரூபாய்க்கு  நடந்திருக்கு.
டெபிட் கார்டில் 752133454 டிரான்சாக்சன்
2191650.70 மில்லியன் ரூபாய்க்கு நடந்திருக்கு. அதாவது.  மொத்தத்தில் 2194573.11 மில்லியன் - இரண்டு லட்சத்து பத்தொன்பதாயிரத்து நானூற்று ஐம்பத்தேழு கோடி ரூபாய் புழக்கம் ஏடிஎம்மில் நடந்திருக்கு. !!
அப்போ ஏடிஎம் இயங்கலேன்னா, இவ்வளவு புழக்கமும் தடைபட்டிருக்கும் அல்லவா? ஆக, உங்க கணக்கில் பணம் இருக்கு, ஆனா நீங்க பயன்படுத்த முடியலே.

இப்போ நீங்களே முடிவு செய்யலாம் உண்மையிலேயே நிலைமை நல்லாத்தான் இருக்கான்னு.

அப்போ இதுக்குத் தீர்வு?
இந்த சர்க்கார் குறைஞ்சபட்சம் ஒரு வேலை செஞ்சிருக்கலாம். இப்போ அடிக்கிறாங்களே 2000 ரூபாய் நோட்டு, அதனுடைய எண்ணிக்கையைக் கொஞ்சம் குறைச்சுகிட்டு, கொஞ்ச நாள் முன்னாடியே நூறு ரூபாய் நோட்டுகளை நிறைய அடிச்சு எல்லா ஊர்களுக்கும் அனுப்பி விட்டிருக்கலாம். பேங்குகளுக்கும் போஸ்ட் ஆபீசுக்கும் அனுப்பியிருக்கலாம். இவ்வளவு சிக்கல் வந்திருக்காது.

- Shahjahan R

No comments:

Post a Comment