Wednesday, November 30, 2016

பேரழிவு (14) - கள்ளப் பணம் அல்லவென்று நிரூபிக்க வேண்டும்

துணைத் தளபதி மார்கோஸ்
Via Facebook
2016-Nov-30

பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு முதல் படி. அவசியமானது தான். இந்தப் பொய் திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. பொதுப் புத்தியும் இது ஓரளவு பலன் தரும் என்றே நம்ப வைக்கப் பட்டுள்ளது.

இரண்டரை லட்சத்துக்கு மேலே ஆன டெபாசிட்டுகளுக்கு 85 % வரி. இந்த வரி விதிப்பு எவ்வளவு அயோக்கியத்தனமானது.

இரண்டரை லட்சத்துக்கு மேலே ஆன வருமானத்துக்கு நான் வரி கட்டுகிறேன். இது ஒரு #வருட வருமானத்துக்கு.

இப்போது வங்கியில் கட்டப்பட்ட பணம் மக்களின் ஒரு வருட வருமானமா? வங்கி சாராமல் அவர்கள் சம்பாதித்த வாழ் நாள் பணம் அல்லவா அது? வாழ் நாள் சம்பாத்தியம் தான் என்று மக்கள் எவ்வாறு நிரூபிப்பார்கள். முடியாதே. எப்படி சம்பாதித்தார்கள் என்பதையும் நிரூபிக்க முடியாது. கிராம சந்தைப் பொருளாதாரத்தில் வாழும் மக்கள் தமது வாழ்வையும் பொருளாதார செயல்பாட்டையும் இரண்டாய் பார்க்காதவர்கள். அவர்கள் ஆடிட்டர் வைத்துக் கொண்டு வாழ முடியாது.

ஆடம் ஸ்மித்தின் புனித வரி விதிப்புக் கொள்கையில் முதல் விதி சமத்துவ விதி [ CANON OF EQUITY ]. ஏழைகள் மீது குறைந்த வரியும் பணக்காரர் மீது அதிக விதியும் என்பது அதன் சாரம்.

இது அப்பட்டமாய் மீறப்பட்டுள்ளது.

பல வருடங்களாய் தாம் சம்பாதித்த பணத்தைப் பொது மக்கள் வங்கியில் கட்டியுள்ளார்கள். கட்டிய பணம் எவ்வாறு கிடைத்தது என்று நிரூபிக்க முடியாது. அமைப்பு சாரா தொழிலாளிகள் என்ன நிரூபனத்தைக் கொடுத்து விட முடியும்?

இது தடா சட்டத்தை நினைவூட்டுகிறது. அரசு யாரை வேண்டுமானாலும் தடாவில் கைது செய்து கொள்ளலாம். தான் குற்றவாளி அல்லவென்று கைது செய்யப் பட்டவன் நிரூபித்துக் கொள்ள வேண்டும். அதுவரையும் அவன் சிறையில் இருக்க வேண்டியது தான். கைது செய்த அரசுக்கு எந்த பொறுப்பும் இல்லை. கைது செய்யப்பட்டவர் குற்றவாளியென்று நிரூபிக்கும் பொறுப்பு அரசுக்கில்லை.

அதே போன்று திருவாளர் பொது ஜனம் தான் கட்டியது கள்ளப் பணம் அல்லவென்று தானே நிரூபிக்க வேண்டும். நிரூபிக்கும் வரை அது கள்ளப் பணம் தான்.

காவி பயங்கரவாதம் தனது பொருளாதார பயங்கரவாத முகத்தைக் காட்டியுள்ளது.

No comments:

Post a Comment