Sunday, November 13, 2016

வங்கிகளின் திவால் நிலைமையை மீட்கிற “பெயில் அவுட்” நடவடிக்கையா?


Arun Nedunchezhiyan
Via Facebook
2016-Nov-12

#மிக_முக்கியமான_கட்டுரை

மோடியின் செல்லாத பணம் அறிவிப்பு –இந்திய வங்கிகளின் திவால் நிலைமையை மீட்கிற “பெயில் அவுட்” நடவடிக்கையா?

8 ஆம் தேதி நள்ளிரவு முதலாக  500 ,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்ற மோடியின் மோசடி அறிவிப்பானது,நாட்டின் ஒட்டுமொத்த ஏழை எளிய,நடுத்தர வர்க்கத்தினர் மீது  போரைத் தொடுத்தது.குறைவான கால அவகாசத்தில்,மருத்துவம்,போக்குவரத்து,உணவு போன்ற அன்றாட அத்தியாவசியத் தேவைக்காக பணம் இல்லாமல் மக்கள் பெரும் கொடுமைக்கு ஆளாகினர்.குற்றவாளிகள் போல முத்திரை குத்தப்பட்டவர்களானார்கள்.செல்லாத  பணத்தை மாற்றுவதற்கான மாற்று ஏற்பாட்டை முந்தயாரிப்பை திட்டமிட்டு செய்யாத காரணத்தால், பெரும் குழப்பமும்,வங்கிகளில்,ஏடிஎம் களில் மக்கள் மணிக்கணக்கில் சோறு தண்ணி இன்றி காத்துக் கிடக்கிற அவல நிலைக்குச் சென்றுள்ளனர்.குறு சிறு வியாபாரிகள்,மீனவர்களின் வாழ்க்கை முடங்கியது.வலுவான பிராந்திய அரசுகள் இல்லாத காரணத்தால் இந்த பொருளாதார நெருக்கடி நிலையானது மிக இயல்பான நிகழ்வுபோல கடந்துவிடுவதாகவே தெரிகிறது.

கடந்த இரு நாட்களாக முகநூலிலும் பிரபாத் பட்நாயக் போன்றஇடது பொருளாதார அறிஞர்களும் இந்த நடவடிக்கையை கண்டனம் செய்து வருகின்றனர்.கண்டனத்தின் சாரம்சத்தை தொகுத்துக் கூறின் இந்த நடவடிக்கைக்கும் கருப்பு பண ஒழிப்பிற்கும் தொடர்பே இல்லை,கருப்பு பணம் நிலமாக,நகையாக,வெளிநாட்டு நாணயமாக மாறிப் போயுள்ளது,மோடியின் இந்த மோசடி நடவடிக்கை வெறும் கண்துடைப்பு.

சரி,இப்போது விஷயத்திற்கு வருவோம்,கிட்டத்தட்ட மோடியின் தேச பக்தகும்பலைத் தவற பெரும்பாலானவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்து வருகிற நிலையில்,எதார்த்தத்தில் மக்களின் பாதிப்பை கண்டு வருகிற நிலையில் மோடியின் இந்த அறிவிப்பிற்கு பின்னால் என்ன காரணம் இருக்கு முடியும்?

கடந்த இரு நாட்களில் நடைபெற்றுவருகிற பல்வேறு விவாதங்களில் வெளிவந்த  கட்டுரைகளில் அறிக்கைகளில் ஒரு குறிப்பிட்ட முக்கிய அம்சத்தை காண முடிந்தது.சிபிஎம் எல் லிபெரஷன் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் தீபங்கர் பட்டாச்சாரியாவின் அறிக்கையிலும் தோழர் புவிமைந்தனின் கட்டுரையிலும் குறிப்பிடப் பட்டிருந்தது.அதுதான் வங்கிகளுக்கான பெயில் அவுட் நடவடிக்கை.

இந்தியப் பெரு முதலாளிவர்க்கத்திற்கு இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன் நிலுவையான 7 ½ லட்சம் கோடி ருபாய் வாராக் கடன்(முந்தைய காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட 1 ½ லட்சம் கோடி ருபாயை சேர்க்கவில்லை!) இந்திய வங்கிகளின் பெரும் சுமையாக தலைமேல் தொங்குகிற கத்தியாக தொங்கிக் கொண்டிருந்தது.மோசமான நிதி கையிருப்பின் காரணமாக வங்கிகள் கடும் நிதி நெருக்கடியை திவால் நிலைமைகளை நோக்கி சென்றுகொண்டுள்ளது.எப்படியும் வங்கிகளை காப்போம் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதிகூறிவந்தார்.

இதேநேரத்தில்,உலகில் உள்ள நிதி மூலதன நிலைமைகளையும் மையப்படுத்தி கண்காணித்து,ஆலோசனைகள் வழங்கி வருகிற பன்னாட்டு நிதியகம்,இந்திய வங்கிகளை விரைவாக புனரமைக்க வற்புறுத்தி வருகிறது.உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி,இந்தியாவிற்கு சாதகமாக இருக்கிற காரணத்தால் மட்டுமே சுமார் 7 விழுக்காடு அளவிற்கு வளர்ச்சிப் இந்தியப் பொருளாதாரம் பெற்றுவருகிறது.மாறாக அமெரிக்காவை சுற்றி வளைத்துள்ள பொருளாதரா நெருக்கடியும்,இதர புற நிலைமைகளும் வரும்காலத்தில் மாறுகிற பட்சத்தில் இந்தியப் பொருளாதாரம் ஆட்டம் காணத் துவங்கும்.பண வீக்கம் அதிகரிக்கும்.வர்த்தகம் பாதிக்கும்.இதை மனதில் வைத்தே முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன்(பன்னாட்டு நிதியகத்தின் முன்னால் முதன்மை பொருளாதார ஆலோசகரும் கூட)முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,பெரு முதலாளிகளிடம் இருந்து பெற வேண்டிய கடனை, வரவு வைத்து வங்கிகளில் நிதி நிலைமைகளை கட்டுக்குள் வைக்க முயன்றார்.விடுவாரா மோடி,அம்பானிக்கும்,அதானிக்கும்,ஆபத்தென்றால் சும்மா இருப்பாரா,ரகுராம் ராஜனை விரட்டி,உஜ்ஜர் பட்டேலை நியமித்தார்.

தற்போது தடாலடியாக புழக்கத்தில் (500,100 ரூபாய்)உள்ள சுமார் பதினைந்து இலட்சம் கோடி ரூபாயை இந்த அறிவிப்பின் ஊடாக நேரடியாக பொதுமக்களிடம் இருந்து உறுஞ்சி எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ள ஒட்டுமொத்த பணம் - 17 இலட்சம் கோடி ரூபாய்
500,100 ரூபாய் புழக்கத்தில் உள்ளவை - 14 லட்சத்து 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய்.
தற்போது இந்தப் பணம் செல்லாது என்ற அறிவிப்பின் ஊடாக

1)புழக்கத்தில் உள்ள 14 லட்சத்து 15 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் குறைந்தபட்சம் 90 விழுக்காட்டு சுற்றோட்டப் பணம் வங்கிக்கு வரவாக வரும்.

2)மிகவும் கட்டுபடுத்தப்பட்ட வகையில், நாளுக்கு நாலாயிரம் ரூபாய் என்ற வகையில் வங்கியில்  2000 நோட்டும் ஏடிஎம்மில் 100 ருபாய் நோட்டும் சந்தையின் சுற்றோட்டத்தில் செல்லும்.

3) 100 ருபாய் தட்டுப்பாடு காரணமாக 2000 நோட்டு மீண்டும் வங்கிக்கு இருப்பாக செல்கிறது.

4)தொகுத்துக் கூறின் வங்கிகளில் வரும் நாட்களில் கையிருப்பு பணம் பல மடங்கு பெருகியிருக்கும்.எஸ்பிஐ வங்கியில் மட்டும் தற்போதுவரை 50,000 கோடி ருபாய் வரவு வந்துள்ளது.

5)இந்த பணத் தட்டுபாடு கட்டத்தில்,கடன் அட்டை பரிவர்த்தனை,மின்னணு பரிவர்த்தனை நோக்கி மேல்தட்டு வர்க்கத்தின் கவனம் செல்லும்.

6)சிறு குறு சில்லறை வியாபாரிகள் பணப் புழக்கம் இல்லாத காரணத்தால் சந்தையில் இருந்து தாமாக வெளியேறுவார்கள்.

7)கட்டுப்படுத்தப்பட்ட வகையில் சில காலம் கழித்து மீண்டும் புதிய 1000 ருபாய் புழக்கத்திற்கு வரும்.

8)புழக்கத்தில் இருந்து உறிஞ்சப்பட்ட பணமும்,புழக்கத்துக்கு விடப்பட்டபுதிய  பணமும் ஒரு கட்டத்தில் சமப்படுத்தப் பட்டு,புதிய ருபாய் நோட்டுகள் பழைய ருபாய் நோட்டுக்களை மாற்றீடு செய்திருக்கும்.

9)இந்த காலகட்டத்தில்,வங்கிகளில் முதலீடு செய்த பணம் முழுவதும் எடுக்கப்படாமல் வங்கியில் இருப்பாக மாறும்.

ஒட்டுமொத்தமாக பார்த்ததால், நேரடியாக அம்பானிக்கும்,அதானிக்கும்,ஜெபி குழுமத்திற்கும்,எஸ்ஸார் குழுமத்திற்கும் வழங்கிய கடன்களை வசூலித்து வங்கிகளின் நிதி நிலைமையை சீராக்காமல்,மக்களை வதைத்து பணத்தை உறிஞ்சி கடந்த காலங்களில் அம்பானிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ததுபோல தற்போது செய்யப்போகிறார்கள் என்பதே உண்மை.

தோழர் Arun Nedunchezhiyan

நன்றி பாவெல் சக்தி

No comments:

Post a Comment