Wednesday, November 16, 2016

பேரழிவு... (7) - sbi கடன் தள்ளுபடி - ம.செந்தமிழன்

தேசபக்தரின் கடனை அடைத்த உங்களுக்கு தேசமே தலைவணங்குகிறது!

ம.செந்தமிழன்

எவ்வளவு விரைவாக வங்கிகளில் உங்கள் பணத்தைச் செலுத்த முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செலுத்துங்கள். தள்ளுபடி செய்யப்பட வேண்டிய பெருமுதலாளிகளின் கடன் தொகை மிக மிக அதிகம். நீங்கள் வரிசையில் நின்று, பதட்டத்துடனும் வியர்வையுடனும் உங்கள் கையில் உள்ள பணத்தை வங்கியில் செலுத்துவது தேசநலனுக்கு மிகவும் தேவையாக உள்ளது.

ஒரு நாளின் பெரும்பாலான பொழுது, வரிசையில் நிற்பதிலும் வரிசையில் நிற்பதைப் பற்றிச் சிந்திப்பதிலும் கழிவதால், உங்களால் தேசநலனைப் பற்றிச் சிந்திக்க முடியாமல் போகலாம். கவலை வேண்டாம், உங்களுக்காக விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள் சிந்தித்துக்கொண்டுள்ளனர். வெறும் 6,963 கோடி ரூபாய் கடனை அவரால் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது. இந்த ’தேச’த்தில் இது ஒரு குற்றமா?

அவரை நீங்கள் எல்லோரும் எவ்வளவு கேவலமாகச் சித்தரித்தீர்கள்? சமூகவலை தளங்களில் எவ்வளவு வசவுகள் அந்தப் புனிதரை நோக்கி வீசப்பட்டன? இந்த நாட்டின் ’தொழில்’ துறையை மேலே உயர்த்துவதற்காக அவர் பட்ட அவமானங்கள்தான் எத்தனை! உல்லாச அழகிகளுடன் அவர் படுத்திருக்கும் படங்களைக் கண்டு எத்தனைப் பேர் எரிச்சல் கொண்டீர்கள்? , தேசபக்தி கொண்ட அவரைப்போன்ற தொழிலதிபர்களை எல்லை கடந்து கிண்டல் செய்துவிட்டீர்கள்.

அவர் தனி ஆள் அல்ல என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். அவருக்குப் பின்னால் ஒரு கூட்டமே வேலை செய்கிறது. அவர் மொத்தம் 17 வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, ’தலைமறைவாகி’யுள்ளார். அதுவும் இலண்டனில் தலைமறைவாகியுள்ளார். எவ்வளவோ தேசபக்தர்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் இலண்டனில் தலைமறைவாக இருந்தனர். இவரும் இருக்கிறார்.

மாண்புமிகு, மேதகு, தேசபக்தர், தொழில் அதிபர், பாரதமாதாவின் செல்லப்பிள்ளை விஜய் மல்லையா தம்மிடம் வாங்கியிருந்த ரூ 1,201/- கோடியை பாரத  ஸ்டேட் வங்கி ,’போக்கெழுதிவிட்டது’ (written off). இது ஒரு குற்றமா?

மற்ற 16 வங்கிகளிலும் அவர் கடன் வாங்கியிருக்கிறார். அந்த வங்கிகளுக்கெல்லாம் தேசபக்தி இன்னும் ஊறவில்லை. நீங்கள் உங்கள் கருப்புப் பணத்தைக் கொண்டுபோய் கொட்டினால்தானே, அந்த வங்கிகளால் தேசபக்தர்களுக்கு உதவ முடியும்! விரைந்து செல்லுங்கள்.

போக்கெழுதல் (writ off) என்றால் என்னவென்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு நிறுவனத்தின், கணக்குகளைப் பதிவு செய்யும்போது, அதன் சொத்துகள், பொறுப்புகள் (Assets, Liablities) எவ்வளவு எனக் குறிப்பிடப்படும். இருப்பு நிலைக் குறிப்பு (Balance Sheet) என்று இதற்குப் பேர். இதில், வர வேண்டிய கடன்கள் யாவும் சொத்துகள். தர வேண்டிய கடன்கள் யாவும் பொறுப்புகள். எவரேனும் கடன் வாங்கிவிட்டு அக்கடனைத் தர மறுத்தால், அதை ஐயக்கடன் (Doubtful Debt) என்பார்கள். அவரிடம் பலமுறை கேட்டுப் பார்க்க வேண்டும். அதன் பின்னரும் அவர் கடனைத் தராவிட்டால், அக்கடன் தொகையை வராக் கடன் (Bad Debt) என்பார்கள்.

இவ்வாறெல்லாம் ஒவ்வோர் ஆண்டும் அக்கடனுக்குப் பெயர் வைத்து அழகு பார்த்த பின்னர், அக்கடனைக் கணக்கிலிருந்து நீக்கிவிடுவார்கள். இதற்குப் பெயர்தான் போக்கெழுதுதல் (write off)  என்பது.

பாரத ஸ்டேட் வங்கி விஜய் மல்லையா தர வேண்டிய ரூ.1,201 கோடியைப் போக்கெழுதிவிட்டது. மேலும் வேறு சில தேசபக்தர்களின் கடன்களையும் போக்கெழுதியுள்ளது அந்தத் தேசபக்தி வங்கி. ஆக மொத்தம் இப்போது மட்டும் ரூ. 7,016 கோடி ரூபாயை வாரி வழங்கிவிட்டது.

இது ஒன்றும் பெரிய தொகை இல்லை. ஏனெனில், 2013 முதல் 2015 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி போக்கெழுதிய மொத்தக் கடன் தொகை, ரூ.40,084 கோடி! இப்போதைய ரூ.7,016/- கோடியையும் இவற்றோடு சேர்த்தால், ஏறத்தாழ 47,000 கோடியைக் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஒரே ஒரு வங்கி, தேசபக்தர்களுக்கு வழங்கியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் கூட்டாகச் சேர்ந்து 2013 – 2015 ஆகிய மூன்றாண்டு காலத்தில் மட்டும் போக்கெழுதிய கடன் தொகை, ரூ. 1, 14,000 கோடி! 2016 ஆம் ஆண்டுக்கான போக்கெழுதும் சேவை இன்னும் முடிந்திருக்காது என நினைக்கிறேன்.
நீங்கள் எல்லோரும் வீட்டில் பணத்தை வைத்திருந்த காலத்திலேயே வங்கிகள் இவ்வளவு பெரிய சேவைகளை ஆற்றியுள்ளன என்றால், இனிவரும் காலத்தில் அவை ஆற்றப்போகும் சேவையை கற்பனை செய்யவே முடியவில்லை.

”போக்கெழுதுதல் (writ off) என்றால், கடனைத் தள்ளுபடி செய்ததாக அர்த்தம் இல்லை. கணக்கிலிருந்து நீக்கியுள்ளோம், அவ்வளவுதான். இனிமேலும் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி விஜய் மல்லையாவிடம் பேசுவோம்” என்கிறார் இந்த நாட்டின் நிதியமைச்சர். போக்கெழுதிய கடனைச் சட்டப்படி கேட்க முடியாது என்பது இந்த நாட்டில் இந்த நிமிடம் வரைக்கும் உள்ள கணக்கியல் பாடம். ஒருவேளை கருப்புப் பணத்தை ஒழிக்கும் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக writ off என்பதன் அர்த்தத்தை மாற்றிவிட்டார்களோ என்னவோ! தேசபக்தியின் பேரால், என்ன வேண்டுமானாலும் நடக்கும் சாத்தியம் உண்டுதானே!

இன்னொரு தகவலையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
’பொதுவரையறை நிறுவனம் (public Ltd) என்பது ஒரு தனி சட்ட உரு’. அதாவது, public limited company is a separate legal entity என்பது நிறுவனச் சட்டம் (corporate law). இதன்படி, பொது வரையறை நிறுவனங்கள் வாங்கிய கடன்களுக்கு அந்த நிறுவனங்களின் தலைவர் பொறுப்பாக மாட்டார். விஜய் மல்லையாவும் மற்ற தேசபக்தர்களும் இவ்வாறான பொது வரையறை நிறுவனங்களின் தலைவர்கள்தான். சட்டப்படி இவர்கள் எல்லோரும் அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் அல்லர். புரிகிறதா?

உங்கள் வீட்டில் உள்ள சொம்பு ஒன்றுக்குக் கூட நீங்கள்தான் உரிமையாளர். அந்த சொம்பை அடகு வைத்துக் கடன் வாங்கினால் அதை நீங்கள்தான் திருப்பித்தர வேண்டும். இல்லையென்றால், அந்த சொம்பு ஏலத்திற்குப் போய்விடும். கிங் பிஷர் போன்ற தேச சேவை நிறுவனங்கள் யாவும் பொது வரையறை நிறுவனங்கள். விஜய் மல்லையா போன்றவர்கள் அவற்றின் தலைவர்கள்தானே தவிர, உரிமையாளர்கள் இல்லை. இதுதான் சட்டம். இந்தச் சட்டத்தின்படிதான் அந்த நிறுவனங்களுக்குக் கடன் வழங்கப்படுகிறது.

அம்பானியும் அதானியும் கூட அவர்களது நிறுவனங்களின் ‘தலைவர்கள்’தானே தவிர, ‘உரிமையாளர்கள்’ இல்லை. அவர்களது நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு அங்கே உள்ள கருப்புப் பணம் பிடுங்கப்படும் என்று கனவு கண்டுகொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, மிச்சம் மீதி உள்ள சேமிப்புகளைத் துடைத்து எடுத்துக்கொண்டு, வங்கிகளுக்குச் செல்லுங்கள்.

தேசபக்தர் மல்லையாவின் கடனைத் தள்ளுபடி செய்வதற்குத் தங்கள் சேமிப்புகளைக் கொடுத்த உங்களுக்கு தேசமே தலை வணங்குகிறது.

குறிப்பு:
இப்போது நடப்பது, தேசபக்தி கொண்ட தலைவர்களின் தலைமையிலான தேசம் காக்கும் அதிரடி நடவடிக்கைகள் ஆகும். இந்த தேசபக்தி நடவடிக்கைகள் கடந்த பத்து மாதங்களாகத் திட்டமிடப்பட்டவை. இரண்டாயிரம் ரூபாய் தாள்களை சாயம் போகும் படி அச்சிட்டது, கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு நடந்த இரகசிய தேசபக்தர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.

இன்னும் பல திடீர் திருப்பங்கள் தேசபக்தியுடன் அரங்கேற உள்ளன. நீங்களும் தேசபக்தியுடன் எல்லாத் திருப்பங்களிலும் திரும்பிக்கொண்டே இருங்கள். பல தேச விரோதிகள் உங்களைக் குழப்பலாம். அவர்கள் டீ குடிக்க கூட பாகிஸ்தான், சீனா அமெரிக்கா, அஜர்பைஜான் போன்ற நாடுகள் நிதியுதவி அளிக்கின்றன.

ஆகவே, எவர் பேச்சையும் மதிக்காதீர்கள். பெருநிறுவனங்களுக்கும், பாரத தேசத் தலைவர்களுக்கும் எதிராக எவர் பேசினாலும் அவர்களை, ‘தேச துரோகிகள்’ என்ற முத்திரைக்குள் அடக்கிவிட்டு, வங்கிகளை நோக்கி விரைந்து செல்லுங்கள்.

No comments:

Post a Comment