Tuesday, November 29, 2016

பேரழிவு (13) - அரசு எனும் சர்வாதிகாரி

Poovannan Ganapathy
Via Facebook
2016-Nov-29

அரசு எனும் சர்வாதிகாரி

  500 ,1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அரசின் சர்வாதிகார அறிவிப்பினை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் நடந்து வரும் உரையாடல்கள் ஒன்றை மிக மிக தெளிவாக உணர்த்துகின்றன.மக்கள் ஆட்சி என்பதனை அடைய நாம் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருக்கிறது என்பது தான் அது.இன்னும் மன்னர் ஆட்சி என்பதையே தான் மக்கள் ஆட்சியாக நம்மில் பெரும்பான்மையானோர் எடுத்து கொண்டு அதற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே கடமை என்று வாழும் உண்மை வேதனையை தருகிறது.

  கடந்த 30 ஆண்டுகளில் அதிகரித்த கல்லூரிகளில் குறிப்பிட்ட சதவீதம் சட்ட கல்லூரிகளாக இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் எழுகிறது.பள்ளி,கல்லூரிகளில் 6 ஆம் வகுப்பு முதல் சட்டம் பற்றிய பாடத்தை கட்டாயமாக்கினால் தான்  நாம் மக்கள் ஆட்சியை நோக்கி முன்னேற முடியும்.அப்படி செய்ய தவறினால் மக்கள் ஆட்சி என்ற பெயரில் மன்னர் ஆட்சியையே நாம் ஏற்று கொண்டு அடிமையாக வாழும் நிலை தான் தொடரும்.

  மக்கள் ஆட்சியில் பிரதமர்,மத்திய அமைச்சரவை,பாராளுமன்றம்,எதிர்க்கட்சிகள்,,சட்டமன்றம்,மாநில முதல்வர் ,மாநில அமைச்சரவைக்கு,ரெசெர்வ் வங்கி ஆளுநர்,அவர் உரிமைகள்,ரெசெர்வ் வங்கி ஆளுநர்,துணை ஆளுநர்களின் தன்னாட்சி உரிமைகள் என்று எதையும் அறியாமல் தான் பெரும்பான்மை மக்கள் வாழ்கிறார்கள்.அடுத்து பிரதமர் என்ன சர்வாதிகார அறிவிப்பு போகிறார் என்று மெத்த படித்தவர்கள் முதல் படிக்காத மக்கள் வரை சமூக ஊடகங்களில் குறுந்செய்திகளாக பரப்புவதில் இருந்து தேநீர் கடைகளில் அலசி தள்ளுகிறார்கள்.

31 சதவீதம் வோட்டு வாங்கிய (99 சதவீதம் வோட்டு வாங்கிய கட்சியாக,தலைவராக இருந்தாலும் )கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ன வேண்டுமானாலும் யாரையும் ஆலோசிக்காமல்,அனுமதி பெறாமல் ,எந்த துறையிலும் தலையிட்டு தன்னிச்சையாக முடிவுகளை அறிவிக்க உரிமை உண்டு என்று ஆழமாக நம்புகிறார்கள்.மன்னரின் தொடர்ச்சியாக தான் மக்கள் ஆட்சியின் பிரதமர் பதவியை பார்க்கிறார்கள்.543 உறுப்பினர்களில் பாதிக்கு மேலான உறுப்பினர்கள் இருந்தால் எந்த கழுதையும் பிரதமராக முடியும்.அவர்களின் ஆதரவு போய் விட்டால் உலகிலேயே சிறந்த அறிவாளி,நல்லவர்,நிர்வாகியாக இருந்தாலும் அவரின் பதவி  போய் விடும் என்பது தான் நம் மக்கள் ஆட்சியின் அடிப்படை.

   சட்ட்டங்களை தனி நபர்கள் இயற்ற முடியாது. தண்டனைகளை தனி நபர்கள் அதிகரிக்க முடியாது.புதிதாக தண்டனைகளை உருவாக்க முடியாது.மக்களுக்கு கட்டாய மை வைப்பேன்,மொட்டை அடிப்பேன் என்று ஆணவமாக ஆட முடியாது  என்ற அடிப்படைகளை கூட நம்ப மறுக்கும் நிலையில் தான் பெரும்பான்மை மக்கள் 2016 யிலும் உள்ளனர் என்பது மிகவும் வருத்தம் தரும் ஒன்று.

  அரசின் நிர்வாகத்தில்  திடீர் ஆச்சரியம்,அதிர்ச்சி என்பதே மக்கள் ஆட்சியில் கிடையாது என்ற அடிப்படை உண்மையை மிக மிக பெரும்பாலோர் கூட புரிந்து கொள்ள மறுப்பதை விட அடிமைத்தனமான சிந்தனை என்ன இருக்க முடியும்.மக்கள் ஆட்சி என்பதே கூட்டு முடிவு தான்.நான் கல்லூரி மாணவர் சங்கத்தில்,கல்லூரிகளின் கூட்டு மாணவர் சங்கத்தில் மருத்துவர்கள் சங்கத்தில்,முன்னாள் ராணுவத்தினர் சங்கத்தில்.கூட்டுறவு சங்கத்தில்,முன்னாள் மாணவர் சங்கத்தில் ,வாழும் குடியிருப்போர் நலன் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன்.இதில் பதவிக்கு பல குழுக்கள் போட்டி போடும்.ஒரு குழு ஒரு வோட்டிலோ அல்லது ஆயிரம் வோட்டு வித்தியாசத்திலோ வெற்றி பெற்று பதவிகளை பெரும்.பதவிகளை பெற்ற குழு என்ன பணிகளை செய்யலாம் என்று தெளிவான விதிமுறைகள் உண்டு.அனைவரையும் பாதிக்கும் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம் எதிலுமே கிடையாது.வெற்றி பெற்ற குழுவின்,தனி நபரின் உரிமைகள் எதுவும் தோல்வி பெற்ற உறுப்பினர்களை ஆதரித்த மக்களுக்கு எதிராக கிடையாது.அனைவருக்கும் பொதுவாக தான் வெற்றி பெற்ற மனிதர் செயல்பட வேண்டும்.

  போர் புரிய எடுக்கும் முடிவாக இருந்தாலும் அனைத்து கட்சிகளின் ஆலோசனை மற்றும் ஒப்புதலின் பேரில் தான் மக்கள் ஆட்சியில் அண்டை நாடுகளின் மீது போர் அறிவிக்க முடியும்.மனு நீதியில் ஒரு குடும்பம் நன்றாக இருக்க ஒருவரை பாலி கொடுக்கலாம் ,ஒரு ஊர் நன்றாக இருக்க ஒரு குடும்பம் பலி கொடுக்கலாம் ,ஒரு நாடு வெற்றி பெற ஒரு கிராமம் பலி கொடுக்கலாம் உண்டு.அது கொடுங்கோல்,சர்வாதிகார மன்னர் ஆட்சிக்கு பொருந்தும்.கண்டிப்பாக மக்கள் ஆட்சிக்கு பொருந்தாது.

இங்கு மனு நீதியே திருப்பி போடப்பட்டு ஒரு மனிதர் வெற்றிக்காக,போலி பிம்பத்துக்காக  நாடே சிரமத்தில் ஆழ்த்தப்படலாம்,எந்த தவறும் செய்யாத பல கோடி மக்கள் தண்டிக்கப்படலாம்,பணிகளை செய்யும் தொழிலை இழக்கலாம் என்று சொல்வது நியாயமா என்று கூட சிந்திக்காத பெரும்பான்மை மக்கள் தான் இன்றும் உள்ளனர்.

பிரதமர் என்னுடைய மருத்துவ பணியில்,வீட்டில் நான் வாழும் வாழ்க்கையில்,சமூகத்தில் நான் வாழும் வாழ்க்கையில் திடீர் என்று தன்னிச்சையாக இவை குற்றம்,செல்லாது என்று அறிவிக்க முடியுமா.குறிப்பிட்ட  மக்களுக்கு மருத்துவம் பார்க்காதே,சான்றிதழ்கள் வழங்காதே என்று கட்டளை இட முடியுமா .அப்படி சொன்னால் கூட சுயமரியாதை உள்ள யாராவது அதை கேட்பார்களா .பெருகி கிடைக்கும் கோடிக்கணக்கான வழக்குகளை தீர்க்க பிரதமர்  நீதிபதிகளுக்கு,வழக்கறிஞர்களுக்கு கட்டளையிட முடியுமா .அப்படி சொன்னால் அவர்களின் அடிப்படை உரிமைகளில் ,அவர்களின் பணி தரும் உரிமைகளில் சர்வாதிகாரமாக தலையிட்டால் ஒருவராவது ஏற்று கொள்வார்களா

  வழக்கறிஞர் பணிக்கும்,மருத்துவர் பணிக்கும் வங்கி பணிக்கும் என்ன வித்தியாசம் ,முன்னதில் இருக்கும் சுயமரியாதை,சர்வாதிகாரத்தை எதிர்க்கும் குணம்,தங்கள் பணியின் அடிப்படையான அவர்களின் வாடிக்கையாளர் நலன் போன்றவற்றை தூசி போல உதறி தள்ளி  அரசு உட்கார சொன்னால் உருளும் நிலையில்வங்கி அதிகாரிகள்  இருக்க முக்கிய காரணம் ஏதுவாக இருக்க முடியும் (ஊடகங்களை பற்றி எமெர்ஜெண்சி கொண்டு  வரப்பட்ட போது சொல்லப்பட்ட உவமை).இந்தியாவில் உள்ள பணிகளில் inclusiveness மிக மிக குறைவாக உள்ள பணி வங்கி பணி தான்.பேருக்கு 1950 முதல் SC /ST பிரிவை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு,1994  முதல் ஓபிசி பிரிவினருக்கு இருந்தாலும் வங்கி உயர் அதிகாரிகளில் 100 இல் 95 சதவீத பணிகளில் இருப்பவர்கள் இடஒதுக்கீடு பெறாத சாதிகளை சார்ந்தவர்கள் தான்.

   தன் மகன்/மகள் திருமணத்துக்காக,புதுமனை கட்ட/புகுவிழாவிற்காக ,வெளிநாடுகளுக்கு மேற்படிப்பு செல்ல,பணி ஓய்வு விழாக்கள் நடத்த,பிறந்தநாள் விழா கொண்டாட,குடும்ப உறுப்பினர் இறப்பு தொடர்பான நிகழ்வுகளுக்காக,மருத்துவ செலவுகளுக்காக ,தொழில் நடத்த ,பிறருக்கு உதவ தன் பணத்தை எடுக்க இருக்கும் ஆயிரம் தடைகளை அவர்களுக்கு பணி செய்ய பணியில் அமர்த்தப்பட்ட வங்கி அதிகாரிகள் போடுவதை விட அறமற்ற செயல் வேறு உண்டா.வங்கி அதிகாரியாக அவருக்கு இருக்கும் அதிகாரத்தின் படி ஐந்து லட்சம் கொடுத்தால் ,ஐம்பதாயிரம் கொடுத்தால் அது சட்டப்படி குற்றம் கிடையாது என்பதை உணர்ந்தும் , கெஞ்சும் வாடிக்கையாளர்களை கிள்ளுக்கீரையாக நடத்துவது சரியா என்ற எண்ணத்தை கூட வரவிடாமல் செய்வது எது.

  இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை,மக்கள் ஆட்சியின் அடிப்படைகளை  மக்கள் ஓரளவிற்கு புரிந்து கொள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு இன்றியமையாதது என்பதை தான் வங்கி அதிகாரிகளின் நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்துகின்றன.எளிதாக கடன் கிடைக்கும்,வங்கி அட்டைகளை பயன்படுத்தும் குழுக்கள் அவற்றை தொடாத மக்களை பார்த்து கைகொட்டி சிரிப்பதின் பின் உள்ள வன்மத்தின் காரணம் இது தானோ .1976 இல் நீதித்துறை வளைந்தததின் ,ஊடகங்கள் உருண்டதின் பின் உள்ள காரணம் இதுவாக தான் இருக்க முடியும்.

  பழங்குடி உறுப்பினரின் பசுவதை தடைக்கு எதிரான வாதங்களை,ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுக்கு எதிரான ஹிந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த சிலரின் வாதங்களை சிறிது கொண்டே புறந்தள்ளிய அரசியல்நிர்ணய சபையின் பெரும்பான்மை (அங்காவது பெரும்பான்மை உறுப்பினர்கள் ,இங்கே தனி மனிதர்)பின் உள்ள காரணம் அடுத்தவர் மீதுள்ள வெறுப்பும்,தன் உடை,உணவு,சடங்குகள்,பண பரிமாற்றம் உயர்ந்தது என்ற எண்ணம் தானே.

    அனைவரையும் தன் வழிக்கு கட்டாயப்படுத்தி கொண்டு வர வேண்டும் என்பதை எதிர்க்கும் உரிமை தான் மக்கள் ஆட்சி.தங்களுக்காக பணி செய்ய உள்ளவர்கள் தான் பிரதமர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,முதல்வர்,காவல்துறை அதிகாரிகள்,நீதிபதிகள்,வங்கி அதிகாரிகள்.இதை  மக்கள் உணர்ந்து கொள்ள  ,உணர்ந்து கொண்டு போராட அவர்களுக்கு வேண்டியது சுயமரியாதை,சுயமரியாதை,.

No comments:

Post a Comment