Thursday, November 10, 2016

MONETARY POLICY - மாரக்கோஸ்

துணைத் தளபதி மாரக்கோஸ்
Via Facebook
2016-Nov-10

ஒரு முதுகலை பொருளியல்  ஆசிரியர் என்ற முறையில் சமீபத்திய பண  நடவடிக்கை  குறித்து சில கருத்துக்களை சொல்ல விழைகிறேன்.

500 மற்றும்1000 ரூபாய்களை செல்லாக்  காசாக்கியத்தில் அரசின் உள் நோக்கங்கள் குறித்தும், அது  யாருடைய நலன் காக்கும்  நடவடிக்கை என்பது  குறித்தும் சில திசைகளை சுட்டிக்  காட்ட  முடியும். பதிவு பெரிதானதைத்  தவிர்க்க  முடியவில்லை.

முதலாவதாய் இது ஒரு பணக்  கொள்கை [ MONETARY POLICY ]  சார்ந்த செயல்பாடு. சந்தையில்  உள்ள பணத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதும், பணத்தை அச்சிட்டு விநியோகிப்பதும் இதன் முக்கிய  பணிகள். இதை செயல்படுத்துவது ரிசர்வ் வங்கி. ரிசர்வ்  வங்கி  மத்திய  அரசுடன்  கலந்தாலோசித்து இந்த  நடவடிக்கைகளை  எடுக்கும்.

பணக்  கொள்கையின் ஒரு  பணியாக சந்தையில்  உள்ள  பணத்தின்  அளவை  ரிசர்வ்  வங்கி  கட்டுப்படுத்துகிறது என்று  சொன்னேன். அதை செய்ய ரிசர்வ் வங்கிக்கு ஒரு  மூன்று  முக்கிய  கருவிகள்  உள்ளன.

1. CASH RESERVE RATIO.
2. BANK  RATE.
3. OPEN MARKET OPERATIONS.

1. CASH RESERVE RATIO: வணிக  வங்கிகள் பொது மக்களிடம் குறைந்த  வட்டிக்கு  பணம்  பெற்று சற்று உயர்ந்த  வட்டியில் கடன் கேட்போருக்கு  கொடுக்கின்றன. எடுத்துக்  காட்டாக ஒருவர் ஒரு  கோடி வங்கியில்  டெபாசிட்  செய்தால்  வங்கி  அந்த  ஒரு  கோடியை  முழுதுமாய்  இன்னொருவருக்கு  கடனாய் கொடுக்க  முடியாது. ஒரு குறிப்பிட்ட  சதவீதத்தை  கையிருப்பில்  வைத்துக்  கொண்டு  மீதியை  மட்டுமே கொடுக்க  முடியும். இந்த குறிப்பிட்ட வீதத்தைத்  தான் CRR என்கிறோம். CRR 5% எனில் ஒரு  கோடி  டெபாசிட்  பெற்ற  வங்கி ஐந்து  லட்சத்தை இருப்பாக  வைத்துக்  கொண்டு மீதி 95 லட்சத்தை யாருக்காவது  கடனாய் கொடுக்கலாம். இந்த CRR  ஐ  நிர்ணயிப்பது  ரிசர்வ்  வங்கி. CRR உயர்த்தப்பட்டால்  வங்கிகள்  மக்களுக்குக்  கொடுக்கும்  கடனின்  அளவு  குறையும். CRR  குறைக்கப்பட்டால்  வங்கிகள்  மக்களுக்குக்  கொடுக்கும்  கடனின்  அளவு  அதிகரிக்கும். சுருங்கக் கூறின் சந்தையில்  புழங்கும்  பணத்தின்  அளவை இந்த CRR  மூலம் ரிசர்வ்  வங்கியால்  ஓரளவு  கட்டுப்  படுத்த  முடியும்.  தற்சமயம் CRR 4% ஆக  உள்ளது.

2.BANK RATE: ரிசர்வ்  வங்கி  வணிக  வங்கிகளுக்கு  கடன் கொடுக்கும். அதே  போல்  வணிக  வங்கிகளும் ரிசர்வ்  வங்கிக்கு  கடன் கொடுக்கும். இதற்க்கான வட்டி  வீதங்கள் முறையே REPO RATE மற்றும் REVERSE REPO என்றழைக்கப்படுகின்றன. ரிசர்வ்  வங்கி வணிக வங்கிகளுக்கு கொடுக்கும்  கடனின்  வட்டி  வீதத்தை  ஏற்றினால் வணிக  வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களுக்கான வட்டி  வீதத்தை  ஏற்றும். எனவே கடன்  பெறுவோர் ஆர்வம்  குறையும். மாறாக REPO குறைந்தால் வணிக  வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான வட்டி  வீதத்தை  குறைக்கும். எனவே  கடன்  பெறுவோர் ஆர்வம்  அதிகரிக்கும். சுருங்கக் கூறின் இந்த REPO வை மாற்றுவதன்  மூலம் சந்தையில்  புழங்கும் பணத்தின்  அளவை ரிசர்வ்  வங்கியால்  ஓரளவு  கட்டுப்படுத்த  முடியும். தற்சமயம்
REPO RATE 6.25 % ஆக  உள்ளது.

3. OPEN MARKET OPERATIONS: கடன்  பத்திரங்கள்  வெளியிடுவதன் மூலம் எடுக்கப்படும்  நடவடிக்கைகள். மத்திய  மாநில அரசுகள்  இரு  தரப்பாலும் இது  செய்யப்  படுகிறது. புழக்கத்தில்  இருக்கும்  பணத்தின்  அளவை  இதன்  மூலமும்  கட்டுப்படுத்த  முடியும்.

விலை  வாசி  உயரும்  போதெல்லாம் ரிசர்வ்  வங்கி மேலே  குறிப்பிட்ட  கருவிகளில்  ஏதேனும்  ஒன்றைப்  பயன்படுத்தி சந்தையில்  புழக்கத்தில்  உள்ள  பணத்தை தனக்குள்  இழுத்துக்  கொள்ளும். பணப்  புழக்கம்  குறைந்தால்  விலைவாசி  குறையும் என்பது அரசின்  கணக்கு. ஆனால்  அப்படி பணத்தை  உள்  இழுத்தால்  தொழில் துறை கடுமையாக  பாதிப்படையும். தொழில்  துறை  பாதிப்படைந்தால்  அதன்  விளைவுகளையும்  நாடு  சந்திக்க  வேண்டி  வரும். இரண்டையும்  கருத்தில்  கொண்டே  அரசின்  நடவடிக்கை  இருக்கும்.

எனவே புழக்கத்தில்  உள்ள  பணத்தை உள்ளே  இழுப்பதும், வெளியே  விடுவதுமாய்  அரசின் பணக்  கொள்கை செயல்பட்டுக்  கொண்டிருக்கிறது.

இப்போது  பதிவின் முக்கிய  கருத்துக்கு  வருவோம். இந்த 500 , 1000 ரூபாய்  தாள்களை ரிசர்வ்  வங்கி ஒட்டுமொத்தமாய்  தனக்குள்  இழுத்துக்  கொண்டது. இந்த  செயல்பாடு  மேலே  குறிப்பிட்ட எந்த  கருவியின் கீழும்  வருவதல்ல. ஏனெனில் இது அடிப்படையில்  ஒரு பணக்  கொள்கை [ MONETARY POLICY ] சார்ந்த  செயல்பாடே  அல்ல. கட்டுரையின் துவக்கத்தில் இதை  நான்  பணக்  கொள்கை  என்றே  துவங்கினேன். அது  தவறு. இது  முற்றும்  முழுதுமாய்  பணக்  கொள்கை  வடிவில்  இருக்கும்  ஒரு வரிவிதிப்புக் கொள்கை [ FISCAL  POLICY].

அரசின் சாமர்த்தியம்  இதுவே. பணக்  கொள்கை தோற்றத்தில்  ஒரு  வரிவிதிப்புக்  கொள்கை.

பஞ்சப் பராரிகளிடமும், சிறு, குறு தொழில்  செய்பவர்களிடமும் இருக்கும் கையிருப்புத்  தொகையை  வங்கிக்குக்  கொண்டு  வரச்  செய்து அதன்  மீது  வரியை  உறுதி  படுத்தி தனக்கான  வருவாயை  உயர்த்திக்  கொள்ளும்  நோக்கமே அரசுக்கு உள்ளது.

வங்கி  சாரா சிறு  தொழில்  செய்பவர்கள் அரசின்  நேரடி  வரி  விதிப்புக்கு  கீழ்  வருவதில்லை. அதாவது  கிராம  சந்தைகளை  சொல்கிறேன். அவர்களிடம் உள்ள  பணத்தையும்  வங்கிக்குள்  கொண்டு  வர  வேண்டும். வங்கிக்குள்  வந்து  விட்டால் வரி  விதிப்பு  குறித்து அடுத்த  கட்ட  நடவடிக்கைகள்  எடுக்க  முடியும். சந்தையில்  கருவாடு  விற்பவன்   காசிலும் ஒரு  பகுதியை வரியாக   விழுங்க  யத்தனிக்கும் இந்த  காவி  பயங்கரவாத அரசுக்கு  ஈடு இணை எங்கும்  இல்லை.

புதிய  பணத்  தாள்கள்  பெற  முதலில்  வங்கியில்  நாம்  நமது  பணத்தைக்  கட்ட  வேண்டும். இரண்டாவது ஒரு  PAN கார்டு  கட்டாயம்  எடுக்க  வேண்டும். மூன்றாவது  எதுவுமில்லை. மீதியை  அரசு  செய்து  கொள்ளும்.

No comments:

Post a Comment