Saturday, November 12, 2016

முதியவர்களைம், வறியவர்களையும், கல்வியறிவு இல்லாத மக்களையும் தியாகங்கள் செய்ய சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?

வினாயக முருகன்
Via Facebook
2016-Nov-12

எங்கள் அலுவலகத்தில் க்ரூப்-4  தொழிலாளர்களுக்கு ஏழு தேதிக்கு பிறகுதான் சம்பளம் தருவார்கள். க்ரூப்-4 தொழிலாளர்கள் என்றால் மென்பொருள் நிறுவனங்களில் இருக்கும் பாதுகாவலர்கள், கேண்டீனில் வேலை செய்யும் பெண்கள். கழிவறைகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள். இவர்கள் யாருக்கும் மென்பொருள் நிறுவனங்கள் நேரடியாக சம்பளம் தராது.  அவுட்சோர்சிங் முறையில் ஏஜன்சிகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார்கள். ஏஜன்சிகள் ஆட்களை எடுத்து சம்பளம் தருவார்கள். இவர்களுக்கு புதுவங்கிக்கணக்கை திறந்து சம்பளத்தை கணக்கில் போடுவார்கள். ஒயிட்காலர் வேலை செய்யும் எங்களுக்கு சம்பளம் முப்பதாம் தேதியே வந்துவிடும். க்ரூப்-4 தொழிலாளர்களுக்கு  சம்பளம் ஏழு தேதிக்கு பிறகுதான் வரும். 

மென்பொருள் நிறுவனங்களில் ஏடிஎம் மையங்கள் இருக்கும். இவர்களில் சிலர் குறிப்பாக வயதான பெண்கள் கையில் டெபிட்கார்டுடன் பரிதாபமாக நிற்பார்கள். நாங்கள் வரிசையில் நின்று பணம் எடுக்கும்போது எங்களுக்கும் கொஞ்சம் பணம் எடுத்து கொடுங்க என்று கேட்பார்கள். இவங்க கார்டை வாங்கி மெசினில் போட்டு பணம் எடுக்க உதவிசெய்வோம். இவர்களிடம் நான் தொடர்ந்து கவனிக்கும் ஒரு விஷயம். இவர்கள் நூறு ரூபாயை கூட வங்கி கணக்கில் வைக்க மாட்டார்கள். சம்பளம் வந்ததும் மொத்தமாக எல்லா பணத்தையும் எடுத்துச்சென்றுவிடுவார்கள். அதற்கு அவர்களிடம் நியாயமாக பல காரணங்கள் இருக்கலாம். கடன்தொல்லை அல்லது குறைந்த சம்பளம் அல்லது வங்கிகளின் மீது பயம் அல்லது குறைந்த கல்வியறிவு அல்லது ஒவ்வொரு முறையும் ஏடிஎம்மில் மற்றவர்கள் உதவியை எதிர்பார்க்க தயங்குவது என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு வறுமையிலும் இவர்களின் பிள்ளைகள் எல்லாரும் பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள். அவர்கள் படித்துவந்தால் நாளை இதே மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கையை ஓரளவு சமாளித்துக்கொள்வார்கள். இந்தியாவில் கல்வியறிவை பரவலாக்க வேண்டும். எல்லாரும் படித்து, எல்லாரும் விஞ்ஞான வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் உண்மையில் தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் ஆசையும்.
  
நான் பெரும்பாலும் பணத்தை மொத்தமாக எடுத்துவந்து வீட்டில் வைக்கமாட்டேன். ஆன்சைட் சென்றபிறகு அவர்களிடம் கற்றுக்கொண்ட பாடம். தேவைப்படும்போது சில்லறை சில்லறையாக நூறு, இருநூறு எடுப்பேன். வங்கியின் சேமிப்பு கணக்கில் இருந்தால் வட்டி கிடைக்கும். கையில் அதிக பணம் இருந்தால் எதையாவது வாங்கிக்கொண்டே இருக்க தோன்றும். சீக்கிரம் பணம் கரைந்துவிடும். அத்தியாவசியம் ஏற்பட்டாலொழிய பணத்தை எடுக்க மாட்டேன். மின்சாரபில், டெலிபோன் பில், திரையரங்கு முன்பதிவு எல்லாமே ஆன்லைனில் செய்துவிடுவேன். ஆனால் எல்லாருக்கும் ஒரேமாதிரி தேவைகள் இருக்காது. ஒரேபோல வாழ்க்கைத்தரம் இருக்காது.

இன்று காலை ஏழு மணிக்கு வளசரவாக்கம் இந்தியன் வங்கி வாசலில் நீண்ட வரிசையை பார்த்தேன். எல்லாரும் வயதானவர்கள். ஓய்வூதியம் வாங்குபவர்கள் அல்லது தங்கள் இறுதிக்காலத்தை வங்கி சேமிப்பில்தான் ஓட்டுபவர்கள். இவர்கள் எல்லாருக்கும் பதட்டம் இருக்கத்தானே செய்யும்? எனது அம்மா குடும்ப ஓய்வூதியம் வாங்குபவர். அப்பாவின் மறைவுக்கு பிறகு அரசு தரும் பென்ஷன் வாங்குகிறார். பீரோவில் பதினைந்தாயிரம் சேர்த்து வைத்திருந்தார். எல்லாம் ஐநூறு ரூபாய் தாள்கள். இரண்டு மூன்று நாட்களாக வங்கியில் கூட்டம். அதனால் திங்கட்கிழமை போக சொன்னேன். எதுக்கு இவ்வளவு வீட்டில வச்சிருக்கீங்க என்று கேட்டேன். எதுவும் சொல்லவில்லை. நேற்று இரவு நான் வீட்டுக்கு திரும்பும்போது பக்கத்து வீட்டுக்காரரிடம் எனது அம்மா பேசுவது காதில் விழுந்தது.

முடியாத காலத்தில நாம மத்தவங்களுக்கு பாரமா இருக்கக்கூடாது. எனக்கு ஏதாவது ஆனாகூட எடுத்துபோட காசு சேர்த்து வச்சிருக்கேன். நாளைக்கு அவங்க என்னை சுமையா நினைக்க கூடாது இல்ல.. உடம்பு முடியாம போனா என்னால பேங்குக்கு போகமுடியுமா?  

நாம் இங்கு பேஸ்புக்கில் உட்கார்ந்துக்கொண்டு டெபிட்கார்டு, ஆன்லைன்,டிஜிட்டல் இந்தியா  என்று வாய்கிழிய பேசலாம். இளைஞர்கள் தேசத்துக்காக ஒருநாள் என்ன ஒருவருடம் கூட தியாகம் செய்யலாம். ஆனால் முதியவர்களைம், வறியவர்களையும், கல்வியறிவு இல்லாத மக்களையும் தியாகங்கள் செய்ய சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?

No comments:

Post a Comment