Venugopalan Rengan
Via Facebook
2016-Nov-17
அடுத்தபடியாக Write-Off என்ற வார்த்தை சகட்டுமேனிக்கு அடிபட ஆரம்பித்திருக்கிறது. ‘அவனவன் க்யூவுல மணிக்கணக்குல நிக்குறான்; மல்லையாவோட 1200 கோடி write-off பண்ணுவீங்களா?’ என்று கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன. Write-off என்றால் ’சோலி முடிஞ்சுது’ என்று அர்த்தமில்லை. உதாரணம் கீழே:
Scenario.1
நான் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கியிருக்கிறேன். மாதாமாதம் தவணையை, வட்டியுடன் கட்ட வேண்டும். ஒழுங்காகக் கட்டுகிறேன். வங்கிக்கு மாதாமாதம் தவணையில் அசலும், கூடவே முறையாக வட்டியும் கிடைக்கிறது. ஆண்டுக்கணக்கு முடியும்போது, எனக்குக் கொடுத்த கடன் Good Loan என்று கருதப்படும். எனக்குக் கொடுத்த கடன் வங்கியைப் பொறுத்தவரையில் ஒரு Performing Asset. கஜானாவில் உறங்கிக்கொண்டிருக்காமல், அதன்மூலம் வருவாய் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, பிரச்சினையில்லை.
Scenario.2
’அரசாங்க வங்கிதானே, பணத்தைக் கொடுக்காவிட்டால் தலையா சீவி விடுவார்கள்?’ என்று நான் அசலையும் கட்டாமல், வட்டியையும் கட்டாமல் தட்டிக்கழிக்கிறேன். வங்கியிலிருந்து வருகிற நினைவூட்டல்கள், நோட்டீசுகள் எல்லாவற்றையும் குப்பையில் எறிகிறேன். இப்போது வங்கியைப் பொறுத்தவரை எனக்குக் கொடுத்த கடன் ‘Bad Loan’ என்று கருதப்படும். அதாவது முதலுக்கே மோசம் வந்தாகி விட்டது. இப்போது வங்கியின் கண்ணோட்டத்தில் நான் வாங்கிய கடன் ‘Non-Performing Asset’ என்று கருதப்படும். அதாவது ‘முடங்கிப்போனது’ என்பதுதான் பொருளேயன்றி ‘முடிந்து போனது’ என்று பொருளில்லை.
போதுமான அவகாசம் கொடுத்தபின், இந்தக் கடன்தொகையை ‘இதனால் எமக்கு யாதொரு பிரயோசனமுமில்லை’ என்று கணக்கில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வங்கியின் சொத்துக்கணக்கில், எனக்குக் கொடுத்து முடங்கிப்போன கடன்தொகையும் சேர்க்கப்பட்டு, வங்கி படுலாபகரமாக இயங்குவதுபோல ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிடும் அல்லவா? ‘என்னய்யா இம்புட்டு லாபத்தைக் காட்டுறீரு. கைநிறைய கழுதைவிட்டையை வைச்சுக்கிட்டு?’ என்று கேட்பார்கள்தானே?
அதனால்தான், இது போன்ற கடன்களை ‘write-off’ என்று தனிமைப்படுத்திக் குறித்து வைத்துக் கொள்கிறார்கள். (இத்தகைய நடைமுறை தனியார் நிறுவனங்களிலும் உண்டு; ஆனால், அங்கே ஒரு கட்டத்தில் ‘ஒழிஞ்சு போ’ என்று விட்டுவிடுவார்கள். ஆனால், வங்கிகளில் அப்படியல்ல. கடன்கொடுத்த கிளையில் தொடங்கி, தலைமை அலுவலகம் வரை ஒவ்வொரு ஆய்வின்போதும் (inspection) நோண்டி நொங்கெடுத்து விடுவார்கள். சில சமயங்களில் ஏதோ ஒரு கிளையில் படுசமர்த்தாய்ப் பணியாற்றிவிட்டு பதவி உயர்வோடு மாற்றலாகும் ஒரு வங்கி அதிகாரி அவரது முன்னோடிகள் வசூலிக்காமல் விட்ட கடன்களையும் வசூலிக்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாவார்கள். புத்தகத்தில் write-off என்று பதிவு செய்தாலும் மேற்படி நடவடிக்கைகளுக்காக அவர்கள் கோர்ட் வாசற்படி ஏறி இறங்கித்தான் ஆக வேண்டும். ‘வங்கியில் write-off பண்ணிவிட்டார்கள்; அதனால், நான் பணம் கட்ட முடியாது’ என்றெல்லாம் யாரும் கோர்ட்டில் அழிச்சாட்டியம் பண்ண முடியாது. அதே சமயம், ‘Non Performing Asset’ என்று நெற்றியில் குறியிடாமல் வங்கி கோர்ட்டுக்குப் போனால், ஜட்ஜய்யா ‘நீயே இன்னும் Good Loanன்னு சொல்லிக்கிட்டு, எங்க உசுர ஏன்யா வாங்கறே?’ என்று எரிந்து விழுவார்.
இதுலயே ஓரளவு புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். இருந்தாலும்….
Scenario.3
எனக்கு வங்கியிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். நான் இருக்கிற நகை நட்டு, பாத்திரம் பண்டம் எல்லாவற்றையும் விற்றுவிட்டு, தேறுகிற பணத்தை எடுத்துக் கொண்டுபோய், ‘ஐயா சாமி, சத்தியமா என்கிட்டே இவ்வளவு பணம்தான் இருக்கு. எப்படியாவது கணக்கை முடிச்சுக்கொடுங்க. இதுக்கு மேலே நீங்க என்ன பண்ணாலும் எங்கிட்டே பணமில்லை’ என்று தொபுக்கடீரென்று வங்கி மேலாளர் காலில் விழுகிறேன். உடனே அவர், ‘சரிப்பா, இருக்கிற பணத்தை முதலில் கட்டு. மீதமுள்ள தொகைகுறித்து நான் மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு, உனக்குத் தகவல் சொல்கிறேன். தற்காலிகமாக உன்மீது சட்ட நடவடிக்கைகளையும் நிறுத்தச் சொல்லுகிறேன்’ என்று சொல்லி, அவரவரது Regional Office, Zonal Office ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு, மீதமுள்ள தொகையின் அளவைப் பொறுத்து அதை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ Waive-off செய்வார்.
சர்ச்சைக்குரிய மல்லையா விஷயத்தில், ஒரு வங்கி ’இந்தாளுக்குக் கொடுத்த கடன் முடங்கிப்போய்விட்டது’ என்று அதிகாரபூர்வமாக, வாடிக்கையான நடவடிக்கையை எடுத்திருக்கிறார்களே தவிர, ‘ஐயா மல்லையா, நீ தர வேண்டியது ஒண்ணும் இல்லைய்யா’ என்று கையைக் கழுவிவிடவில்லை.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இல்லாமல்போயிருந்தால், இன்னேரம் இந்தியா சிங்கியடித்துக் கொண்டிருக்கும். கறுப்பு ஆடுகள் அங்கும் இருக்கலாம். ஆனால், ஒட்டு மொத்த வங்கித்துறையை இந்த நேரத்தில் பாராட்ட மனமில்லாவிட்டாலும், குறைந்தபட்சம் பழிக்காமலாவது இருங்களேன் என்று புரிதலுள்ளவர்களுக்கு ஒரு சாதாரண குடிமகனாய்க் கோரிக்கை வைக்கிறேன்.
No comments:
Post a Comment