Thursday, November 10, 2016

பாமர இந்தியர்கள் மீது போர்

வில்லவன் ராமதாஜ்
Via Facebook
2016-Nov-11

ஓரிரு நாளில் சரியாகும் என சமாதானங்கள் பரவலாக தென்படுகின்றன. ஆனால் ஓரிரு நாளில் சிக்கல் தீவிரமாகும்போல தெரிகிறது.

வங்கிகளில் நாளைய வினியோகத்துக்கு பணம் போதுமானதாக இல்லை. இன்னும் 50 நாட்களுக்கு இந்த நெருக்கடியை சமாளிக்கும் அளவுக்கு ஏற்பாடுகள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

இரண்டாயிரம் ரூபாய் தாள் அடுத்த சில நாட்களுக்கு செல்லத்தக்க ஆனால் பயனில்லாத பணம்தான். காரணம் சந்தையில் 100, 500 போதுமான அளவு புழங்காவிட்டால் 2000 ரூ நோட்டால் பயனில்லை. செல்ஃபி எடுத்துக்கொள்ளவும், அடுத்த ரவுண்டு தற்காலிக கருப்புப் பணத்தை சேர்க்க வேண்டுமானால் அது பயன்படலாம்.

சந்தையின் உடனடி தேவை 500 ரூபாய் ஆனால் அது இன்னும் வரவில்லை.

அரசின் கருத்துப்படியே 15 விழுக்காடு பணத்தாள்கள் மட்டுமே 100 மற்றும் அதற்கு கீழான மதிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையும் கள்ளத்தனமாக முடக்கப்படுகின்றன. நீங்கள் 15 விழுக்காடு ஊழியர்களைக்கொண்டு 15 விழுக்காடு உற்பத்தியைக்கூட செய்ய முடியாது. உள்ளூரில் புழங்கும் 15% பணத்துக்கும் அதுதான் கதி.

காய்கறி சந்தை, சிறு மளிகைக்கடைகள் ஆகியவை இப்போது காற்றாடுகின்றன. சில்லறைப் பணம் முழுமையாக மக்களிடம் சேரும்வரை இந்த நிலை மாற வாய்ப்பில்லை. உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், பாமர நுகர்வோர்கள் என இந்த சங்கிலியின் கன்னிகள் எல்லோரும் இதில் பாதிக்கப்படுவார்கள். இது ஒரு தொடர் நிகழ்வாக அவர்கள் மீது அக்கறையற்ற ஆனால் பெரிதும் சார்ந்துள்ள நடுத்தர வர்கத்தையும் பாதிக்கும்.

வேலையின்மை காரணமாக அமைப்புசாரா தொழில்களும் தினக்கூலிகளும் எத்தகைய துயரங்களை சந்திப்பார்கள் என்பதை இப்போதைக்கு யாராலும் மதிப்பிட முடியாது என்பதே எதார்த்தம். மேலும் இது ஒரு மாதம் நீடித்தால்கூட அதனை சமாளிக்கும் சக்தி அவர்களுக்கும் நாட்டுக்கும் உள்ளதா என்பது இன்னொரு பெரிய கேள்விக்குறி.

முறைகேடாக சேர்க்கப்படும் பணத்தின் பாதிப்பை சுமப்பது நாட்டின் பாமர மக்கள்தான். ஆனால் அத்தகைய முறைகேடான பணத்தை கண்டறிய செய்யப்படுவதாக சொல்லப்படும் நடவடிக்கை இந்த வர்கத்தைத்தான் மூர்கமாக தாக்குகிறது.

ஆனால் மறுபுறம் கள்ளத்தனமாக பணம் சேர்த்தவர்கள் அதனை மாற்ற ஏராளமான வழிகள் இப்போதே அம்பலத்துக்கு வருகின்றன. கதவை சாத்திக்கொண்டு நகைக்கடைகள் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்கின்றார்கள். வைரங்களாக வாங்கி சில மாதங்களுக்கு பின் அதனை பணமாக மாற்றும் நுட்பம், ஆட்களை வாடகைக்கு பிடித்து பணத்தை மாற்றுவது, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக கொடுத்து பிறகு தரச்சொல்வது என பல ஸ்கீம்கள் ஆங்காங்கே முளைக்கின்றன.

பாகிஸ்தான் மீது போர் தொடுப்போம் என போக்குகாட்டிய பாஜக கடைசியில் பாமர இந்தியர்கள் மீது போர் தொடுத்திருக்கிறது.

No comments:

Post a Comment