Sunday, November 13, 2016

பிணம் திண்ணம் அரசுகள்

செ. கார்க்கி
Via Facebook
2016-Nov-12

வரலாறு பல கொடிய அரசர்களை நமக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றது. நாடு பிடிப்பதற்காகவும், மதத்தை பரப்புவதற்காகவும் இன்னும் பேருக்காகவும், புகழுக்காகவும் என பலவற்றுக்காக மனித உயிர்களை மலிவாக கொன்று குவித்த அந்த அரசர்கள் ஒருபோதும் தன்னைப் போலத்தான் தன்னால் கொல்லப்படுபவர்களுக்கும் வலிக்கும் என்று உணர்ந்திருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களை கடவுள்களாக கருதிக் கொண்டார்கள். மக்களையும் அதையே நம்பச் சொன்னார்கள். தங்களைக் கும்பிடுவதும், கடவுளைக் கும்பிடுவதும் ஒன்றே என மக்கள் கருதும்படி ஆள்வைத்து கதைகளைப் புனைந்தார்கள். தமிழில் கோயில் என்ற சொல் மன்னனின் அரண்மனையையும் சேர்த்தே குறிப்பிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி கொடுங்கோலர்கள் ஆட்சி செய்யும் காலகட்டத்தில் தோன்றிய மதப் புனித நூல்கள், புராணங்கள் போன்றவற்றிலும் வந்த கடவுள்கள் கூட பக்தர்களின் பக்தியை நிரூபிப்பதற்கு மிகக் கொடிய சோதனைகளை வைத்தார்கள்.

பைபிளில் ஆபிரகாமின் பக்தியை சோதிக்க கடவுள் ஆபிரகாமின் மகன் ஈசாக்கை பலிகேட்டார். தமிழில் பெரிய புராணத்தில் சிறுத்தொண்டனிடம் சிவபெருமாள் பிள்ளைக்கறி கேட்டான். கேட்டதோடு அல்லாமல் அதை அவனே சமைத்துத் தர வேண்டும் எனவும் வற்புறுத்தினான். இது தான் கொடுங்கோலர்களின் காலத்தில் தோன்றிய பக்தியின் வெளிப்பாடாக இருந்தது. மன்னன் மீதான விசுவாசமும், கடவுள் மீதான பக்தியையும் நிரூபிப்பதற்கு நாட்டின் குடிமக்கள் தங்களது உயிரையும் கொடுப்பதற்குச் சித்தமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டார்கள். பின்னர் காலம் மாற மாற கடவுள்கள் உயிர்பலி கேட்பதை நிறுத்திவிட்டு நிலம், பணம், நகை போன்றவற்றை கேட்கும் நிலைக்கு மாறியது. மன்னர் ஆட்சி மறைந்து மக்களால் ஆளப்படுவோர் தேர்தெடுக்கும் முறை வந்துவிட்டது.

ஆனால் மக்களாட்சி என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த ஆட்சிமுறையில் கூட மக்கள் தங்களது அரச விசுவாசத்தை நிரூபிப்பதற்குத் தங்களது உயிரை கொடுக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றார்கள். அப்படி கொடுக்காத போது அரசு அவர்களை சும்மா விட்டுவிடுவது கிடையாது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதுவே எடுத்துக் கொள்கின்றது. ஆனால் அரசு எதிர்பார்க்கும் இந்த விசுவாசமானது அனைவரிடம் இருந்தும் கிடையாது. அரசு என்ற கட்டமைப்பு ஏற்பட்ட நாள்முதல் அது சாமானிய மக்களிடம் இருந்து மட்டும்தான் விசுவாசத்தை எப்போதும் எதிர்பார்த்து வந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை அரச விசுவாசம் என்பது மதத்துடனும், தேசபக்தியுடன் சம்மந்தப்பட்டது. ஒருவன் பார்ப்பன இந்துமதத்தை அதன் அனைத்து சனாதன உட்கூறுகளோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். அவன் முஸ்லிமாக இருக்கின்றானா, கிருஸ்தவனாக இருக்கின்றானா அல்லது சீக்கியனாக இருக்கின்றானா என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை அவன் யாராக இருந்தாலும் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டவானாக இருக்க வேண்டும். இல்லை என்றால் கூன்பாண்டியன்களால் நீங்கள் கழுவேற்றப்படுவீர்கள். அல்லது புஷ்யமித்திர சுங்கன்களால் ரத்த வெள்ளத்தில் முழ்கடிக்கப்படுவீர்கள்.

Courtesy : செ. கார்க்கி

No comments:

Post a Comment