கௌதம சன்னா
Via facebook
10.11.2016
பேரழிவு..1
பங்கு சந்தை வீழ்ச்சி..
யாரும் எதிர்பாராத நேரத்தில் மோடியால் நடத்தப்பட்ட கொரில்லாத் தாக்குதலைப் போல நிகழ்த்தப்பட்ட இந்த ரூபாய் மாற்றம் எனும் பொருளாதாரத் தாக்குதல் விளைவித்த சிதைவுகளை, விளைவுகளை பார்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சீர்திருத்தம் என்ற இந்த மாயையின் பின்னால் திரளும் தேச பக்தர்களின் அறிவுக்கு எட்டாத பகுதிகளுக்கு போவது நமது கடமை..
அன்டிலியா.. மும்பையின் நடுவில் வானைத் துருத்திக் கொண்டு நிற்கும் 11000ம் கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் அதிக விலையுள்ள 26 மாடி கட்டடம். அதில் நான்கு பேர் மட்டும் வசிக்கிறார்கள். அவர்களுக்கு 600 பேர் வீட்டு வேலை செய்கிறார்கள். 400 கார்கள் நிற்கின்றன. ஹெலிகாப்டர் நிற்கிறது. அந்த வீட்டின் குடும்பத் தலைவரை முகேஷ் அம்பானியை பார்க்க அவரது கம்பெனி அதிகாரிகள் வந்து போகிறார்கள். அந்த அதிகாரிகளில் ஒருவராக வந்துப் போய்க்கொண்டிருந்தவர்தான் இன்றைய இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல். இவரது தலைமையிலான ரிசர்வ் வங்கி இன்று கரண்சி மாற்றத்தை அறிவித்துள்ளது. அதுவும் மோடியின் வாயால்.
இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த போது அது பொருளாதார இனிப்பான செய்தியாக இல்லை. ஏனெனில் விளைச்சல் குறைந்து உணவுப் பணவீக்கம் அதிகரிக்குமானால் அது சாமான்யர்களின் தலையில் பொருள்களின் விலையேற்றமாக வந்து இறங்கும். அப்படித்தான் அது இறங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நேரத்தில் அமெரிக்க அதிபரின் தேர்தல். டிரம்ப் வென்றால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அளிக்கப்படும் IT அவிட் சோர்சிங் வியாபாரம் நிறுத்துவதாக வாக்குறுதி அளித்து அங்குள்ள இளைஞர்களின் வாக்குகளை அவர் அள்ளி தமது வெற்றியின் உறுதிப்படுத்தியபோது இந்திய பங்கு சந்தை ஆட்டம் காணத் தொடங்கியது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டார்கள் வெளியேறத் தொடங்கி பங்கு சந்தை சரியத் தொடங்கியது. இதனால் இந்திய நிறுவனங்களின் பங்குகளும், முதல் திரட்டும் பணிகளும் ஆட்டம் கண்டு அது சந்தைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியடைய வைத்தது.
இந்த இரண்டு கொடுமைகள் நிகழ்ந்த நேரத்தில் காலப் பொருத்தம் இன்றி, 2016 டிசம்பர் 7ம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய மோடி 500, 1000ம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அடுத்த நாள் இது பங்கு சந்தையில் எதிரொலித்து கால் மணி நேரத்தில் திவாலாக்கிவிட்டது. 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு சந்தை தேங்கிவிட்டது. தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்ட பங்கு சந்தை நாள் முடிவில் 6 லட்சத்து 35 கோடி இழப்பில் முடிந்தது.
இதற்கு முன்பு 2008ம் ஆண்டு 3 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்ட போது அதன் தாக்கத்தை உணர்ந்த அப்போதைய நிதியமைச்சர் ப சிதம்பரம் வெளிநாட்டு பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினார். வந்தவுடன் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனை உடனே வழங்கும்படி உத்தரவிட்டு, சந்தையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
அதேப் போல மோடி பதவி ஏற்ற பிறகு24.07.2015 அன்று பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தது. அப்போது ஏற்பட்ட இழப்பு 7 லட்சம் கோடி. ங்ந்த வீழ்ச்சி இந்திய பொருளாதார தேக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்று பொருளாதார அறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் நிதியமைச்சர் ஜெட்லி இந்த வீழ்ச்சி தற்காலிகமானது என்றும், சீன கரண்சி மற்றும் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டிவீத மாற்றம் என்று சாக்கு சொல்லி தப்பித்தார். ஆனால் நாட்டை விட்டு வெளியேறிய 7 லட்சம் கோடிக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் இந்த பாதிப்பிலிருந்து இந்திய சந்தையை நிலைப்படுத்த உதவியது புதிதாக பொறுப்பேற்றிருந்த ரகுராம் ராஜனின் நடவடிக்கைகள்.
2008, 2015க்குப் பிறகு தற்போது இந்திய பங்கு சந்தை வீழ்ச்சியடைந்து 6 லட்சத்து 36 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. இந்த வீழ்ச்சி தற்காலிகமானது தான்
என்று எடுத்துக் கொள்ள முடியுமா.. இந்த கரண்சி புரட்சியில் கள்ள நோட்டுகளும் கருப்பு பணமும் ஒழிக்கப்படும் என்று காட்டப்படும் பகட்டிற்கு முன்னால் இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்..
முதலில் பார்க்க வேண்டியது. பங்கு சந்தையில் வெளியேறிய முதலீடுகளின் பெரும் பகுதி அந்நிய முதலீடு. இந்த முதலீடுகள்தான் இந்திய உற்பத்தித் துறைக்கு உதவக்கூடியதாக இருக்கிறது. இந்த முதலீடுகளை ஈர்க்கத்தான் மோடி நாடூ நாடாக சுற்றி வருகிறார். அப்படி அவர் சுற்றி சுற்றி தொழில் துறை முதலீடாக ஒரு லட்சம் கோடியைக்கூடி புரட்ட முடியவில்லை. ஆனால் இவர் பதவி ஏற்றப் பிறகு 15 லட்சம் கோடிக்கு மேல் அந்நிய பங்கு முதலீடு வெளியேறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் இவரின் கரண்சி புரட்சியின் மூலம் வெளியேறியுள்ளது. இது நேரடியான இழப்பு என்றால் மறைமுக இழப்பு எவ்வாறு இருக்கும்.
பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்கள் அதிகம் கொண்டது இந்திய பங்கு சந்தை. அவர்கள் பங்குகளை விற்பது, வாங்குவது அல்லது டிவிடென்ட் பெறுவது என சிறு லாபத்தைப் பார்த்து அதன் மூலம் பொதுச் சந்தையை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பங்கு சந்தையில் அவர்களுக்கு ஏற்படும் இழப்பைப் பற்றி அரசு எப்போதும் கவலைப்படுவது இல்லை. ஆனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அவர்கள் தமது பொதுச் சந்தை நடவடிக்கைகளில் சுணக்கமோ அல்லது லாபக்கூட்டல் நடிவடிக்கைகளிலோ அல்லது தொழிலைவிட்டு திவாலாகி வெளியேறும் நடவடிக்கைகளிலோ இறங்கும்போது அது சாமான்யரின் தலையில் சுமையாக இறங்குகிறது. இந்த சிறு முதலீட்டார்களின் இழப்பு என்பது எப்போதும் அந்நிய முதலீட்டார்களின் திரும்பப் பெற்றுக் கொண்ட முதலீட்டிற்கு இரு மடங்கு இருக்கும் எனபது சந்தை கணிப்பு. அப்படி இருக்குமானால் இழப்பு 13 லட்சம் கோடியைத் தாண்டும்.
இந்த இருவகை இழப்புகள் மூலதனத் திரட்டல் நடவடிக்கைகளில் பெரும் தேக்கத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. பின்வரும் பிரிவுகளில் தாக்கத்தை உருவாக்கும்..
அந்நியா செலாவணி கையிறுப்பில் மாற்றங்கள்.
வங்கிகளின் அந்நிய செலாவணியில் வீழ்ச்சி.
முதலீடுகளை ஈர்ப்பதில் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படும் வீழ்ச்சி.
பட்டியலிடப்பட்ட சிறுநிறுவனங்கள் தொடர்ந்து முடங்கும் அபாயம்.
சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு.
இதன் விளைவாய் இறக்குமதி செலவு அதிகரிப்பு.
ஏற்றுமதிக்கான அச்சம்.
இவை தவிர இன்னும் பல காரணிகள் இருந்தாலும், இந்த இரண்டு நாளில் உருவாகியுள்ள பேரிழப்பின் தாக்கத்தை சீர் செய்வற்கு அடுத்தப் பத்தாண்டுகளை அரசு செலவிட வேண்டியிருக்கும். ஆனால் அதற்கான தண்டனைகளை இந்தியக் குடிமக்கள்தான் அனுபவிக்க வேண்டும்.
பங்கு சந்தை என்பது சூதாட்டம் என்பது உண்மைதான். அந்த உண்மையின் பெரும்பகுதி சாதாரண மக்களின் மீது சுமத்தப்பட்டு ஆடப்படும் ஆட்டம். இந்த ஆட்டத்தில் வேடிக்கைப் பார்ப்பவர்கள் பலிகாடாவாக ஆக்கப்படுவார்கள். அதனால்தான் மோடி துணிந்து செய்தார்.
முறையான திட்டமிடல், எச்சரிக்கை இன்றி மோடி செய்த சீரழிவு மற்ற துறைகளை எப்படி பாதிக்கும் என்பதை அடுத்துப் பார்ப்போம்..
No comments:
Post a Comment