Karl Max Ganapathy
Via Facebook
2016-Nov-01
இந்த போபால் என்கவுண்ட்டர் விவகாரத்தில், நடந்தது படுகொலைதான் என்று செய்தியைப் படிக்கும் எல்லாருக்குமே புரிகிறது. அதில் எந்த ரகசியமும் இல்லை. சிறையில் உணவு உண்ண வழங்கப்படும் தட்டை உடைத்து கூரான ஆயுதமாக்கி, அதைக்கொண்டு காவலரைக் கொன்றுவிட்டு, போர்வைகளை ஒன்றோடு ஒன்றாகப் பிணைத்து அதைப் பயன்படுத்தி முப்பத்திரண்டு அடி உயரமுள்ள சுவரின் மீது ஏறிக்குதித்து கைதிகள் தப்பித்தார்கள் என்கிறது போலீசின் திரைக்கதை.
இது மிகவும் அலட்சியமான திரைக்கதைதான். முன்பெல்லாம் ஒரு என்கவுன்ட்டர் நடக்கும்போது, அதை உண்மைபோல காண்பிப்பதற்கு கொஞ்சம் சிரமம் எடுத்துக்கொள்வார்கள். இப்போது அதையும் கடந்துவிட்டார்கள் என்பது தான் இதில் நாம் கண்டிருக்கும் வளர்ச்சி. இங்கு அரசு, போலிஸ், சிறை நிர்வாகம் என்பதைத்தாண்டி நாம் விவாதிக்க வேண்டியது பொது சமூகத்திடம் ஆதிக்கம் செலுத்தும் ‘என்கவுன்ட்டர் ஆதரவு’ மனநிலையைத்தான்.
முதலில், ‘கொல்லப்பட்டவர்கள் என்ன தேசபக்தர்களா...?’ என்ற ஒரு எதிர்வினையைப் படித்தேன். இதன் பொருள் ‘அவர்கள் தேச விரோதிகள் அல்லவா’ என்பதுதான். இவ்வாறு ‘தேசவிரோதிகள்’ என்று அவர்களை வரையறுக்கும்போதே ‘அவர்கள் கொல்லப்படவேண்டியவர்கள்’ என்னும் கருத்து அதன் உட்பொருளாக வந்துவிடுகிறது. அது மட்டும் அல்ல; இதன் அடுத்த கட்டமாக இந்த தண்டனையை நிறைவேற்றுபவர்கள், அதாவது தேச விரோதிகளை கொன்று ஒழிப்பவர்கள், இதன் வழியாக தேசபக்தர்களாவும் தோற்றம் கொண்டுவிடுகிறார்கள். இந்த இடத்தில் இத்தகைய அத்துமீறல் கொலைகளைக் கண்டிப்பவர்கள், இதன்மூலம் தேசபக்தர்களைக் கண்டிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். தேசபக்தர்களைக் கண்டிப்பதன் மூலம், அவர்களும் தேசவிரோதிகளாக ஆகிவிடுகிறார்கள்.
ஆக, கொல்லப்படவேண்டியவர்களின் எண்ணிக்கை வெடித்துப் பரவுகிறது. கொலை மனநிலையை செறிவூட்டும் ‘மாஸ் ஹிஸ்டீரியா’ அதன் உச்சத்தை அடைகிறது. ஃபாஸிசம் வேகமாக தனது வட்டத்தை வரைகிறது. அது தனது வட்டத்தைப் பெருக்கிக்கொண்டே போகப் போக அதில் மாட்டிக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். கொஞ்சம் கொஞ்சமாக அது பொதுசமூகத்தையும் அதற்குள் திணித்துவிடும் என்பதுதான் வரலாறு நெடுக ரத்தமும், சதையுமாக கொட்டிக்கிடக்கும் உதாரணங்களில் இருந்து நாம் புரிந்துகொள்வது.
இந்த பாசிஸ வட்டத்தின் விட்டத்தைப் பெருக்கும் கண்ணிகள் எவை என்கிற தெளிவு நமக்கு இல்லையென்றால், ஒரு பொது சமூகமாக நாம் தோல்வியடைகிறோம் என்று பொருள். இந்த வன்முறையின் இரத்தக் கறை நம்மீதும் உண்டு என்று அர்த்தம். கொஞ்சம் கொஞ்சமாக அது நமது ரத்தத்தையும் கோரும் எனும் எச்சரிக்கை நமது மூளையை எட்டவில்லை என்றும் பொருள். அறிவுஜீவு மனநிலையைத் தவிர்த்து, ஒரு சிவில் சமூகமாக நாம் கைகொள்ள வேண்டிய சில அடிப்படைகள் இருக்கின்றன. மிக மேலோட்டமாகப் பார்க்கிறபோது ‘இறுகிப்போன பொலிடிகல் கரெக்ட்னஸ்’ மனநிலையைப் போல அது தோன்றலாம். ஆனால் நாம் கவனம் செலுத்தியே ஆக வேண்டிய புள்ளி அது.
முதலாவதாக, குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஒருவனை ‘மற்றமையாக’ கருதும் மனநிலை. இவ்வாறு அவனிடமிருந்து தன்னை அப்புறப்படுத்திக்கொள்வதன் மூலம், தன்னை மேலானவனாக உணர்வது. அதன் மூலம், அதிகாரத்தின் பிரதிநிதியாக தன்னை உருவகித்துக்கொள்வது. தண்டனை தரும் அமைப்புடன் மன ரீதியாக பிணைத்துக்கொள்வதன் மூலம், தானும் அதிகாரம் மிக்க ஒருவன்தான் என்னும் சுய இன்பத்தில் திளைப்பது. அதன் வழியாக தான் பாதுகாப்பாக இருப்பதாக நம்ப தலைப்படுவது. அரசு நிகழ்த்தும் படுகொலைகளின்போது சமூக ஊடகங்களில் ஒரு சாராரிடம் வெளிப்படும் எக்காளத்தின் அடிப்படை இதுதான். அதிகார அமைப்பான போலீசுடனும், அரசுடனும் தம்மைப் பிணைத்துக்கொண்டு ‘கொல்லுங்கள்... கொல்லுங்கள்...’ எனும் கூக்குரலை உருவாக்கி உலவவிடுவது அதனாலதான். இதன் பின்னுள்ளது கொஞ்சமும் தனிமனித விடுதலை உணர்வற்ற, சமூக சொரனையற்ற கோழைத்தனம்.
இவ்வாறான நேரங்களில் என்னதான் செய்யவேண்டும்? தன்னை குற்றம் சாட்டப்பட்டிருப்பவனுடன் பிணைத்துக்கொண்டு மறுகவேண்டுமா? அவனையும் அவனது செய்கைகளையும் நியாயப்படுத்த வேண்டுமா என்கிற கேள்வி எழலாம்?. இல்லை. இங்கு நாம் செய்ய வேண்டியது, ஒரு பண்பட்ட தனிமனிதனாக, அற விழுமியங்களின் மீது அழுத்தமாகக் காலூன்றி நின்று சமநிலையுடன் இவற்றை எதிர்கொள்வதுதான். குற்றம்சாட்டப் பட்டிருப்பவனின் தரப்பை நிராகரிக்காமல் இருக்கப் பழகுவது அதன் முதல் படி. அதுதான் நம்மை கும்பல் மனநிலையில் இருந்து விலக்கி வைக்கும். அரசு, போலீஸ், ராணுவம் போன்ற அதிகார அமைப்புகளை விதந்தோதும் அற்ப மனநிலையில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.
ஏனெனில் இந்த கும்பல் மனநிலைதான், அரச வன்முறையின் முதலும் இறுதியுமான நம்பிக்கை. தேச நலன், பிராந்திய நலன், பாதுகாப்பு போன்ற சொற்களை முன்னிறுத்திதான் அது தனது வன்முறையை நியாயப்படுத்துகிறது. உணர்வுவயப்பட்ட நிலையில் இருக்கும் நம்மை அதன் கூட்டாளியாக்கி விடுகிறது, ஒரு பகுதி மக்களை பிரித்து அவர்களை மற்றவர்களின் முன் நிற்க வைப்பதன் தனது அதிகாரத்தின் எல்லையை கூட்டிக்கொள்கிறது. ஆக, எந்த ஒன்றையும் ‘மற்றமையாக’ காணும் மனநிலையிலிருந்து நாம் முதலில் வெளியேற வேண்டும். இங்கு நடந்திருப்பது ‘அரசு நிகழ்த்திய படுகொலை’. அதைச் செய்யும் உரிமை அரசுக்கு எந்த காலத்திலும் கிடையாது என்பதில் இருந்துதான் நமது புரிதலைத் தொடங்க வேண்டும்.
தண்டிக்கும் மனநிலை என்பது மிக நெருக்கமாக அதிகாரத்தின் மீதான வேட்கையுடன் தொடர்புடையது. முரணாக அது அச்ச உணர்வுடன் ஆழமாகப் பிணைந்திருக்கக் கூடியது. கொலைகளின் வழியே அச்சத்தைக் களையவே முடியாது. இத்தகைய கொலைகளின் மூலம் அரசுகள் உறுதி செய்ய முயல்வது, மக்களிடம் இருக்கும் அச்சத்தைக் களைவது அல்ல, மாறாக அந்த அச்சத்தை நிலை நிறுத்துவது. இதைப் புரிந்துகொள்வது என்பது ஒரு அரசைப் புரிந்து கொள்வது மாத்திரம் அல்ல; நாம் எவ்வளவு தூரம் மனிதர்களாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதுதான்.
Link:
https://www.facebook.com/gkarlmax/posts/1354514891248697
No comments:
Post a Comment